தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான அனந்தி, ரவிகரன் போன்றோர் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு தெரிவிப்பது என்று தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு எடுத்த முடிவுக்கு பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
“சமஷ்டி இல்லை…. ராணுவம் வாபஸ் இல்லை…. காணிகள் படையினர் தேவைக்குப் போக மிஞ்சியதுதான் திருப்பித் தரப்படும்….” என்று மேடைக்கு மேடை வலியுறுத்திச் சொல்லிக் கொண்டிருக்கிற எதிரணிக்கு வாக்குப் போடச்சொல்லி மக்களிடம் போய் எப்படிச் சொல்ல முடியும் என்று தமிழரசுக் கட்சிக்குள்ளேயே பலர் தனிப்படப் பேசுகையில் குமுறுகின்றனர்.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளாத தீர்மானத்தை சம்பந்தனும் சுமந்திரனும் மாவையும் எப்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்மானமாகச் சொல்ல முடியும் என்று அந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை மீறுகிறவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக அவர்கள் கூட் டமைப்பிலிருந்து நீக்கப்படுவர் என எதேச்சதிகாரத் தொனியில் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் மாவை சேனாதிராசா.
நாட்டில் ஜனநாயகத்தை மலர்விப்பதற்காகவே மைத்திரியை ஆதரிக்கிறோம் என்று சொல்பவர்களின் கட்சிக்குள் ஜனநாயகம் இந்தளவில்தான் இருக்கிறது.
மைத்திரியை ஆதரிக்கப்போவதாக கூட்டமைப்புத் தலைமை எடுத்த முடிவு தவறானது என்று கருத்து தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் அனந்தியை மாவை சேனாதிராசா தொலைபேசியில் தொடர்புகொண்டு ஏசியதாகவும் அனந்தி மயக்கம் போட்டு விழுந்ததாகவும் நேற்றைய செய்திகள் கூறின.
இந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு ஊடக நண்பர் ஒருவர் கூறினார்: “நல்லவேளை தமிழரசுக் கட்சியினர் கையில் ஆயுதங்கள் இல்லை” என்று. தேவையில்லை…. வன்முறை அவர்களது வாயிலிருந்தே ஆரம்பமாவதை அண்மையில் நடந்த யாழ் ஒருங்கி ணைப்புக்குழு கூட்ட வீடியோ காட்சிகளைப் பார்த்தவர்கள் தெரிந்துகொண்டிருப்பர்.
எதிரணி வேட்பாளரை ஆதரிப்பது என்னும் முடிவு கூட்டமைப் பிலுள்ள மூன்று பேரது முடிவுதான் என்பதும் அதுவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவாக அவர்களால் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பதும் புலனாகிறது.
கூட்டமைப்பிலுள்ள மற்றவர்களைச் சரிக்கட்டவே எதிரணித் தலைவர்களிடமிருந்து வாங்கிய பணத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பணத்தைப் பட்டுவாடா செய்கையில் ஏற்பட்ட பிரச்சினையே விஷயத்தை அம்பலமாக்கிவிட்டது.
இவர்கள் வாங்கிய பணத்துக்காக மைத்திரிக்கு வாக்களிக்கும்படி இங்கே கூவிக்கொண்டிருக்கிறார்கள். அங்கே மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை செப்பமிட்டதாகச் சொல்லப்படும் ஹெல உறுமய “13ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்லவோ மாகாண சபைகளை இதற்கு மேலும் பலப்படுத்தவோ இடமில்லை” என்று தெளிவாக அறிவிக்கிறது.
“எதிரணி ஆட்சியைக் கைப்பற்றினால், படையினரைப் பாதுகாப்போம் வடக்கிலிருந்து விலக்க மாட்டோம் எஞ்சியுள்ள புலி உறுப்பினர்களைக் கைதுசெய்து நடவடிக்கை எடுப்போம்” என் றெல்லாம் மைத்திரிபாலவின் தேர்தல் அலுவலகத்தில் வைத்தே செய்தியாளர்களுக்குச் சொல்கிறார் சம்பிக் ரணவக்க.
“வடக்கில் படைமுகாம்கள் எதுவும் அகற்றப்பட மாட்டாது” என்று நேற்றைய புத்தளக் கூட்டத்திலும் அழுத்தம் திருத்தமாக உரைக்கிறார் மைத்திரிபால. சமஷ்டி இல்லை, படையினருக்குத் தேவையான காணிகளை திருப்பித் தரப்போவதில்லை என்றெல்லாம் தெளிவாகவே சொல்கிறார்.
அவர்தான் இந்த நாட்டுக்குத் தலைவராக வரவேண்டும் என்று நமது மக்களுக்குச் சொல்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…. எதற்காக?
Aucun commentaire:
Enregistrer un commentaire