உங்க எல்லாரும் வீடு வாங்கினம், உன்னைக் கட்டி நான் என்னத்தைக் கண்டன்’ என்று உங்க வீட்டுக்காரன் தொண தொணப்புத் தாங்காமல் வீடு வாங்க ஐடியா பிறந்திருக்கும். வங்கியில் வீடு வாங்கக் கடன் கேட்டுப் போகும் போது, வெளியில் எத்தனை வீதத்திற்கு வட்டி அறவிடப்படும் என்று போட்டிருக்கும். உங்களுடைய ஆங்கிலப் புலமை கை கொடுக்க, வாதம் புரிந்து வட்டியைக் குறைத்திருப்பீர்கள்.
நல்ல விசயம். உங்க வீட்டுக்காரர் உங்கள் திறமையைப் பற்றி தன் நண்பர்களுக்கு வேறு புழுகியிருப்பார்.
சில நேரம், அந்த வீடு பிடிக்காமல் அதை விற்று விட்டு, விலையுயர்ந்த வேறு வீடு வாங்க வேண்டி வரலாம். (உங்கள் கணவர் தொணதொணப்புத் தான்!) சில நேரம், கஷ்டங்கள் சொல்லிக் கொள்ளாமல் வரும்.
ஐந்து வருடங்கள் மூடப்பட்ட மோட்கேஜை இடையில் முறிக்க வேண்டி வரலாம். வங்கிகள் ‘நன்றி, வணக்கம்!’ சொல்லி உங்களை வழியனுப்பாது. ஏற்கனவே பனையால் விழுந்த உங்களை மாடு போல் மிதித்து, தண்டம் அறவிடும்.
வங்கிகள் எப்போதுமே அதிகமான வட்டி விகிதத்தை வெளியில் காட்டி, கேட்பவர்களுக்கு மட்டும் கழிவு வழங்கும். கேட்காவிட்டால் வழமையான அதிகமான வட்டி விகிதமே அறவிடப்படும். ஆனால் இடையில் முறிக்க வேண்டி வந்தால், தண்டப்பணம் அதிகமான வட்டி விகிதத்திலேயே கணிக்கப்படும்.
இதற்கு நீங்கள் சிறிய வங்கிகளிடமோ, மற்றும் வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்களிடமோ வீட்டுக் கடன் பெறலாம். அவர்கள் தங்கள் வழமையான விகிதத்தையே வெளியில் விளம்பரம் செய்வதுடன் எந்தக் கழிவும் வழங்குவதில்லை. ஆனால், அவர்களின் வட்டி விகிதம் பெரிய வங்கிகளை விடக் குறைவாகவே இருக்கும்.
அல்லது வருடங்கள் வரையறுக்கப்பட்ட மூடிய மோட்கேஜ்களை பெறாமல், எந்த நேரமும் முறிக்கக் கூடிய திறந்த மோட்கேஜ்களை நீங்கள் பெறலாம்.
கனடிய சட்டங்களின்படி, வங்கிகள் தாங்கள் எப்படி வட்டி கணக்கிடுகின்றன என்பது பற்றி வாடிக்கையாளர்களுக்கு புரியக் கூடிய விதத்தில் தெரியப்படுத்த வேண்டும். ஆயினும் வங்கிகள் வழங்கும் விளக்கங்கள் பலரையும் குழப்பத்திற்குள்ளாக்கக் கூடிய வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டிருக்கும்.
எனவே வங்கி உங்களுக்கு வட்டி வீதத்தில் கழிவு தந்தால், அந்த விபரங்களைப் பெறுவதுடன், இடையில் முறிக்கப்பட்டால் ஏற்படக் கூடிய தண்டப் பணம் எப்படி கணக்கிடப்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
சில நேரங்களில் கட்டுப்பணத்தை விட அதிகமாகக் கட்டியிருந்தால், அந்தப் பணத்தை கணக்கீட்டின் போது குறைக்கும்படி கேளுங்கள். மோட்கேஜ் முகவர்கள் இது குறித்து விபரம் தெரிந்திருப்பதால் அவர்களின் உதவியை நாடுங்கள். அவர்கள் உங்களுடைய செலவுகளைக் குறைக்க வழி சொல்லித் தருவார்கள். (நேர்மையான முகவர்கள்!)
மோட்கேஜை முறிக்கும்போது ஏற்படக்கூடிய செலவுகள், பயன்கள் பற்றிய கணிப்பீடுகளை Penalty Calculator இந்த இணையத் தளத்தில் கணக்கிட்ட பின்னர் இடையில் மோட்கேஜை முறிப்பது பற்றி யோசியுங்கள்.
Aucun commentaire:
Enregistrer un commentaire