lundi 31 mars 2014

பழிக்குப் பழி புனிதர்கள் என்று யாருமில்லை!

Human_Rightsஎமது மக்களின் நம்பிக்கைகள் எல்லாவற்றையும் ஜெனிவாவில் கொண்டுபோய்க் கட்டி வைத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், ஜெனிவாவைப் பயன்படுத்தி மெல்ல மெல்ல நம்மை உலகின் எந்த முகாமுக்குள் சேர்த்து விட்டிருக்கிறார்கள் என்பதை அறிய சற்று திகைப்பாக இருக்கிறது.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரே ரணை மீதான வாக்கெடுப்பில், அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் ஒரு தரப்பாகவும் ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், கியூபா போன்ற நாடுகள் மறுதரப்பாகவும் பிரிந்து நின்றதைக் காணக் கூடியதாக இருந்தது. இதில், இலங்கைத் தமிழர்களாகிய நம்மை எந்த முகாமுக் குள் கொண்டுபோய் சொருகி விட்டிருக்கிறார்கள் நம் தமிழ்க் கூட்டமைப்புத் தலைவர்கள் என்பதும் அதன் எதிர்கால அபா யமும் இங்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும். முதலில், இலங்கையில் இருந்து கொண்டிருக்கக்கூடிய – இங்கேயே வாழ வேண்டிய தமிழர்கள், இலங்கை என்ற நாட் டிற்கு எதிரானவர்கள் என்ற செய்தியை, அவர்களுக்குத் தெரி யாமலே ஏனைய சமூகங்களுக்கும் உலகுக்கும் நிறுவி முடித்தார்கள்.
இங்கு நடந்த போரை இவ்வளவு பெரிதாக வளர்த்து அழிவு களுடன் நடத்தி முடித்ததில் இரு தரப்புக்குமே பங்குண்டு என்பதைத்தான் நடுநிலையாகக் கருத்துத் தெரிவிக்கும் எவரும் சொல்வார்கள். அப்பாவி உயிர்களின் அழிப்பு என்று வந்துவிட்டால், நடுநிலையாளர் பார்வையில், நமக்கு உவக்காத பல உண்மைகளைக் கேட்டு ஜீரணித்துக்கொள்ள வேண்டி வரும்.
இதன் பொருள் அரசின் அடக்குமுறையையும் சொந்த மக்கள் மீதான தாக்குதல்களையும் குறைத்து மதிப்பிடுவதோ அதைக் காப்பாற்ற முற்படுவதோ அல்ல. சர்வதேச விசாரணை என்று வந்துவிட்டால், அதன் நியாயத் தன்மையை நிலை நாட்ட இருதரப்பு மனிதவிரோதச் செயல்களும்தான் ஆராயப்படும். அப்போது யார் யார் தண்டிக்கப்பட்டாலும், தமிழர்களாகிய நம்மைப் புனிதர்களாக நினைத்துக்கொண்டு இப்போதுபோல் கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பதெல்லாம் அதன்பிறகு செல்லாக் காசாகி விடும்; வெளிப்படையாகவே பிறர் சிரிப்புக்கும் இடமாகிவிடும்.
அந்தவகையில், மனித உரிமை ஆணையாளர் நவிபிள்ளை அம்மையார் வலியுறுத்தும் இருதரப்பு மீறல்களும் பற்றிய விசாரணை என்பது ஒரு பார்வையில் நல்ல பலனைத் தரவும் கூடும். அதாவது, வடக்கில் இடம்பெற்ற ஷெல் தாக்குதல்களுக்கு அரசாங்கமும் தெற்கில் பஸ், ரயில் குண்டுத் தாக்குதல் களுக்கு தமிழ்த் தரப்பும் குறைந்தபட்சம் வருத்தமாவது தெரிவிக்கும் நிலை வருவது, நல்லிணக்கம் இங்கு ஏற்படுவதற்கு வாசலாக அமையும்.
அப்போதாவது, பழிக்குப் பழி வாங்குவது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் வளர்த்து அரசியல் செய்ய முற்படுவோரின் அபத்தத்தைப் பலரும் புரிந்துகொள்ள வாய்க்கும். அவரவர் தரப்பு இழப்புகளுக்காக இரு தரப்பிலும் பழிவாங்கும் உணர்ச்சியை அல்லது வென்றோர் உணர்ச்சியை வளர்த்து வருபவர்கள், மீண்டும் போரை உருவாக்கி அதில் குளிர்காயும் அரசியலைச் செய்துகொண்டிருக்க விரும்புவோர்தான்.
நம்மைப் புனிதர்களாகவே கருதிக்கொண்டு, இதையெல்லாம் ஏதோ அரசுக்கு வக்காலத்து வாங்குவதாகவோ, அல்லது இந்தக் குற்றமிழைத்த அரசைத் தண்டிப்பதைத் தவிர தமிழர் களுக்கு வேறென்ன இலக்கு இருக்க முடியும் என்பதாகவோ பிதற்றிக் கொண்டிருந்தால், நமது மக்களுக்குத் தேவையான நல்ல மாற்றங்களை இங்கு ஒருபோதும் கொண்டுவர முடியா மல் போகும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire