
இங்கிலாந்தில் கட்டாய திருமண நடைமுறைகளைத் தடுக்க இன்று புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் திருமணத்திற்கு கட்டாயப்படுத்துவது குற்றமாக கருதப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும்.இந்த சட்டம் இங்கிலாந்திற்குள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது, வெளிநாடுகளில் வாழும் இங்கிலாந்து நாட்டவரை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தினால் அவர்கள் மீதும் இந்த சட்டம் பாயும்.இதுதொடர்பாக இங்கிலாந்து உள்துறை செயலாளர் தெரேசா மே கூறுகையில், “பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் கட்டாயத் திருமணம் ஒரு சோகமாக இருக்கிறது. இது பல சந்தர்ப்பங்களில் வெளிவருவதில்லை. இங்கிலாந்து மற்றும் வெளிநாடுகளில் இந்த கட்டாய திருமண நடைமுறைகளை நீக்குவதற்கு அரசின் கட்டாய திருமண பிரிவு கடுமையாக போராடி வருகிறது” என்றார்.
2013ம் ஆண்டில் 1300க்கும் மேற்பட்டோருக்கு கட்டாய திருமண பிரிவு ஆலோசனை அல்லது ஆதரவு வழங்கியிருப்பதாக உள்துறை அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பிரச்சினை புலம்பெயர்ந்து வாழும் தெற்காசிய மக்களிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணமக்களின் சம்மதம் இல்லாமல் உடல், உளவியல், நிதி, பாலியல் அல்லது உணர்வுப்பூர்வமான அழுத்தம் மூலம் நடக்கும் திருமணங்கள் கட்டாய திருமணம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் 2008-ம் ஆண்டில் இருந்து நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்கி வருகின்றன. எனினும், கட்டாயத் திருமணம் செய்து வைப்பது குற்றம் என்று முதல் முறையாக இப்போது சட்டம் இயற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire