mardi 5 août 2014

புன்னகை மன்னா... பொன்னகை அணிந்தவா..நல்லூர்க்கந்தா...! உண்மை சொல்லய்யா ஒரேயொரு தடவை

இப்ப நீங்கள் ஆராவது நல்லூருக்கோ யாழ்ப்பாணத்துக்கோ வந்து
nallur kovilபார்த்தியளண்டால், அப்பிடியே அசந்து, ஆச்சரியப்பட்டுப்போவியள்.

அந்தளவுக்குச் சனக் கூட்டமும் காப்புக்கடை, ஐஸ்கிறீம்கடைகளும் பெடி பெட்டையளின்ரை குதூகலமும் பட்டுப்புடவைகளின்ரை சரசரப்பும் மினுக்கமும் கோயில் வளாகத்தைச் சுற்றிநிறுத்தி வைச்சிருக்கிற வாகனங்களும்... எண்டு பார்க்கக் குளிர்ச்சியாக இருக்கு.

இதைத்தான் கண்கொள்ளாக் காட்சி எண்டு சொல்லிறதோ....

இதையெல்லாம் பார்க்க எவ்வளவு சந்தோசமாயிருக்கு...! முந்தியொருகாலம் இப்பிடித்தானே இருந்தம்.

பாட்டும் கூத்தும் கொண்டாட்டமும் திருவிழாவும் படமும் எண்டு...

இப்பிடியொரு காட்சியைக் காணிறதுக்காகத்தானே எத்தினையோ காலமாகக் காத்துக்கொண்டிருந்தம்.

சனங்கள் சந்தோசமாக இருக்கோணும். நாலு இடத்துக்கும் போய் வரோணும. ஊர் கூடிக் கொண்டாடோணும்...அதுக்காகத்தானே
எவ்வளவோ கஸ்ரங்களையெல்லாம் பட்டு உத்தரிச்சம்.

எல்லாத்துக்கும் கிடைச்ச ஒரு பெறுமதியைப்போல, நல்லதொரு காலத்துக்கு நல்லதொரு துடக்கம் எண்ட மாதிரி இந்தக் கொண்டாட்டம் இருக்கெண்டுதான் என்ரை மனசில படுகுது.

நல்லூருக்கு வாற ஒவ்வொருத்தற்றை முகத்தையும் கூர்ந்து, கூர்ந்து உன்னிப்பாகப் பாக்கிறன்.

ஒரு கவலையும் எங்களுக்கில்லை எண்டமாதிரி அத்தினை சந்தோசமாயிருக்கு.

நல்லூர்க்கந்தா...! இப்பிடியே நீ வன்னிச் சனங்களையும் தண்ணிக்குத் தவிச்சுக்கொண்டிருக்கிற தீவுச்சனங்களையும் சந்தோசக்கடலில மூழ்க வைச்சாயெண்டால்...

உனக்கும் வெற்றி. சனங்களாகிய எங்களுக்கும் வெற்றி...

ஆனால், நல்லூர்க்கந்தா, நீ அப்பிடியான ஆளில்லை. மனசில வஞ்சத்தையோ ஓரவஞ்சினையையோ வைச்சுக்கொண்டுதான் நீ நடக்கிறாய்...

நகரத்தில, வசதியான இடத்தில வாய்ப்பாக உனக்கு இடம் கிடைச்சதால நீ மற்ற எல்லாத்தையும் மறந்திட்டியா....

இல்லையெண்டால், உன்னட்டை அடிக்கடி வாற அரசியல்வாதிகளோட கூடிப்பழகிய பழக்கத்தில இந்த மாதிரிப் புறத்தி காட்டுகிற குணம் உனக்கும் வந்ததோ....?!

ஏனெண்டால், நீ நல்லாக் கொண்டாடுவாய்... செல்வச்செழிப்போட இருப்பாய்.... சனப்புழக்கமும் குதூகலமுமாய் எப்பவும் இருப்பாய்....

ஆனால், இஞ்சால தீவுப்பக்கமோ, தென்மராட்சி, வடமராட்சியின்ரை வெளிப்பக்கத்திலயோ... வன்னிப்பக்கத்திலயோ... பசியும் பஞ்சமும் தண்ணிப்பற்றாக்குறையுமாக.... சனங்கள் கிடந்து அல்லாடுதுகள்.

வலிவடக்கில இன்னும் சீராகச் சனங்கள் குடியேறவேயில்லை.
இதில சில இடங்களில மக்கள் குடியேறுகிறதுக்கு ஆமி இன்னும் அனுமதிக்கேல்ல. ஆமி விட்டுக்குடுத்த இடங்களில சனங்கள் குடியேறேல்ல.

இதையெல்லாம் நீ கண்டும் காணாமலா இருக்கிறாய் கந்தா...?

வசதியான இடத்தில வந்து குந்திவிட்டால் பிறகு எல்லாத்தையும் மறந்து போறது பிறவிக்குணமா... வசதிக்குணமா... சொல் முருகா...!

உன்னை நம்பியவர் கைகளைக் கைவிடாதே கந்தா...!

ஆனால், உன்னை நம்புகிறதே கஸ்ரம்போல இருக்கே கடம்பா...!

ஏமாற்றுவோரும் ஏமாறுவோரும் உன்னுடைய சந்நிதானத்தில் நிரந்தரமாகக் குடியிருக்கிற காரணத்தினால், நீ இதையெல்லாம் கண்டும் காணாமல் இருக்கிறாயா...!

சொல்லு முருகா...!

இந்தத் திருவிழா முடிஞ்சாப்பிறகு, பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில ஏறின கதையாக.... 'இஞ்ச – யாழ்ப்பாணத்திலயும் மனிசர் இருக்கேலுமோ...'

'அடுத்த வீட்டுக்குப் போறதுக்கே ஆமிக்காரனிட்டத்தான் அனுமதி எடுக்கோணும்'

யாழ்ப்பாணத்தில மூச்சு விடுகிறதெண்டாலும் அதுக்கும் அனுமதியை எடுக்கோணும்'  எண்ட கணக்கில ஆயிரம் கதைகள் வரும்.

கந்தா அதுக்கெல்லாம் நீ வாய் திறக்கமாட்டாய்...

நீ சுழியனல்லோ.... அரசியல்வாதிகளோட கூட்டு வைச்சிருக்கிற ஆளெல்லோ.. அதால எல்லாத்துக்கும் ஒரு சிரிப்பே பதிலாக இருக்கும்.

புன்னகை மன்னா... பொன்னகை அணிந்தவா... கந்தா.... ஒரேயொரு தடவை வாய்திறந்து உண்மை சொல்லய்யா... 
                                                                ;-வடபுலத்தான்

Aucun commentaire:

Enregistrer un commentaire