கிழக்கு முதலமைச்சர் பதவியினை தமக்கு விட்டுத்தருமாறும் புதிய ஆட்சி அமைவதிலுள்ள சிக்கல் நிலைமையினை தீர்த்துவைக்குமாறும் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இச்சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் நேற்றுப் பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரே ஜனாதிபதியுடனான இம்முக்கிய சந்திப்பில் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக தமிழர் ஒருவர் வருவதற்கான காரணங்களை எடுத்துரைத்த கூட்டமைப்பினரின் கருத்துக்களை நிதானமாகச் செவிமடுத்த பின், “தங்களது நியாயமான கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் நான் பொதுவாக மாகாணசபை விடயங்களில் தலையிடுவதில்லையென எண்ணியிருக்கிறேன்” என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் சங்கடம் புரிந்துகொள்ளத் தக்கதே. ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம் என்பதுபோல, இந்த கிழக்கு முதலமைச்சர் பதவியையும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கோ அல்லது முஸ்லிம் காங்கிரசுக்கோ யாருக்கு விட்டுத்தந்தாலும் மறுதரப்பின் பகையைச் சம்பாதிக்க நேரும் என்பது அவருக்குத் தெரியும்.
வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் எவரது ஆதரவை இழப்பது என்ற குழப்பம் அவருக்கு இருக்கும். ஏற்கனவே சிறுபான்மை இனங்களுக்கு தாராளமாக அமைச்சுப் பதவிகளை வழங்கி அவர்களை வளைத்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் ரணில்.
வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து காய்களை மிகத் தந்திரமாக நகர்த்தி வருகிறார் ரணில் விக்கிரமசிங்க. அமைச்சுப் பதவிகளை எல்லாம் தனது கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் ஆதரவுக் கட்சிகளுக்கும் வழங்கி, நாட்டின் நிர்வாகத்தை மெல்ல மெல்லத் தன் கைக்குள் எடுத்துக் கொள்கிறார் பிரதமர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான பிறகு, இதுகுறித்து அவரது கட்சியினரால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். ஜனாதிபதித் தேர்தலுக்காக இணைந்து செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியை மிகக் குறுகிய காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஜனாதிபதி தலைமையிலுள்ள கட்சிக்கு ஏற்பட்டிருப்பது துரதிர்ஷ்டமானதுதான்.
தேர்தலில் வெல்லுவதற்கு சிறுபான்மை இன வாக்குகள் முக்கியம் என்ற நிலைமையில், தமிழ் கூட்டமைப்பையோ முஸ்லிம் காங்கிரசையோ பகைத்துக்கொள்ள வேண்டிய ஒரு முடிவைச் சொல்வதிலிருந்து தவிர்ந்துகொள்ள ஜனாதிபதி முயற்சிப்பது தெரிகிறது.
அவை ஒருபுறமிருக்கட்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் தமது பதவிகள் வாய்ப்புகளுக்காகத்தான் அரசதரப்பைச் சந்திப்பதும் பேசுவதுமாக இருக்கிறார்களே தவிர, தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்வதற்கு வேண்டிய இனப்பிரச்சினைத் தீர்வுக்குப் பேசுவதாகவோ முயற்சிகள் எடுப்பதாகவோ செய்திகள் வரக் காணோம்.
தீர்வைக் கொண்டுவர முயற்சி செய்யாமல் அல்லது அதிகாரம் எதுவும் இல்லை என்று இவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் மாகாண சபைக்கான அதிகாரங்களை எடுப்பதற்கு முயற்சி செய்யாமல், அதையெல்லாம் விட்டுவிட்டு மாகாணசபை முதலமைச்சுப் பதவிகளையும் அமைச்சுப் பதவிகளையும் எடுப்பதற்கு ஏன் மினக்கெட்டுக் கொண்டிருக்கிறார்கள்?
அந்தப் பதவிகளை எடுத்த பிறகும் “எதுவும் செய்ய அதிகாரம் ஒண்டுமில்லை” என்றுதானே சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள்? அந்தப் பதவிகளை எடுப்பதற்கு ஏன் ஆலாய்ப் பறக்க வேண்டும்? 2015-ல் தீர்வைக் கொண்டுவருவதற்கல்லவா இவர்கள் பேசவேண்டும்!
Aucun commentaire:
Enregistrer un commentaire