தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் கைவிட்டதால் தனித்துவிடப்பட்ட காங்கிரஸ் கட்சி, இந்த மக்களவைத் தேர்தலில் விடுதலை புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக்கள படங்களை வைத்து இந்த கோரச் சம்பவத்துக்கு நியாயம் கேட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக மீனவர் பிரச்சினை, இலங்கை தமிழர் விவகாரம், விலைவாசி உயர்வு மற்றும் ராஜீவ் காந்தி கொலைக் குற்ற வாளிகளின் விடுதலையை எதிர்த்த விவகாரத்தால் தமிழ கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர எந்த கட்சிகளும் முன்வரவில்லை. அதனால், தமிழக காங்கிரஸ் 40 தொகுதிகளிலும் தனித்து களம் இறங்க தயாராகி வருகிறது.
இந்நிலையில் திமுக, அதிமுக மற்றும் பாஜக.வுக்கு சரியான பதிலடி கொடுக்க காங்கிரஸ் கட்சி 1991-ம் ஆண்டு தேர்தலில் பெரும் அதிர்வலையை ஏற் படுத்திய ராஜீவ் படுகொலை விவகாரத்தை மீண்டும் இந்த மக்களவைத் தேர்தலில் கையில் எடுக்க திட்டமிட்டுள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவுடன் படுகொலையான போலீஸ் அதிகாரிகள், பொதுமக்களின் உறவினர்களையும் ஈடுபடுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் நிர் வாகிகள் கூறியதாவது:
1991-ம் ஆண்டு மக்கள வைத் தேர்தலோடு தமிழக சட்டசபைக்கும் ஒரே நேரத் தில் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் அதிமுக, காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டி யிட்டது. பெரும்புதூரில் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு சென்றபோது ராஜீவ் காந்தி விடுதலை புலிகளின் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம், தமிழகத்தை மட்டுமல்லாது உலக நாடுகளையும் அதிர்ச்சி யடைய செய்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் மற்றும் அதிமுக வேட்பாளர்கள், வீதிக்கு வீதி ராஜீவ் காந்தி படு கொலை செய்யப்பட்ட படங்களை வைத்து பிரச்சாரம் செய்தனர். அந்த அனுதாப அலையில் தமிழகத்தில் அதிமுக 163 தொகுதிகளையும், காங்கிரஸ் 61 தொகுதிகளையும் கைப்பற்றின. தமிழகம், புதுவை உள்பட 40 மக்களவை தொகுதிகளையும் இந்த கூட்டணி கைப்பற்றியது. ராஜீவ் காந்தி படுகொலை அனுதாபம்தான், இந்த அமோக வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதன்பின், காங்கிரஸ் கட்சியுடன் ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி அமைக்க தமிழக அரசியல் கட்சிகள் போட்டிப்போட்டன.
தமிழின ஆதரவு கோஷம்
இப்போது அரசியல் நிலை தலைகீழாகிவிட்டது. 1991-ம் ஆண்டு ராஜீவ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் வீட் டின் முன் போராட்டங்கள் நடத்திய அரசியல் கட்சிகள்கூட தற்போது, தமிழின ஆதரவு என பொய் கோஷத்தை மக்களிடம் கூறி தேர்தல் ஆதாயம் பெற நினைக்கின்றன. அவர்களுடைய தேர்தல் பொய்ப் பிரச்சாரத்தை தவிடுபொடியாக்கி பதிலடி கொடுக்க, 1991-ம் ஆண்டை போன்று விடுதலை புலிகளால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட படங்களை காங்கிரஸ் வேட்பாளர்கள் வீதிக்கு வீதி வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire