காசாவில் நேற்று வெள்ளிக்கிழமை 72 மணிநேர மனிதாபிமான யுத்த நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட ஒருசில மணி நேரத்திற்குள் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் மனிதாபிமான யுத்த நிறுத்தம் முடிவுக்கு வருவதாகவும் மீண்டும் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படு வதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. பலஸ்தீன ஆயுதக் குழுக்கள் யுத்த நிறுத்தத்தை மீறியதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதன்படி யுத்த நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலும் காசாவில் மேலும் 25 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன மருத்துவ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இஸ்ரேல் - ஹமாஸ¤க்கு இடையில் நிபந்தனைகளுடனான மனிதாபிமான யுத்த நிறுத்தம் உள்ளூர் நேரப்படி நேற்றுக்காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப் பட்டதைத் தொடர்ந்து காசாவில் தாக்குதல்கள் தணிந்திருந்தது. ஆனால் யுத்த நிறுத்தம் ஆரம்பமாகி மூன்று மணி நேரத்திற்குள் காசாவில் ரபா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலில் ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு பலருக்கும் காயம் ஏற்பட்டிருப்பதாக பலஸ்தீன மருத்துவ வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
அதேபோன்று யுத்த நிறுத்த காலத்தில் கிழக்கு காசாவில் ஸ்னைப்பர் தாக்குதல் களும் பதிவாகியுள்ளன. ஷஜையா பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதலால் பாரிய புகைமூட்டம் எழுந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதன்படி கடந்த 25 தினங்களாக தொடரும் காசா மீதான தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,461 ஆக உயர்ந்திருப்பதோடு, மேலும் 8, 400 பேர் காயமடைந்துள்ளனர். இதில் அதிக பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்களாவர்.
மறுபுறத்தில் 61 துருப்புகள் உட்பட மொத்தம் 63 இஸ்ரேலியர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது.
பலஸ்தீன போராட்டக் குழுக்களின் ரொக்கெட் தாக்குதலை நிறுத்தவும் இஸ் ரேல் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் காசா சுரங்கப்பாதைகளை அழிக்கும் இலக் குடனுமே இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
எனினும் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு காசா மீது இஸ்ரேல் மற்றும் எகிப்து பல ஆண்டுகளாக முன்னெடுத்து வரும் முற்றுகையை அகற்றுமாறு அழுத்தம் கொடுத்து வருகிறது.
ஐ. நா. மற்றும் அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்ட காசாவில் 72 மணி நேர யுத்த நிறுத்தம் மனிதாபிமான அடிப்படை யிலானது என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த யுத்த நிறுத்த காலத்திலும் இஸ்ரேல் துருப்புகள் காசாவில் நிலைகொண்டிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
“மனிதாபிமான யுத்த நிறுத்தம் ஆரம்பிக்கப்படும் வரை அனைத்து தரப்பும் நிதானமாக செயற்படும்படி வலியுறுத்து கிறோம். யுத்த நிறுத்த காலத்தில் முழுமையாக யுத்த நிறுத்தத்தை கடைப்பிடிக்கும்படி கோருகிறோம்” என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி மற்றும் ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூட்டாக வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “வன்முறையில் இருந்து பாதிக்கப்பட்டிருக்கும் அப்பாவி பொதுமக்களுக்கு அவகாசம் கொடுப்பதாக அமைந்திருக்கும்” என்று அந்த அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த யுத்த நிறுத்த காலத்தில் காசா மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் என்றும் கொல்லப்பட்ட தமது உறவினர்களை அடக்கம் செய்ய, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மற்றும் உணவுப் பொருட்களை சேமிக்க உதவும் என்றும் ஐ. நா அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த யுத்த நிறுத்தத்தை மீறும்பட்சத்தில் மோதலை முடிவுக்கு கொண்டுவரும் வாய்ப்பு இல்லாமல் போகும் என்று இந்தியா சென்றிருக்கும் ஜோன் கெர்ரி எச்சரித்துள்ளார். “இது ஒரு அவகாசம். இது ஒரு நல்ல சந்தர்ப்பம். முடிவல்ல” என்று கெர்ரி குறிப்பிட்டார்.
இந்த யுத்த நிறுத்தத்தை ஏற்ற ஹமாஸ் அது இஸ்ரேலின் கையிலேயே தங்யிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. “வெள்ளிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் 72 மணிநேர யுத்த நிறுத்தத்துக்கு ஹமாஸ் மற்றும் ஏனைய போராட்டக் குழுக்கள், எதிர் தரப்பும் கடைபிடித்தால் இணங்கி மதிப்பளிக்கும்” என்று ஹமாஸ் பேச்சாளர் பெளஸி பர்ஹும் குறிப்பிட்டார்.
எனினும் மனிதாபிமான யுத்த நிறுத்த காலப்பகுதியிலும் காசாவில் நிலை கொண்டிருக்கும் இஸ்ரேல் துருப்புகள் அங்குள்ள ஹமாஸ் சுரங்கப் பாதைகளை அழிக்கும் நடவடிக்கையை தொடரும் என்று இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட் டிருந்தது.
Aucun commentaire:
Enregistrer un commentaire