vendredi 16 août 2013

மரபுவழித்தாயகம்.- எழுச்சியும் வீழ்ச்சியும் (2)


எம்.ஆர்.ஸ்ராலின்
Tamilarasuமலையகமக்களின் பிரஜாவுரிமை பிரச்சனையிலும் கிழக்கு மாகாணமக்களின் குடியேற்ற  பிரச்சனைகளிலும் மையங்கொண்டிருந்த தமிழரசுக்கட்சி இத்தேர்தலில் படுதோல்வியை அடைய நேரிட்டது. வடமாகாணத்தில் கோப்பாய் தொகுதியில் கு.வன்னியசிங்கம்  மட்டுமே ஒரு சிலநூறு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். கந்தளாய்  குடியேற்றப் பிரச்சனையை முன்வைத்து தமிழரசுக்கட்சி சார்பில் திருமலையில்  போட்டியிட்ட இராஜவரோதயம் மட்டுமே கிழக்குமாகாணத்தில் வெற்றி பெற்றார்.  கிழக்கு மாகாணத்தைப்பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்து தலைவர்களின் கீழ் இயங்கிய கட்சிகளின் முதலாவது வரவு இது என்பதால் இராஜவரோதயத்தின் வெற்றி  தமிழரசுக்கட்சியைப் பொறுத்தவரையில் பெருவெற்றியாக இருந்தது. ஆனால் தமிழரசு  கட்சியின் யாழ்ப்பாணத் தலைவர்கள் எல்லாம் அதற்குமுன்னர் தமிழ் காங்கிசில்  இருந்து பிரபல்யம் ஆனவர்கள் என்கின்றவகையில் வடமாகாணத்தில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் உட்பட தமிழரசு கட்சியினர் அடைந்த தோல்வியானது எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தைப் பொறுத்தவரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழரே ஆயினும்  யாழ்ப்பாணத்துக்கு வெளியே வாழும் மக்களின் பிரச்சனையையிட்டு கவலைகொள்ளாத  ஒரு மனநிலையையே யாழ்ப்பாணத்தவர்கள் கொண்டிருந்தார்கள் என்பதையே இத்தேர்தல்  முடிவுகள் வெளிக்காட்டின. இதனை மூத்த எழுத்தாளர் எஸ் .பொ “யாழ்ப்பாண மக்கள் தமிழ் உணர்வுக்கு மேலாக சொந்த நலன்களையும், வசதிகளையும் தக்கவைத்துக்கொள்வதற்கே முன்னுரிமை கொடுத்தார்கள் என்பதையே அத்தேர்தல் மீள வலியுறுத்தியது.” (வரலாற்றில் வாழுதல் பாகம்-1 பக்-402) எனச்  சுட்டிக்காட்டுகிறார்.   
இதன்காரணமாக அடுத்துவந்த 1956 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழரின் மரபுவழித்தாயகம் பற்றிய  மிக ஆக்ரோசமான பிரச்சாரங்களை முன்னெடுக்கவேண்டிய தேவை தமிழரசுக்கட்சிக்கு  எழுந்தது. அதேவேளை தென்னிலங்கையில் இருந்து வந்த “ஆட்சிமொழி அந்தஸ்தில் இருந்து ஆங்கிலம் அகற்றப்படும்” என்கின்ற அறிவிப்பு யாழ்ப்பாணத்து  மத்தியதர வர்க்கத்தை கதிகலங்கச்செய்தது. பாடசாலை ஆசிரியரர்களாக,  அதிபர்களாக, தபால், தொலைத்தொடர்பு, ரயில்வே, சுகாதாரம்...... என்கின்ற  அனைத்து துறைகளிலும் தமது ஆங்கில புலமைகளுடன் கூடிய தலைமை அதிகாரிகளாக,  நிர்வாக உத்தியோகத்தர்களாக இலங்கை எங்கும் வியாபித்திருந்த யாழ்ப்பாணத்து  அதிகார மத்தியதரவர்க்கம் ஆங்கிலம் அகற்றப்படப்போவதை இட்டு அச்சமுற்றது  இயல்பே. இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த முனைந்த செல்வநாயகம் மலையக  மக்களின் பிரஜாவுரிமை பிரச்சனைகளை கைவிட்டு, கிழக்கு மாகாணமக்களின்  குடியேற்றப்பிரச்சனைகளையும் இரண்டாம் பட்சமாக்கி மொழிப்பிரச்சனையை  முன்னிறுத்தி தேர்தலில் இறங்கினார். இலங்கை தமிழருக்கு ஒரு சமஸ்டி ஆட்சி அவசியம் எனக்கோரினார். Federal party எனும்   பெயரில் அவர் உருவாக்கிய கட்சி தமிழில் சமஸ்டி கட்சி என்றே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொழும்பில் சமஸ்டி கோரிக்கொண்டு வடகிழக்கு எங்கும் அதனை தமிழரசுக்கட்சி என்று மிகைப்படுத்தி  பேசினார் செல்வநாயகம். இதனூடாக தமிழ் மக்களுக்கென ஒரு அரசை  உருவாக்கப்போவதாக  மரபுவழி தாயகத்தை நோக்கிய பெரும் கனவொன்றை அவர்  கட்டியமைத்தார். 
யாழ்ப்பாண மத்தியதர வர்க்கம் எதிர்கொண்ட இந்த மொழிப்பிரச்சனையானது எல்லாத்  தமிழருக்கும் உரியதாக நம்பவைக்கப்பட்டதனூடாக கிழக்கு வாழ்தமிழர்களும் முஸ்லிம்களும் பிரதேச, மத வேறுபாடுகளைக் கடந்து தமிழரசுக்கட்சியில் ஒன்றித்தனர். 
இதே காலப்பகுதியில் தென்னிலங்கையில் ஐக்கியதேசியக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு  எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா தலைமையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி எனும் புதியதோர் கட்சியைத்  தோற்றுவித்தது. இந்தக்கட்சியே தாம் ஆட்சிக்கு வந்தால் ஆங்கிலத்தை அகற்றி  சிங்களத்தை தேசியமொழி ஆக்குவது எனும் இலட்சியத்தை முன்னிறுத்தி “நமது  ஆட்சி” கோரிக்கையுடன் களமிறங்கியது. இலங்கை முழுக்க இந்த மொழிப்பிரச்சனையை  முன்வைத்து நடாத்தப்பட்ட 1956 ஆம் ஆண்டு தேர்தலானது தென்னிலங்கையில்  சிறிலங்கா சுதந்திரக்கட்சியையும், வடக்கு கிழக்கில் தமிழரசுக்கட்சியையும்  வெல்லவைத்தது. 
குறிப்பாக இந்த மொழிப்பிரச்சனை ஏற்படுத்திய பெரும் அலை அவ்வேளையில் மட்டக்களப்பின்  தனிப்பெரும் தலைவராக இருந்த மு.இராசமாணிக்கம் போன்றோரைக் கூட  தமிழரசுக்கட்சியுடன் இணைத்துக்கொள்வதில் பெரும் பங்காற்றியது.  எழுத்தாளராகவும், இலக்கியவாதியாகவும் அறியப்பட்டிருந்த செ.இராஜதுரை  போன்றவர்களின் அரசியல் நுழைவையும் சாத்தியப்படுத்தியது. 
1956 ஆம் ஆண்டு தேர்தலில் பண்டாரநாயக்கா வெற்றிபெற்று ஆட்சி அமைத்தார்.  காலணித்துவ ஆட்சியின் கீழ் இருந்த ஒரு நாடு என்கின்ற வகையில் அந்நாடு  சுதந்திரமடைந்தவுடன் காலணித்துவ ஆட்சியாளர்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட  அன்னியமொழியான ஆங்கிலத்தை அகற்றுவதென்பது  சுதேசமொழிகளின் மீள்  உயிர்ப்புக்கு அவசியமானதாகும். அந்தவகையிலேயே அரசமொழி அந்தஸ்தில் இருந்து ஆங்கிலத்தை பண்டாரநாயக்கா அகற்றினார். அதேவேளை அரசகரும மொழியாக   சிங்களத்துடன் சேர்ந்து தமிழும் அங்கீகரிக்கப்பட்டிருத்தல் அவசியம்.  இத்தகைய சட்டத்திற்கான முனைப்புக்கள் 1925 ஆம் ஆண்டு காலத்தில் இருந்தே  தென்னிலங்கையில் சுயபாசைகளுக்கான இயக்கமாக உருவாகத்தொடங்கியிருந்தது. ஆனால் தமிழ் தலைமைகள் இந்த சுயபாசைகளுக்கான இயக்கத்தை ஆரம்பத்தில் இருந்து  எதிர்த்தே வந்தனர். தமது ஆங்கிலப்புலமை காரணமாக இலங்கையின் சட்ட,   நிர்வாகத்துறைகளில் தாம் கொண்டிருந்த அந்தஸ்துகள் இழக்கப்பட்டுவிடும் என்கின்ற அச்சமே அதற்கு காரணமாகும். தமிழ் தலைவர்கள்  கொண்டிருந்த ஆங்கிலமோகமே சுதந்திரத்தின் பின்னர் ஏற்பட்ட அரசகரும  மொழிச்சட்டமானது தமிழை விடுத்து சிங்களத்தை மட்டும் அரியணை ஏற்றும்  நிலைக்கு சிங்களத்தலைவர்களை இட்டுச்சென்றது என்கின்ற உண்மைகள் எமது  வரலாறுகளில் மறைக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி சிங்கள அரசகரும  மொழிச்சட்டத்தோடு இணைந்து அதன் உபபிரிவாக வடக்கு கிழக்கு போன்ற தமிழர்  வாழும் பகுதிகளில் தமிழுக்கு உத்தியோகபூர்வமொழி  அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. இந்த சிறப்பு விதிகளை மறைத்து தனிச்சிங்களச் சட்டம்  என்றவாறாக 1956 ஆம் ஆண்டு மொழிச்சட்டத்தை தமிழ் அரசியல்வாதிகள்  திரிபுபடுத்தினர். 
மொழிச்சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டபோது சுமார் 5 வருடங்களுக்குfederalpartyஅதற்கெதிரான  கிளர்ச்சிகளை நாடுமுழுவதும் தமிழரசுக்கட்சி முன்னெடுத்தது.  காலிமுகத்திடலில் இலங்கை பாராளுமன்றத்திற்கு முன்பாக தமிழரசுக்கட்சியினர்  நடாத்திய மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டம் சிங்களவர்களின்  மிருகத்தனமான தாக்குதலுக்கு உள்ளானது.  அதைத்தொடந்து 1958 ஆம் ஆண்டு பாரிய இனக்கலவரமாக  வெடித்தது. இவ்வினக்கலவரமானது தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழர்களை வடகிழக்கு நோக்கி அகதிகளாக ஓடச்செய்தது. இவையனைத்தும் வடகிழக்குக்கு வெளியே  தமிழர்களுக்கு பாதுகாப்பே இல்லை என்கின்ற உணர்வை தமிழ் மக்களிடம்  ஏற்படுத்துவதில் பெரும் தாக்கம் செலுத்தின. இந்தக்காலகட்டத்தில்  தமிழரசுக்கட்சி முன்வைத்த தமிழர் தாயகம் பற்றிய அவசியம் தமிழ் மக்களால்  ஆழமாக உணரப்பட்டது. 
தமிழரசு, சமஸ்டி, தமிழர் தாயகம் என்றெல்லாம் காலத்துக்கு காலம் வந்த தமிழ் தலைவர்கள்  பிரச்சாரங்களை முன்வைக்கத்தொடங்கியிருந்த போதிலும் இந்த மரபுவழித்தாயகத்தை  நோக்கிய கோட்பாட்டுக்கு எவ்வித அடிப்படை வலுவையும் வழங்கும் முயற்சியில்  அவர்கள் இறங்கவில்லை. அதாவது தமிழர் தாயகம் என்பது எது? அதன் எல்லைகள்  யாவை? அதற்கான வரலாற்று ஆதாரம் என்ன? என்பது பற்றியெல்லாம் தமிழரசு  கட்சியினரிடம்கூட ஒரு தெளிவான வரையறைகள் இருக்கவில்லை. இந்த தாயக கோசத்தை  எழுப்பியவர்களில் முக்கியமானவராய் இருந்த தமிழ் காங்கிரசின் தலைவர்களில்  ஒருவரான சி.சுந்தரலிங்கம்தான் முதன் முதலில் “இலங்கை தமிழர்களின் மரபுவழி  வந்த தாயகம் என்பது சிலாபத்தில் இருந்து வடக்கிலும் கிழக்கிலும் இருக்கும்  நிலப்பரப்பு, திருகோணமலை மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டம் உட்பட தெற்கில்  உள்ள வளவை கங்கை வரைக்கும் பரந்துகிடக்கும் நிலப்பரப்பாகும்.” என  எழுதினார். இந்த சுந்தரலிங்கத்தின் வரையறையின் பின்னரே இந்த தாயகக்  கோட்பாட்டுக்கு ஒரு பருமட்டான வடிவம் கிடைத்தது. இதற்குகூட எவ்வித வரலாற்று ஆதாரங்களோ, ஆய்வுநூல்களோ தமிழ் அரசியல் தரப்புகளில் இருந்தோ, அறிஞர்  தரப்புகளில் இருந்தோ முன்வைக்கப்படவில்லை. சுந்தரலிங்கம் தனது கூற்றுக்கு  “பிறவுண் றிக்” எனும் ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியின் முதலாவது (1802) செயலாளரது அறிக்கை ஒன்றை மட்டுமே ஆதாரமாக காட்டியிருந்தார். 
  1961 ஆம் ஆண்டு வடகிழக்கில் உக்கிரமடைந்த சத்தியாக்கிரக நிகழ்வுகள், தமிழரசு தபால் சேவை போன்றவை தமது பூர்வீகமான தாயகம் நோக்கிய அரசியல் அவாவை தமிழ் மக்களிடத்தில்  அதிகரிக்கச்செய்வதில்  முக்கியபங்காற்றின. மொழிச்சட்டத்தை எதிர்த்து ஐக்கிய தேசியக்கட்சியில்  எம்பியாக இருந்து ஏ.எம்.ஏ.அசீஸ் போன்ற தலைவர்கள் தமது பதவியை ராஜினாமா செய்தது தொடங்கி சத்தியாக்கிரக  நிகழ்வுகளின்போது சிறைநிறைப்புப் போராட்டத்தில் முன்னணிவகித்த மசூர்  மௌலானா, எருக்கலம்பிட்டி கே.எஸ்.ஏ.கபூர் வரை முஸ்லிம்களும் தமிழர் தாயகம் நோக்கிய போராட்டத்தில் தம்மை இணைக்கத் தொடங்கினர்.
வடகிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த மக்கள் மத்தியில் மட்டுமன்றி முஸ்லிம்கள் இடத்திலும் பெரும் தாக்கத்தை இம்மொழிப்பிரச்சனையும் இனக்கலவர நிகழ்வுகளும் ஏற்படுத்தின. அதேவேளை வட இலங்கையில் வாழ்ந்த தலித் மக்கள் மத்தியில்  குறிப்பிடத்தக்க தாக்கம் எதையும் செலுத்தவில்லை. காரணம் அவர்களது சொந்த  கிராமங்களிலேயே அவர்கள் எதிர்கொண்டு வாழ்ந்த சாதிய ஒடுக்குமுறைகள் வெளியுலக நாட்டம் குறித்து அவர்களை அக்கறை கொள்ளச்செய்யவில்லை. பாடசாலைகளுக்கு  அனுமதி மறுப்பு, ஆலயங்களுக்குள் நுழைவு மறுப்பு, பொதுக்கிணறுகளில் தண்ணீர்  அள்ளத்தடை, பஸ் வண்டிகளில் அமர்ந்து செல்லமுடியாது, பெண்கள் மேற்சட்டை அணியமுடியாது, பொதுவீதிகளில்  சுதந்திரமாக நடமாட முடியாது..... என்று எண்ணற்ற ஒடுக்குமுறைக்கு  உள்ளாக்கப்பட்டு வாழ்ந்தவர்கள் தலித்மக்கள். இவர்களுக்கு மொழிச்சட்டம்  குறித்தோ, கொழும்பில் நடந்த இனக்கலவரம் குறித்தோ, அரசகரும மொழி ஆங்கிலமா,  சிங்களமா என்பது பற்றி அக்கறை கொள்ள அவசியம் இருக்கவில்லை. தென்னிலங்கை  இனக்கலவரங்களை இவர்கள் பார்த்தவிதம் “கொழும்பில வேளாம் ஆட்களுக்கு  அடிக்கிறாங்களாம்” என்பதோடு முற்றுப்பெற்றது. எனவே யாழ்பாணத்தில் வாழ்ந்த  தலித்மக்கள் இந்த தாயகக்கோட்பாட்டு சிந்தனைக்குள் உள்ளீர்க்கப்படுவதென்பது  சற்று சிரமமான காரியமாகவே இருந்தது. 1965 களின் பின்னர் யாழ்ப்பாணத்தில்  உருவாகிய சாதிய எதிர்ப்பு வெகுஜனப்போராட்டங்கள் ஒரு ஆயுத மோதலாகவே  உக்கிரமடைந்தன. சங்கானை, மட்டுவில், நிச்சாமம், கன்பொல்லை என்று பல  இடங்களில்  போராட்டக்களங்கள் சூடுபிடித்தன. தீண்டாமைக்கெதிராக ஆலயப்பிரவேச  முயற்சிகளிலும் தேனீர்கடை பிரவேச முயற்சிகளிலும் சம உரிமைகோரி தலித்மக்கள்  கலகங்களில் ஈடுபட்டனர். இப்போராட்டங்களின் பின்புலங்களில் இடதுசாரி அணிகள்  இருந்த அதேவேளை தமிழ் மக்களின் ஒற்றுமையும் தாயகமும் வென்றெடுக்கப்பட  வேண்டும் என்று குரல் எழுப்பிவந்த தமிழரசுக்கட்சியினரோ தலித் விரோத  நிலைப்பாட்டினையே கொண்டிருந்தனர். ஆலய நுழைவுப்போராட்டங்களில் கைதான  வெகுஜனப் போராளிகளுக்காக அப்புக்காத்துகள் நிறைந்த தமிழரசுக்கட்சியினர்  யாரும் வாதாட முன்வராத நிலையில் சிங்கள இடதுசாரிகளின் வழக்கறிஞர்களே  தாழ்த்தப்பட்ட மக்கள் போராளிகளின் நியாயங்களுக்காக வாதாட தென்னிலங்கையில்  இருந்து யாழ்ப்பாணம் வந்தனர். தமிழரசுக்கட்சியினரின் ஆதிக்கசாதி  சார்புநிலைப்பாடு அவர்களை போலியான தமிழ்தேசியவாதிகளாக அம்பலப்படுத்தியது.  1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழரசுக்கட்சி, தமிழ்காங்கிரஸ்  போன்ற கட்சிகளின் பெருந்தலைவர்கள் அனைவரும் தோல்வியுறுவதற்கு மேற்படி சாதி  எதிர்ப்புப்போராட்ட காலங்களில் அவர்கள் எடுத்த தலித் விரோத நிலைப்பாடே  வழிவகுத்தது.  
சுருங்கச் சொன்னால் வட இலங்கையில் இடம்பெற்ற இந்த சாதியெதிர்ப்பு போராட்டமானது  செல்வநாயகம் போன்ற தலைவர்கள் கட்டியமைக்க நினைத்த தாயகக் கோட்பாடு என்பது  போலியானது என்பதை நிரூபித்தது. 
இந்த  நிலையில் 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஆட்சிக்கு வந்த அரசாங்கம்  கொண்டுவந்த கல்விதரப்படுத்தல் சட்டமானது இலங்கை அரசியலில் மிகப்பெரிய  தாக்கத்தை ஏற்படுத்தியது. இச்சட்டம் அப்பட்டமாகவே தமிழ் மொழிமூல  மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என உணரப்பட்டபோது அது தமிழ் மக்கள்  அனைவரையும் ஓரணிக்கு தள்ளியது. படித்த இளம் சமூகத்தினர் மத்தியில்  எதிர்காலம் பற்றிய பெரும் கேள்விகளை உருவாக்கி உணர்வுகளை கிளறிவிட்டது.    அதுவரை காலமும்  இல்லாத அளவிற்கு இளைஞர்களும், மாணவர் சமூகத்தினரும்  அரசியலில் அக்கறை கொள்ள வேண்டிய தேவையை அது உணர்த்தியது. குறிப்பாக  யாழ்ப்பாணத்து இளைஞர்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழ இச்சட்டம் வழிவகுத்தது. இந்த சூழலை சரியாகப் பயன்படுத்திய தமிழரசுக்கட்சி, தமிழ்  காங்கிரசுக்கட்சி போன்றவை தமது தாயகக் கோட்பாடு ஒன்றே இதற்கெல்லாம் தீர்வு  என்று இளைஞர்களை நோக்கி அரசியலில் வன்முறையை தூண்டிவிட ஆரம்பித்தனர்.  யாழ்ப்பாண சமூகத்தில் இருந்துவந்த சாதிப்போராட்ட கொந்தளிப்பு நிலைமைகளை  மறைத்துவிடவும், அவற்றினை இரண்டாம் பட்சமாக்கவும் இந்த கல்விதரப்படுத்தல்  சட்டம் வாய்ப்பளித்தது. ஆனபோதிலும் அரசாங்கம் மொழிவாரித்தரப்படுத்தலை  அடுத்தாண்டிலேயே நீக்கி மாவட்ட ரீதியிலான ஒதுக்கீட்டுத்திட்டங்களை  முன்மொழிந்தது. இதனால் கல்விவாய்ப்புக்கள் அதிகம் இருந்த யாழ்ப்பாணம்,  கொழும்பு, கண்டி, கம்பகா போன்ற மாவட்ட மாணவர்களுக்கு இருந்துவந்த  பல்கலைக்கழக வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டது. பின்தங்கிய மாவட்ட  மாணவர்களுக்கு ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டன. இதன்படி வடக்கு கிழக்கு  மாகாணங்களில் இருந்த பின்தங்கிய மாவட்டங்களான மட்டக்களப்பு அம்பாறை  திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி போன்ற பிரதேச மாணவர்கள்  முதன்முறையாக பல்கலைக்கழகங்களில் நுழையும் வாய்ப்புகளைப் பெற்றனர்.
இந்த  உண்மைகள் அனைத்தையும் மறைத்து யாழ்ப்பாணத்து மத்தியதர வர்க்கம் எதிர்கொண்ட  பாதிப்பு ஒன்றே அனைத்து தமிழர்களுக்குமான பாதிப்புமென பொய்யான  பிரச்சாரங்களை தமிழ் தலைவர்கள் முன்னெடுத்தனர். 1970 ஆண்டு தமிழ் மாணவர்  பேரவை, 1973 ஆம் ஆண்டு தமிழ் இளைஞர் பேரவை  போன்றவை உருவாகுவதற்கு இந்த  கல்விதரப்படுத்தல் சட்டம் பற்றிய பிரச்சனையே அடிகோலாயிற்று.       1970 ஆண்டு சோமவீர சந்திரசிறி என்னும் அமைச்சரின் காருக்கு சிவகுமாரன்  எனும் இளைஞன் குண்டுவைத்ததில் இருந்து தாயகக்கோட்பாடு முதன்முறையாக வன்முறை நோக்கி காலடி எடுத்துவைத்த வரலாறு ஆரம்பித்தது. அதேவேளை 1972 ஆம் ஆண்டு  சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசாங்கம் கொண்டுவந்த குடியரசு  யாப்புக்கு எதிரான alfred duraiappahபோராட்டங்களை தமிழரசுக்கட்சி வடகிழக்குப் பகுதிகளில்  முன்னெடுத்தது. 1970 ஆண்டுத் தேர்தலில் தோல்வியுற்றிருந்த தமிழ் கட்சிகள்  ஒன்றிணைந்து தமிழரின் தாயகம் நோக்கிய போராட்டங்களை வென்றெடுப்பதற்காக  தமிழர் கூட்டணி எனும் அமைப்பை இவ்வாண்டில் உருவாக்கினர். இவ்வமைப்பே  பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணியாக மாற்றம் பெற்றது. 1974 ஆண்டு  யாழ்;ப்பாணத்தில் நடாத்தப்பட்ட தமிழாராட்சி மாநாட்டில்  ஏற்பட்ட  அசம்பாவிதங்களின் போது 9 பொதுமக்கள் மின்சாரம் தாக்கி பலியானார்கள். இதற்கு சிங்கள பொலிசாரே காரணம் என குற்றம்சாட்டிய தமிழர் விடுதலைக்கூட்டணி  வடகிழக்கு எங்கும் அரசாங்கத்திற்கு எதிரான பெரும் உணர்வலைகளை பரப்பி  விடுவதில் வெற்றிகண்டது. 1974 இல் பல குண்டுவெடிப்பு சம்பவங்களின்  சூத்திரதாரியான சிவகுமாரன் பொலிசாரால் தேடப்பட்டு சுற்றிவளைக்கப்பட்ட போது  நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு தாயக விடுதலைக்கான முதலாவது  தற்கொடை என்று இன்றுவரை தமிழ் தேசியவாதிகள்   சொல்லிவருகின்றார்கள். 1975  இல் யாழ்ப்பாண மேயராக இருந்த அல்பிரட் துரையப்பா பிரபாகரனால்  சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வு, தாயக விடுதலைக்காக துரோகி பட்டம் சூட்டி  பல்லாயிரம் பேரை பலியெடுக்கும் வரலாற்றை தொடங்கிவைத்தது. 
தமிழ்த்தலைவர்கள் கட்டியமைத்துவந்த மரபுவழித்தாயகம் என்கின்ற கருத்தாக்கம் நோக்கி அதனை  வென்றெடுப்பதற்காக நேரடியாகவே ஆயுத வன்முறை ஒன்றே சரியான வழியென்று தமிழர்  விடுதலைக்கூட்டணி முதன்முறையாக அரசியல் தீர்மானங்களை நிறைவேற்றியது. 1976  ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம்  “வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுடாக வளவை  நதியில் இருந்து சிலாபம் வரைக்கும் தெற்கு மேற்கு பகுதிகளிலும்,  நடுப்பக்கத்திலும் சிங்கள மக்களும், வடக்கு கிழக்கு வடமேற்கு பகுதிகளில்  தமிழ் மக்களும் வாழ்ந்து இந்த நாட்டின் ஆளுகையை சிங்கள நாட்டினமும், தமிழ்  நாட்டினமும் தமக்குள் பகிர்ந்து வந்துள்ளது” எனவும், “இத்தீவில் உள்ள தமிழ் ஈழ நாட்டினத்தின் நிலையான வாழ்வை பாதுகாப்பதற்கு சுயநிர்ணய உரிமையின்  அடிப்படையில் ஒரு சுதந்திர இறைமையுள்ள மதச்சார்பற்ற சோசலிச தமிழீழ அரசை  மீள்வித்து புனரமைப்பு செய்வது தவிர்க்கமுடியாததாகி விட்டது” எனவும்,  “சுதந்திரத்திற்கான புனிதப்போரில் தம்மை முற்றுமுழுதாக அர்பணிக்க  முன்வருமாறும், இறைமையுள்ள  சோசலிச தமிழீழ அரசு என்ற இலக்கை அடையும் வரை  தயங்காது உழைக்குமாறும் தமிழ் தேசிய இனத்திற்கு பொதுவாகவும், தமிழ்  இளைஞர்களுக்கு சிறப்பாகவும் இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது”  எனவும்  தெரிவித்தது. 
இம்மாநாட்டைத் தொடர்ந்து வடகிழக்கு பிரதேசங்களில் வன்முறையை நோக்கிய வழியொன்றே தமிழீழ  மரபுவழித்தாயகத்தை வென்றெடுப்பதற்கான பாதையென பெரும்பாலான மக்கள் நம்பினர். இதுவரைகாலமும் தாயகம் எனக்குறிப்பிடப்பட்டு வந்த கருத்தாக்கம்  முதன்முறையாக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லப்பட்டவர்களால்  அரசியலில் தமிழீழம் என அடையாளப்படுத்தப் பட்டதோடு அதுவே தமிழ் மக்கள்  அனைவருக்குமான விடுதலையை பெற்றுத்தரும் என முன்மொழியப்பட்டது. இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஏற்படுத்திய தாக்கம் ஒருபுறம் தமிழர் விடுதலைக் கூட்டணியை 1977  ஆண்டுத் தேர்தலில் பெரும் வெற்றிவாகை சூடவும் மறுபுறம் வடகிழக்கு வாழ்  இளைஞர்களை தாயக மீட்பு போரில் வன்முறை நோக்கி தள்ளிவிடவும் வழிகோலியது. 
தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கத்தின்போது இலங்கை வாழ் தமிழர்கள் எதிர்கொண்ட  பிராஜாவுரிமை பிரச்சனை, குடியேற்ற பிரச்சனை, கல்விதரப்படுத்தல் பிரச்சனை,  மொழிப்பிரச்சனை போன்ற அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டே தோட்டத்தொழிலாளர்  காங்கிரசும் ஒன்றிணைந்திருந்தது. ஆனபோதிலும் இவையனைத்துக்குமான தீர்வு  மரபுவழித்தாயகத்தின் விடுதலையூடாகவே பெற்றுக்கொள்ள முடியும் என வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது  மலையக மக்களின் தலைவராக இருந்த தொண்டமான் இந்த தாயகக் கோரிக்கை என்பது  வடகிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் எமது  “மலையக மக்களுக்கு  பொருத்தமற்ற முடிவு” என தெரிவித்து அதிலிருந்து வெளியேறினார்.
தேர்தல் வெற்றிகளை நோக்கி பிரச்சார அணிதிரட்டலுக்காக அவசர அவசரமாக செய்யப்பட்ட  இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானமானது உண்மையிலேயே ஒரு தாயகக் கோட்பாட்டை  வரையறுத்து அதற்கான வேலைத்திட்டங்களை ஒழுங்குசெய்து திட்டமிடப்பட்ட வகையில் நிறைவேற்றப்படவில்லை. கடந்தகாலத்தில் ஏற்பட்ட அரசியல் தோல்விகளை மேவி  தமிழ் மக்களை ஓரணியில் திரட்டுவதற்கான பிரச்சார உத்தியாகவே மேற்படி  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏனெனில் ஒரு இனத்தின் தாயகக் கோட்பாடு  வரையறுக்கப்படும்போது அந்த தமிழீழத்திற்கென ஒரு தேசிய சின்னத்தைக்கூட  மக்கள்முன் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் முன்வைக்கவில்லை. 1982 ஆம் ஆண்டு உலகத்தமிழீழ மாநாடு என்றுசொல்லி அமெரிக்காவின் நியுயோர்க் நகரில்  நடாத்தப்பட்ட மாநாட்டில் தமிழீழக்கொடி என அடையாளப்படுத்தப்பட்டு ஏற்றப்பட்ட கொடி தமிழர் விடுதலைக்கூட்டணியினருடைய சூரியன் கொடியேயாகும். யாழ்ப்பாண  தமிழாராட்சி மாநாட்டிலும் அந்த மாநாட்டின் நோக்கங்கள் பெறுமதிகள்  அனைத்தையும் கேலிக்கூத்தாக்குவது போல் தமிழர்விடுதலைக் கூட்டணியின் சூரியன் கொடியே அலங்கார வளைவுகள் எங்கும் பறக்கவிடப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் எழுப்பப்பட்ட தமிழீழ விடுதலைக்காக முதல் தற்கொலைப் போராளியாக  சிவகுமாரனுடைய உருவச்சிலையில் கூட சூரியன் கொடியே பொறிக்கப்பட்டிருந்தது.  பின்னர் வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் தமிழீழத்திற்கான  தேசியக்கொடியாக புலிகள் தமது புலிச்சின்னத்தை எங்கும் வியாபிக்கச்  செய்வதில் வெற்றிகண்டனர். காலத்திற்கு காலம் மாறிவந்த அல்லது மக்களிடம்  செல்வாக்கு செலுத்திய அரசியல் கட்சிகளின், இயக்கங்களின் கொடிகளே தமிழீழ  தாயகத்திற்கு அவ்வப்போது பொருத்தப்பட்டன என்பது நகைப்புக்குரியது.  இதேபோன்று சிலாபத்தில் இருந்து வளவைகங்கை வரை என்று சுந்தரலிங்கம் சொன்ன  வார்த்தைப்பிரயோகத்தைத் தாண்டி வேறெந்த தாயக எல்லைகள் குறித்த  வரையறைகளையும் தமிழினத்தின் அறிஞர்குழாம் இணைந்தோ, ஆய்வுகளின் பின்னரோ  முன்வைக்கவில்லை. நியுயோர்க் உலகத்தமிழீழ மாநாட்டில் முன்வைக்கப்பட்ட  தமிழீழ எல்லை கிழக்குக் கரையோரமாக சென்று அம்பாந்தோட்டையில்  முடிவுற்றிருந்தது. யாழ்ப்பாணத்தில் வைத்து சங்கிலியனின் வாள் என ஒன்றை தூக்கி காட்டி இந்த சங்கிலியன் ஆட்சியை மீட்போம், இந்த நல்லூரில் தமிழீழ பாராளுமன்றம் அமைப்போம் என்றும்,  கிழக்குமாகாணத்துக்கு வந்து திருமலையே தமிழீழத்தின் தலைநகரம் என்றும்  முன்னுக்கு பின் முரணாக பொறுப்பற்ற முறையில் பேசி திரிந்தார்  அமிர்தலிங்கம். மேற்படி தகவல்கள் இந்த தமிழீழம் என்பது அவரவரது அரசியல்  விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறு கற்பனைகளிலேயே  சிக்கி சீரழியத்  தொடங்கியிருந்தது என்பதையே எடுத்துக்காட்டுகின்றன. 
மரபுவழித்தாயகத்துக்கான அவசியம் என்பது குறித்து எல்லா தமிழ் மக்களையும் ஓரணியில் திரட்டுவதில்  தமிழ் தலைவர்கள் முன்வைத்த காரணங்களை விட 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த  ஜே.ஆர்.ஜெயவர்த்தனா செய்த நடவடிக்கைகளே முக்கிய காரணமாகும். அவர்  கொண்டுவந்த பயங்கரவாத தடைசட்டம், அவசரகால தடைசட்டம் போன்றவையும்,  வடகிழக்கில் களமிறக்கப்பட்ட சிங்கள இராணுவத்தினரின் கெடுபிடிகளுமே தமிழ்  இளைஞர்களை மரபுவழிதாயகத்திற்கான போராட்டத்திற்குள் தள்ளிவிடுவதில் முக்கிய  பங்கு வகித்தன. 
இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே தமிழர்களின் மரபுவழித்தாயகத்தை ஒட்டிய சிந்தனைகள் முளைவிடத் தொடங்கியிருந்தது. அவ்வேளைகளில் இலங்கைவாழ் முஸ்லிம்களின் அரசியலைத் தீர்மானிப்போர்களாக கொழும்பை அடிப்படையாகக் கொண்ட முஸ்லிம் தலைமைகளே காணப்பட்டன. இதன் காரணமாக வடகிழக்கு வாழ் முஸ்லிம்கள் இந்த மரபுவழித்தாயகத்தின்பால் பெரும்பாலும் ஈர்க்கப்படவில்லை.  சுதந்திரத்தின் பின்னரே இந்த நிலைமைகளில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது.  தமிழரசுக்கட்சியின் தோற்றம் வடகிழக்கு வாழ் முஸ்லிம்களையும் தமிழ் பேசும் மக்கள் எனும் அரசியல் அடையாளத்துக்குள் கொண்டுவருவதில் கணிசமான பங்காற்றியது.
1915 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற சிங்கள முஸ்லிம் கலவரங்களின் சூத்திரதாரிகளான சிங்களத் தலைவர்களை காப்பாற்றியது பொன்.இராமநாதன் போன்றவர்களேயாகும். முஸ்லிம்களுக்கு எதிராக அன்றைய தமிழ் தலைவர்களாக இருந்த இராமநாதன் போன்றவர்கள் செயற்பட்டமை முஸ்லிம்கள் இடத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் மீதான பெரும் சந்தேக உணர்வையும்  அச்சத்தையும் தோற்றுவித்திருந்தது. இந்நிலைமைகளில் மாற்றம் ஏற்பட தொடங்கிய  காலப்பகுதி இதுவாகும். 

Aucun commentaire:

Enregistrer un commentaire