lundi 16 mai 2016

யாழ்ப்பாண மேயராக இருந்த அல்பிரட் துரையப்பாவை நோக்கி வெறுப்பை உருவாக்கும் தன்மை இப்படியாகத்தான் இருந்தது


Alfred-Duraiappahஅல்பிரட் துரையப்பா 1960 – 1965 வரை யாழ்ப்பாணத் தொகுதியின் சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார், மற்றும் பலமுறை மேயராகவும் பதவி வகித்த பிரபலமான மனிதர். பல தமிழ் தேசியவாதிகளால் இது நிராகரிக்கப்பட்ட போதிலும், உண்மை என்னவென்றால் எல்லா தோதல்களிலும் யாழ்ப்பாண தொகுதியில் வாக்குகள் அவர், தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சி என்பனவற்றுக்கு இடையில் சமமாகப் பிரிபட்டு வந்துள்ளன. அரசியலில் சிறந்த உதாரணமாக அல்லது கொள்கைவாதியாக தன்னை பிரதிநிதிப் படுத்துவதற்காக  அவர் விண்ணப்பம் செய்வதற்கான தேவை எதுவும் இருக்கவில்லை. அவர் தனது தொகுதி மக்களை தனிப்பட்ட முறையில் தனித்தனியாக நன்கு அறிவார், மற்றும் ஒவ்வொருவரும் அவரைத் தன் குடும்பத்தில் ஒருவராக  உணரும் விதத்தில் நடக்க முயற்சித்தார். அவர் வீதிகளில் மக்களைச் சந்திக்கும்போது அவர்களுக்கு வாழத்துச் சொல்லி அவர்களது படிப்பு மற்றும் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பாக விசாரிப்பார். சாதாரண வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு வேண்டிய மக்களின் தேவைகளை அவர் பூர்த்தி செய்துவந்தார். வேலைகள், இடமாற்றம், சந்தைக் கட்டிடம், பொதுக் கழிப்பறைகள் மற்றும் தெரு விளக்குகள் போன்றவற்றை அவர் நிறைவேற்றி வந்தார். அவரது அரசியல் பாணிக்கு அரசாங்கத்தின் புரவலர்தன்மை பொருத்தமாக இருக்கும் என்பதினால் அவர் தன்னை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைத்துக் கொண்டார்.
யாழ்ப்பாணத் தொகுதிக்கு வெளியே தன்னைக் காட்டிக்கொள்ள முனைப்புக் காட்டியதில்லை, ஆனால் அந்த கௌரவமான தொகுதியில் தேசியவாதிகளான தமிழர் ஐக்கிய முன்னணிக்கு (தமிழரசுக் கட்சிக்கு) ஒரு வலிமையான சவாலாகத் திகழ்ந்தார். அவர் கணிசமானளவு வணிகர்கள், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகத்தினரையும் மற்றும் நகரில் உள்ள வறிய மக்களையும் கொண்ட ஒரு வாக்கு வங்கியை தனதாக்கி வைத்திருந்தார். துரையப்பாவின் இந்த புகழ் தேசியவாதிகளுக்கு எரிச்சலை மூட்டியது. தேசத்தை பற்றிய சில தெளிவற்ற யோசனைகளை கடைப்பிடிப்பதற்காக, மக்கள் தங்கள் சாதாரண தேவைகள் மற்றும் வாழ்க்கையின் விருப்பங்கள் அனைத்தையும்  தியாகம் செய்யத் தயாராக உள்ள ஒரு பொய்யான தோற்றம் உடைய யாழ்ப்பாணத்தின் உயர்வான ஒரு சமூகத்தின்மீது  அவர்கள் அந்த தேசியவாதத்தை திணிக்க முற்பட்டார்கள். இந்த பாசாங்குத் தனத்தை துரையப்பா பகிரங்கப் படுத்தினார்.
1972ல் தமிழர் ஐக்கிய முன்னணி (தமிழரசுக்கட்சி) துரையப்பாவை துரோகி, மற்றும் சாவதற்கே லாயக்கானவர் என அழைத்து அவர்மீது திட்டமிட்ட தாக்குதல்களைத் தொடங்கியது. ஆரம்பத்தில் அது யாழ்ப்பாண தொகுதியை வெல்வதற்கான ஒரு சிறு சண்டை போலவே இருந்தது. ஆனால்  அவர்கள் அதிகம் வலியுறுத்தியது போல, தாங்கள் நினைப்பதுதான் சரியானதும் மற்றும் இயற்கையானதும் அவரது முடிவும் அப்படியே நடக்கவேண்டும் என நம்பத் தொடங்கினார்கள்.  ஜனவரி 1974ல் நடைபெற்ற சர்வதேச தமிழராய்ச்சி மாநாடு துரையப்பாவை இழிவுபடுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தது.
இந்த தொடர் ஆராய்ச்சி மாநாடு புகழ்பெற்ற கல்விமானான பிதா. எக்ஸ். தனிநாயகம் என்னும் திறமையான தமிழ் கல்விமானால் நடத்தப்பட்டது. இந்த தொடரின் முதல் மாநாடு 1966ல் கோலலம்பூரில் நடந்தது மற்றும் அதை பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தொடங்கி வைத்தார். மலேசிய அரசாங்கம் அதற்கு தாராளமான ஆதரவு வழங்கியது. 1974ம் ஆண்டு மாநாடு ஆரம்பத்தில் கொழும்பில் நடக்கும் என எதிர்பார்க்கப் பட்டது, ஆனால் அதன் அமைப்பாளர்கள் மாநாட்டை யாழ்ப்பாணத்துக்கு  மாற்ற முடிவு செய்தார்கள்.
இந்த மாநாடு யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டதும், தமிழர் ஐக்கிய முன்னணி (ரி.யு.எப்) தவிர்க்க முடியாதபடி அதன்மூலம் அரசியல் மூலதனம் தேட ஆரம்பித்தது. (குறிப்பு:- தமிழரசுக் கட்சி (எப்.பி) ஒரு பெரிய கூட்டணியாக தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பனவற்றுடன் இணைந்து 14 மே 1972ல் தமிழர் ஐக்கிய முன்னணியை (ரி.யு.எப்) உருவாக்கியது. இந்த தமிழர் ஐக்கிய முன்னணி ஸ்ரீலங்காவில் இருந்து பிரிந்து செல்லும் கொள்கையை இணைத்துக் கொண்டபின் 14 மே 1976ல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாக (ரி.யு.எல்.எப்) மாறியது. அப்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தாங்கள் பிரிவினையுடன் உடன்பட முடியாது என தெரிவித்து கூட்டணியில் இருந்து வெளியேறியது). எனினும் மாநாட்டை யாழ்ப்பாணத்துக்கு மாற்றுவதற்கு நல்ல பல காரணங்கள் இருந்தன மற்றும் ஏற்பாட்டாளர்கள் ரி.யு.எப் இனது திட்டப்படி நடந்தார்கள் என நம்புவதற்கான எந்தக் காரணமும் இருக்கவில்லை. ஆனால் அரசாங்கம் பதற்றமடைந்திருந்தது, மாநாட்டுக்காக ஸ்ரீலங்காவுக்கு வருகை தந்த நான்கு பிரதிநிதிகள் திருப்பி அனுப்பப் பட்டார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் இந்த நிகழ்வு பற்றி பொதுமக்களிடம் பெரிதான ஆர்வம் ஏற்பட்டிருந்தது. கல்வியல் சார்ந்த மாநாடு வீரசிங்கம் மண்டபத்தில் ஜனவரி 3ம் திகதி முதல் 9ம் திகதி வரை நடைபெற்றது. வெளிநாட்டு பிரதிநிதிகளின் பேச்சை மேலும் கேட்கவேண்டும் என மக்களிடமிருந்து அதிக வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டதால், இந்த பொது நிகழ்வு 10 ந்திகதி மாலை வரை நீட்டிக்கப்பட்டது.
கூட்டத்தை நடத்துவதற்கான காவல்துறையினரினரால் வழங்கப்பட்ட அனுமதி 9ந் திகதியுடன் முடிவடைந்ததால் மாநாட்டின் பிரதம ஏற்பாட்டாளர் கலாநிதி. மகாதோவாவுக்கும் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசேகராவுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு கனவான் ஒப்பந்த புரிந்துணர்வின்படி 10 ந்திகதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியான ஜனார்த்தனன் என்பவர் ஒரு பிரதிநிதியாக இல்லாதபடியால் அவர் கூட்டத்தில் பேசமாட்டார் என்கிற உத்தரவாதம் மகாதேவாவினால் வழங்கப்பட்டது. சில சாட்சிகள் தெரிவிப்பதின்படி ஜனார்த்தனன் அன்று மாலை 2ம் குறுக்குத் தெருவில் உள்ள ரி.யு.எப் இனது அலுவலகத்தில் அமிர்தலிங்கத்துடன் பேசிக்கொண்டிருந்தாராம். ஆனால் அவரது இருப்பின் சட்டபூர்வ தன்மை பற்றிய கேள்வி ஒன்றில் கிறீற்ஷர் அல்லது சன்சோனி ஆணைக்குழுக்களால் எழுப்பப்படவில்லை மற்றும் சன்சோனி தெரிவிப்பதன்படி, ஏ.எஸ்.பி சந்திரசேகரா முதல்நாள் ஜனார்த்தனனை எதிர்கொண்டு பொதுஇடத்தில் பேசக்கூடாது என எச்சரிக்கை செய்திருந்தாராம்.
மாநாட்டு அமைப்பாளர்கள் முதலில் இறுதிக் கூட்டத்தை திறந்த வெளி அரங்கில் நடத்துவதற்கு திட்டமிட்டார்கள், அதற்கான அனுமதியை யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பாவிடம் இருந்து பெறவேண்டி இருந்தது. ஆனால் 9ந்திகதி மழை பெய்திருந்ததால். அமைப்பாளர்கள் இறுதிக் கூட்டத்தை  வீரசிங்கம் மண்டபத்திற்கு மாற்றுவதற்கு திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் 10 ம் திகதி சனக்கூட்டம் மண்டபத்திற்குள் நெரிசல் ஏற்படுத்தியதால் பலரும் மண்டபத்துக்கு வெளியில் நின்று உரைகளை செவிமடுக்க வேண்டியதாயிற்று. மழை வருவதற்கான அறிகுறிகள் இல்லாததால் அமைப்பாளர்கள் இறுதி நேரத்தில் திரும்பவும் திறந்தவெளி அரங்கிற்குச் செல்லத் தீர்மானித்தார்கள். அவர்கள் அதற்கான அனுமதியை பெறுவதற்காக மேயர் துரையப்பா மற்றும் மாநகரசபை ஆணையாளர் ஆகியோரை சந்திக்க முயற்சித்தார்கள், ஆனால் அது வெற்றியளிக்கவில்லை.
அமைப்பாளர்கள் விரைவாக மண்டபத்துக்கு வெளியே ஒரு தற்காலிக மேடையை தயாரித்தார்கள், ஆனால் அது  வளாகத்துக்கு உள்ளே காங்கேசன் துறை வீதியையும் மற்றும் யாழ்ப்பாண முற்றவெளியையும் நோக்கும் வகையில் அமைந்திருந்தது. சுமார் 50,000 வரை மதிப்பிடத்தக்க மக்கள் வீதி ஓரங்களிலும் மற்றும் முற்றவெளி முதல் யாழ்ப்பாணக் கோட்டையின் அகழிவரையிலும் அமர்ந்திருந்தார்கள். நகர போக்கு வரத்துக்களை மணிக்கூண்டு கோபுர வீதி வழியாக பிரதான சாலையை நோக்கி திருப்பி அனுப்புவதில் பொலிசார் உதவி புரிந்தார்கள், அதன்படி மக்கள் கூட்டம் எதுவித இடையூறும் இன்றி பேச்சுக்களை கேட்க கூடியதாக இருந்தது. கூட்டம் தாமதமாக இரவு 8.00 மணியளவில் ஆரம்பமானது, மற்றும் தலைவர் கலாநிதி வித்தியானந்தன காவல்துறையினரின் உதவிகளுக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். முதலாவது பேச்சாளராக தென்னிந்தியாவை சேர்ந்த பேராசிரியர் நைனா முகமது தனது பேச்சை தொடங்கி பார்வையாளரை தனது சொல் மந்திரத்தால் கட்டிப்போட்டார்.
சிறிது நேரத்துக்குப் பின்னர் எல்லோரும் ஆச்சரியப்படும்படி கலகத் தடுப்பு காவல்துறையினரின் ஒரு பகுதியினர் மணிக்கூட்டு கோபுர பக்கம் இருந்து வீரசிங்கம் மண்டபத்தின் மேற்குப் புறமாக தாக்குதலை மேற்கொண்டவாறு கூட்டத்தினரை ஒரு பக்கமாக ஒதுங்கும்படி கடுமையான தொனியில் கட்டளையிட்டவாறே கூட்டத்தினரை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அமளி எற்பட்டு மின்சார கம்பி கீழே விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
பீதியடைந்த கூட்டத்தினர் கலைந்தோடத் தொடங்கினர். இந்த துயரம் ஏற்பட அல்பிரட் துரையப்பா தான் காரணமாக இருந்தார் என்பதற்கு ஒரு துளி ஆதாரம்கூட இல்லை. ஆனால். அவர் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் நகரபிதாவாக இருந்தபடியால் இந்தச் சம்பவத்திற்காக அவர் பலிக்கடா ஆக்கப்பட்டார். அதே இரவில் ரி.யு.எப் ஆதரவாளர் என அடையாளம் காணப்பட்ட ஒரு மனிதரின் தலைமையின் கீழ் பிரதான வீதியில் அமைந்திருந்த ஸ்ரீ.ல.சு.க வின் அலுவலகம் அடித்து நொருக்கப்பட்டது.
வெகு விரைவாகவே இந்த துயரத்துக்கும் மற்றும் பொதுமக்களின் மரணத்துக்கும் துரையப்பாதான் பொறுப்பு எனக் குற்றம்சாட்டி திறமையான பிரச்சார நடவடிக்கை கட்டவிழ்த்து விடப்பட்டது. திரும்பவும் இது பிணங்களின் மேல் நடத்தப்படும் ஒரு அரசியல் நடவடிக்கையாக மாறியது. பின்னர் அது எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் புதிய உயரத்தை அடைந்தது. இந்த துயரத்துக்கு யாராவது பொறுப்பேற்க வேண்டுமானால் அது ரி.யு.எப் மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோரே அதற்கான பெரும் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும் என்பது தொடர்ந்து தெளிவாகியிருக்கும். ஜனார்த்தனன் இந்தியாவக்கு திரும்பிச்சென்று காவல்துறையினரால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான சடலங்களை தான் கண்டதாக அறிவித்தார். ஸ்ரீலங்காவிலிருந்து வெளியாகும் பெரிய தமிழ் பத்திரிகையான வீரகேசரி தனது ஆசிரியத் தலையங்கத்தில் ஜனார்த்தனனின் பொறுப்பற்ற அறிக்கைக்காக கண்டனம் வெளியிட்டது.
அப்போது இருந்த அரசாங்கம் இதைப்பற்றி விசாரணை செய்வதற்கு ஒரு ஆணைக்குழுவை நியமித்து இந்த விடயத்தை தீர்த்து வைத்திருக்கலாம். ஆனால் திருமதி.பண்டாரநாயக்காவின் அரசாங்கம் அதையிட்டு ஒருவகை மனப்பயம் கொண்டிருந்ததால் அதைச் செய்ய மறுத்துவிட்டது. இந்த விடயம் நீதியரசர் ஓ.எல்.டி கிறெற்சர் தலைமையிலான மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு அதிகாரபூர்வமற்ற ஆணைக்குழுவின் முன் சென்றது. இதுபற்றி எமது அடுத்த பகுதியில் எடுத்துக் கொள்வோம்.
சன்சோனி ஆணைக்குழுவின் அறிக்கையில் (பக்கம் 25, கீழே பார்க்க) திரு.ஜே.டி.எம் (மித்ர) ஆரியசிங்க, அப்போதைய யாழ்ப்பாண பொலிஸ் அத்தியட்சகர் திருமதி அமிர்தலிங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட  ஒரு பேச்சை மேற்கோள் காட்டி தெரிவித்திருப்பது. 9 பெப்ரவரி 1974ல் மேற்குறித்த காவல்துறையின் நடவடிக்கை;ககு எதிராக தமிழர் ஐக்கிய முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு ஹர்;த்தாலின்போது, முனியப்பர் கோவிலுக்கு முன்பாக கூடியிருந்த ஒரு கூட்டத்தினர் முன்பாக திருமதி அமிர்தலிங்கம் அவர்கள் பேசும்போது, 10 ஜனவரியில் இடம்பெற்ற மரணங்களுக்கு ஏ.எஸ்.பி சந்திரசேகர அவர்கள்தான் பொறுப்பான நபர் மற்றும் துரோகியான துரையப்பா அன்றைய சம்பவங்களுக்கு பின்னால் இருந்து செயற்பட்டவர் என்று சொன்னதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எங்களது அடுத்த பகுதியில் திரு. ஆரியசிங்கா பற்றி அதிகம் சொல்லவேண்டி உள்ளது, ஆனால் திருமதி.அமிர்தலிங்கம் சொன்னதாக சொல்லப்படுபவை அந்த நேரத்தில் ரி.யு.எல்.எப் இன் அரசியலுடன் ஒத்ததாக உள்ளது .(உதாரணம்: 24 மே 1972ல் புதிய குடியரசு அரசியலமைப்புக்கு எதிரான ஒரு கூட்டத்தில் காசி ஆனந்தன் பேசியது. சாட்சிகள் தெரிவிப்பதின்படி,  இயற்கையாக மரணம் அடையக்கூடாது என்று பட்டியல் இடப்பட்டுள்ள துரோகிகள் மத்தியில் துரையப்பாவின் பெயரும் இருப்பதாகவும், ஆனால் அவரது மரணத்தின் தன்மை இளைய தலைமுறையினரால் தீhமானிக்கப்படும் என்றும் அவரால் குறிப்பிடப்பட்டது. செல்வநாயகமும் மற்றும் அமிர்தலிங்கமும் அப்போது அந்த மேடையில் அமர்ந்திருந்தார்கள்.)  இங்கு குறிப்பிட்டுக் கூறவேண்டியது என்னவென்றால் டி கிறெற்சர் ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது துரையப்பாவின் பெயர் எழவேயில்லை, இந்த ஆணைக்குழுவின் முன் சாட்சிகளை அழைத்து வருவதில் ரி.யு.எப் முக்கிய பாத்திரத்தை வகித்திருந்தது, மற்றும் ஆணைக்குழுவில் இருந்த பிஷப் குலேந்திரன் தமிழரசுக் கட்சியின் (ரி.யு.எப்) பக்கம் சார்பானவர் என்பது யாவரும் நன்கறிந்தது. ஒரு மேயர் என்கிற வகையில் துரையப்பா, நிகழ்ச்சி நடைபெறும் இடமாக யாழ்ப்பாண நகரசபை மண்டபத்தை அமைப்பாளர்கள் தேர்ந்தெடுப்பதை விரும்பியிருந்த போதிலும், எந்த வழியிலும் அவர் விரோதமாகவோ அல்லது ஒத்துழைக்காமலோ இருந்தார் என்று பரிந்துரைப்பதற்கு ஏதுவாகஆதாரங்கள் எதுவும் இருக்கவில்லை.
அல்பிரட் துரையப்பாவை நோக்கி வெறுப்பை உருவாக்கும் தன்மை இப்படியாகத்தான் இருந்தது. தேசியவாத அனுதாபிகளாக இருந்தவர்களுக்கு இந்தப் பிரச்சாரத்தை உட்கொள்ளுவது சிறிது சிரமமாக இருந்தது மற்றும் இது எதை நோக்கிச் செல்கிறது என்று கேட்கவும் அவர்கள் தவறி விட்டார்கள். போர்க்குணத்தின் வாயிற்படியில் நின்ற இளைஞர்கள் மனதில் விதைக்கப்பட்டவை கொல்வதற்கு ஒரு தூண்டுதலாக அமைந்துவிட்டன.
வெள்ளிக்கிழமை மாலைவேளையில் அவரது வழமையான நிகழ்ச்சிப்படி, பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு இரண்டு தோழர்களுடன் காரில் வந்திறங்கியபோது, 27 ஜூலை 1975ல் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார். பிரபாகரன் அந்த கொலையாளிகள் கூட்டத்தின் மத்தியில் இருந்தார், அப்போது அவர் புலிகள் இயக்கத்தை அமைக்கும் ஆரம்ப நிலையில் இருந்தார். துரையப்பாவின் தோழர்களில் ஒருவர் இதுபற்றி ஆர்வமுடன் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
காத்திருந்த கொலையாளிகள் நான்கு கதவுகளுள்ள அந்த சீருந்து நிறுத்தப்பட்டதும் அதன் பயணிகள் பயன்படுத்தும் மூன்று வாயில்களையும் நோக்கிச் சென்றார்கள். அவர்களது நோக்கம் துரையப்பாவையும் அவரது இரண்டு தோழர்களையும் கொல்வதாக இருந்தது. தோழர்களில் ஒருவர் பின்கதவு வழியாக கீழே இறங்கியதும், ஒரு கட்டையான இளைஞன் ஒரு கைத்துப்பாக்கியை அவரை நோக்கி குறிபார்த்தவாறு நடுங்கியபடி நிற்பதைக் கண்டார். யோகநாதன் என்கிற அந்த தோழர், அந்த இளைஞனை ஒரு பக்கமாக தள்ளி நிலத்தில் வீழ்த்திவிட்டு அருகில் உள்ள குளிர்பானம் விற்கும் பெட்டிக் கடைக்குள் ஓடி ஒளிந்து கொண்டார். மற்றைய தோழரான ராஜரட்னம் காயமடைந்தார் ஆனால் சமாளித்துக்கொண்டு ஓடிவிட்டார்.
பதற்றம் அடைந்திருந்த கொலையாளிகள்  துரையப்பாவின் சீருந்தை அதன் ஓட்டுனரான பற்குணம் என்பவருடன் சேர்த்து எடுத்துக்கொண்டு போனார்கள். பெட்டிக்கடைக்குள் மறைந்திருந்த யோகநாதனை நோக்கிச் செல்வதற்கு அவர்கள் முயற்சி மேற்கொள்ளவில்லை. கொலைகாரர்கள் அங்கிருந்து சென்றதும் பெட்டிக்கடை நடத்திய பெண் அவரை வெளியே வரும்படி அழைத்தாள். வெளியே வந்த அவர், துரையப்பா தண்ணீர் வேண்டிக் கதறுவதைக் கண்டார். செத்துக் கொண்டிருக்கும் அந்த மனிதரின்  தலையை தனது மடியில் ஏந்தியவாறு அவரது வாய்க்குள் சிறிது காற்றூட்டப்பட்ட தண்ணீரை ஊற்றினார். அதன்பின் துரையப்பா தன் கடைசி மூச்சை விட்டார். பல வருடங்களுக்குப் பின்னா பிரபாகரனது படத்தை பார்த்த யோகநாதன் தன் முன்னே நடுங்கியபடி நின்ற அந்த இளைஞன் பிரபாகரன்தான் என அடையாளம் கண்டுகொண்டார், அத்துடன் அவரது ஆர்வலராகவும் மாறினார். அந்தக் குழுவில் இருந்த மற்றொரு அங்கத்தவரான கலாபதி பிரபாகரனைப் போலவே சமமான தோற்றத்தை கொண்டவர் என மற்றவர்கள் தெரிவித்தார்கள்.
யோகநாதனது அடையாளம் சரியாக இருந்தால், ஜூலை 1975ல் பிரபாகரனால் இன்னமும் படுகொலையை ஒரு ஆரோக்கியமான முறையில் மேற்கொள்வதற்கு முடியாமலிருந்தது என சுட்டிக்காட்ட முடிகிறது. ஆனால் அதிக நேரம் ஆவதற்குள்ளேயே சீருந்து ஓட்டுனரான பற்குணத்தின் கொலைக்கு அவர் ஒரு கருவியாக மாறியுள்ளார். அதன்மூலம் அவரது நகர்வுகளுக்கான திசை சரியாக அமைக்கப்பட்டுவிட்டது.
மேலும் ரி.யு.எல்.எப் (அப்போது ரி.யு.எப்) துரையப்பாவின் கொலையை நேரடியாக தூண்டி விட்டதுக்கான ஆதாரம் எதுவுமில்லை. ரி.யு.எல்.எப் ஒரு கைத்துப்பாக்கியை துரையப்பாவுக்கு நேரே குறிபார்த்து வைத்துவிட்டு அதன் விசையை யாராவது இழுக்கட்டும் என்று தெரிந்து கொண்டு வேறுபக்கம் பார்த்துக்கொண்டு நின்றார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். சில ரி.யு.எல்.எப் தலைவர்கள் இந்த போராளி இளைஞர்களுடன் தொடர்பு கொண்டிருந்தது எங்களுக்கு தெரியும், உள்ளக இரகசியமாக இருந்த இந்த விடயம் 1976ல் அமிர்தலிங்கம் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ மத்திய குழுவின் சந்திப்பின் பின்னர் ஓரளவு சாதாரணமாகியது. இதன் அடையாளம் என்னவென்றால் 1980 களின் ஆரம்பங்களில் பிரபாகரன் அமிர்தலிங்கத்தின் விசுவாசியாக இருந்துள்ளார் என்பதுதான். ஆனால் எல்.ரீ.ரீ.ஈயின் தீர்மானம் மேற்கொள்ளும் விடயத்தில் ரி.யு.எல்.எப் ஏதாவது பங்களிப்பை மேற்கொண்டது என்று இதனை அர்த்தம் கொள்ளல் ஆகாது.
ரி.யு.எல்.எப் இன் யாழ்ப்பாண மேயராக இருந்த திருமதி. யோகேஸ்வரன், 1998ல் எல்.ரீ.ரீ.ஈ யினால் கொல்லப்பட்டார். யாழ்ப்பாணத்தில் இருந்து பிரசுரமாகும் சஞ்சீவி எனும் பத்திரிகையில் ஒரு பத்தி எழுத்தாளர் பின்னாளில் எழுதியது, துரையப்பாவை கொலை செய்த பின்னர் பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் இருந்த தனது கணவரிடத்தில் வந்ததாகவும் தான் அவருக்கு தேனீர் கொடுத்து உபசரித்ததாகவும் திருமதி யோகேஸ்வரன் தன்னிடத்தில் தெரிவித்தார் என்று.
 1977ல் யோகேஸ்வரன் ரி.யு.எல்.எப் இனது யாழ்ப்பாண தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதுடன் மற்றும் போராளி இளைஞர்களுடன் நட்பாக இருந்ததும் அனைவரும் அறிந்ததே.
எனினும் இந்த பத்தி எழுத்தாளரின் கூற்றை அவநம்பிக்கையுடனேயே கணிக்கப்பட வேண்டும். பதற்ற நிலையில் உள்ள கொலைகாரர்கள் இந்த மாதிரி வேலைகளைச் செய்ய மாட்டார்கள், அதுவும் காவல்துறையினர் அவர்களுக்காக வலை விரித்துள்ள சமயத்தில். இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்காக பிரபாகரன் யாழ்ப்பாண நகருக்கு வருவதற்குப் பதிலாக வட பகுதி கடற்கரைகளுக்குத்தான் சென்றிருப்பார். அவருடைய பாடசாலை நண்பருக்கு அவர் வழங்கிய அவரது சொந்த வாக்குமூலத்தின்படி அவர் செய்தது இதுதான். கடற்படையினரின் எச்சரிக்கை குறையும் வரை அவர் தொண்டமானாறு கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு ஆலமரத்தின் மீதேறி மூன்று நாட்கள் வரை அதன்மீது ஒளிந்திருந்தாராம். அதற்கு மேலும் அவர்கள் தப்பிச் செல்ல பயன்படுத்திய துரையப்பாவின் சீருந்தும் வடக்கு நோக்கியே ஓட்டிச் செல்லப்பட்டு வடபகுதிக் கரையில் உள்ள சேந்தாங்குளம் பகுதியில் கைவிடப் பட்டிருந்தது.
எனினும் தேசியவாதிகளின் கோரிக்கைகளுடன் உடன்பாடற்றவர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் மற்றும் துரையப்பாவின் வாழும் உரிமையை பலாத்தகாரமாக தட்டிப் பறித்தது என்பன தமிழ் அரசியலின் திசையை துயரத்தின் பக்கமாக திருப்பிவிட்டது. துரையப்பாவின் மரணத்தின் சோகம் கண்ணீர் பெருக்கெடுக்க வைத்தது. இன்று கண்ணீர் எதுவும் மிச்சமாக இல்லை.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்       ,,,,நன்றி

Aucun commentaire:

Enregistrer un commentaire