மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய ஹஃபீஸ் சயீதின் ஜமாத்-உத்-தாவா அமைப்புக்கும், ஆப்கனில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுவரும் ஹக்கானி அமைப்புக்கும் தடைவிதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்திருப்பதாக வியாழக்கிழமை தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அந்த நாட்டிலிருந்து வெளியாகும் "எக்ஸ்பிரஸ் டிரிபியூன்' நாளிதழ் தெரிவித்தது.
இதுவரை இவ்விரு அமைப்புகளுக்கும் ஆதரவான நிலையைக் கடைப்பிடித்து வந்ததாகக் கூறப்படும் பாகிஸ்தான் அரசு, பெஷாவர் ராணுவப் பள்ளித் தாக்குதலுக்குப் பிறகு தனது நிலையை மாற்றிக்கொண்டுள்ளதையே இந்த முடிவு வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா ஃபஸ்லுல்லாவை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்த மறுநாள், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா வரவேற்பு: இதற்கிடையே, ஜமாத்-உத்-தாவா, ஹக்கானி அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தடை விதிக்கவிருப்பதாகக் கூறப்படுவதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக இணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப் கூறியதாவது: ஹக்கானி, ஜமாத்-உத்-தாவா அமைப்புகளை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை நாங்கள் வரவேற்கிறோம்.
இவ்விரு அமைப்புகளுடன், பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய மேலும் 10 அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்படும் என நம்புகிறோம்.
பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு இது முக்கியமான நடவடிக்கையாகும் என்றார் மேரி ஹார்ஃப்.
Aucun commentaire:
Enregistrer un commentaire