அமெரிக்காவுடனான உறவு இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டுமானால், குவாண்டனாமோ ராணுவ முகாம் அமைந்துள்ள இடத்தை தங்களிடம் திரும்பக் கொடுக்க வேண்டுமென க்யூபா கோரியுள்ளது.
க்யூபாவை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வர்த்தகத் தடைகளை நீக்க வேண்டும் என்றும் க்யூப அதிபர் ரவுல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் க்யூபாவுக்கும் இடையிலான உறவு மேம்பட்டிருப்பதாக கடந்த மாதம் இரு நாடுகளும் அறிவித்தன. 1961ல் நிறுத்தப்பட்ட தூதரக உறவுகளை மீண்டும் அமைக்கப்போவதாகவும் இருநாடுகளும் தெரிவித்திருந்தன.
இரு நாடுகளின் தலைநகரங்களிலும் தூதரகங்களைத் திறப்பது குறித்த பேச்சுவார்த்தைக்காக, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று ஹவானாவிற்கு வந்திருக்கிறது.
இரு நாடுகளும் நெருங்குவதற்கு, முன்னாள் க்யூப அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, தனது ஒப்புதலைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
க்யூபாவில் அரசுக்குச் சொந்தமான செய்தித்தாள் ஃபிடல் எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், "எங்கள் அரசியல் எதிரிகள் உள்பட உலகில் உள்ள எல்லா மக்களுடனும் ஒத்துழைப்பையும் நட்பையும் நாங்கள் பாதுகாப்போம்" என ஃபிடல் குறிப்பிட்டுள்ளார்.
"அமெரிக்க அரசின் கொள்கைகளைத்" தான் நம்பவில்லை என்றாலும் "மோதல்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதைத்" தான் எதிர்ப்பதாக அதற்கு அர்த்தமாகாது என அவர் கூறியுள்ளார்.
கோஸ்டாரிகாவில் நடந்த லத்தீன் அமெரிக்க - கரீபியன் நாடுகளின் உச்சிமாநாட்டில் பேசிய ரவுல் காஸ்ட்ரோ, குவாண்டநாமோ தளத்தை திரும்ப அளிக்க வேண்டும், தடைகளை நீக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
க்யூபாவின் அதிபராக இருந்த ஃபிடல் காஸ்ட்ரோவுக்குப் பதிலாக, 2008ல் ரவுல் காஸ்ட்ரோ அதிபரானார்.
'தடைகள் நீடித்தால், உறவு சாத்தியமில்லை'
குவாண்டனாமோ, 1903ல் அப்போதைய க்யூப அரசால் அமெரிக்காவுக்கு குத்தகைக்கு அளிக்கப்பட்டது.
"இருதரப்பு உறவுகளை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகத்தான் தூதரக உறவுகளை மீண்டும் ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்துவருகின்றன. தடைகள் தொடர்ந்து நீடித்தால், கடற்படைத் தளத்தால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் குவாண்டனாமோ பகுதிகளைத் திரும்பத் தராவிட்டால், இது சாத்தியமில்லை" என ரவுல் தெரிவித்துள்ளார்.
1903ல் க்யூபாவை அப்போது ஆட்சி செய்த அரசால், அமெரிக்க அரசுக்கு குவாண்டநாமோ குத்தகைக்கு அளிக்கப்பட்டது.
ரவுலின் கோரிக்கை குறித்து, அமெரிக்க அதிகாரிகள் இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
1962ஆம் ஆண்டிலிருந்து க்யூபா மீது விதிக்கப்பட்டிருக்கும் வர்த்தகத் தடையை நீக்குவதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நாடாளுன்றத்தில் பேசியுள்ளார்.
தனக்கு இருக்கும் செயல்படுத்தும் அதிகாரத்தைப் பயன்படுத்தி க்யூபாவுக்கு பயணம் செய்வதற்கு உள்ள கட்டுப்பாடுகளையும் வர்த்தகக் கட்டுப்பாடுகளையும் அதிபர் ஒபாமா இம்மாதத் துவக்கத்தில் தளர்த்தினார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire