"நல்லிணக்கத்தின் பக்கம் எப்போதும் இருந்த நான் இன்னும் சற்று நேரங்களில் கைதுசெய்யப்படப் போகிறேன்." வட்டரக்க விஜித்த தேரர் ஜூன் 25 அன்று கைதுசெய்யப்படுவதற்கு சற்று சில நிமிடங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் வைத்து கூறியது இது.
மிகவும் பயந்த நிலையில் பீதியுடன் அங்கும் இங்குமாக தலையைத் திருப்பி அவதானித்தபடி ஊடகங்களுடன் உரையாற்றினார். பயந்த சுபாவமுள்ள அவர் இலகுவாக பயமுறுத்தலுக்கு உள்ளாகக்கூடியவர் என்பது ஏப்ரலில் நிப்பொன் ஹோட்டலில் நடந்த சம்பவம் நமக்கு உறுதிப்படுத்தியது.
"....இந்த நேரத்தில் என்னால் எதுவும் பேச முடியாத நிலையில் உள்ளேன். நீங்கள் பல மணிநேரமாக காத்திருப்பதால் இதனைக் கூறுகிறேன். இதுவரை எந்தவித ஊடகங்களுக்கும் நான் நடந்ததைக் கூறவில்லை. அப்படியிருந்தும் சில ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளன.
கேடுகெட்ட இனவாதிகள் ஒருபுறம் என்னிடம் இரத்தம் கேட்கும் போது இந்த ஊடகங்களும் வேறுசிலரும் மறுபுறம் என்னை கொன்றே விட்டனர்.
இது மின் ஒழுக்கு அல்லது மின்தாக்கி ஏற்பட்டதல்ல. முன்னைய காலத்தில் இரத்தப்பலி கொடுத்ததைப்போல நானும் இரத்தத்தை பூஜைக்காக கொடுக்க எந்தவித அவசியமும் இல்லை.
அழுத்கமையில் தீவைத்து அழித்தொழிப்பு செய்து, கொலை செய்த ஞானசார தேரோ வெளியில்... அமைதி, நல்லிணக்கத்தின் பக்கம் எப்போதும் இருந்த நான் இன்னும்சில நேரங்களில் கைதுசெய்யப்படப்போகிறேன்...." என்றார்.
"... தான் தாக்கப்பட்டதாக கூறிய அவர் பின்னர் தன்னைத்தானே அவ்வாறு செய்துகொண்டதாக கூறியிருக்கிறார்,.. எனவே பிழையான வாக்குமூலத்துக்காக அவரை கைதுசெய்யவிருக்கிறோம்.." என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
யார் இந்த வட்டரக்க விஜித்த தேரர்
பொதுபல சேனாவினால் மட்டுமல்ல ஒட்டுமொத்த பேரினவாதத் தரப்புக்கும் சவாலாக மாறி அவர்களால் இலக்குவைக்கப்பட்டிருக்கும் விஜித்த தேரர் இன்று ஊடகங்களில் அதிகம் அறியப்பட்டிருந்தாலும் அவரின் செயற்பாடுகள் இருபது வருட பின்னணியுடயது.
1994இல் மஹியங்கன விகாரைக்கு விகாராதிபதியாக சென்றார். அங்கிருந்தபடி அவர் ஏனைய சமூகங்களுடன் நெருங்கி சர்வமத ஐக்கியத்துக்காக; அவை சார்ந்த அமைப்புகளுடன் பணியாற்றத் தொடங்கினார். சில வருடங்களில் அப்போதைய துறைமுக அமைச்சராக இருந்த, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அவர்களுக்கு நெருக்கமானார். அதன் அஷ்ரப்பின் இணைப்பாளர்களில் ஒருவராக கடமையாற்றினார். இதன் தொடர்ச்சியாக அஷ்ரப் அவர்களின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய ஐக்கிய ஐக்கிய முன்னிணியின் தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டார்.
சோம ஹிமியின் பரப்புரை
வட்டரக்க விஜித்த தேரர் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவராக தெரிவானதிலிருந்து தான் சிங்கள பௌத்த பேரினவாத தரப்பு அவரை இலக்குவைத்து தாக்கத்தொடங்கியது. சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த கங்கொடவில சோம ஹிமி உரையாற்றும் ஒரு காணொளியை சமீபத்தில் காணக்கிடைத்தது. அதில் அவர் பல நூற்றுக்கனகனக்கானவர்கள் மத்தியில் பௌத்த போதனை செய்யும் போது நீண்ட நேரம் வட்டரக்க விஜித தேரோவை மோசமாக சாடுவதை காணக்கூடியதாக இருந்தது. இந்த தசாப்த்தத்தில் பேரினவாத தலைமைக் குறியீடாக ஞானசார இருப்பதுபோல 90களில் கங்கொடவில சோம தேரோ மிகவும் பிரசித்திபெற்ற பேரினவாத பிரச்சாரகர்.
முஸ்லிம்களுக்கு எதிராக புனையப்பட்டுள்ள பல விஷக் கருத்துக்களுக்கு காரணகர்த்தா சோம தேரர்.
முஸ்லிம்கள் வேகமாக பல்கிப் பெருகுகிறார்கள்... வியாபார, வர்த்தகத்துறைகளை ஆக்கிரமிக்கிறார்கள்... கலாசார ஆதிக்கம் செலுத்துகிறார்கள், அரசியல் அதிகாரம் அவர்கள் கைகளுக்கு போகிறது... சிங்களவர்கள் அதிக பிள்ளைகளை பெறவேண்டும் இல்லாவிட்டால் நாடு அந்நியர்கள் கைகளுக்கு போய்விடும்...
போன்ற கருத்துக்களை அவர் சாந்த முகத்தோடும், வெளித்தெரியாத ஆத்திரத்தோடும் பௌத்த உபதேசங்களோடு கலந்து பௌத்தர்களுக்கு ஊட்டினார். அப்போது சோம தேரோவோக்கும் அஷ்ரப்புக்கும் இடையில் நடந்த பகிரங்க TNL தொலைக்காட்சி விவாதம் (27.09.1999) மிகவும் பிரசித்திபெற்றது. (இது குறித்து எனது விரிவான கட்டுரை 1999.09.30 சரிநிகரில் வெளியாகியிருக்கிறது)
வட்டரக்க விஜித தேரோ குறித்து சோம ஹிமி சாடும்போது “...ஒரு முஸ்லிம் இயக்கமொன்றுக்கு எப்படி பௌத்தர் ஒருவர் அதுவும் பௌத்த பிக்கு ஒருவர் தலைமையேற்க முடியும். இது பௌத்தர்களுக்கு செய்யும் நிந்தனை...” என்று பிரசாரப் படுத்தினார். வட்டரக்க விஜித தேரவின் மத நல்லிணக்க முயற்சிகையும் கடுமையாக சாடினார். உண்மையில் அது முஸ்லிம் ஐக்கிய முன்னணி அல்ல. அது அஷ்ரப் தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணியாகும். இன்றைய சிங்கள இனவாத ஊடகங்கள் பலவும் விஜித தேரரை சாடும் போது வசதியாக அவர் “முஸ்லிம் ஐக்கிய முன்னணியின் தலைவர்” என புனைகின்றனர்.
வட்டரக்க விஜித ஹிமி பற்றி அன்று சோம ஹிமி பரப்பிய பொய் பரப்புரைகள் இன்றும் நம்பவைக்கப்பட்டுள்ளன. அஷ்ரப் அவர்கள் மர்மமான முறையில் ஹெலிகாப்டர் விபத்தில் 16.09.2000 அன்று மரணித்ததன் பின்னர் ஓரளவு தனித்துப் போன விஜித தேரர் தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
விஜித தேரவுக்கு “ப்ரஹ்ம தண்டனை”
மஹியங்கன தொகுதியில் பிரதேச சபை தேர்தலில் சுயேட்சைக் குழுவொன்றை ஏற்படுத்தி வாளி சின்னத்தில் போட்டியிட்டபோதும் அவர் தோல்வியைத் தழுவினார். பின்னர் மீண்டும் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னையின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணியில் அவர் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியையே பிரதிநித்தித்துவப்படுத்துகிறார். இன்றும் அவர் ஆளும்கட்சி பிரதேச சபை உறுப்பினர் என்பது கவனிக்கத்தக்கது.
பொது பல சேனாவை சேர்ந்தவர்கள் மஹியங்கன நகரில் வர்த்தக நிறுவனமொன்றின் மேல் மாடியில் நடத்தப்பட்டு வந்த கிறிஸ்தவ ஒன்றுகூடலை தாக்க முற்பட்டபோது அந்த கிறிஸ்தவர்களை பாதுகாத்தவர் விஜித தேரோ. அப்படி அவர் நடந்துகொண்டது பௌத்த விரோத செயல் என்று பௌத்தர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அது போல அவர் முஸ்லிம்களின் ரமழான் நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றியதையும் (08.08.2013) சுட்டிக்காட்டி அவருக்கெதிரான குற்றப்பத்திரிகையொன்று மகியங்கனவில் பௌத்த பிக்குகளினால் விநியோகிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் 12.08.2013 அன்று அவருக்கு எதிராக பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது. அதன்படி அவர் சங்க சம்மேளனத்திலிருந்து அவரை நீக்குவதாகவும் அவரை “ப்ரஹ்ம தண்டனை”க்கு உட்படுத்துமாறும் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தான் ஞானசார பல கூட்டங்களிலும் விஜித தேரரை சங்க சம்மேளனம் எப்போதோ நீக்கிவிட்டதாகவும் அவர் இதற்குமேல் ஒரு சீருடை தரிக்க அருகதையற்றவர் என்றும் பிரச்சாரம் செய்துவருவதை கவனித்திருப்பீர்கள். ஆனால் பொது பல சேனாவின் கட்டுபாட்டிலுள்ள சில பௌத்த விகாரைகளை சேர்ந்த பிக்குமார்களைக் கொண்ட ஒரு சிறு அமைப்பு தான் அப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது.
இந்த தீர்மானத்தை நிராகரித்த விஜித தேரர் எப்போதும்போல கடமையாற்றிக்கொண்டிருந்ததை சகிக்காத பிக்குமார் கூட்டம் விஜித தேரரை நிராகரிக்காதவரை தமது விகாரைகளில் நடத்தப்படும் “தஹாம்பாசல்” எனப்படும் சிறுவர்களுக்காக நடத்தப்படும் பௌத்த வகுப்புகளை இடைநிறுத்திவைப்பதாக அறிவித்தார்கள். அதனைத்தொடர்ந்து அவர் பௌத்தர்களால் நடத்தப்படும் பல நிகழ்வுகளுக்கு அழைக்கப்படவில்லை. அதுமட்டுமன்றி பிரதேச சபைக்கூட்டங்களுக்கு கூட அவர் எதிர்ப்புகளின் மத்தியிலும், பொலிஸ் பாதுகாப்பு மத்தியிலும் செல்ல நேரிட்டது.
தொடர் தாக்குதல்
சென்ற 21.08.2013 அன்று விஜித தேரர் தனது தாயின் மரண நினைவு சடங்கில் (சிங்களத்தில் “பிங்கம”) கலந்துகொள்வதற்காக அவரது ஊரான வடரக்கவுக்கு புறப்பட்டவேளை அவரது வாகனத்தை முச்சக்கர வண்டிகளில் பின்தொடர்ந்த பொது பல சேனா வை சேர்ந்தவர்கள் பெராதேனிய பகுதியில் வைத்து கடுமையாக தாக்கிவிட்டு ஓடி மறைந்தார்கள். காயமடைந்த விஜித தேரர் கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றார்.
ஞானசார தேரர் பல இடங்களில் விஜித தேரவை கொல்வதாக மிரட்டியிருந்தார், முஸ்லிம்களுக்காக கதைக்கும் அவர் விஜித தேரர் அல்ல... அவர் “மொஹமட் விஜித” என்றும் கேலி செய்திருந்தார். இதனை அவர்களது உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற சமூக வலைத்தளங்களிலும் படங்களாக வெளியிட்டு பிரச்சாரம் செய்தனர்.
இப்படியான ஒரு சூழலில் தான் யுத்தத்தின் பின் வில்பத்து பிரதேசத்தில் மீள்குடியேறிய முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனாவின் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஒரு கலவரத்தை நோக்கி நெருங்கிக்கொண்டிருந்தது. ஞானசார தேரோ பொது பல சேனாவை சேர்ந்த பலரை திரட்டிக்கொண்டு கூட்டமாக சென்று முஸ்லிம்களை விரட்டும் பணியில் ஈடுபட்டார். பொலிசாரின் தலையீட்டில் கலவரமின்றி அது முடிந்தாலும் பொது பல சேனா அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகிக்கொண்டிருந்தது.
நிப்பொன் ஹோட்டலில் சண்டித்தனம்
இந்த நிலைமையை சரிசெய்வதற்காகத்தான் கடந்த ஏப்ரல் 9 அன்று நிப்பொன் ஹோட்டலில் “ஜாதிக பல சேனா” என்கிற அமைப்பை வட்டரக்க விஜித தேரோ மற்றும் முஸ்லிம் மதத்தலைவர்கள் ஒன்றிணைந்து ஆரம்பிப்பதற்காக ஒரு ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள். தொடங்குவதற்கு முன்னரே அங்கு வந்த ஞானசார தலமையிலான குண்டர்கள் பொலிசாரையும் விலத்திவிட்டு; அந்த ஊடகவியலாளர் மாநாட்டை தடுத்து நிறுத்தியதோடு ஒருசில பிக்குமாரையும் மௌலவிமாரையும் அங்கிருந்து விரட்டியடித்தனர்.
“இந்த மாநாட்டை நடத்த வந்த வட்டரெக்கே விஜித தேரர் உண்மையான பௌத்தர் அல்ல காவியுடை தரித்துக்கொண்டு முஸ்லிம்களின் பணத்துக்கு விலை போனவர்.
அவ்வாறான ஒருவரை வைத்து மாநாடு நடத்துவதை இடமளிக்க முடியாது. முஸ்லிம்களுக்கு பிரச்சினை இருக்குமானால் ஜெனீவா போங்கள். உலமா சபை உள்ளது. அமைச்சர்கள் இருக்கின்றார்கள் அவர்களிடம் போங்கள் தக்வீத் ஜமாத்தே உள்ளது போங்கள்.
முஸ்லிம்கள் பலாத்காரமாக குடியேற்றப்படுகிறார்கள் வில்பத்து அழிக்கப்படுகிறது. ஆட்சியாளர்கள் மெளனமாக உள்ளனர். ஆனால் நாங்கள் மௌனமாக இருக்க மாட்டோம்...”
என ஆவேசமாக பேசியதோடு அங்கிருந்த மௌலவிமாரை வெளியேற்றினர். பின்னர் சிறிய பிக்குவொருவரிடம் பௌத்த மதம் தொடர்பாக பௌத்த மதம் தொடர்பில் பல கேள்விகள் கேட்டு பதிலளிக்காத நிலையில் “இங்கு முஸ்லிம்களுக்கு காவியுடை போர்த்தப் பட்டுள்ளது” என்று கூறி அங்கிருந்த சில குருமார் இவர்களுக்கு சாரத்தை கொடுங்கள் என்றனர்.
பின்னர் வட்டரெக்கே விஜித தேரரை மோசமாக திட்டியபடி அடிக்க கையோங்கினார் ஞானசார. ஞானசார கை நீட்டி திட்டிக்கொண்டிருந்தபோது தன்னை தாக்கிவிடுவார் என்று அஞ்சி வட்டரக்க விஜித தேரர் அடிக்கடி கையால் தன்னை பாதுகாத்தபடி இருந்ததை அந்த கானொளியில் அனைவரும் கண்டிருப்பார்கள். செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் மஹியங்கனைக்கு போக முடியாது என ஞானசார தேரர்; வட்டரக்க விஜித தேரவை மிரட்டினார்.
நடுங்கிய நிலையில் வட்டரக்க விஜித தேரர் கீழ்கண்டவாறு மன்னிப்பு கேட்டார்.
“..நான் முஸ்லிம்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சிங்கள பௌத்தர்களுக்கு எதிராக செயற்பட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் மகா சங்கத்தினரிடமும் சிங்கள பௌத்த மக்களிடமும் மன்னிப்பு கோருகிறேன்” என்றார்.
ஜனாதிபதி வழங்கிய உயிர் உத்தரவாதம்
இந்த சம்பவத்தோடு வெறியேறிப்போயிருந்த பொது பல சேனா தன்னை எதுவும் செய்யக்கூடுமென்று தொடர்ந்தும் தலைமறைவாக வாழ நிர்பந்திக்கப்பட்டார் விஜித தேரர். தனது உயிருக்கு உத்தரவாதம் தரும்படியும் பாதுகாப்பு தரும்படியும் ஜனாதிபதியிடம் கோரினார். ஜனாதிபதியும் அதற்கு ஒத்துக்கொண்டதாக ஒரு பேட்டியில் விஜித தேரர் தெரிவித்திருந்தார்.
நடக்கும் அட்டூழியங்கள் அனைத்துக்கும் ஆசீர்வாதம் வழங்கிக்கொண்டிருக்கும் ஒருவரிடம்போய் பாதுகாப்பு கேட்டால் எப்படி. எனவே வட்டரக்க விஜித தேரரை வெறிகொண்டு தேடியலைந்த பொதுபல சேனா கும்பல் ஏப்ரல் 23 அன்று அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அலுவலகத்துக்குள் புகுந்து அடாவடித்தனம் செய்தது. குண்டர்கள் “காவியுடை” தரித்திருந்ததால் பொலிசாரால் தடுத்து நிறுத்த முடியவில்லையாம்.எனவே அவர்கள் அறை அறையாக சென்று தேடினார்கள். இந்த அதிகாரத்தை அவர்களுக்கு யார் தந்தது என்று அங்கிருந்த போலீசார் கேட்கவில்லை. போலீசார் காவியுடைக்குள்ளும், பிக்குகள் பொலிஸ் சீருடைக்குள்ளும் இருந்து அதிகாரம் புரிந்தார்கள். விஜித தேரோ வந்தது CCTVயில் பதிவாகியிருக்கும் எனவே அதனை தமக்கு காட்டும்படி பொலிசாரிடம் சண்டித்தனம் காட்டினர். மறுத்த பொலிசாரை பிக்குமார் தாக்கவும் முற்பட்டனர்.
காத்தலும் அழித்தலும் நாமே!
பொது பல சேனாவுக்கு எதிரான வழக்குகள் தொடரப்பட்டன. தமக்கெதிரான போக்கை தடுத்து நிறுத்துவதற்காக ஞானசார தேரர், மகா சங்கத்தினரை அணுகினார். மல்வத்து பீடாதிபதியை 23 ஏப்ரல் அன்று சந்தித்த ஞானசார அவரிடம் “..புத்தரையும் பௌத்த மதத்தையும் மோசமாக நிந்திக்கிறார்கள் முஸ்லிம்கள்... நாட்டுக்கு மிகப்பெரும் நெருக்கடியை தந்திருக்கிறார்கள்... இது குறித்து உரிய இடங்களில் முறையிட்டும் எந்த தீர்வும் இல்லை. என்று கூறி தவ்ஹீத் ஜமாஅத் இயக்கம் குறித்து தாம் தயாரித்திருக்கிற அறிக்கையை அவரிடம் கையளித்தார். இதற்கு மேலும் ஒன்றும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தாம் களத்தில் இறங்க வேண்டிவரும் என்று தயவாக எச்சரித்தார். அதற்கு பதிலளித்த மல்வத்து பீடாதிபதி சுமங்கல தேரர் இப்படி கூறுகிறார்.
“இனத்துக்காகவும் நமது மதத்துகாகவும் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்... ‘எங்களால் அரசாங்கத்தை உருவாக்கவும் முடியும்... அரசாங்கத்தை கவிழ்க்கவும் முடியும்; என்று நீங்கள் உரையாற்றியதை பார்த்தேன். எதையாவது செய்யுங்கள்...”
கைகூப்பி அவரை வணங்கியபடி ஞானசார தேரர்
“..நீங்கள் கூறுவதை நாங்கள் கேட்கிறோம்.. இந்த மோசடி அரசியல்வாதிகள் சொல்வதை நாங்கள் கேட்கப்போவதில்லை..” என்றார்.
இந்த ஆணை தான் அளுத்கம கலவரத்துக்கு கிடைத்த பெரிய ஆசீர்வாதம் என்றால் அது மிகையில்லை. அரசின் அனுசரணை உள்ளது. படையினரின் துணை இருக்கிறது. நடத்தி முடிக்க ஆளணி தயாராக இருக்கிறது. எது நடந்தாலும் தம்மை பாதுகாக்க பௌத்த உயர் பீடம் இருக்கிறது.
பௌத்த மதத்துக்கு “குடியரசு அரசியலமைப்பின்” படி வழங்கப்பட்ட சிறப்புரிமை, சிறப்பு சலுகை என்பவற்றை எந்த கொம்பனால் தான் தடுத்து நிறுத்த முடியும், எனவே பௌத்தத்தின் பேரால் நினைத்ததை சாதிக்கும் வரம் பெற்றவர்கள் அல்லவா.
ஆக... ஒரு சிறிய சம்பவத்தை சாட்டாக வைத்து நடத்தி முடித்தது தான் அளுத்கம வேட்டை. அது ஒரு வெறும் ஒத்திகை தான். பொது பல சேனா எதிர்பார்த்தபடி தமக்கு எதிராக எதுவும் நடக்கவில்லை, மாறாக போதிய பாதுகாப்பும், பக்கபலமும், அவர்களுக்கு கிடைத்தபடி இருக்க. மறுபக்கம் பாதிக்கப்பட்ட முஸ்லிம் தலைமைகளுக்கு அரச யந்திரத்தின் எச்சரிக்கையும், ஆலோசனைகளும் கண்துடைப்பு நடவடிக்கைகளும் தொடர்கின்றன.
சுன்னத் முயற்சி
இதனால் களிப்பூட்டபட்ட இனவாத தரப்பு; முஸ்லிம்களை மேலும் சீண்டிப்பார்க்கும் நோக்கில் அங்காங்கு தமது அட்டூழியங்களை தொடர்ந்தது. அந்த களிப்பின் வெளிப்பாடு தான் (19.06.2013) தாம் சொன்னபடி வட்டரக்க விஜித தேரரை தேடிக் கண்டுபிடித்து சுன்னத் செய்ய எடுத்த முயற்சி. அடுத்த இரண்டே நாட்களில் நடந்த பாணந்துறை “No limit” (21.06.2013)அழிப்பும் அதன் தொடர்ச்சி தான்.
வட்டரக்க விஜித தேரரை பிக்குகள் சகிதம் சென்ற குழு அவரின் கை கால்களை கட்டிவைத்து அடித்து துன்புறுத்தி சுன்னத் செய்வதாகக் கூறி அவரது ஆணுறுப்பை சேதப்படுத்தியிருக்கின்றனர். அதன் பின்னர் அவரை நிர்வாணமாக்கி நள்ளிரவில் வீதிக்கும் ஆற்றுக்கும் இடைப்பட்ட புதரில் எறிந்துவிட்டு சென்றுள்ளனர். அடுத்த நாள் காலை அவரை வைத்தியசாலை கொண்டுசென்று சிகிச்சை அளித்து வாக்குமூலம் பெற்றிருக்கின்றனர். நடந்ததை அவர் கூறியிருக்கிறார். ஆனால் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த அவரை; தானே தனக்கு சேதம் விளைவித்துக்கொண்டதாக வாக்குமூலம் பதிவாக்கிக்கொண்டனர் போலீசார். பொலிஸ் தரப்பில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் விஜித தேரர் அப்படி ஒன்றுக்குப்பின் முரணாக பேசிய குற்றச்சாட்டுக்காக 25 அன்று வைத்தியசாலையில் கைது செய்து கொண்டு சென்றனர்.
வட்டரக்க விஜித தேரர் இன்று அநாதரவான நிலையில் எந்த சக்தியினதும் ஆதரவுமின்றி தனிமைப்பட்டுப் போயுள்ளார் என்பது மிக மிக கவலைக்கிடமான விடயம்.
அன்று அவரது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாக கூறிய நாட்டின் ஜனாதிபதி வெறும் ஜனாதிபதி மட்டுமல்ல அவரே பாதுகாப்பு அமைச்சர். அவரே முப்படைகளின் தளபதி என்பதும் குறிப்படத்தக்கது.
இனி இவர் போன்ற எவருக்கும் இது தான் கதி என்று பேரினவாதமும் அதைக் காக்கும் அரச இயந்திரமும் இதன் மூலம் அனைவரையும் எச்சரித்துள்ளது.
பேரினவாதத்தின் தொடர்ச்சியான வெற்றியின் ஒரு படி இது.
தற்போது கண் துடைப்புக்காக மதவெறியூட்டும் கூட்டங்களுக்கு தடை விதித்திருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் அதற்காக பொது பல சேனா பதுங்கவில்லை. இருக்கவே இருக்கிறது இன்னொரு வடிவத்தில் “Plan-B”. ஞானசார தேரோ இதற்கெல்லாம் அஞ்சவுமில்லை, பதுங்கவுமில்லை. அரசியலமைப்பின்படி பௌத்த மதம் அரச மதம். பௌத்தத்தை கட்டிக்காப்பது அரசின் கடமை.பொது பல சேனாவின் பகிரங்க மேடைக்கூட்டங்கள் இப்போது பௌத்த விகாரைகளை அண்டிய பகுதிகளில் மத உபதேச கூட்டங்களாகவும், கருத்தரங்குகளாகவும் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
கண்டி தலதா மாளிகைக்கு வெளியில் 24 ஜூன் அன்று நடத்தப்பட்ட கூட்டம் ஒரு உதாரணம். இந்த கூட்டத்தில் ஒரு முக்கிய செய்தி உண்டு. அது மேலும் கிலியூட்டும் செய்தி. அடுத்த கட்டுரையில் விரிவாக எழுதுகிறேன்.