‘‘வாள்முனையைவிடப் பேனா வலியது’’ என்பார்கள்.துப்பாக்கியைவிட வலியதா? இதுதான் பாரீஸின் தற்போதைய தலைப்புச் செய்தி.
பிரான்ஸ் நாட்டின் ‘தலை’யான பாரீஸ் மிகப் பெரிய நகரம். இங்கு வசிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 23 லட்சம். மொத்த பிரான்ஸில் சுமார் 19 சதவீதம் பேர் பாரீஸில் வசிக்கிறார்கள். பிரான்ஸின் இரண்டாவது பெரிய நகரம் மார்ஸெய்லெஸ் இது பாரீஸின் அளவில் மூன்றில் ஒரு பங்குகூட இல்லை.
நாட்டின் நிர்வாக, வணிக, கலாச்சார மையம் பாரீஸ்தான். பாரீஸ் தும்மினால் பிரான்ஸுக்கு ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும் என்பார்கள். ’இன்று உலகின் தலைநகரமாகிவிட்டது பாரீஸ்’’ என்கிறார் அதன் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலாந்த். கொஞ்சம் சோகமாகத்தான் இதைச் சொல்ல வேண்டிய சூழல்.
நீங்கள் ஏதோ ஒரு வேற்று கிரகத்துக்கு பத்து நாட்கள் சென்று வந்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அந்தப் பத்து நாட்களில் செய்தித் தாள் எதையும் படிக்கவில்லை. (அட, இது யாரையோ நினைவு படுத்துகிறதே!) இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட நகருக்கு கீழே உள்ள வி.ஐ.பிக்கள் விஜயம் செய்கிறார்கள் என்று தெரிய வருகிறது. உங்கள் யூகம் என்னவாக இருக்கும்?
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாலஸ்தீன அதிபர் அப்பாஸ், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோப், நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஸ்டோல்டென் பெர்க், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா – பட்டியல் முடியவில்லை. இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், மேற்கு ஆப்ரிக்கா போன்ற பல நாடுகளின் முக்கியப் பிரதிநிதிகளும் பங்கேற்றிருக்கிறார்கள் என்றால் அந்த நிகழ்வு எதுவாக இருக்கும் என்று நினைப்பீர்கள்?
ஒரு நாட்டின் தலைவர் இறந்திருப்பார். அதற்கு அஞ்சலி செலுத்ததான் அந்த நாட்டின் தலைநகருக்கு இத்தனை பேரும் வந்திருப்பார்கள் என்பதுதான் உங்கள் பதிலா? உங்கள் பதிலில் பாதி சரி. இறந்தது நாட்டுத் தலைவர் அல்ல. பத்திரிகையாளர்கள்.
பாரீஸில் நடைபெற்ற அஞ்சலி ஊர்வலத்தில் மேற்படி வி.ஐ.பி.க் களுடன் பொது மக்களும் லட்சக் கணக்கில் திரண்டு வந்திருந்தனர். மேற்கு ஐரோப்பாவில் உள்ள தேசம் பிரான்ஸ். இத்தாலி மற்றும் ஜெர்மனிக்கு மேற்கில் ஸ்பெயினுக்கு வடகிழக்கே அமைந்த நாடு. மேற்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடு. இங்கு பாயும் ரைன் நதி அட்லாண்டிக் கடலில் கலக்கிறது.
பாரீஸிலிருந்து வெளியாகும் சார்லி ஹெப்டோ என்ற வார இதழின் ஆசிரியரும் அங்கு பணியாற்றிய வேறு பலரும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அல்கொய்தா அமைப்பு இந்தக் கொலைகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது.
சார்லி ஹெப்டோ கிண்டலுக்கும் கேலிக்கும் புகழ் பெற்ற ஒரு வார இதழ். (ஹெப்டோ என்றால் வார இதழ் என்று அர்த்தம்). இடதுசாரிப் பார்வை கொண்டது. கிறிஸ்தவம், இஸ்லாம், ஜூடாயிசம் என்று சகட்டுமேனிக்கு எல்லா மதங்கள் மற்றும் பிரபல அரசியல் தலைவர்களையும் அங்கதம் செய்தது இந்த வார இதழ். இஸ்லாமை மட்டுமல்ல கிறிஸ்தவத்தையும் இந்த இதழ் கடுமையாக, நகைச்சுவையாக விமர்சிக்கத் தவறியதில்லை.
பல வருடங்களுக்கு முன் நபிகள் நாயகத்தைப் பற்றி வெளி யிட்ட கார்ட்டூன்களுக்காக தீவிர வாதிகள் 2011-ல் இந்த இதழின் அலுவலகத்தின் மீது வெடி குண்டுகளை வீசினார்கள். அந்த இதழின் இணையதளம் முடக்கப்பட்டது. சார்லி ஹெப்டோ தொடர்ந்து தான் வந்த அதே பாதையில் நடந்தது. (‘பட்டும் திருந்தவில்லை’ என்பதோ ‘அஞ்சாத மனப்போக்கு’ என்பதோ அவரவர் கோணத்தைப் பொறுத்தது).
அல்-காய்தா தீவிரவாதி களுக்கு அதிக எரிச்சலை அளித் திருக்கக்கூடும் என்று கூறப்படுவது 2011 நவம்பரில் வெளிவந்த இதழ். ‘’ஷரியா ஹெப்டோ’’ என்ற தலைப்பில் வெளியானது. ஷரியா என்பது இஸ்லாமியர்களின் ஒரு வகை சட்டம். நபிகள் நாயகம் இந்த இதழின் சிறப்பு ஆசிரியர் என்று குறிப்பிடப்பட்டது. போதாக் குறைக்கு ‘’இதைப் படித்துவிட்டு சிரிக்காவிட்டால் உங்களுக்கு 100 சவுக்கடி’’ என்று அவர் கூறுவதைப் போலவும் ஒரு கார்ட்டூன்!
ஹராகிரி என்பது இந்தப் பத்திரிகையின் பூர்வஜென்மப் பெயர். ஹராகிரி என்பதும் செப்புகு என்பதும் ஒரே அர்த்தத்தைத் தரும் வார்த்தைகள். ‘வயிற்றைக் கிழித்துக் கொண்டு இறப்பது’ என்பது இதன் பொருள். ஜப்பானிய சாமுராய் வீரர்கள், தாங்கள் எதிரிகள் கையில் பிடிபடுவோம் என்றால், தங்கள் வயிற்றைக் கிழித்துக் கொண்டு இறந்து விடு வார்கள் (இலங்கை விடுதலைப் புலிகள் சயனைட் குப்பியை வாயில் சரித்துக் கொள்வதுபோல).
‘சிரித்து சிரித்து வயிறே வெடித்துவிட்டது’என்கிறோம் அல்லவா, அந்த அர்த்தத்தில் இந்த இதழ் தனக்கான பெயரைச் சூடிக் கொண்டது. ஆனால் அப்போதைய பிரான்ஸ் அதிபரின் மரணத்தையே கேலி செய்ததைத் தொடர்ந்து அது தடை செய்யப்பட்டது. சுமார் பத்து வருடங் களுக்குப் பிறகு அது சார்லி ஹெப்டோவாக மறுவடிவம் எடுத்தது. பழைய இதழில் பணியாற்றியவர்கள் கிட்டத்தட்ட அப்படியே இதிலும்.
இதன் அலுவலகத்துக்குள் ஜனவரி 8 அன்று நுழைந்த மூன்று முகமூடி நபர்கள் கண்மூடித்தன மாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பத்திரிகை ஆசிரியர் உட்பட ஒரு டஜன் பேர் உயிரிழந்தனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முதலில் குறிப்பிட்ட பிரம்மாண்ட ஊர்வலம் நடத்தப்பட்டது என்பதைவிட, தீவிரவாதத்துக்கு எதிரான ஊர்வலம் இது என்பது மேலும் பொருந்தும்.
இது தவிர மாட்ரிட், நியூயார்க், லண்டன் போன்ற நகரங்களிலும் பெரும் ஊர்வலங்கள் நடந்தன. இந்த நகரங்களில் அல்-காய்தா தீவிரவாதிகள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். பிரான்ஸ் நாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எக்கச்சக்கம். நவீன சிந்தனைகளுக்கு கம்பளம் விரிக்கும் நாடான இது மிகத் தொன்மையான நாடும்கூட!
பிரான்ஸ் பற்றி நீங்கள் கேள் விப்படாமல் இருந்திருக்க முடி யாது. பிரெஞ்சு ஓபன் பந்தயங்கள், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க். ‘’பள்ளியில் பிரெஞ்சு மொழியை மூன்றாவது மொழியாகத் தேர்ந்தெடுத்தால் மிக அதிக மதிப்பெண்கள் பெறலாம்’’ என்று ஏதோ ஒருவிதத்தில் பிரான்ஸ் நமக்கு அறிமுகமாகியிருக்கும்.
ஜீன்ஸ் அணிந்தவர்கள் எல்லாம் பிரான்ஸை ஒரு கணமாவது நினைக்க வேண்டும். அங்குள்ள ‘டெனிம்ஸ்’ என்ற இடத்தில்தான் ஜீன்ஸ் அறிமுகமானது. திரைப்பட ரசிகர்கள் ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவை நினைவு கொள்வார் கள். தவிர, ‘செவாலியே’ சிவாஜி கணேசனை மறக்கலாகுமா?
பிரான்ஸை இன்னமும் அதிகமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இந்தக் காரணங்கள் போதாதா? தவிர, வேறு காரணங்களும் உண்டு.
பாரீஸ் நகருக்குச் செல் பவர்கள் அங்குள்ள லூவர் அருங்காட்சியகத்துக்கு நிச்சயம் செல்வார்கள். அது ஒரு கலைப் பொக்கிஷம். மோனோலிசா ஓவியம்கூட அங்குதான் இருக்கிறது. பிரபல ‘டாவின்ஸி கோட்’ புதினம் இந்த மியூசியத்திலிருந்துதான் தொடங்குகிறது என்றால் சிலருக்குப் புரியக்கூடும்.
உலகின் பல நாடுகளிலிருந்தும் மக்கள் குவியும் இந்த அருங் காட்சியகத்துக்கு போயிருந்த போது ஒரு கடும் ஏமாற்றம் ஏற்பட்டது. ஓர் இடத்தில்கூட ஆங்கில அறிவிப்பு கிடையாது. அந்த அளவுக்குத் தங்கள் மொழி யான பிரெஞ்சு மீது வெறித்தனமான அபிமானம் அவர்களுக்கு. தவிர ஆங்கிலேயர்கள் மீது கொண்ட வரலாற்றுப் பகை இன்னமும் கொஞ்சம் மிச்சம் இருக்கலாம் என்பது கூடுதல் காரணம்.
ஆனால் ரொம்பவும் தொடக்க காலத்தில் பிரான்ஸ் நாட்டின் மொழி பிரெஞ்சு கிடையாது.
இப்போதுள்ள பிரான்ஸ் பகுதியில் அப்போது இருந்த நாட்டின் பெயர் கால் (Gaul – ஆஸ்டெரிக்ஸ் காமிக்ஸ் படித்தவர்களுக்கு இந்த நாடு மிகவும் நெருக்கமானதாக இருக்கும்). அப்போது பெல்ஜியம், சுவிட்சர்லாந்து போன்றவைகூட இந்த நாட்டின் பகுதிகளாக இருந்தன. அங்கு பேசப்பட்ட மொழி ஸெல்டிக்.
ரோம சாம்ராஜ்யம் பரந்து விரிந்த காலகட்டம். கால் நாட்டை மட்டும் சும்மா விடுமா? அந்த முழு தேசத்தையுமே தன் பிடிக்குள் கொண்டு வந்தது ரோம். இது நடந்தது கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு.
வேறு வழியில்லாமல் ரோம் மொழி மற்றும் ரோமானிய கலாச்சாரத்துக்கு தங்களை மெல்ல மெல்ல மாற்றிக் கொண்டார்கள் கால் மக்கள்.
ரோமானியர்கள் தங்கள் கைவரிசையை கால் நகரில் காட்டினார்கள் – நல்லவிதத்திலும் தான்! பிரம்மாண்டமான கட்டிடங் களும் அரங்கங்களும் எழும்பின.
பின்னர் சில காட்டுமிராண்டிக் கூட்டங்கள் அவற்றில் பலவற்றை அழித்துவிட்டாலும் இன்னமும் சில அருமையான மிச்சங்களை பிரான்ஸில் காண முடியும். முக்கியமாக மூன்று அடுக்கு கொண்ட நீர்த்தொட்டிகள், ரோன் பள்ளத்தாக்கில் உள்ள பிரம்மாண்ட நாடக அரங்கு, நிமஸ் என்ற இடத்திலுள்ள ஆலயம்.
சில நூற்றாண்டுகள் நகர்ந்தன. மன்னன் குலோவிஸ் என்பவரைத் தலைவராகக் கொண்ட பிராங்க் இனத்தவர் கால் நாட்டை தங்கள் பிடிக்குள் கொண்டு வந்தார்கள். இந்த பிராங்க் இனத்தவர் ஜெர் மானிய குடிகளில் ஒரு வகையினர்.
பிராங்க் இனத்தவர் அந்தப் பகுதியை ஆக்ரமித்தவுடன் இந்தப் பகுதியை சில சிறிய பகுதிகளாகப் பிரித்தனர். பெயர் மாற்றம் நடைபெற்றது. அவர்கள் பெயர் அல்ல – நாட்டின் பெயர். மேற்குப் பகுதிக்கு ‘பிரான்ஸியா’ என்று பெயரிட்டனர். ஆக, கால் போச்சு பிரான்ஸ் வந்தது.
அப்போதுகூட பிரெஞ்சு அதிகாரபூர்வ மொழி ஆகிவிட வில்லை. ஆனால் கி.பி.1000-ல் பிரான்ஸை ஆண்ட மன்னன் பிரான்ஸியன் என்பவனுக்கு தீவிர மொழிப் பற்று. அவன்தான் பிரெஞ்சு மொழியை குறைந்தபட்சம் உயர் வகுப்பினராவது பயன்படுத்த வேண்டும் என்பதைக் கட்டாயம் ஆக்கினான். லத்தீனிலிருந்து பலவிதங்களில் மாறுதல் பெற்று புதிய வடிவமாக உருவாகியிருந்தது பிரெஞ்சு. இது பிரான்ஸின் அதிகாரபூர்வ மொழியானது.
கொஞ்ச காலத்துக்குப் பிறகு என்ன நடந்தது தெரியுமா? ‘வேறு யாராவது அந்த நாட்டின் மீது படையெடுத்திருப்பார்கள்’ என்கிறீர்களா? அதேதான். இந்த முறை அதைச் செய்தது வைகிங் இனத்தவர். பிரான்ஸின் வடக்குப் பகுதி மீது இவர்கள் கண் வைத்தார்கள். வைகிங் இனத்தவர் ஸ்கான்டிநேவியா பகுதியில் வேர்விட்டவர்கள். (நார்வே, ஸ்வீடன், டென்மார்க் ஆகிய மூன்றும் இணைந்ததுதான் ஸ்கான்டிநேவியா).
சமாதானமாகப் போக விரும் பினார் பிரெஞ்சு மன்னன். தன் தேசத்தின் கணிசமான பகுதியை வைகிங் மன்னர்களுக்குக் கொடுத்துவிட்டு வெள்ளைக் கொடியைப் பறக்க விட்டார். அப்படி அளிக்கப்பட்ட பகுதியில் குடியேறியவர்கள் நாளடைவில் நார்மன்ஸ் அல்லது நார்ஸ்மென் என்று அழைக்கப்பட்டது தனிக்கதை.
காலச் சக்கரம் வழக்கம்போல் உருண்டது. 1666-ல் நார்மன் இனத்தைச் சேர்ந்த வில்லியம் என்ற ஒருவர் இங்கிலாந்தை ஆக்கிரமிப்பதற்காக கிளம்பினார். இவர் தனக்கு வைத்துக் கொண்ட பெயர் ‘வில்லியம் தி கான்கோரர்’. அதாவது வென்று கொண்டே இருக்கும் வில்லியம்! அவ்வளவு நம்பிக்கை.
‘’சுற்றி வளைத்துப் பார்த்தால் இங்கிலாந்து மன்னருக்கு நானும் உறவு. எனவே எனக்கும் வாரிசுரிமை இருக்கிறது’’ என்று கிளம்பினார்.
நடைபெற்றது ‘ஹேஸ்டிங்ஸ் யுத்தம்’. இது என்ன புதிதாக ஒரு கதாபாத்திரம் என்று கேட்காதீர்கள். யுத்தம் நடைபெற்ற இடத்தின் பெயர் அது. தன் பெயருக்கேற்ப வில்லியம் ஜெயித்தார். அடுத்த 400 வருடங்களுக்கு இங்கிலாந்தின் ஆட்சி மொழி பிரெஞ்சுதான். இந்த காலகட்டத்தில்தான் ஆங்கில மொழியில் பல பிரெஞ்சு வார்த்தைகள் புகுந்தன அதாவது புகுத்தப்பட்டன.
காலம் தொடர்ந்து நகர்ந்தது. பிரெஞ்சு ராணியான எலியனார் என்பவர் கணவனை விவாகரத்து செய்தது ஒரு வரலாற்றுத் திருப்பமானது. காரணம் அவர் விவாகரத்து செய்த லூயி ஒரு பிரெஞ்சு மன்னன். அவர் மறுமணம் செய்து கொண்ட இரண்டாம் ஹென்றி ஓர் ஆங்கிலேய மன்னன். இதன் காரணமாக, அந்தக் கால நியதிப்படி பிரான்ஸின் கணிசமான பகுதியும் முழு இங்கிலாந்தும் எலியனாருக்கு வந்து சேர்ந்தது. விவாகரத்து காரணமாக வந்தது பிரான்ஸ் பகுதி. மன்னன் ஹென்றி இறந்துவிட அவரிடம் வந்தது இங்கிலாந்து.
தன் மகன் ரிச்சர்டை மன்னனாக்கி விட்டு. ஆலோசகர் என்ற பதவியை ஏற்றார் எலியனார். இந்த ஆட்சியில் கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இசைக் கலைஞர்களும், கவிஞர் களும், ஓவியர்களும் ஊக்குவிக்கப் பட்டார்கள். அந்தக் காலத்தில் உருவான இசை ஸ்டைல் இன்றள வும் உரு மாறாமல் இசைக்கப் படுகிறது.
எல்லா நல்ல விஷயங்களுக்கும் ஒரு முடிவு வந்து தொலைக்குமே! ஒன்றல்ல இரண்டு பிரச்னைகள் பிரான்ஸை சின்னாபின்னமாக்கின.
1337-ல் தொடங்கி 1451 வரை நடைபெற்றது ‘நூறு வருட யுத்தம்’. (கணிதப் புலிகள் கன்ஃப்யூஸ் ஆக வேண்டாம். நூறைத் தாண்டினாலும் அதன் பெயர் நூறு வருட யுத்தம்தான்). பிரான்ஸ் எல்லைப் பகுதியை தன் பிடிக்குள் கொண்டுவர வேண்டும் என்று வெறித்தனமாக ஆசைப்பட்டது இங்கிலாந்து. பிரான்ஸ் கடுமையாக இதை எதிர்த்து நின்றது. இந்த இரண்டு நாடுகளின் மோதலில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தார்கள். எண்ணிலடங்காத பாதிப்புகள் உண்டாயின. போதாக்குறைக்கு அந்த சமயம் பார்த்து ப்ளேக் நோய் வந்தது. கொள்ளை நோய் என்பதால் இதிலும் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர். பிரான்ஸ் இங்கிலாந்தின் வசப்பட்டது.
கொஞ்சம் விட்டுவிட்டுதான் என்றாலும் ‘கிட்டத்தட்ட’ தொடர்ச்சியாகவே போர்கள் நடந்து கொண்டே இருந்தன. சில குறிப்பிட்ட பகுதிகள் யாருக்குச் சொந்தம் என்பதிலிருந்து வாரிசுரிமை தொடர்பான சிக்கல்கள் வரை பல காரணங்களும் இந்த நூறு வருடப் போர் அணையாமல் தொடர்ந்து எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தன.
பிரான்ஸ் மன்னர்களுக்கு நிதி நிலைமை பிரச்னை இல்லை. மேற்கு ஐரோப்பாவின் மிகுந்த மக்கள் தொகை கொண்ட சக்தி வாய்ந்த நாடு அது. ஒப்பிடும்போது ஆங்கிலேய அரசாங்கம் அளவிலும் குறைவு – மக்கள் தொகையிலும் குறைவு. என்றாலும் ஆங்கில ராணுவம் மிகவும் கட்டுப்பாடு மிக்கதாக இருந்தது. அவர்கள் மிகத் துல்லியமாக அதிகப்படி நீளம் கொண்ட அம்புகளை தொலைதூரத்துக்கு எறிவதில் கில்லாடிகளாக இருந்தார்கள். இதன் காரணமாக பலமுறை அவர்களால் ஜெயிக்க முடிந்தது – கடல் வழித் தாக்குதல், தரைவழித் தாக்குதல் இரண்டிலும்.
சில பகுதிகள் (முக்கியமாக Duchy of Guynne என்ற பகுதி) யாருக்கு என்பதில் யுத்தம் தொடங்குவதும், ஒரு கட்டத்தில் சமாதானத்துக்கு ஒத்துக் கொண்டு பிரான்ஸ் மன்னன் அதை இங்கிலாந்துக்கு அளிப்பதும், பிரான்ஸ் மன்னனின் வாரிசு போரில் வென்று மறுபடியும் அந்தப் பகுதிகளை பிரான்ஸுடன் இணைப்பதுமாக போர் விளையாட்டு தொடர்ந்து கொண்டிருந்தது.
ராணுவ ரீதியாக பலமுறை வெல்ல முடிந்தாலும் இங்கிலாந்தினால் அரசியல் வெற்றிகளை சுவைக்க முடியவில்லை. பெரும்பாலான பிரெஞ்சு மக்கள் இங்கிலாந்தின் ஆதிக்கத்தை ஏற்க மறுத்தனர். இங்கிலாந்து மன்னன் ஐந்தாம் ஹென்றி பிரான்ஸ் நாட்டை வென்றான். வருங்காலத்தில் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காகவோ என்னவோ பிரான்ஸ் மன்னனான ஐந்தாம் சார்லஸின் மகளை மணந்து கொண்டு ஒரு மகனுக்கு அப்பா ஆனான். ‘’வருங்காலத்தில் என் மகன்தான் இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் அரசன்’’ என்றபடி கண்களை மூடினான். மறுபடி திறக்கவில்லை.
இந்தக் காலகட்டத்தில்தான் பிரான்ஸ் வரலாற்றில் அழுத்தமாகப் பதிந்த ஜோன் ஆஃப் ஆர்க் சிலிர்த்தெழுந்தாள்.பிரான்ஸில் உள்ள ஆர்லியன்ஸ் என்ற பகுதியில் ஒரு கிராமப் பெண்ணாக வளர்ந்தாள் ஜோன் ஆஃப் ஆர்க் என்று பின்னாளில் பிரபலமான அந்த வீராங்கனை. பதிமூன்று வயதிலேயே அவரால் பல தெய்வீக தூதர்களின் குரல்களைக் கேட்க முடிந்ததாம். மைக்கேல், மார்கரெட், கேதரின் போன்ற இறைத் தூதர்கள் இறைவனிடமிருந்து நேரடியாக அவருக்கு செய்திகளை அளித்தனராம்.
தன் வருங்காலம் எப்படி இருக்கும் என்பதைக்கூட அந்தக் குரல்கள் கூறின என்றாள் அவள். இங்கிலாந்துக்கு எதிராக 1429-ல் தன் தலைமையில் ஒரு படை புறப்படும் என்றும், அந்தப் போரில் தனக்கு பெரும் காயம் ஏற்படும் என்றும் அவர் கூறியது பின்னாளில் அப்படியே பலித்தது.
“எனக்கென்று ஒரு தெய்வீக வாளை கடவுள் அளித்திருக்கிறார். அது தூய கேதரின் மாதா கோவிலருகே புதைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஐந்து சிலுவைக் குறிகள் இருக்கும்’’ – இப்படி தனக்கு ஒரு தெய்வீக செய்தி வந்ததாக அவர் கூற, குறிப்பிட்ட இடம் தோண்டப்பட்டது. அங்கே ஒரு துருப்பிடித்த வாள். அதை சுத்தப் படுத்தியபோது, அதில் ஐந்து சிலுவைக் குறிகள் இருந்தன!
நலிவடைந்திருந்த பிரான்ஸை இங்கிலாந்திடமிருந்து மீட்பதற்கு மிகவும் முனைந்தார் ஜோன். தன் வீரத்திலும், பிரச்சாரத்திலும் சிறந்து நின்ற அவரை ஒரு சாகசக் கதாநாயகியாகவே பார்த்தனர் பிரெஞ்சு மக்கள்.
இங்கிலாந்து கடும் கோபம் கொண்டது. பிரான்ஸின்மீது தான் கொண்ட பிடிமானம் ஜோன் காரணமாக நழுவுகிறதே! இதுகூட ஒருவிதத்தில் இயல்பானதுதான். ஆனால் பிரான்ஸின் ஒரு பகுதியான பர்கண்டி என்ற பகுதியை ஆட்சி செய்தவர்களும் ஜோனை வெறுக்கத் தொடங்கியது காலத்தின் கொடுமை.
‘நேற்று பிறந்த ஒருத்தி தங்களைவிட புகழ் பெறுவதா?’ என்ற பொறாமை கொந்தளிக்க ஜோனை ரகசியமாக சிறை பிடித்து ஆங்கிலேயர்களிடம் விற்றுவிட்டார்கள் பர்கண்டி ஆட்சியாளர்கள். பதிலுக்குப் பத்தாயிரம் பிராங்க் தொகையை ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள். ஆங்கிலேய அரசு ஜோன் மீது வழக்கு தொடுத்தது.
(இன்னும் வரும்)
Aucun commentaire:
Enregistrer un commentaire