இராணுவத்தில் இணைந்த தமிழ்ப்பெண்களின் குடும்பத்தவரை அச்சுறுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் நான்கு பேரை பொலிஸார் நேற்றுக் கைது செய்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு, உடையார்கட்டுப்பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் கைதான நால்வரில் ஒருவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது. ஏனைய மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது-

தேராவில், உடையார்கட்டைச் சேர்ந்த கே.மாடசாமி என்பவரின் இரு பெண்பிள்ளைகள் அண்மையில் இராணுவத்தில் இணைந்து கொண்டனர்.இதை அறிந்த அவ்வூர் இளைஞர்கள் கொதித்தெழுந்தனர். இராணுவத்தில் தன் இரு பெண்களையும் இணைத்து தமிழினத்துக்கே பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்று குறித்த குடும்பத்தவர்களிடம் தெரிவித்தனர். ஆனால் தன் பிள்ளைகள் இராணுவத்தில் இணைந்ததால் தன்னை 4 இளைஞர்கள் அச்சுறுத்தினார்கள் என்று மாடசாமி புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்பாடு செய்தார். இதனையடுத்து அந்த 4 இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர்.இதன்போது அவர்களில் ஒருவரைப் பிணையில் விடுவித்த நீதிமன்றம் ஏனைய மூவரையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டது.
இவ்வாறு இளைஞர்கள் கைது செய்யப்பட்ட தகவலை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire