mercredi 21 janvier 2015

200 மில்லியன் டாலர்கள் - ஐஎஸ்ஐஎஸ் கெடு.ஜப்பானிய கைதிகளை விடுவிக்க

அரபு நாடுகளான ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் சில பகுதிகளைக் கைப்பற்றி ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் இஸ்லாமிய நாடாக அறிவித்து வருகிறது. மறுபுறம், அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் சேர்ந்து கொண்டு ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
 இதனால் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர், போரில் ஈடுபடும் நாடுகளுக்கு மிரட்டல் விடுக்கும் வண்ணம் பிணைக் கைதிகளின் தலைகளை துண்டித்து கொன்று வருகின்றனர். இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கெதிரான நடவடிக்கைக்கு ஜப்பான் 200 மில்லியன் டாலர்களை நிதி உதவியாக அளிப்பதாக அறிவித்திருந்தார்.
எனவே, ஜப்பான் நாட்டிற்கு மிரட்டல் விடுக்கும் விதமாக கெஞ்சி கோட்டூ, ஹாருணா யுக்கவா என்ற 2 பேரை அவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர்.
 
பிணையக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளவர்களின் காணொளியை வெளியிட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ், அதில், “எங்களுக்கு எதிராக மேற்கத்திய நாடுகளுடன் ஜப்பான் சேர்ந்துள்ளதால், ஜப்பானியர்களை குறி வைத்துள்ளோம். எங்கள் பெண்களையும், குழந்தைகளையும் கொல்ல, நீங்கள் 100 மில்லியன் டாலர் கொடுத்துள்ளீர்கள்.
ஐஎஸ்ஐஎஸ் போராளிகளுக்கு எதிரான முட்டாள் தனமான இராணுவத் தாக்குதல்களை நிறுத்துவதற்கு இந்த ஜப்பானியர்கள் அவர்களது அரசை நிர்ப்பந்திக்க 72 மணிநேரம் தருகிறோம். அதற்குள் 200 மில்லியன் டாலர் தர வேண்டும்.
இதற்கு நீங்கள்தான் நெருக்கடி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்த கத்தி உங்களின் தூக்கத்தை கெடுக்கும்” என்று கூறியுள்ளனர்.
 
விடுவிக்க பிரதமர் கோரிக்கை:
 
இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள ஜப்பானியர்கள் இரண்டு பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே வலியுறுத்தியுள்ளார்.
 இது குறித்து பேசிய ஜப்பான் பிரதமர், “அவர்கள் பாதிக்கப்படக் கூடாது, எனவே அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று நான் உறுதியாக வலியுறுத்துகிறேன்,” என்று ஜெருசேலத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire