உலகத்திலேயே யாழ்ப்பாணத்தவர் ஒரு விசித்திரமான ஆட்கள்தான்.எதையெல்லாம் எப்பிடி எடுப்பினம் எண்டு சொல்லேலாது.எந்த நேரத்தில் எப்படி இருப்பினம் எண்டு தெரியாது, அப்படி ஒரு நூதனமான பேர்வழியள். பழைய வீடுகளை இடிச்சி புதுப் பாஷனில் காசைச் செலவழிச்சுக் கட்டுவினம். வேலியை வெட்டி எறிஞ்சுபோட்டு மதிலை எழுப்புகினம். வேலியல்லையெண்டால் ஆட்டுக்கு குழையில்லை. ஆட்டுக்கு குழையில்லையெண்டால் வீட்டில் ஆடில்லை. ஆடில்லையெண்டால் ஆடு வளர்ப்பில்லை. ஆட்டு வளர்ப்பில்லையெண்டால் யாழ்ப்பாணத்து வாழ்க்கையிலயும் யாழ்ப்பாணப் பண்பாட்டிலயும் நிச்சயமாக ஒறுவாய்தான் விழும்.அப்படி ஒறுவாய் விழுந்தாலும் பரவாயில்லை. நாங்கள் மதிலைத்தான் கட்டுவம். வேலியை வெட்டுவம் என்று ஒரு கூட்டம் எழும்பி நிற்குது.என்ன செய்யிறது. கையில காசு கனத்தால் இந்த மாதிரித்தான் சிந்தனை ஓடும்.கலியாணப் பந்தல்களின்ர காலம் போய், திருமண மண்டபங்களின் காலம் வந்திருக்கு.பந்தல்காலத்தில் லாண்ட்மாஸ்ரர்காரனுக்கு உழைப்பிருந்தது. பந்தல் காரனுக்கு தொழிலிருந்தது. பந்தலைப் போடுகின்றவனுக்கு வேலையிருந்தது. இப்படி ஊரில பல பேர் ஒரு கல்யாணத்தால் வாழ்ந்தினம். பிழைச்சினம்.இப்ப?திருமண மண்டபங்களால் பெரும் முதலாளிமார்தான் கொடிகட்டிப்பறக்கினம். கோடிக்கு மேல கோடி சேருது. பணத்துக்கு மேல பணம் புரளுது.ஒரு கலியாணத்தைச் செய்வதற்கே மண்டபக்காசு ஒரு பிள்ளை சீதனத்துக்கு சமம். என்ன செய்யிறது? காலம் அப்பிடி மாறி எங்களின்ர காலில் சுருக்கு கயிற்றை போட்டிருக்கு.பொங்கல், திருவிழா, கலியாணம், பிறந்தநாள், எண்டால் பத்தாயிரம் பதினையாயிரம் முப்பினாயிரம், நாற்பதினாயிரம் எண்ட றேஞ்சில உடுப்பெடுக்கின்றார்கள். கனபேர் இப்ப தங்கட வீடுகளில சமைக்கிறதில்ல. இதுக்குப் பஞ்சிக்குணம் ஒரு காரணமெண்டால், பாஷன் இன்னொரு காரணம்.சமைக்கிற நேரத்தில தொடர் நாடகம் பார்க்கலாம் எண்டு ஒரு கணக்கு.மற்றது, ரெஸ்ரோரண்டில சாப்பிட்டால்தான் வாய்க்கு ருசி எண்ட நினைப்பு.சில இடங்களில, வீடுகளுக்கே சாப்பாட்டைக் கொண்டு வந்து கொடுக்கிற அளவுக்கு வளந்திருக்கு ரெஸ்ரோரண்ட் கலாச்சாரம்.இது மட்டுமா? பெடியள் எண்டால் 'பியர்' அடிக்கத்தான் வேணும் எண்ட மாதிரி ஒரு எண்ணம் இளைய தலைமுறையிட்ட வளந்திருக்கு.பியர் அடிக்கத் தெரியாதவனெல்லாம் இளந்தாரியா என்று கேட்கிறார்கள்.நாகரீகம் மாறினால் நாமும் மாறத்தான் வேணும்.உலகம் உருண்டால் நாங்களும் உருளத்தான் வேணும்.எல்லாத்தையும் விடக் கையில காசு தாராளமாகப் புழங்கினால் நெஞ்சில ஆசை தானா முளைக்கும். ஆசைக்கு கரையுமில்லை. அணையுமில்லை.எண்டபடியால் என்னவெல்லாம் மனசில தோன்றுதோ அதையெல்லாம் செய்யவேணும் போலிருக்கு.அப்பிடித்தான் இப்ப யாழ்ப்பாணமும், யாழ்ப்பாணத்தின்ர போக்குமிருக்கு.முந்தின மாதிரி இப்ப தோட்டத்தில நிக்கிற ஆட்கள் குறைவு. எல்லாம் ரோட்டில திரியினம். வீட்டுக்கு நாலு மோட்டச்சைக்கிள் நிற்குது. கடலில இறங்கிறதுக்கு கனபேருக்கு பஞ்சி. அதால ரின் மீனில கறி வைக்கிறம். ரின் மீனிலதான் குழம்பும் கொதிக்குது.கடலால் சூழப்பட்ட யாழ்ப்பாணக் குடாநாடு மீன் விலையால் தவிக்குது.இப்பிடி ஆயிரம் கறள் பிடிச்ச கதைகள் இருக்குது. இதையெல்லாம் வைச்சுக்கொண்டுதான் எங்கள் தங்கம் சிவசிவாவும், யாழ்ப்பாண மாகாண சபையும் யாழ்ப்பாணத்து சமூக சிற்பிகளும் கலாச்சாரக் காவலர்களும் இருக்கினம். இதெல்லாத்துக்கும் தோதாக யாழ்ப்பாணத்து பல்கலைக்கழகமும் இருக்கு.
கோவிந்தா? - வடபுலத்தான்
Aucun commentaire:
Enregistrer un commentaire