வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 1983ஆம் ஆண்டு முதல் கடுமையான இஸ்லாமிய ஷரியத் சட்டம் பின்பற்றப்பட்டு வருகின்றது. இங்கு சமீபத்தில் மரியம் எஹ்யா இப்ராஹீம் என்ற 27 வயது நிரம்பிய பெண் கிறிஸ்துவ மதத்தைத் தழுவியதற்காக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். சமய நிந்தனையில் ஈடுபட்டதாகக் கூறிய நீதிபதி அவரை உடனடியாக இஸ்லாம் மதத்திற்குத் திரும்பும்படி உத்தரவிட்டார். அதற்கு உடன்பட மறுத்ததால் அவருக்கு 100 கசையடிகளையும், மரண தண்டனையையும் தீர்ப்பாக அளித்தார். இந்தத் தீர்ப்பு உலகம் முழுவதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த சம்பவத்தின் போது தனது 20 மாத குழந்தையுடன் கர்த்தூம் சிறையில் அடைக்கப்பட்ட மரியம், கடந்த மாதம் 27ஆம் தேதியன்று சிறையில் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றுள்ளார். மரியத்தின் தண்டனையைக் குறைக்கக்கோரி சூடான் வழக்கறிஞர் ஒருவர் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு சூடானிய அதிகாரிகளை சங்கடத்திற்கு உள்ளாக்க அவரது விடுதலை குறித்து முரண்பாடான அறிக்கைகளை அவர்கள் வெளியிட்டனர். இந்த அறிக்கை மேற்கத்திய அரசாங்கங்கள் மற்றும் மனித உரிமைக் குழுக்களின் சினத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜோஸ் மானுவல் பரோசோ, ஹெர்மன் வான் ரொம்பே மற்றும் மார்டின் சூல்ஸ் போன்ற ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் மரியத்தின் மீதான தண்டனை தங்களுக்கு ஆழ்ந்த அதிர்ச்சியையும், கவலையையும் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். மதம் மற்றும் சுதந்திரம் குறித்த ஒருவரது நம்பிக்கையைக் காப்பாற்றும் சர்வதேச கடமை சூடான் அரசுக்கு உண்டு என்று கூறியுள்ள இவர்கள் இந்த மனிதாபிமானமற்ற தீர்ப்பை திரும்பப்பெறச் செய்யும் பொறுப்பு அதிகாரிகளுக்கு உண்டு என்று வலியுறுத்தியுள்ளனர்.
மூன்று நீதிபதிகள் கொண்ட குழு மரியத்தின் தண்டனை குறித்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உள்ளது என்று குறிப்பிட்ட அவரது வக்கீல் அதற்கான தேதியைக் குறிப்பிடவில்லை.
Aucun commentaire:
Enregistrer un commentaire