ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி
பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் விசாரிக்க முடியாது. மாறாக
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச்தான்
விசாரிக்க முடியும் என்று ஜெயலலிதா தரப்பில் இன்று ஆஜரான மூத்த வழக்கறிஞர்
பரமானந்த் கட்டாரியா வாதிட்டார். இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம்,
இந்தக் கோரிக்கையை மனுவாக (interlocutory application) தாக்கல் செய்யுமாறு
ஜெயலலிதாவின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டது.
சொத்துகுவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய
4 பேருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பெங்களூர் தனிக் கோர்ட்
தீர்ப்பளித்தது. நீதிபதி குன்ஹா அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா
உள்பட 4 பேரும் கர்நாடக ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதி குமாரசாமி
இந்த அப்பீல் மனுவை விசாரித்து, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து
தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசும் திமுக
பொதுச் செயலாளர் க.அன்பழகனும் அப்பீல் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு
மீதான பிப்ரவரி 23ம் தேதி நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய்
ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணை தொடங்கியது. முதலில்
கர்நாடகத் தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிட்டார். அப்போது
குமாரசாமியின் தீர்ப்பில் லாஜிக் இல்லை. அவரது தீர்ப்பில் கணிதப் பிழை
அடங்கியுள்ளது. எனவே தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று
வாதிட்டார்.
துஷ்யந்த் தவே தம்முடைய வாதத்தை முன்வைக்க 3 நாட்கள் அவகாசம்
கோரியிருந்தார். ஆனால் 2 நாட்கள் மட்டுமே அவர் வாதத்தை முன்வைத்த நிலையில்
வழக்கில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு இன்றைய தேதிக்கு
விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே ஜெயலலிதா தரப்பு உடனடியாக சொத்து குவிப்பு வழக்கின் ஆவணங்களை
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இன்றைய விசாரணையின் போது ஜெயலலிதா
தரப்பில் மூத்த வழக்கறிஞர் பரமானந்த் கட்டாரியா ஆஜரானார்.
அவர் தனது வாதத்தின்போது எடுத்து வைத்ததாவது:
முதலில் இந்த மேல் முறையீட்டு மனுக்களை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு
அதிகாரமே இல்லை. முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பை அளித்தது
கர்நாடக உயர் நீதிமன்றம் (நீதிபதி குமாரசாமி).
அந்தத் தீர்ப்பை எதிர்க்க வேண்டுமானால், 2 நீதிபதிகள் கொண்ட கர்நாடக
உயர்நீதின்ற டிவிஷன் பெஞ்ச்சில்தான் அப்பீல் செய்திருக்க வேண்டும். ஏற்கனவே
ஏராளமான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தேங்கி இருக்கும் நிலையில், இந்த
மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரிக்க வேண்டியது இல்லை. 7 ஆண்டுகளுக்கு குறைவான
தண்டனை கொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது
என்றார்.
கட்டாரியாவின் வாதம் குறித்து விசாரிப்பதாகவும், இதுதொடர்பாக தனியாக மனு
செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு
எதிராக கர்நாடா அரசு தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தமது இறுதிவாதத்தை
தொடர்ந்து முன்வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து தவே
தம்முடைய இறுதிவாதத்தை முன்வைத்து வருகிறார். மேலும் கர்நாடகா அரசு
தரப்பில் ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த சொத்து குவிப்பு வழக்கின் அனைத்து
ஆவணங்களும் இன்று தாக்கல் செய்யப்பட்டன.
Aucun commentaire:
Enregistrer un commentaire