தமிழர்களின் நிலங்களை திரும்ப ஒப்படைக்கும் இலங்கை அரசின் முடிவுக்கு அந்நாட்டு அதிபர் சிறிசேனா ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் சிறிசேனா
இலங்கையில் 30 ஆண்டுகளாக நடந்துவந்த போர் முடிவுக்கு வந்தாலும், தமிழர்களின் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படாமல் இருந்தது. இலங்கையில் சிறிசேனா தலைமையிலான ஆட்சி அமைந்தபின்னர் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. இலங்கை ராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலங்கள் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜப்பானில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டுக்கு இலங்கை அதிபர் சிறிசேனா சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டுள்ளார். இதற்காக ஜப்பான் சென்றுள்ள சிறிசேனா அங்குள்ள இலங்கை தமிழ் சமுதாயத்தினர் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
27 ஆண்டுகள் காத்திருப்பு
நாங்கள் குற்றவாளிகளாக தமிழர்களின் நிலங்களை திரும்ப அவர்களிடமே ஒப்படைத்து வருகிறோம். உங்கள் சொந்த நிலத்தை ராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அவர்கள் தங்கள் நிலங்களுக்காக ஒரு ஆண்டு, 2 ஆண்டு காத்திருக்கவில்லை, 27 ஆண்டுகளாக தங்கள் நிலம் திரும்ப கிடைக்க காத்திருக்கிறார்கள்.
ராணுவம் மூலம் விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டாலும், போருக்கான அடிப்படை காரணம் இன்னும் தொடருகிறது. எனவே மீண்டும் ஒரு பிரிவினைவாத போர் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில் இலங்கை அரசு உறுதியாக இருக்கிறது. நாட்டு ஒற்றுமைக்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
எந்த அச்சுறுத்தலும் இல்லை
அரசியல் எதிரிகளால் பரப்பப்படும் வதந்திகளை தவிர, இதுவரை வேறு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. எங்கள் அரசு வந்தபின்னர் அனைத்து நட்பு நாடுகளுடனும் சிறப்பாக ஒத்துழைத்து வருகிறோம். அண்டை நாடுகளும் எங்களை நட்புடன் வரவேற்கின்றன. எங்கள் ராணுவத்துக்கு இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற நாடுகள் பயிற்சி அளிக்கிறது. இதன்மூலம் நாங்கள் முன்னேறி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire