vendredi 6 mai 2016

குடியுரிமைக்கு மத்திய அரசை கையேந்தும் அதிமுகா தனி ஈழ தேர்தல் விஞ்ஞபனம்


தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 தினங்களே உள்ளன. அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட நிலையில் அ.தி.மு.க. மட்டும் தனது தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் இருந்தது.
அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எப்போது வெளிவரும் என்றும், அதில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா எந்தவித அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தனர்.
அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை.....
தமிழகத்தில் ஓடும் ஆறுகள் இணைக்கப்படும். சிறு, குறு விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்றுஅ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் வருமாறு:-.
* கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக் கடன் மற்றும் நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுப்படி செய்யப்படும்.
* 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலத்தில் ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க் கடன் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும். உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு முழு வட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் ரூ.20 ஆயிரத்து 787 கோடி அளவுக்கு பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட பயிர் கடன் ரூ.9 ஆயிரத்து 164 கோடி தான்.
* இயற்கை விவசாயம் ஊக் கப்படுத்தப்படும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. விவசாயிகளுக்கு தொடர்ந்து கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்.
* டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர விவசாயப் பகுதிகளில் மீத்தேன் எரிவாயுத் திட்டம், ஷேல் எரிவாயுத் திட்டம் போன்ற விவசாயிகளை பாதிக்கக் கூடிய எந்த திட்டமும் அனுமதிக்கப்படமாட்டாது. விவசாய நிலங்கள் வழியே எரிவாயு குழாய்கள் எடுத்துச் செல்வது அனுமதிக்கப்படமாட்டாது. மேம்படுத்தப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
* 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இந்த மடிக்கணினியுடன் (லேப்-டாப்), கட்டணமில்லா இணையதள இணைப்பு வசதியும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
* பள்ளி மாணவர்களுக் கான பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இணையதளம் வாயிலான ஒருங்கிணைந்த பயிலும் திட்டம் செயல்படுத்தப்படும். பள்ளிகளில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
* நலிவுற்ற மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு தனியார் பள்ளிகளில் பயில வழங்கப்படும் ஒதுக்கீடு தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* ஒவ்வொரு ஆண்டும் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும்.
* மருத்துவக் கல்லூரி பொது நுழைவுத்தேர்வுமுறை தொடர்ந்து எதிர்க்கப்படும்.
* தடையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் புதிய அனல் மின் நிலையங்கள் மூலம் 13 ஆயிரம் மெகாவாட் கூடுதல் மின்சாரம் பெறப்படும். புனல் மின் திட்டங்கள் மூலம் 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் பெறப்படும். 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் சூரிய சக்தி மூலம் பெறப்படும். சீரான மின்சாரம் வினியோகிக்கும் வகையில் மின் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும்.
* மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம் அனைவரும் பயனடைவதுடன் தற்போது 100 யூனிட் வரை பயன்படுத்தும் 78 லட்சம் மின் உபயோகிப்பாளர்கள் மின் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை.
* பொங்கல் பண்டிகைக்கு ரூ.500 மதிப்பில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இருந்து கைத்தறி துணிகள் வாங்கிக்கொள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் (ரேஷன் கார்டு) ரூ.500-க்கான வெகுமதி கூப்பன் (கிப்ட் கூப்பன்) வழங்கப்படும்.
* கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரம் 200 யூனிட்டுகளாக உயர்த்தப்படும். விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரம் 750 யூனிட்டுகளாக உயர்த்தப்படும்.
* மகளிர் பணியிடங்களுக் கும், பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் இரு சக்கர வாகனங்கள் (மொபட், ஸ்கூட்டர்) வாங்க 50 சதவீத மானியம் வழங்கப்படும்.
* ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் நிதிச் சேவைகளை பயன்படுத்தும் வகையில் அம்மா பேங்கிங் கார்டு வழங்கப்படும். வங்கிகளுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும். நிதிச் சேவையை உறுதிபடுத்தும் வகையிலும், அதிக வட்டிக்கு தனியாரிடம் பெற்றுள்ள கடன்களை திருப்பி செலுத்தும் வகையிலும், 1,000 ரூபாய் வரை சுலபத் தவணையில் செலுத்தக் கூடிய வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். வாரம் 10 ரூபாய் என்ற அளவிற்கு திருப்பிச் செலுத்தக்கூடிய அளவில் இந்தக் கடன் அமையும்.
இந்த அம்மா பேக்கிங் கார்டை பயன்படுத்தி அனைத்து வங்கிப் பரிவர்த்தனைகளை செய்வதோடு, அனைத்து கட்டணங்கள் செலுத்துதல் மற்றும் அரசின் அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு பயன்படுத்தும் விதமாக இந்த அம்மா பேங்கிங் கார்டு சேவை வழங்கப்படும்.
* அனைத்து அரசுத்துறை சேவைகளும் இணையதளம் மற்றும் கைபேசி மூலம் வழங்கப்படும்.
* அரசு இ-சேவை மையங் கள் மூலம் அனைத்து அரசு சேவைகள் மற்றும் இதர சேவைகள் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
* அரசு கேபிள் டி.வி. இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு செட்டாப் பாக்ஸ் விலையின்றி வழங்கப்படும்.
* அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் குறைந்த கட்டணத்தில் தரமான சேவை தொடர்ந்து வழங்கப்படும்.
* தமிழகத்தில் உள்ள பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், கம்பியில்லா இணையதள வசதி (வை-பை) கட்டணமில்லாமல் வழங்கப்படும்.
* மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு கட்டணமில்லா இணையதள வசதி செய்து தரப்படும்.
* அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கைப்பேசி (செல்போன்) விலையின்றி வழங்கப்படும்.
* தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் காலை சிற்றுண்டி வழங்கப்படும்.
* திருமண நிதி உதவி திட்டங்களின் கீழ் 10-ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு 25,000 ரூபாயுடன் 4 கிராம் தங்கம், பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற பெண்களுக்கு 50,000 ரூபாய் உடன் 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருமண உதவித் திட்டங்களின் கீழ் உதவித் தொகையுடன் வழங்கப்படும் தங்கம் 4 கிராம் என்பதிலிருந்து 1 சவரன் (8 கிராம்) ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* தமிழ்நாட்டில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது.
* வணிகர் நலனுக்கு அரசு வழங்கும் தொகுப்பு நிதி 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.
* வியாபாரிகள் எவ்வித இடையூறுகளுக்கும் உள்ளாகாமல் வியாபாரம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு எளிமைப்படுத்தப்படும். வழிகாட்டு மதிப்பீடு நிர்ணயிக்கும் முறை சீரமைக்கப்படும்.
* புதிய சாலைகளை அமைத்தல், சாலைகளை அகலப்படுத்துதல், புறவழிச்சாலைகளை அமைத்தல், ரெயில்வே மேம்பாலங்கள், பாலங்கள் மற்றும் சிறு பாலங்கள் அமைத்தல் ஆகிய திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* மீனம்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரை உயர்நிலை நெடுஞ்சாலை மேம்பாலம் அமைக்கப்படும்.
* கோயம்புத்தூர் உப்பிலிப்பாளையம் அவினாசி சாலை முதல் சின்னியம்பாளையம் காளப்பட்டி, விமான நிலையம் வரை உயர்நிலை நெடுஞ்சாலை மேம்பாலம் அமைக்கப்படும். இதுபோன்ற உயர்நிலை நெடுஞ்சாலை மேம்பாலங்கள் முக்கிய நகரங்களில் அமைக்கப்படும்.
* கடலூர் துறைமுகம், ஆழ்கடல் துறைமுகமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* பெருநகரங்களில் குடிசைகளில் வாழும் குடும்பத்தினருக்கு அடுக்குமாடி நகரகுடியிருப்புகள் கட்டப்படும். குடிசைப் பகுதிகள் அற்ற நகரங்களாக இவை மாற்றப்படும்.
* முதல்-அமைச்சரின் பசுமை வீடுகள் திட்டம், தொகுப்பு வீடுகள் திட்டம் மற்றும் இதர திட்டங்கள் மூலம் 10 லட்சம் வீடுகள் கட்டப்படும்.
* பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு, பழுதடைந்திருக்கும் தொகுப்பு வீடுகள் பழுதுபார்க்கப்படும்.
* பெருநகரங்களை ஒட்டி துணைக்கோள் நகரங்கள் ஏற்படுத்தப்படும்.
* அனைத்து வீட்டுமனை மற்றும் கட்டிட வரைபட ஒப்புதல்கள் 45 நாட்களுக்குள் வழங்கப்படும்.
* போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிய பேருந்துகள் வாங்கப்படும். புதிய வழித் தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும்.
* சிற்றுந்து வசதிகள் மேலும் மேம்படுத்தப்படும். மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து வசதி விரிவுபடுத்தப்படும்.
* சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் மோனோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
* தமிழ் மொழிக்கு தொண்டாற்றுபவர்களுக்கு, தமிழ் வளர்த்த சான்றோர் பெயர்களில் புதிய விருதுகள் ஏற்படுத்தப்படும்.
* பண்டை தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும்.
* நாட்டு விடுதலைக்குப் போராடிய தியாகிகள் மற்றும் பெரியோர்களுக்கு நினைவு மண்டபங்கள், சிலைகள் நிறுவப்படும்.
* தமிழை இந்திய ஆட்சி மொழியாகவும், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகவும் கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழ் மொழியின் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு செல்லும் வகையில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனி இருக்கை ஏற்படுத்தப்படும்.
* தமிழர் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் பழமையான பாரம்பரிய சிற்ப கலை, கிராமியக் கலை ஆகியவைகள் பாதுகாக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* கிராமப்புற திருக்கோவில்கள் கோவில்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள திருக்கோவில் கள் ஆகியவற்றின் திருப்பணிக்கு 25,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தி நிதி உதவி தற்போது வழங்கப்படுகிறது. இது ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
* தமிழ்நாட்டை விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டில் தலைசிறந்த மாநிலமாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* கடல் நீர் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
* மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் பேணும் வகையில் வைட்டமின் டி மற்றும் இரும்புச் சத்துகள் செறிவூட்டப்பட்ட ஆவின் பால் 1 லிட்டர் 25 ரூபாய் என குறைந்த விலையில் வழங்கப்படும். இதனால் ஆவினுக்கு ஏற்படும் இழப்பு அரசால் வழங்கப்படும்.
* அங்கன்வாடி மையங்கள் அனைத்துக்கும் எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு, பிரஷர் குக்கர் ஆகிய உபகரணங்கள் வழங்கப்படும்.
* ‘தனி நபர் இல்ல கழிப்பறை’ இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை எய்தப்படும்.
* மகளிருக்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்பட்டு, ஆட்டோக்கள் வாங்க மானியம் அளிக்கப்படும்.
* இரண்டு அல்லது மூன்று ஊராட்சிகளை ஒருங்கிணைத்து அந்தந்த இடங்களுக்கேற்ப வாழ்வாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ஊரக மகளிர் கூடுதல் வருவாய் ஈட்ட வழிவகை செய்யப்படும்.
* சென்னை நீங்கலாக உள்ள 11 மாநகராட்சிகளில், 5 மாநகராட்சிகளில் உலக சுகாதார அமைப்பின் அளவுகோலின்படி, நாளொன்றுக்கு, நபர் ஒருவருக்கு 110 லிட்டர் என்ற அளவிலும், 6 மாநகராட்சிகளில் 70 லிட்டருக்கு மேல் வழங்கப்படுகிறது. அதே போல் 124 நகராட்சிகளில் 53 நகராட்சிகளில், 90 லிட்டருக்கு மேலும், 70 நகராட்சிகளில் 40 லிட்டருக்கு மேலும் வழங்கப்படுகிறது. 528 பேரூராட்சிகளில், 526 பேரூராட்சிகளில் 70 லிட்டருக்கு மேல் வழங்கப்படுகிறது. எஞ்சிய இடங்களுக்கும் வரையறுக்கப்பட்ட அளவில் குடிநீர் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* ஏழை எளிய மக்களும் மினரல் வாட்டர் எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெறும் வகையிலான அம்மா குடிநீர்த் திட்டம் சென்னை மாநகரத்தில் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
* தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் அதிக அளவில் கிடைக்கப் பெற்று தொழில் நிறுவனங்கள் அமைந்திட தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* தூத்துக்குடி, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தொழில் துறை உற்பத்தி மண்டலங்கள் நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* திருவள்ளூர் மாவட்டத்தில் கனரக எந்திர உற்பத்தி மையம் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* திருநெல்வேலி மாவட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையம் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
* ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலம் அமைக் கும் திட்டத்திற்கான கொள்கை அளவிலான ஒப்புதல் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டு உற்பத்தி மண்டலம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் பகுதியில் சூரிய மின் உற்பத்தியுடன் கூடிய கடல்நீரை சுத்திகரிக்கும் திட்டத்திற்கு நிதி அளிக்க ஜெர்மன் வளர்ச்சி வங்கி இசைவு தெரிவித்துள்ளது. இதை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire