mercredi 25 juin 2014

தீவிரவாதிகளால் நைஜீரியாவில் மேலும் 60 பெண்கள் கடத்தல்: 38 பேர் சுட்டுக் கொலை

நைஜீரியாவில் தீவிரவாதிகளால் மேலும் 60 பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர். 2 கிராமங்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட 38 பேரை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனர்.நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கும்மாப்ஜா என்ற கிராமத்தில் போகோ ஹராம் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய திடீர் தாக்குதலில் பெண்கள் உள்பட 30 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிறுமிகள் உள்பட 60 பெண்களையும் கடத்திச் சென்றனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தப்பியோடி அருகிலிருந்த கிராமத்தில் தஞ்சம் புகுந்தவர்கள் இந்தத் தகவலை தற்போது வெளியிட்டுள்ளனர். ஆனால் இந்தச் சம்பவத்தை அந்நாட்டு அரசு உறுதி செய்ய முடியவில்லை எனக் கூறியுள்ளது.
38 பேர் பலி: இதனிடையே நைஜீரியாவின் கடூனா மாநிலத்தில் 2 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 38 அப்பாவி கிராமவாசிகள் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளால் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire