எதிரிகளின் சூழ்ச்சிகளில் முதன்மையானது, ஒடுக்கப் பட்ட மக்களை பிரித்து வைப்பது. அதை இப்படியான வழிகளிலும் சாதிக்கலாம்.
வன்னியில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது கண்களை மூடிக் கொண்டிருந்த,
ஓய்வு பெற்ற நீதியரசர் விக்கினேஸ்வரன், வட மாகாண முதலமைச்சராக பதவி
வகிக்கிறார். வன்னியில் முற்றுகைக்குள் அகப்பட்ட மக்கள் பட்டினியால்
செத்துக் கொண்டிருந்த நேரத்தில், அமெரிக்காவில் சில தமிழ் தனவந்தர்கள்,
ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் நிதியத்திற்கு கோடிக் கணக்கில் பணம்
வழங்கினார்கள்.
வன்னியில் மக்கள் செறிவாக கூடுமிடங்களை செய்மதிப் படங்கள் மூலம் காட்டிக்
கொடுத்து, தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக கொன்று குவிக்க உதவிய ஒபாமாவுக்கு
ஆதரவாக, அமெரிக்காவில் ஓர் தமிழர் அமைப்பு இயங்கியது. இந்தியாவில் அதே
காலகட்டத்தில், சோனியா அல்லது கருணாநிதி பெயரில் ஒரு தமிழ் இன
உணர்வாளர்களின் அமைப்பு இயங்கினால், அது எந்தளவு எதிர்ப்பை
சம்பாதித்திருக்கும்? ஆனால், தமிழ் இனப்படுகொலையில் பங்காளியான ஒபாமாவுக்கு
ஆதரவான தமிழர் அமைப்பு, யாருடைய கண்களையும் உறுத்தவில்லை.
அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்களையும், பண வசதி படைத்தவர்களையும் கேள்வி
கேட்கும் அளவிற்கு முதுகெலும்பில்லாத "மாற்றுக்" கருத்தாளர்கள் சிலர்,
முள்ளிவாய்க்கால் - காஸா படுகொலைகளை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களைப்
பார்த்து நக்கல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்காலையும்,
காஸாவையும் ஒப்பிட்டால் ஒரு சில "மாற்றுக்" கருத்தாளர்களுக்கும், போலித்
"தமிழ் இன உணர்வாளர்களுக்கும்" பிடிப்பதில்லை. முள்ளிவாய்க்கால் என்ற
சொல்லை பயன்படுத்துவதற்கு, தம்மிடம் மட்டுமே காப்புரிமை இருப்பது போன்று
நடந்து கொள்கின்றனர்.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகப் பேசினால், "எமக்கு தமிழீழம் மட்டுமே முக்கியம்"
என்று விதண்டாவாதம் செய்வார்கள். ஒரு சில "மாற்றுக்" கருத்தாளர்கள்
குறுக்கே புகுந்து, "உலகில் எவனும் தமிழன் சாகும் போது கண்டு கொள்ளவில்லை.
அதனால் பாலஸ்தீனர்கள் பற்றி எமக்கு அக்கறை இல்லை..." என்று ஒரு சாட்டு
சொல்வார்கள். "இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை, ஒரு சர்வதேச பிரச்சினை"
என்பது இந்த "மாற்றுக்" கருத்து அறிவுஜீவிகளுக்கு தெரியாமல் போனது
அதிசயமல்ல. ஏனென்றால், அமெரிக்கா உதவியின்றி அவர்களது அரசியல் நடக்காது.
இஸ்ரேலில் ஒரு கொலை நடந்தால் அது உலகச் செய்தி. அதே நேரத்தில் இன்னொரு
நாட்டில் ஆயிரம் பேர் இறந்தாலும், அந்தத் தகவல் எந்த ஊடகத்திலும்
வருவதில்லை. இன்று நேற்றல்ல, கடந்த எழுபது வருடங்களாக சர்வதேச சமூகம்
இஸ்ரேல் மீது அளவுக்கு அதிகமான கரிசனை காட்டி வருகின்றது. மேற்கத்திய
ஊடகங்கள் எந்தத் தகவலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனவோ, அதே தான் உலகம்
முழுவதும் பிரபலமாக பேசப் படும்.
காஸா போர் தொடங்கி நடந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில், இன்னொரு அரபு
நாடான லிபியாவில் ஒரு போர் நடந்து கொண்டிருந்த தகவலை எத்தனை பேர் கேள்விப்
பட்டிருப்பார்கள்? அதுவும் சாதாரணமான யுத்தம் அல்ல. கிளர்ச்சிக் குழுக்கள்
திரிப்பொலி சர்வதேச விமான நிலையத்தை தாக்கி உள்ளன. அங்கு நிறுத்தி வைக்கப்
பட்டிருந்த விமானங்களை தகர்த்துள்ளன.
லிபியா வான் பரப்பின் மேல் விமானங்கள் பறப்பதற்கு, சர்வதேச தடையுத்தரவு
போடப் பட்டுள்ளது. அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேறி உள்ளனர். பிரெஞ்சுப்
பிரஜைகளை வெளியேறுமாறு பணிக்கப் பட்டுள்ளது. இந்த தகவல் எல்லாம் எத்தனை
பேர் கேள்விப் பட்டிருப்பார்கள். எதற்காக எந்த ஊடகமும் அதற்கு
முக்கியத்துவம் கொடுக்கவில்லை? அதற்கு விடை ஒன்று தான். இஸ்ரேல் - பாலஸ்தீன
போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, சர்வதேச கவனம் முழுவதும் அங்கே தான்
குவிந்திருக்கும்.
2008 இறுதியிலும், 2009 தொடக்கத்திலும், வன்னியிலும், காஸாவிலும் ஒரே
நேரத்தில் போர் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில், சர்வதேச நாடுகள்
எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கும்? இந்த உண்மைகளை மறைக்கும்
போலித் தமிழ் இன உணர்வாளர்கள் சிலர், தமது இஸ்ரேலிய சார்பு அரசியலை
மறைப்பதற்காக பல தகிடுதத்தங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள்
யாரும் முள்ளிவாய்க்காலுக்காக அழவில்லை. ஆனால், இஸ்ரேலுக்காக அழுகிறார்கள். பிற்குறிப்பு:
- "ஈழத் தமிழர்கள் இஸ்ரேலிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்" (?) என்று, இஸ்ரேல் கொடுத்த ஆயுதங்களை பாவித்து நடந்த முள்ளிவாய்க்கால் படுகொலைகள் ஓய்ந்த பின்னர், நிராஜ் டேவிட் என்ற ஊடகவியலாளர் கூறி வந்தார். சுவிட்சர்லாந்தில் வாழும் இவர், லங்காஸ்ரீ (தமிழ்வின்) என்ற தமிழர்கள் மத்தியில் பிரபலமான இணையத்தளத்தில், இஸ்ரேலை புகழ்ந்து தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார்.
- ஈழத் தமிழர்கள் இஸ்ரேலுக்கு விசுவாசமானவர்களாக இருந்தால், மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது அவரது வாதம். GTV எனும் லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சியில் இஸ்ரேலுக்கு ஆதரவான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். GTV, லங்காஸ்ரீ என்பன மிகத் தீவிரமான தமிழ்தேசிய ஊடகங்கள் என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். நிராஜ் டேவிட் கூட தன்னை தீவிரமான தமிழ் தேசியவாதியாக காட்டிக் கொள்ளும் ஒருவர் தான்.
- லண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் IBC வானொலியும், மிகத் தீவிரமான தமிழ் தேசிய ஊடகம் தான். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்த யூதர்கள், ஒருவரை ஒருவர் சந்தித்தித்துக் கொள்ளும் பொழுது, "இஸ்ரேலில் சந்திப்போம்" என்று விடை பெறுவார்களாம். அதே மாதிரி, தமிழர்கள் எல்லோரும் "தமிழீழத்தில் சந்திப்போம்" என்று கூறிக் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி அறிவுறுத்தி வந்தது.
- ஸ்ரீதரன், இலங்கையிலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர். கட்சிக்குள்ளேயே மிகவும் தீவிரமான தமிழ் தேசியவாதி என்று, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெயரெடுத்தவர். அவர் ஒரு கூட்டத்தில் பேசும் பொழுது: "உலகிலேயே மூன்று புத்திசாலித்தனமான இனங்களின் பெயர்கள் J என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறது. அவை முறையே Jews, Japanese, Jaffna Tamils!" என்று கூறினார்.
- மே 17 இயக்கம், அனைத்து தமிழ் தேசியவாதிகள் சார்பாக, தமிழ்நாட்டில் பாலஸ்தீன ஆதரவுக் கூட்டம் போடுகின்றதாம். இப்போது ஒரு கேள்வி எழுகின்றது. மே 17 இயக்கத்தினர் "அசல் தமிழ் தேசியவாதிகள்" என்றால், மேலே குறிப்பிடப் பட்டவர்கள் "போலித் தமிழ் தேசியவாதிகளா?" இவர்களில் யார் உண்மையான தமிழ் தேசியவாதி? இந்தக் குழப்பத்திற்கு காரணம், உலகில் "பொதுவான தமிழ் தேசியம்" என்ற ஒன்று கிடையாது. ஏற்கனவே, தமிழ் தேசியவாதிகள் மத்தியிலும் வலதுசாரி, இடதுசாரி பிரிவினை காலம் காலமாக இருந்து வந்துள்ளது.
- பெரும்பான்மை ஆதரவாளர்களைக் கொண்ட, வலதுசாரித் தமிழ் தேசியவாதிகளுக்கு இடையிலும் ஒரே மாதிரியான கொள்கை கிடையாது. ஈழத்து தமிழ் தேசியத்திற்கும், தமிழகத் தமிழ் தேசியத்திற்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள், கொள்கை முரண்பாடுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினையில் எதிரொலிக்கிறது. வலதுசாரி தமிழ் தேசியவாதிகளில் ஒரு பிரிவினர் இஸ்ரேலை ஆதரிக்கையில், இன்னொரு பிரிவினர் பாலஸ்தீனத்தை ஆதரிக்கின்றனர். எது எப்படியோ, இஸ்ரேலுக்கு தலையையும், பாலஸ்தீனர்களுக்கு வாலையும் காட்டுவதற்கு விசேட திறமை வேண்டும். ............ ;நன்றி கலையகம்
Aucun commentaire:
Enregistrer un commentaire