சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காலியாக உள்ள இடங்களில் ‘அம்மா திரையரங்கம்’ அமைக்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் சைதை துரைசாமி அறிவித்தார். பயன்பாடு இல்லாத மாநகராட்சிக்கு சொந்தமான பழைய கட்டிடங்கள், சமுதாய கூடங்கள் மற்றும் காலி இடங்களில் இந்த திரையரங்குகள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
பெரும்பாலான தியேட்டர்கள் வணிக, வளாகங்களாக மாற்றப்பட்ட நிலையில் திரைப்பட கட்டணம் அதிகளவு உயர்ந்துள்ளது.
சாமானிய மக்களின் பொழுது போக்கு அம்சத்தை நிறைவேற்றும் வகையில் குறைந்த கட்டணத்தில் ‘அம்மா திரையரங்கம்’ அமைப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
மண்டலத்திற்கு ஒன்று வீதம் 15 மண்டலங்களில் 15 அம்மா தியேட்டர்கள் முதல் கட்டமாக தொடங்கப்படுகிறது. நுங்கம்பாக்கம், ராயபுரம், மிண்ட், அண்ணா நகர், துறைமுகம், மதுரவாயல், பெருங்குடி ஆகிய பகுதிகளில் அம்மா தியேட்டர் அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
இடங்கள் தேர்வு செய்து தியேட்டர் அமைப்பதற்கான டெண்டர் விரைவில் விடப்படுகிறது. டிசம்பர் மாதம் இறுதிக்குள் அம்மா தியேட்டர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தியேட்டர்களில் யு சான்றிதழ் தமிழ் திரைப்படங்கள் மட்டுமே ஒளிபரப்பப்படும். மேலும் தியேட்டர்களில் குளு குளு வசதியும் செய்யப்படுகிறது. புதிய திரைப்படங்களை பார்க்கும் வகையில் நவீன ஒலி பெருக்கி சாதனங்கள் அமைக்கப்படுகின்றன.
பொது மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் பொழுது போக்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்க மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. திரைப்பட கட்டணமாக ரூ.25–க்கும் குறைவாக நிர்ணயிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire