lundi 8 avril 2013

தமிழுக்கு அமுதென்று பேர் எனச்சொன்ன தமிழகமும் இலங்கையில் தமிழ் கற்கும் சிங்களக்கிராமங்களும்

- முருகபூபதி
lern Tamilஅதிகாலையே புறப்பட்டால்தான் வவுனியாவுக்கு காலை 9 மணிக்குள் சென்றடையலாம் என்று வேன் சாரதிக்கு முதல்நாளே சொல்லியிருந்தேன். இலங்கை செல்லும்சமயங்களில் எனக்கு பயணங்களில் அந்த சாரதிதான் வழித்துணை.
அவர் எனது மனைவியின் முன்னாள் மாணவன். அதனால் குடும்ப நண்பருமானவர். பெயர் அலென். அவரது தந்தையார் பல ஆண்டுகளுக்கு முன்பே யாழ்ப்பாணத்திலிருந்து நீர்கொழும்புக்கு வந்து புடவைக்கடை நடத்தியவர். அதனால் அவர் தனது குடும்பத்துடன் நீர்கொழும்பு வாசியானவர்.
அலென் அதிகாலை மூன்று மணிக்கே வந்துவிட்டார். எனது தங்கையின் மகள் திருமணம் முடித்தவழியில் உறவினரான முன்னாள் ஆசிரியை கெங்காதேவியின்  மகன் சஞ்சையும் இந்தப்பயணத்தில் எம்முடன் இணைந்துகொண்டார். அவர் கொழும்பில் ஒரு தனியார் கல்லூரியில் படிப்பவர். மருந்து மாத்திரைகளுடன் நான் பயணிப்பதனால் எனது நலன் கருதி என்னை தனியே வெளியூர்களுக்கு அனுப்புவதற்கு வீட்டில் விருப்பம் இல்லை. அதனால் அவர்களின் ஆறுதலுக்காக சஞ்சையை அழைத்தேன். காலை உணவும் வீட்டிலேயே தயாரித்து எடுத்துக்கொண்டதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. காலை ஏழுமணிக்குள் காலை உணவு உட்கொண்டால்தான் மருந்து மாத்திரைகளை உட்கொள்ளமுடியும். வழியில் அந்த வேளையில் உணவுக்கு சிரமப்படநேரிடும். கடந்த முறை வீதியோர ஹோட்டல் ஒன்றில் சுடச்சுட அப்பம் வாங்கிச்சாப்பிடவிரும்பியபோது எனக்கு கசப்பான அனுபவம் கிட்டியிருந்தது. அந்த ஹோட்டலின் வெளிப்புறத்தில் அப்பம் சுட்டுக்கொண்டிருந்தவர் ஒரு கையில் சிகரட்டை வைத்துக்கொண்டு புகைவிட்டவாறு மறுகையால் அப்பம் சுட்டார். புகைவிடும் சிகரட்டை வைத்திருந்த கையாலேயே அப்பத்தையும் எடுத்து சுற்றித்தந்தார். எனக்கு வயற்றைக்குமட்டியது.
பணம்கொடுத்து வாங்கியதை சாப்பிடாமல், பட்டினியோடு அந்தப்பயணம் தொடர்ந்தமையால் இம்முறை முன்னெச்சரிக்கையாகவே வீட்டிலிருந்து உணவை எடுத்துவந்தேன். பருவகாலங்கள் அரசியல்வாதிகளின் வாக்குப்போன்று அடிக்கடி பொய்த்துப்போகும். இலங்கையில் மட்டுமல்ல உலகெங்கும் பருவகாலம், மனிதர்களின் பருவகாலம் போன்று நம்பமுடியாத திருவிளையாடல்களை காண்பிக்கவே செய்கின்றன.
இலங்கையில் பல பிரதேசங்களில் தொடர்ச்சியான மழை. போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்த டிசம்பர் மாதம். காலைவேளையில் மார்கழிக்குளிர். வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களின் நிதிக்கொடுப்பனவு தகவல் அமர்வு ஒன்றுகூடல்கள் டிசம்பர் மாதத்தில் பாடசாலைகளின் விடுமுறைக்கு முன்பதாக நடத்தவேண்டும் என்பது எமது நிகழ்ச்சித்திட்டம்.
வவுனியா பல்கலைக்கழக வளாக மாணவர்களின் நிகழ்ச்சி காலை பத்துமணிக்கு. அதனை முடித்துக்கொண்டு முல்லைத்தீவு முள்ளியாவளை வித்தியானந்தா கல்லூரிக்குச்செல்லவேண்டும். இரவு அந்தக்கல்லூரியில் தங்கியிருந்து மறுநாள் காலை அங்குள்ள மாணவர்களை சந்தித்து நிதிக்கொடுப்பனவுகளை வழங்கிவிட்டு போர் நடந்த பிரதேசங்களுக்குச்செல்லவேண்டும். அதன்பிறகு கிளிநொச்சிக்குப்பயணமாகவேண்டும்.
இரண்டு நாள் நிகழ்ச்சிநிரல் எந்தவித சிக்கலும் இல்லாமல் நிறைவேறினால்தான் ஏனைய பிரதேசங்களுக்குச்;செல்லமுடியும். கடந்த 2011 தொடக்கத்தில் முல்லைத்தீவுக்கு வந்து தைப்பொங்கல் தினத்தன்று நிகழ்ச்சியை நடத்தியபோதும் அடைமழைதான். மழைவெள்ளத்துக்கூடாக பயணிப்பதில் இருக்கும் சிரமம் அனுபவித்தவர்களுக்குப்புரியும்.
போருக்குப்பின்னர் மழைக்காலங்களில் அகதிமுகாம்களில் மக்கள் பட்ட கொடுந்துயரங்கள் நினைவுக்கு வந்தன. இயற்கையும் எங்கள் மக்களை பல சந்தர்ப்பங்களில் வஞ்சித்திருக்கிறது. சாரதி அலன் வேகமாகவே வேனை செலுத்தினார். அவருக்கருகில் முன் ஆசனத்தில் அமர்ந்தவாறு அடிக்கடி அவரது வேகத்தை நிதானப்படுத்தினேன். எனினும் இருள்கவிந்த ஒரு வளைவில் அவரது நிதானம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. வீதியோரத்தில் மறைந்திருந்த போக்குவரத்துதுறை பொலிஸார் வாகனத்தை நிறுத்திவிட்டார்கள்.
இனியென்ன...நடக்கும்?
சுமார் அரைமணிநேரம் தாமதம். தண்டம்.
இதனை ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால் கொழும்பு – யாழ் ஏ 9 வீதியில் பயணிக்கவிரும்பும் புலம்பெயர்ந்து வாழும் அன்பர்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்லவேண்டும் என்பதற்காகத்தான். இருள்கவிந்த இடங்களில் மறைந்திருக்கிறார்கள் பொலிஸார்... அது அவர்களது நன்மைக்காக மட்டுமல்ல எங்களது நன்மைகளுக்காகவும்தான். மகிந்தர் பதவிக்கு வந்ததும் இலங்கையின் பல பிரதேசங்களில் வீதிகள் அழகாக செப்பனிடப்பட்டுவிட்டன. அதனால் விபத்துக்களும் அதிகரித்துவிட்டன. பொலிஸாரின் கண்காணிப்பும் உக்கிரம்.
புத்தளத்தைக்கடந்து அநுராதபுரம் நோக்கி விரைந்துகொண்டிருக்கிறோம். அப்பொழுது காலை ஏழுமணியிருக்கும். வெளியே மழை பெய்கிறது. வீதியோரத்தில் சுமார் எட்டு வயது நிரம்பிய ஒரு சிறுவன் பள்ளிச்சீருடையுடன் வந்துகொண்டிருந்த பஸ்வண்டியை நிறுத்துவதற்கு கை நீட்டுவதை தூரத்திலிருந்தே அவதானித்தேன். ஆனால் அது கடுகதி பஸ்ஸாக இருக்கவேண்டும். நிற்கவில்லை. அந்த மாணவன் ஏமாற்றத்துடன் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு மழையில் நனைந்தவாறு மெதுவாக நடக்கிறான்.
“ அந்தச்சிறுவனை ஏற்றிக்கொண்டு போவோம்” என்று சாரதி அலெனிடம் சொன்னேன்.
“ அங்கிள் நானும் நினைத்தேன்... நீங்களும் சொல்கிறீர்கள்” என்றார்.
வாகனத்தை நிறுத்தி அந்தமாணவனை ஏற்றிக்கொண்டோம். என்வசம் இருந்த ரிசுபேப்பர்களை கொடுத்து தலையை துடைத்துக்கொள்ளச்சொன்னேன்.
“ ஸ்தூத்தி (நன்றி)” என்றான்.
அவனுடன் சிங்களத்தில் உரையாடினேன். அவனது தந்தை ஒருSriLankaPoliceTamilவிறகுவெட்டி. வீட்டில் ஒரு அக்கா இருக்கிறாள். தாய் மத்தியகிழக்கு நாடொன்றுக்கு பணிப்பெண் வேலைக்குப்போயிருக்கிறாள். அவனது பாடசாலை அநுராதபுரம் வீதியில் அவனது வீட்டிலிருந்து சுமார் ஆறுகிலோ மீற்றர் தூரம். தினமும் பஸ்ஸில் சென்று திரும்புவதற்கு 15 ரூபாய் செலவிடுகிறான்.
“ இனிவிடுமறை காலம் அல்லவா? பரீட்சைகள் முடிந்துவிட்டனவா?” எனக்கேட்டேன்.
“ இன்றைக்குத்தான் கடைசிப்பரீட்சை இரண்டு நாட்களில் விடுமுறை தொடங்குகிறது”
“ இன்று என்ன பாடத்தில் பரீட்சை?”
“ இன்று தமிழ்ப்பாடத்தில் பரீட்சை” என்றான்.
நானும் சாரதியும் உடன்வந்த சஞ்சையும் வியப்புற்றோம். அந்தச்சிறுவனின் பதில்
எங்களுக்கு முற்றிலும் எதிர்பாராதது.
“ தமிழ் படிக்கச்சிரமமா?” எனக்கேட்டேன்.
“ கொஞ்சம் சிரமம்தான். ஆனால் படிக்கமுடியும்.” என்று அவன் நம்பிக்கை
தெரிவித்தது ஆறுதலாக இருந்தது.
பாடசாலைக்கு முன்பாக அவனை இறக்கிவிட்டபோது “ அடுத்த தடவை சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தால் தமிழில் பேசுவோம்” என்றேன்.
“ ஹரி மஹத்தையா..போஹோம ஸ்தூத்தி” என்று சொல்லிவிட்டு அவன் கையசைத்தவாறு விடைபெற்றான்.
சிங்களத்தில் ஹரி என்றால் தமிழில் சரி என்று பொருள். நாம் மேசை என்கிறோம் அவர்கள் மேசைய என்கிறார்கள். நாம் பெட்டி எனச்சொல்வதை அவர்கள் பெட்டிய என்கிறார்கள். நாம் பேனை என்பதை அவர்கள் பேனைய என்கிறார்கள்.
இப்படி தமிழுக்கும் சிங்களத்திற்கும் இடையே நிறைய பொருத்தப்பாடான பல சொற்கள், வார்த்தைப்பிரயோகங்கள் இருக்கின்றன.
தற்பொழுது தென்னிலங்கையில் ஏராளமான சிங்களப்பாடசாலைகளில் தமிழ் ஒரு பாடமாகக்கற்பிக்கப்படுகிறது. 1970 களில் கம்பஹா மாவட்டத்தில் பல பௌத்த பிக்குகளுக்கும் சிங்கள ஆசிரியர்களுக்கும்  சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் நான் தமிழ்ப்பாட வகுப்புகள் நடத்தியிருக்கின்றேன். அதுபோன்று 1980 களில் அவுஸ்திரேலியாவுக்கு வரும்வரையில் கொழும்பில் மருதானையில் அமைந்துள்ள பௌத்தவிஹாரையில் பல பிக்குகளுக்கு தினமும் மாலைவேளையில் தமிழ் கற்பித்திருக்கின்றேன்.
அக்காலப்பகுதியில் சிஹலஉருமைய, பொதுபலசேனா முதலான அமைப்புகள் இருக்கவில்லை.
இந்த அமைப்புகள் உருவானதன் பின்னணி பற்றி எழுதுவதற்கு பல ஆய்வாளர்கள் இருக்கிறார்கள்.
இலங்கையில் எத்தனையோ சிங்கள அரசியல் தலைவர்களைப்பார்த்துவிட்டோம்.
ஆனால் இன்றைய ஜனாதிபதி மகிந்தர் போன்று தமிழ்பேசுவதற்கு எத்தனைபேர் அக்கறைகொண்டார்கள். அவர் ஆங்கிலத்திலோ அல்லது சிங்களத்திலோ எழுதிவைத்துக்கொண்டு தமிழில் பேசுவதாகவே பலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அவர் தமிழ் கற்பது எத்தனை பேருக்குத்தெரியும். தமிழில் பொதுநிகழ்வுகளில் பேசும்பொழுது ஏதும் தவறுவிட்டாலும் அருகில் தமிழ் தெரிந்தவர்கள் இருந்தால் கேட்டுத்திருத்திக்கொள்கிறார். அவரைப்பார்த்து தானும் தமிழ்பேசுவதற்கு தேர்தல்காலத்தில் யாழ்ப்பாணத்தில் முயன்றவர்தான் எதிர்க்கட்சித்தலைவர் ரணில்விக்கிரமசிங்கா. ஆனால் அவர் என்ன தமிழில் பேசினார் தெரியுமா...” மகிந்தா வீட்டுக்குப்போடா...கோத்தபாயா வீட்டுக்குப்போடா..”
யாழ்ப்பாணத்தில் அதனைக்கேட்ட தமிழ்மக்கள் சிரித்தார்கள். ஆனால் எதற்கு என்பதுதான் தெரியவில்லை.
தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக காலம்பூராவும் குரல்கொடுத்துவரும் சில சிங்களத்தலைவர்களுக்கும் தமிழில் பேசமுடியவில்லை. ஆனால் மூவின மக்களுக்காகவும் தொடர்ச்சியாகப்பேசிவரும் மனோகணேசன் என்ற தமிழ் அரசியல் தலைவர் சிங்களத்தில் சரளமாகப்பேசுவார்.
மினுவாங்கொடையில் தமிழ்கற்கும் சிங்கள மாணவர்கள் சிலரை, அங்கு கொரஸ என்ற கிராமத்தில் நடந்த எனது தமிழ்ச்சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல் மதகசெவனெலி (ளூயனழறள ழுக ஆநஅழசநைள) வெளியீட்டு விழாவில் சந்தித்தேன்.
அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம், பின்னர் கொழும்பில் பூபாலசிங்கம் புத்தகசாலையில் தமிழ் - சிங்கள, சிங்கள – தமிழ் அகராதி நூல்களை வாங்கி அனுப்பினேன்.
அவுஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் எம்மவர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு வரும் வெள்ளை இன அரசியல் தலைவர்கள் தமது உரையின் தொடக்கத்தில், “வணக்கம்” என்று மாத்திரம் சொல்லிவிட்டு பிறகு ஆங்கிலத்தில் தமது உரையை ஆரம்பிக்கிறார்கள்.tamil sinhala
இறுதியில் “நன்றி, வணக்கம்.” எனச்சொல்கிறார்கள். அதனைக்கேட்டு எம்மவர்கள் உள்ளம்பூரிக்க கரகோசம் எழுப்புகின்றனர்.
எமது தாய்மொழியை பிற இனத்தவர் பேசும்போது உச்சரிப்பில் மழலைத்தன்மை இருந்தபோதிலும் நாம் உள்ளம்பூரிக்கின்றோம்.
அன்று புத்தளம் - அநுராதபுரம் வீதியில் முற்றிலும் சிங்கள மக்கள் செறிந்து வாழும் ஒரு பிரதேசத்தில் சிங்கள மாணவர்கள் எமது தமிழ் மொழியை கற்கிறார்கள் என்பது அறிந்தபொழுது நானும் உள்ளம்பூரித்தேன்.
ஆனால், தமிழுக்காக தீக்குளிக்கும் அளவுக்கும் அடையாள உண்ணாவிரத சம்பிரதாயங்கள் தொடரும் அளவுக்கும் உணர்ச்சிப்பெருக்கில் வாழும் தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தமிழ் அரிதாவதைப்பார்த்து என்னசொல்வது? தமிழுக்கு அமுதென்றுபேர் என்ற வரிகள் பாரதிதாஸனின் கவிதையுடன் நின்றுவிட்டதா? நாம் வவுனியாவை வந்தடையும்பொழுது வானம் வெளுத்திருந்தது.
(பயணங்கள் தொடரும்)நன்றீ தேனி

திறமைக்கொண்ட இளைய தலைமுறையினரிடம் தலைமை;ஜே.வி.

மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பியை) உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் வகையிலும் நாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும் வகையிலும்  திறமைக்கொண்ட இளைய தலைமுறையினரிடம் தலைமைத்துவத்தை ஒப்படைக்கவிருப்பதாக அக்கட்சியின் தலைவர் சோமசிங்க அமரசிங்க தெரிவித்தார்.

குருணாகலில் கடந்தவாரம் இறுதியில் நடைபெற்ற 'ஏப்ரல் 71 வீரர்கள்' தினத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே மேற்படி அறிவிப்பை அவர் விடுத்தார்.

ஜே.வி.பி. தலைவர் ஒரு சக்கர நாற்காலியில் செல்லும் வரையிலும் கட்சி தலைமையாகவே இருப்பதற்கு விரும்பவில்லை. 
வாழ்க்கை வர்க்க போராட்டமானது தலைமுறை இருந்து தலைமுறைக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.

'நாங்கள் எப்போதும் தலைவர்கள் இருக்க விரும்பவில்லை,' என கியூபா தலைவர் ராவுல் காஸ்ட்ரோ சமீபத்தில் தனது ஓய்வு அறிவிப்பை அறிவித்தார். ஆதனை ஒரு முன்னோடியாக அமைத்துக்கொள்ளவேண்டும்  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


 

samedi 6 avril 2013

81 பெண் பயனாளிக் குழுவினரின் கண்காட்சி விழா


VilaVila--1அம்கோர் நிறுவனத்தின் அனுசரனையுடன் கிரான் பூலாக்காடு  கிராமத்தினைச்சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 81 பெண் பயனாளிக் குழுவினரினால் நடத்தப்பட்ட இரு நாள் உற்பத்திப்பொருட் கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் நேற்று (04.04.2013ம் திகதி) முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கிரான் பிரதேச பிரிவுக்கு உட்பட்ட புலிபாய்ந்த கல் பிரதேசத்தில் நடத்தப்பட்ட இன் நிகழ்வில் கலந்த கொண்ட முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சி.சந்திரகாந்தன் அவர்கள் மக்களுடன் கலந்துரையாடியதுடன் மகளிரினால் உற்பத்தி செய்யப் பட்ட உற்பத்திப் பொருட்களையும் கொள்வனவு செய்தார். இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் முன்னாள் மாகான சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அம்கோர் பணிப்பாளர் சுரேஸ் த.ம.வி.பு பொருலாளர் தேவராஜா உட்பட பலர் கலந்த சிறப்பித்தனர்.

ஈழமே நிரந்திர தீர்வு. அதற்கு ஐ.நா. சபை சார்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்: மாணவர்களின் கூட்டத்தில் தீர்மானம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அனைத்து சட்ட கல்லூரி மாணவர்களின் கலந்தாய்வு கூட்டத்தில் இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு தனித்தமிழீழமே தீர்வாகும் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சென்னையில் நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக சட்டக் கல்லூரி மாணவர் ஆர்.முருகானந்தம் தெரிவித்தார்.

இலங்கையில் நடந்தது திட்டமிட்ட இன படுகொலை. அதற்கு நமபத்தகுந்த சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்துவதுட் அந்த படுகொலைகளுக்கு காரணமாக இருந்தவர்களை தண்டிக்க வேண்டும்.

தனித்தமிழ் ஈழமே நிரந்திர தீர்வு. அதற்கு ஐ.நா. சபை சார்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

இலங்கை அரசின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்கும் அதே வேளை இலங்கை அரசு உடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை இராணுவத்தின் தொடர் தாக்குதலை நிறுத்தும் அதே வேளையில் கட்சத்தீவை மீட்டு எடுக்க வேண்டும்.

தமிழ் ஈழ வரலாற்றை தமிழ்நாட்டு மாணவர்களின் பாடநூல்களில் சேர்க்க வேண்டும். ஆகிய தீர்மானங்களே நிறைவேற்றப்படடுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேசிய செம்பியன்சிப் படகு போட்டி 2013


தேசிய செம்பியன்சிப் படகு போட்டி 2013 நேற்று வெள்ளிக்கிழமை அண்மையில் அபிவிருத்தி செய்யப்பட்ட தியவன்ன ஓயாவில் ஆரம்பமாகியது.  இப்போட்டி இன்றும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Views: 372
 0 0
 
By A Web Design

இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டொப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


தோட்டத் தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் நிறைவேறியதுஅடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நடைமுறையாகும் விதத்தில் எட்டப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்களின் நாட்சம்பளம் 515 ரூபாயிலிருந்து 620 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.தொழிலாளர்கள் உற்பத்தித்திறனையும் தொழிற்திறனையும் அதிகரிப்பதில் ஒத்துழைப்புடன் நடந்துகொள்வார்கள் என்ற புரிந்துணர்வின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் கூறியுள்ளது.அதன்படி, 25 வேலைநாட்கள் கொண்ட ஒரு மாதத்தில் தொழிலாளி ஒருவரின் வருகை 75 வீதத்தை தாண்டினால் அவருக்கு 15,500 ரூபாய் சம்பளமாகக் கிடைக்கும் என்று இருதரப்பும் இணங்கியுள்ளது.
நாளொன்றுக்கு தேவையான தேயிலை நிறையை விட மேலதிகமாக பறிக்கப்படும் தேயிலைக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 3 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளது.இதேவேளை, இந்த கூட்டொப்பந்தம் ரகசியமான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை கணக்கில் எடுக்கவில்லை என்றும் பேச்சுவார்த்தையில் பங்கெடுக்காத தொழிற்சங்கங்கள் விமர்சித்துள்ளன.
தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு இடமளிக்கக்கூடாது என்ற திட்டத்திலேயே பேச்சுவார்த்தையில் பங்கெடுக்கும் மூன்று தொழிற்சங்கங்களும் செயற்பட்டுள்ளதாக எதிர்ப்பு-தொழிற்சங்கங்கள் விமர்சிக்கின்றன.
ஆனால் அந்தக் குற்றச்சாட்டுக்களை இதொகா உள்ளிட்ட மூன்று தொழிற்சங்கங்களும் மறுக்கின்றன.

41 பயணிகள் பலியான சம்பவ வழக்கில் ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் மரண தண்டனை

இலங்கையில் குருநாகலில் பஸ் ஒன்று ரயிலுடன் மோதி 41 பயணிகள் பலியான சம்பவ வழக்கில் பஸ்ஸின் ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் குருநாகல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.
2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி குருநாகல் மாவட்டம் அளவ்வவில் யான்கல்மோதர என்னும் இடத்தில் உள்ள ரயில் கடவையில் பஸ் சென்றதில் ஏற்பட்ட விபத்தில் 41 பயணிகள் கொல்லப்பட்டார்கள்.
அந்த விபத்து குறித்த வழக்கிலேயே அந்த பஸ்ஸின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோர் மீது குருநாகல் உயர்நீதிமன்றம் குற்றங்கண்டிருக்கிறது.
நீண்ட நாட்களாக தொடர்ந்த இந்த வழக்கில் இருவருக்கும் மரண தண்டனையும், அதற்கு மேலதிகமாக 270 வருடங்கள் சிறைத்தண்டனையும் தலா ஒரு லட்சத்து முப்பத்தைந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

vendredi 5 avril 2013

கிளிநொச்சியில் உள்ள பளை எனுமிடத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பில் சமாதான பல்கலைக்கழகம்

சர்வதேச சமாதான பல்கலைக்கழகமொன்று வட மாகாணத்தில் ஸ்தாபிக்கப்படுவதற்கான சகல ஏற்பாடுகளையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி செயலக சமூக அபிவிருத்தி திட்ட பணிப்பாளர் கலாநிதி நந்தன விஜேசிங்ஹ தெரிவித்துள்ளார்.

உத்தேச சர்வதேச சமாதான பல்கலைக்கழகம் சுமார் 50 ஏக்கர் பரப்பில் கிளிநொச்சியில் உள்ள பளை எனுமிடத்தில் அமைக்கப்படவுள்ளதுடன் இதற்கான நிதி உதவியை இலங்கையில் சமாதானத்தில் அக்கறையுள்ள உலக நாடுகளும், புலம்பெயர் நன்கொடையாளர்களும் வழங்கவுள்ளனர் என அவர் குறிப்பிட்டதுடன்,

இப்பல்கலைக்கழகத்தில் ஆறு பீடங்களும், பட்டப்பின்படிப்பு வசதிகளும், க. பொ. த. (சா/த), க. பொ. த (உ/த) பயின்றவர்களுக்கான சான்றிதழ் கற்கைநெறிகளும், தெற்காசிய நாடுகளின் மாணவர்களும், சார்க் நாடுகளின் மாணவர்களும் இப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை முறியடித்து உலகிற்கு முன்மாதிரியாக இருந்துவரும் நமது நாட்டில் சர்வதேச சமாதான பல்கலைக்கழகம் அமைய வேண்டும் கடந்த முப்பது வருட யுத்தம் காரணமாக இனங்களுக்கிடையே ஏற்பட்டிருந்த முரண்பாடுகளைக்களைந்து எல்லோரும் இலங்கையர் என்ற எண்ணக் கருவையும், இளைஞர்களின் அபிலாசைகளை புரிந்துகொள்ளும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் ஜனாதிபதி சமூக அபிவிருத்தித் திட்டம் முக்கிய பங்களித்து வருகிறது.

இச்சமூக அபிவிருத்தித் திட்டத்தில் இணைந்துகொள்வதில் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கிராமப்புற இளைஞர்கள், முன்னாள் போராளிகள் என பல்வேறு தரப்பினர் ஆர்வம் காட்டுவதாக குறிப்பிட்டார்.

கடவுளின் எதிர்ப்புப் படை தலைவரை பிடித்து கொடுத்தால் ரூ.27 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு

Jeseph keniஅமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் 'போர்க்குற்ற பரிசுத்தொகை திட்டத்தில்' புதிதாக உகாண்டா நாட்டைச் சேர்ந்த கிளர்ச்சி குழுவின் தலைவர் ஜோசப் கெனியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. அவரை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 27 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குழுவைச் சேர்ந்த 3 பேரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஜோசப் கெனி உகாண்டாவில் கடவுளின் எதிர்ப்புப் படை (லார்ட்ஸ் ரெசிஸ்டன்ஸ் ஆர்மி)  என்ற கிளர்ச்சிக் குழுவை அமைத்து அரசுக்கு எதிராக பல தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கெனியின் தீவிரவாத நடவடிக்கைகள் 4 நாடுகளில் பரவி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் மீது குழந்தை கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்கள் சாட்டப்பட்டு, உலக அளவில் தேடப்பட்டு வந்தார். இவர் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டின் காடுகளில் மறைந்திருப்பதாகக் கூறி அமெரிக்கா மற்றும் உகாண்டா அரசு தேடுதல் வேட்டையை நடத்தி வந்தது. ஆனால் தற்போது மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் நடந்து வந்த உள்நாட்டு போர்களில் கிளர்ச்சியாளர்கள் அந்நாட்டு தலைநகரை கைப்பற்றினர். இதனால் அமெரிக்கா தேடுதல் வேட்டையை நிறுத்தி விட்டு, இந்த பரிசு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

குற்றம் செய்தவர்கள் தப்பிப் பிழைத்துக் கொள்வதற்கான ஒரு இடமாக இலங்கை


இலங்கையில் அண்மைக் காலங்களில் நடைபெற்று வரும் சம்பவங்களை பார்க்கும் போது நாட்டில் சட்டம் பாரபட்சமின்றி பரிபாலிக்கப்படுகிறா என்று எண்ணத் தோன்றுகிறது என்று நீதியமைச்சர் ரவூஃப் ஹக்கீம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அண்மையில் கொழும்பின் பிறநகர் பகுதியான பெப்லியானவில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான கடை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.
அந்தச் சம்பவத்தில் கைதான 14 பேரும், கடையின் உரிமையாளர் தமது புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டார் என்பதன் அடிப்படையில், நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது விசனத்துரியது என்பது மட்டுமல்லால் அதன் பின்னணியில் சந்தேகங்கள் இருக்கின்றன எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதியமைச்சருமான ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
இப்படியான நடவடிக்கைகள் மக்களுக்கு சட்டத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை போக்க வழி செய்துவிடும் எனவும் அவர் கூறுகிறார்.
இலங்கையில் காவி உடை தரித்தால் எதையுமே செய்து விடலாம் என்கிற ஒரு அசிங்கமான கலாச்சாரம் இருந்து வருகிறது எனவும் கூறும் அவர், அது கண்டிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
குற்றம் செய்தவர்கள் தப்பிப் பிழைத்துக் கொள்வதற்கான ஒரு இடமாக இலங்கை கணிக்கப்பட்டு சர்வதேச சமூகத்தின் நல்லெண்ணத்தை இழக்க வேண்டிய ஆபத்தும் வரலாம் எனவும் நாட்டின் நீதியமைச்சரான ரவூஃப் ஹக்கீம் கூறுகிறார்.
வெள்ளிக்கிழமை(5.4.13) ஜனாதிபதி தலைமையில் கட்சித் தலைவர்களின் சந்திப்பு ஒன்று இடம்பெறுகிறது என்றும், அதில் பல விஷயங்கள் விவாதிக்கப்படும் எனவும் அவர் மேலும்

நோய்களைக் கண்டறிய முடியும் மூச்சுக்காற்று மூலம்


ஒரு மனிதரின் மூச்சுக்காற்றை பரிசோதனை செய்வதன் மூலம் அவருக்கு என்ன நோய் இருக்கிறது என்பதை அறிய முடியும் என ஸ்விட்சர்லாந்து நாட்டின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மூச்சு வெளியேறும் போது, அதிலிருந்து வெளிவரும் இராசயனப் பொருட்களை ஆய்வு செய்த, ஜூரிக்கிலுள்ள ஸ்விஸ் ஃபெடரல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் ஆய்வாளர்கள், மூச்சுக்காற்றிலிருக்கும் பொருட்கள் ஒவ்வொரு தனி நபருக்கு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும் எனவும், அது காலத்துடன் மாறாது எனவும் கண்டறிந்துள்ளனர்.
இனிவரும் காலங்களில் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகளுக்கு பதிலாக, மூச்சுக்காற்று பரிசோதனை செய்தாலே போதும் என்கிற நிலை உருவாகக் கூடும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அவ்வகையில், விளையாட்டுப் போட்டியில் பங்குபெறுபவர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியுள்ளர்களா என்று பார்க்கவோ, அல்லது ஒரு நோயாளிக்கு எந்த அளவுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட வேண்டும் என்பதை கணிக்கவோ மூச்சுகாற்று பரிசோதனை செய்தாலே போதும் எனும் நிலை ஏற்படக் கூடும்.
மூச்சுக்காற்றை பரிசோதனை செய்வதன் மூலம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடலியல் தன்மைக்கேற்ப, தனிப்பட்ட முறையில் மருத்துவ முறைகளை வடிவமைக்க முடியும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்

jeudi 4 avril 2013

சீன தளங்கள் அமைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்ற நிலையில் சீன பாதுகாப்பு துறை இலங்கை பயணம்


சீன நாட்டின் பிரதிப்பாதுகாப்புச் செயலர் செகுயு கியுக் தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். கொழும்பிலிருந்து பலாலிக்கு விமானப்படை விமான மூலம் இன்று சென்ற சீன பாதுகாப்பு துறை குழுவினர் பின்னர் பலாலியில் இருந்து விமானப்படை வானூர்த்தி மூலம் இன்று காலை யாழ்.நகரினை சென்றடைந்தனர்.
சீன பிரதிப்பாதுகாப்புச் செயலாளர் குழுவினரை 512 வது படைப்பிரிவின் அதிகாரிகள் வரவேற்றனர். அதன்பின்னர் சீன பிரதிப்பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான குழவினர் யாழ். கோட்டையைம்  பார்வையிட்டனர்.
பின்னர் குழுவினர் வானூர்தி மூலம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கும் அவர்கள் விஜயம் செய்திருந்ததாக கூறப்படுகின்ற போதும் அத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டு இக்கவில்லை. அக்குழுவில் பாதுகாப்பு விவகார அதிகாரிகளுடன் சீன உளவுக்கட்டமைப்பு அதிகாரிகளும் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகின்றது.
தலைமன்னாரினை அண்டிய திட்டிப்பகுதிகளில் குறிப்பாக தமிழகத்தையண்டி சீன தளங்கள் அமைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்ற நிலையில் இக்குழுவினரது பயணம் அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுவிஸ் விமானிகள் சாதனை.

அமெரிக்காவில் வாழும் சுவிட்சர்லாந்து நாட்டு விமானிகள் இருவர் சூரிய சக்தியினால் இயங்கும் ஒரு விமானத்தை வடிவமைத்துள்ளனர். 10 வருட கடின உழைப்பிற்குப் பின் இந்த விமானத்தை வடிவமைத்துள்ளதாக ஆண்ட்ரே போர்ச்பெர்க், பெட்ராண்ட் பிக்கார்ட் என்ற அந்த இரு விமானிகளும் தெரிவித்தனர். 

சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் சக்தியினால் இந்த விமானம் இயக்கப்படுவதால், இதற்கு எரிபொருள் தேவையில்லை. "மே 1-ம் தேதி மாப்போட்பீல்டில் தொடங்கும் இதன் பயணம் தொடங்குகிறது. பல நாடுகளை கடந்து, ஜூலை மாத இறுதியில் இந்த விமானம் நியூயார்க் நகரை அடையும்" என்று அந்த விமானிகள் தெரிவித்தனர்.

இதில் ஒரு விமானி மட்டுமே பயணம் செய்வார். ஆனால் இது பல செய்திகளை சுமந்து செல்கிறது என்றும் அந்த விமானிகள் கூறினர். முற்றிலும் சூரிய சக்தியினால் இயங்கும் முதல் விமானம் இதுவாகும்.

3 என்ஜினீயர்கள் ஒன்றிணைந்து பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாக்க பெண்களுக்கு நவீன உள்ளாடை

பணியிடங்களில், பொது இடங்களில் மட்டுமல்லாது பஸ், ரயில் போன்ற வாகனங்களிலும் கூட பெண்கள் மீதான
பாலியல் வன்முறைகள் பெருகிவருகின்றன நிலையில் பாலியல் வன்முறையில் இருந்து தப்பிக்க உதவும் பெண்களுக்கான நவீன உள்ளாடையை சென்னையை சேர்ந்த பெண் பொறியியலாளர் உருவாக்கியிருக்கியுள்ளார்.

பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவோருக்கான தண்டனையை அதிகரிக்க சட்டம் கொண்டு வந்தபோதும், இத்தகைய குற்றங்கள் நடக்காத நாளே இல்லை. இந்த நிலையில், பெண்கள் பாலியல் வன்முறையில் சிக்காமல் தங்களைக் காத்துக்கொள்கிற வகையில் அதிநவீன பாதுகாப்பு அம்சங்களைக்கொண்ட உள்ளாடையை 3 என்ஜினீயர்கள் ஒன்றிணைந்து வடிவமைத்து உள்ளனர்.

இந்த உள்ளாடை ஜி.பி.எஸ். என்னும் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம், ஜி.எஸ்.எம். என்று அழைக்கப்படும் குளோபல் சிஸ்டம் பார் மொபைல் கொம்யூனி கேசன்ஸ், பிரசர் சென்சார் கருவிகளை இணைத்து தயாரிக்கப் பட்டுள்ளது இதற்கு சொசைட்டி ஹார்ன ஸிங் எக்யூப்மென்ட் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதில் இடம் பெற்றுள்ள பிரசர் சென்சார் கருவி பெண்ணுக்கு பாலியல் வன்முறை நடக்கும் வாய்ப்பு உள்ளபோது, இதுபற்றி அவரது பெற்றோருக்கு, பொலிசுக்கு 3 ஆயிரத்து 800 கிலோவாட் அளவிலான அதிர்வலைகளை எஸ்.எம்.எஸ். அலர்ட்டுகளாக அனுப்பி அவர்களை உஷர்படுத்தி விடும் என்று இந்த நவீன உள்ளாடை தயாரிப்பில் பங்கு பெற்ற என் ஜினீயர் மனிஷ மோகன் கூறியுள்ளார்.

ஒரு முறையல்ல 82 முறை இது அதிர்வலைகளை வெளிப்படுத்துகிற சக்திவாய்ந்த தாக இருக்கும் எனவே வன்முறைக்கு ஆளாக்க முயற்சிக்கிறபோது, இதில் உள்ள பிரசர் சென்சார்கள் இயங்கத்தொடங்கி விடும். இதனால் குற்றவாளியான நபரை இது கடுமையான அதிர்வலைகள் மூலம் தாக்குவதுடன் அவசர பொலிஸ் எண் 100 போன்றவற்றுக்கும், அந்தப் பெண்ணின் பெற்றோருக்கும் உடனடியாக குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி வைக்கும் என்றார்.

இந்த மனிஷா மோகன் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். இவர் தனது சகபொறியியலாளர்களான ரிம்பி திரிபாதி, நீலாத்ரி பாசு பால் ஆகியோருடன் சேர்ந்துதான் இந்த உள்ளாடையை உருவாக்கியுள்ளார். இது இந்த மாதம் விற்பனைக்கு சந்தைக்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கினறள.

தேசியம் தொடர்பாகப் பேசுகின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் குப்பியா போட்டு பார்க்க விருப்பம்!

தேர்தல் காலங்களில் மட்டும் உரிமைகள், தேசியம் தொடர்பாகப் பேசுகின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இலங்கையில் தொடர்ந்தும் குழப்பம் நிலவுவதையே விரும்புகின்றனர். இதற்கு இடம்கொடுக்காது நாம் அனைவரும் ஒன்றுபட்ட சக்தியாக உருவெடுக்க வேண்டும் என தேசிய வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

ஜேனிவா, இந்தியாவில் இருப்பவர்களும் ஜெனிவாவிற்குச் சென்று வருபவர்களும் எமது பிள்ளைகளின் கழுத்துகளில் சயனைட் குப்பிகள் இருப்பதையே விரும்புகிறார்கள். இதனால் எமது பிள்ளைகளின் எதிர்காலமே பாதிப்படைகிறது எனவே உண்மையாகவே தமிழ் மக்கள் மீது அன்பும் பாசமும் இருந்திருந்தால் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இந்த ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருக்க வேண்டும் என யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் அமைந்துள்ள ஐந்துமாடிக் கட்டிடத் தொகுதியை மீள் புனரமைக்கும் பணிகளைத் தொடக்கி வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்

வரிஏய்ப்பு!கோடிக்கணக்கில் 612 இந்திய தொழில் அதிபர்கள்

காங்கிரஸ் எம்பி உட்பட 612 இந்திய தொழில் அதிபர்கள் கோடிக்கணக்கில் வரிஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
Ex-Financials payouts set to rise significantlyசர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், குட்டி தீவுகள் உட்பட வரிச்சலுகை அளிக்கும் நாடுகளில் முதலீடு செய்துள்ள ஒரு லட்சத்து 20 ஆயிரம் நிறுவனங்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. 170 நாட்டினரின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 612 பேர் இடம் பெற்றுள்ளனர். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விவேகானந் கடம், மாநிலங்களவை உறுப்பினர் விஜய் மல்லையா மற்றும் ரவிகாந்த் ரூயா உள்ளிட்ட தொழில்அதிபர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ரிசர்வ் வங்கி மற்றும் வெளிநாட்டு முதலீட்டிற்கான விதிகளை மீறி உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் மிகப்பெரிய மோசடி அம்பலமாகி இருப்பதாக கூறியுள்ள பாஜக, கருப்பு பணம் பதுக்குபவர்களை மத்திய அரசு பாதுகாக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் பிரகாஷ் ஜவடேகர், கருப்பு பணம் தொடர்பாக பட்ஜெட்டில் குறிப்பிடக்கூட மத்திய அரசு தவறிவிட்டது. கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதற்காக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது வரி ஏற்ப்பு பற்றி புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி காங்கிரஸ் எம்பியின் நிறுவனத்திற்கும் கருப்பு பண பதுக்கலில் தொடர்பு உள்ளது. இந்த முக்கிய பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளோம். உரிய விசாரணை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றார்.

mercredi 3 avril 2013

சென்னையில் மலிவு விலை உணவகங்களை சென்னை மாநகராட்சி அமைத்து உள்ளது;மேலும் 127 இடங்களில்

ஏழைகளின் நல்வாழ்வுக்காய் 127 இடங்களில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் “அம்மா” உணவகம்முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில் சென்னையில் மலிவு விலை உணவகங்களை சென்னை மாநகராட்சி அமைத்து உள்ளது. இந்த மலிவு விலை உணவகங்களில் ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், 3 ரூபாய்க்கு தயிர் சாதம் விற்கப்படுகிறது.
சாந்தோமில் மலிவு விலை உணவகத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் திகதி திறந்து வைத்தார். இந்த மலிவு விலை உணவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டது. குறைந்த விலையில் தரமான உணவு கிடைப்பதால் மக்கள் வரிசையில் நின்று உணவை வாங்கி சாப்பிடுகின்றனர். மாநகராட்சி சார்பில் 3 கட்டங்களாக இது வரை 73 உணவகங்களை திறந்து செயல்பட்டு வருகிறது. இந்த மலிவு விலை உணவகத்துக்கு ´அம்மா உணவகம்´ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2400-க்கும் மேற்பட்ட சுயஉதவி குழு பெண்கள் இங்கு உணவு தயாரிக்கிறார்கள். 100 கிராம் எடையில் இட்லியும், 350 கிராம் எடையில் தயிர் சாதமும், சாம்பார் சாதமும் தயாரித்து வழங்கப்படுகிறது. இது வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இட்லி விற்பனையாகி உள்ளது. 5 லட்சம் பேர் சாம்பார் சாதமும், 3 லட்சம் பேர் தயிர் சாதத்தையும் வாங்கி ருசித்து உள்ளனர். சாம்பார் சாதம் மிகவும் நன்றாக இருப்பதாக சாப்பிட்டவர்கள் கூறினார்கள்.
எதிர்பார்த்ததை விட பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதால் வார்டுக்கு ஒன்று வீதம் 200 வார்டுகளிலும் அம்மா உணவகம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி தற்போது உள்ள இடங்கள் தவிர மேலும் 127 இடங்களில் `அம்மா உணவகத்தை´ அமைக்க இடங்களை தேர்வு செய்து உள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் 127 மலிவு விலை உணவகங்களை நாளை திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

இலங்கை அரசாங்கம் இந்திய மத்திய அரசாங்கத்துடன் மட்டுமே தொடர்புகளைப் பேணும்;


சென்னையில் சினிமா நட்சத்திரங்களினால் இலங்கை அரசாங்கத்திற்கு  எதிராக நடத்திய போராட்டம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
 
சினிமா நட்சத்திரங்கள் நடத்திய போராட்டம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குக - வெளிவிவகார அமைச்சுதென் இந்தியாவின் புகழ் பூத்த சினிமா நட்சத்திரங்களாக போற்றப்படும் ரஜனிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், விஜய், அஜித், போன்ற முன்னணி நட்சத்திரங்கள் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.இந்தப் போராட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த ஏழு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
 
இந்த போராட்டம் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு இந்தியாவிற்கான இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயத்திற்கு, இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
 
இலங்கை அரசாங்கம் இந்திய மத்திய அரசாங்கத்துடன் மட்டுமே தொடர்புகளைப் பேணும் எனவும், தமிழகத்தில் நடைபெற்று வரும் ஒவ்வொரு போராட்டத்திற்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனவாத அல்லது மதவாத உணர்வுகளைத் தூண்டக் கூடிய செயற்பாடுகளுக்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பு வழங்கப்படமாட்டாது ;

இலங்கையில் மட்டுமே பூரண மதச்சுதந்திரம் காணப்படுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். எமது நாடு ஓர் ஜனநாயக நாடு எனவும், சகலருக்கும் பூரண மதச் சுதந்திரம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த மதத்தை பாதுகாப்பதன் மூலம் மட்டுமன்றி பௌத்தர்களின் நடவடிக்கைகள் ஏனைய மதத்தவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தக் காத்திருப்போருக்கு விரலை நீட்ட அனுமதிக்கக்கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாம் செய்யும் அனைத்து நடவடிக் கைகளின் மூலமும் சிறந்த முன்னுதாரணங்களை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மாத்தறையில் நடை பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு மிகவும் பொருத்தமானது எதுவென்பதனை அறிந்து அதன்படியே பௌத்த பிக்குகள் கடமையாற்றி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை அழிவுகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் பௌத்த பிக்குகள் செயற்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தவறிழைத்தால் அதனை மஹா சங்கத்தினர் சுட்டிக்காட்ட வேண்டும் அந்தப் பொறுப்பு இன்றைய பௌத்த பிக்குகளுக்கும் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் என்ற ரீதியில் நாம் அதனை ஏற்றுக்கொள்ள எப்போதும் விரும்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். இனவாத அல்லது மதவாத உணர்வுகளைத் தூண்டக் கூடிய செயற்பாடுகளுக்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பு வழங்கப்படமாட்டாது எனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணிகள் தொடர்பான மோசடிகள் இடம்பெறுவதற்கு பழைய சட்டங்களும் காரணமாகின்றன ;மஹிந்த ராஜபக்ஷ

Land Deverlepmentகாணிகள் தொடர்பான பழைமை யான சட்ட திட்டங்கள் இல்லாதொழிக்கப் பட்டு காலத்துக்கு பொரு த்தமான சட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர் கள் காணியமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரி களுக்கு பணிப்புரை விடுத்தார். தற்போது நடைமுறை யிலுள்ள காணிச் சட்டங்கள் மற்றும் சரத்துக்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கேட் டுக் கொண்ட ஜனாதிபதி, விரைவாக இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதுடன் காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டார். அத்துடன் பல்வேறு காரணங்களுக்காக மக்களிடமிருந்து பெறப்பட்ட காணி களுக்கான நட்டஈடு வழங்கும் செயற் பாடுகளை விரைவுபடுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளை கேட் டுக் கொண்டார்.


mardi 2 avril 2013

தப்பான வழியில் பணம் சம்பாதிக்க கிளிநொச்சியை தளமாகப் பாவிப்பது பரிதாபத்திற்குரிய விடயமாகும்.;வீ. ஆனந்தசங்கரி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சிக் காரியாலத்தில் ஒரு குழுவினர் தேசியக் கொடியைத் தாங்கியவண்ணம் மிகவும் வெட்கப்படக்கூடிய முறையில் பொலிசாரின் முன்னிலையில் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களின் ஆதரவாளர்கள் சிலரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை தாக்கியுள்ளனர். இதில் வேடிக்கை என்னவெனில் இக்குழுவினரின் கல்வீச்சுத் தாக்குதலுக்கு கிளிநொச்சி பிரதேச சபை தலைவர், உபதலைவர் உட்பட இருபது பேருக்குமேல் காயமடைந்தும் அவர்களில் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் உள்ள போது பொது மக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட மூவரை எதுவித விசாரணையுமன்றி விடுதலை செய்த பொலிசாரின் நடவடிக்கை அரசாங்கத்தின் கௌரவத்தை மிகக் கீழ்மட்டத்திற்கு இறக்கிவிட்டிருக்கிறது. இச்சம்பவத்தின் பின்னணியில் உயர்பீடத்திலுள்ள யாரோ ஒருவரின் அங்கீகாரம் இருந்துள்ளது என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.  பயங்கரக் குற்றவாளிகள் உட்பட  கண்டவர் நின்றவர் எல்லாம் பலவிதத்திலும் தப்பான வழியில் பணம் சம்பாதிக்க கிளிநொச்சியை தளமாகப் பாவிப்பது பரிதாபத்திற்குரிய விடயமாகும். பல ஆண்டுகாலமாக பயத்துடனும் பீதியுடனும் வாழ்ந்த மக்கள் நிம்மதியடையாமல் தொடர்ந்தும் கூடுதலான பயப்பீதியுடன் வாழ்கிறார்கள். இந்தப் போக்கை அரசு உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்காதுபோனால் கிளிநொச்சி மட்டுமன்றி நாடு முழுவதும் பெரும் இயற்கை அனர்த்தத்தை எதிர்நோக்க வேண்டிவரும். ஆயுதத்தின் சக்தி ஒருபுறம், அடியாட்களின் தொல்லை மறுபுறம் இருக்கும் போது அகிம்சைக்கு கட்டுப்பட்டவர்களாகிய நாங்கள் ஆண்டவனுக்கு முறையிடுவதைவிட வேறென்ன செய்யலாம்? அரசியல்வாதியாக இருந்தாலும்சரி இராணுவத்தினராக இருந்தாலும்சரி நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டு செயற்படாமல் எல்லைமீறி செயற்பட்டு தெய்வங்களின் கடும் சினத்திற்கு ஆளாக வேண்டாம் என மீண்டும் மீண்டும் எச்சரிக்கின்றேன். இவர்கள் அனைவரும் சேர்ந்து போதிநாயகருக்கும் அவருடைய போதனைகளுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்த வேண்டாம் என்றும், சிறந்த புத்தரின் வழியில் வாழ்ந்து  மக்களை வழிநடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.
வீ. ஆனந்தசங்கரி
செயலாளர் நாயகம்
தமிழர் விடுதலைக் கூட்டணி

அனுராதபுரத்தில் இருந்த பல தமிழ் குடும்பங்கள் பாதுகாப்புத்தேடி நாட்டின் வேறு பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். அதனால் அங்கு இயங்கிக் கொண்டிருந்த விவேகானந்தா தமிழ் வித்தியாலயம் மூடப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டது.;தோழர் மணியம் எழுதும் தொடரில் இருந்து


Anuradhapuramசில நாட்கள் ஓடிக் கழிந்தன. என்றாலும் நானும் நண்பர் சிதம்பரநாதனும் தினசரி பம்பலப்பிட்டி சென்று யாராவது புதிதாகப் பயண ஏற்பாடுகள் ஏதாவது செய்கிறார்களா என ஆராய்ந்து வந்தோம். எப்படியும் யாழ்ப்பாணம் திரும்பிவிட வேண்டும் என்பதில் எம்மைப் போன்ற பலர் தீராத ஆவல் கொண்டிருந்தனர். குடும்பங்களைப் பிரிந்து இருந்ததில், அவர்கள் கவலையும் மன உளைச்சலும் கொண்டிருந்தனர். மறுபக்கத்தில் பணம் கொடுத்து விடுதிகளில் தங்கியிருந்ததால், பணம் வேறு செலவாகிக் கொண்டு இருந்தது. எனவே பலரும் பம்பலப்பிட்டி பிள்ளையார் கோவிலில் கூடுவது நாளாந்த நிகழ்ச்சியாக இருந்தது.

அதேநேரத்தில் யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் அரச படைகளுக்கும் புலிகளுக்கும் நடைபெற்று வந்த யுத்தம் சம்பந்தமாக வந்த அரசல் புரசலான செய்திகளும் எமக்குக் கவலை அளிப்பதாகவே இருந்தது. இதற்கிடையே எம்மைப் போன்றவர்களில் ஒருசிலர் தமிழ்நாட்டிலிருந்து படகுகள் மூலம் யாழ்ப்பாணம் செல்வதற்காக விமானம் மூலம் இந்தியா சென்றதாகவும் செய்திகள் அடிபட்டன. தரை மார்க்கமாகவோ, கடல் மார்க்கமாகவோ அல்லது ஆகாய மார்க்கமாகவோ எமக்கு ஒரு ஒழுங்கான பயண ஒழுங்கு அமையாவிடின், நாமும் இந்தியா சென்று யாழ்ப்பாணம் செல்லும் வழியைத்தான் நாடவேண்டி வரும் என எண்ணினோம்.

நிலைமை இவ்வாறு போய்க்கொண்டிருக்கையில், இருளில் தோன்றிய ஒர் ஒளிக்கீற்றாக அரசாங்கமே எம்மை யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக ஒரு செய்தி வந்தது. அது எமக்கு சற்று ஆறுதலைத் தந்தது.

இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு விடயம், எமது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பற்ற நடத்தை. அப்போது ஐக்கிய தேசியக் கட்சி ஆர்.பிரேமதாச தலைமையில் ஆட்சியில் இருந்தது. அந்த அரசாங்கத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கே.டபிள்யூ.தேவநாயகம், செல்லையா இராசதுரை ஆகியோரும், வவுனியா பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவான திருமதி இராஜமனோகரி புலேந்திரன் அவர்களும் அமைச்சர்களாக இருந்தனர்.

அதேபோல தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பலர் பாராளுமன்ற புருஸ லட்சணத்துடன் பவனி வந்து கொண்டு இருந்தனர்.

ஆனால் இந்த ஐ.தே.க தமிழ் அமைச்சர்களோ அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்களோ யுத்தம் நடைபெற்று வந்த பகுதி மக்களை ஏறெடுத்தும் பார்க்காதது மட்டுமின்றி, எம்மைப் போல கொழும்புக்கோ, தென்னிலங்கைக்கோ வந்து ஊர் திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டிருந்தவர்கள் பற்றியும்கூட எவ்வித கரிசனையும் காட்டவில்லை. குறைந்த பட்சம் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஒர் அனுதாப வார்த்தையாவது சொல்லவில்லை. தமிழர் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழநாட்டு அரசாங்கம் கொடுத்த வாடி வீடுகளில் தமது குடும்பங்களைப் பாதுகாப்பாகவும் சொகுசாகவும் தங்க வைத்துவிட்டு, சென்னையில் ஒரு காலும் கொழும்பில் ஒரு காலுமாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

எமது அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் தமக்கும் ஒரு தொடர்பும் இல்லாததுபோல வாழ்ந்து கொண்டிருக்க, எம்மைப் போல கொழும்பில் சிக்கியிருந்த சில யாழ்ப்பாண வர்த்தகர்களின் முயற்சிகளினாலேயே எமது பிரயாண ஒழுங்கைச் செய்வதற்கு அரசாங்கம் முன்வந்ததாக அறிந்தேன். அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிழக்குப் பக்க எல்லையில் வசித்து வந்த ;நியூற்ரோன் எலக்றிக்கல்’ நிறுவனத்தின் உரிமையாளரான சிவலோகநாதன் அவர்கள். திருநெல்வேலியில் சிவன் வீதியில் இருந்த அவரது இன்னொரு வீட்டிற்கு அருகாமையிலேயே நான் முன்பு வசித்ததால் அவருடன் எனக்குச் சிறிது பழக்கமும் இருந்தது.

அரசாங்கம் எம்மை பொலிஸ் பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் அனுப்பி வைப்பது என்று அறிவித்தவுடன், அவ்வாறு செல்ல விரும்புபவர்களை பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் வைத்துப் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பமானது. நானும், நண்பர் சிதம்பரநாதனும், வேறு பலரும் உற்சாகத்துடன் பதிவுகளை மேற்கொண்டோம்.

அடுத்த இரண்டொரு தினங்களில் எமது பயணம் பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்திலிருந்து ஆரம்பமானது. மொத்தமாக 6 பஸ்களில் நாம் ஏற்றப்பட்டோம். எமக்கு பாதுகாப்பாக ஒரு உதவி பொலிஸ் இன்ஸ்பெக்ரர் தலைமையில் 6 பொலிஸார் வந்தனர். அதாவது 6 பஸ்கள். 6 பொலிசார்! அதாவது ஒரு பஸ்சிற்கு ஒரு பொலிஸகாரர் பாதுகாப்பு!! பயங்கர யுத்தம் நடைபெறும் ஒரு நாட்டில், பல்லாயிரக்கணக்கான பொலிசார் உள்ள ஒரு நாட்டில், 6 பஸ்களுக்கு 6 பொலிசார் பாதுகாப்பு என்றால், இதை உலகத்தின் எட்டாவது அதிசயமாக பதிவு செய்வதுதான் பொருத்தமாக இருக்கும்.ctb bus

எப்படியோ எமது பயணம் நண்பகல் அளவில் ஆரம்பமானது. பொலிசார் தனியான வாகனத்தில் வரவில்லை. அவர்கள் ஒவ்வொரு பஸ்சிலும் ஒவ்வொருவராக வந்தனர். எமது வாகனங்கள் இடையில் நிறுத்தப்படாமல் மாலை மங்கும் நேரத்தில் ஏறத்தாழ எமது பயணத்தின் அரைவாசித் தூரமான அனுராதபுர நகரை அடைந்தது. இடையில் எங்காவது தனியான ஒரு இடத்தில் தேநீர் அருந்தவும், இயற்கை உபாதைகளைக் கழிக்கவும் வாகனங்களை நிறுத்தும்படி பயணிகள் வேண்டியும் வாகனங்கள் நிறுத்தப்படவில்லை. அதற்குக் காரணம் கேட்டபோது, இடையில் எங்கும் பஸ்களை நிறுத்தக்கூடாது என்பது மேலிடத்து உத்தரவு எனப் பதில் வந்தது.

அனுராதபுரத்தில் சனசந்தடிமிக்க ஒரு வீதியில் உள்ள தேநீர்க்கடைக்கு முன்னால் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. களைத்துச் சோர்ந்துபோய் இருந்த மக்கள் முண்டியடித்துக்கொண்டு இயற்கை உபாதைகளைக் கழிக்கவும், தேநீர் குடிக்கவும் கடைக்குள் பாய்ந்து சென்றனர். எம்மில் சிலர் அவசரப்படாமல் நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டிருந்தோம். எனக்கு முன்னரே தெரிந்திருந்த பொன்னம்பலம் என்ற ஓய்வுபெற்ற ஒரு தமிழ் பொலிஸ் இன்ஸ்பெக்ரர் ஒருவரின் மகனும் எம்முடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு தமிழ் - சிங்களம் - ஆங்கிலம் என மும்மொழிகளும் தெரியுமாகையால், அவர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பொலிஸ்காரர்களினதும், பஸ் சாரதிகளினதும் சிங்கள மொழியிலான உரையாடல்களை ஏதோ ஒரு சந்தேகத்துடன் அவதானித்துக்கொண்டு வந்தார். அதேநேரத்தில் அவர்களுடன் நட்பறவுடன் உரையாடிக்கொண்டும் வந்தார்.

நாம் அரசாங்க ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்கிறோம் என்ற தகவல் அதற்கிடையில் அனுராதபுரம் நகரம் முழுவதும் பரவிவிட்டதால், பெருமளவு மக்கள் நாம் தேநீர் குடித்துக் கொண்டிருந்த கடைக்கு முன்னால் குழுமத் தொடங்கிவிட்டனர். அந்தக் கூட்டத்தில் மதுபோதையில் இருந்த சில தெருச் சண்டியர்களும் இருந்ததை அவதானிக்க முடிந்தது. அவர்கள் சிங்கள மொழியில் ஏதேதோ சொல்லி எம்மைத் திட்டிக் கொண்டிருந்தனர். தமிழர், புலிகள், பிரபாகரன் என்ற வார்த்தைகள் மட்டும் எமக்குப் புரியும் சொற்களாக இருந்தன. அவற்றை வைத்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை ஓரளவு ஊகிக்க முடிந்தது.

நிலைமை மோசமாகலாம் என்று கண்ட உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்ரர் எல்லோரையும் உடனடியாக பஸ்சில் வந்து ஏறும்படி பணித்தார். எல்லோரும் ஏறிய பின்னர் பஸ்கள் சற்றுத் தள்ளியிருந்த அனுராதபுரம் கச்சேரியை அடைந்து தெருவோரத்தில் நிறுத்தப்பட்டன. பொலிஸ் இன்ஸ்பெக்ரர் இறங்கி கச்சேரிக்குள் சென்று, இரவு தனது வீட்டில் இருந்த அரச அதிபருடன் கதைத்துவிட்டு வந்தார்.

அவர் சொன்ன தகவலின்படி, அன்றிரவு எம்மை அங்குள்ள விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்திருப்பதாகவும், ஆனால் நாம் வந்த செய்தி அனுராதபுரம் எங்கும் பரவிவிட்டதால், இப்பொழுது அங்கு சென்று தங்குவது பாதுகாப்பானது அல்லவென்றும், எனவே யாழ்ப்பாணம் செல்வது போல பாசாங்கு காட்டி மதவாச்சி வரை சென்று, ஊர் அடங்கிய பின்னர் திரும்பி அனுராதபுரம் வந்து அந்தப் பாடசாலையில் தங்கும்படியும் அரசாங்க அதிபர் சொல்லியதாகக் கூறப்பட்டது.

அதன்படி எமது பஸ்கள் மதவாச்சி நோக்கிப் புறப்பட்டன. 15 மைல்கள் தூரத்தில் இருந்த மதவாச்சியை முன்னிரவு நேரம் எமது பஸ்கள் சென்றடைந்தன. 6 பஸ்களும் மதவாச்சி நகரை அடைந்ததும், அங்கு ஒரு பரபரப்பு ஏற்பட்டது. எமது மக்களில் சிலர் பஸ்சைவிட்டு இறங்கி காலாற நின்றனர். இதற்கிடையில் எமது வருகையை அறிந்து அங்கும் பலர் கூடத் தொடங்கினா. அவர்களும் சிங்களத்தில் ஏதோ சொல்லியவாறு கூச்சலிட ஆரம்பித்தனர். எமது பயணிகள் பயத்தில் ஓடி வந்து பஸ்களில் ஏறிக் கொண்டனர். பஸ்கள் புறப்பட ஆயத்தமான வேளையில் சில காடையர்கள் பஸ் மிதிபலகையில் ஏறி நின்று, உள்ளே நின்று கொண்டிருந்த  சில பயணிகளை வெளியே இழுத்தெடுக்க முயன்றனர். வாசலுக்கு அருகில் நின்ற என்னையும் ஒருவன் இழுக்க முயன்றான். நான் ஒருவாறு அவன் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டு பஸ்சின் நடுப்பகுதிக்குச் சென்று நின்று கொண்டேன்.
thugs
யாரையும் அவர்கள் கொண்டுபோக முடியவில்லை. பஸ்கள் மீண்டும் அனுராதபுர நகரை நோக்கிச் சென்றன. நள்ளிரவு அளவில் அங்கு சென்று அனுராதபுரப் பொலிசாரைத் தொடர்பு கொண்ட பின்னர், எமது பஸ்கள் விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தைச் சென்றடைந்தன. எம்மை இறக்கிவிட்டு பஸ்கள் அனுராதபுரம் இலங்கைப் போக்குவரத்துச் சபைச் சாலைக்குச் சென்றுவிட்டன.

அன்று இரவு முழுவதும் நாம் யாருமே தூங்கவில்லை. ஏனெனில் நாம் அங்கு தங்கியிருக்கிறோம் என்ற செய்தி எப்படியும் வெளியே தெரிந்திருக்கும். அதனால் இரவு நேரத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு எம்மை யாராவது காடையர் கூட்டம் தாக்க வரலாம் என எதிர்பார்த்தோம்.

அது ஒரு சிறிய பாடசாலை. அதிபர் காரியாலயமும் மாணவர் கற்கும் ஒரு மண்டபமும் இருந்ததாக ஞாபகம். நாம் எமது பாதுகாப்புக்காக அங்கிருந்த மேசைகள், கதிரைகள் எல்லாவற்றையும் தூக்கி கட்டிடத்தின் வாசல்களில் போட்டு யாரும் உள்ளே வராமல் தடை செய்தோம். இந்தப் பாதுகாப்பு தாக்க வருபவர்களுக்கு ஒரு ‘தூசி’ என்று தெரியும். சமயத்தில் ‘புல்லும் பல்லுக் குத்த உதவும்’ என்பதற்கிணங்கவும், ஒரு மனத் திருப்திக்காகவும் அவ்வாறு செய்தோம். அத்துடன் அங்கிருந்த உடைந்த நாற்காலிக் கால்கள், மேசைக் கால்கள் என்பவற்றையும் எடுத்து கைவசம் வைத்துக் கொண்டோம்.

பெருந்தொகையான காடையர்கள் பாரிய ஆயுதங்கள் சகிதம் வந்தால், எமது ‘மரக்கால ஆயுதங்களால்’ தாக்குப் பிடிக்க முடியாது என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் அவர்களது தாக்குதலில் அநியாயமாகச் சும்மா இறக்காது, இறுதிவரை போராடி ‘வீரமரணம்’ அடைவது மேன்மையானது அல்லவா? (அந்தக் காலத்தில் வீர மரணத்துக்கு அப்படி ஒரு மவுசு இருந்தது!)

நாம் எதிர்பார்த்தவாறு அன்றிரவு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. விடிந்ததும் எவ்வளவு விரைவாகப் புறப்பட முடியுமோ அவ்வளவு விரைவாகப் புறப்பட்டுவிட வேண்டும் என எம்மில் பலர் விரும்பினோம். அங்கிருந்த கிணற்றிலும், மலசல கூடத்திலும் காலைக் கடன்களை முடித்துவிட்டு புறப்படத் தயாரானோம். இதற்கிடையில் எம்முடன் அன்றிரவு அருகில் தங்கியிருந்த பொலிசார், அருகில் ஒரு தேநீர்க்கடை இருப்பதாகவும், விரும்பியவர்கள் அங்கு சென்று தேநீர் குடி;கலாம் எனவும் தெரிவித்தனர். அவர்களும் தேநீர் குடிக்க அங்கு சென்றனர். ஒரு கட்டத்தில் ஒரு பொலிஸ்கூட எமக்குக் காவல் இருக்காமல் அத்தனை பேரும் தேநீர் குடிக்கச் சென்றுவிட்டனர். ஆனால் பயம் காரணமாக எம்மில் எவரும் அந்தக் கடைக்குத் தேநீர் குடிக்கச் செல்லவில்லை.

நேரம் போய்க் கொண்டிருந்தது. நகரில் சன நடமாட்டம் மௌ;ள மௌ;ள ஆரம்பித்து, பின்னர் அதிகரிக்கத் தொடங்கியது. வீதியால் போவோர் வருவோர் எல்லோரும் நாம் தங்கியிருந்த பாடசாலைக்கு முன்னால் தரித்து நின்று எம்மை வேடிக்கை பார்த்துவிட்டுச் செல்லத் தொடங்கினர். சிலர் அங்கேயே நின்று கொண்டனர்.

இதற்கிடையில் பொழுது விடிந்ததும் அருகில் சில காட்சிகளை நாம் கண்டோம். ஒன்று எமது பாடசாலைக்கு எதிரில் வீதிக்கு அந்தப் பக்கமாக சைவ ஆலயம் ஒன்று இருப்பது தெரிந்தது. நல்ல வர்ணப் பூச்சு வேலைப்பாடுகளுடன் அழகாகக் காட்சி அளித்த அந்தக் கோவில், நீண்ட காலமாகப் பராமரிப்பின்றி மரங்களாலும் செடி கொடிகளாலும் மூடப்பட்டிருந்தது. இதுதான் அனுராதபுரம் கதிரேசன் கோவில் என எம்முடன் வந்தவர்களில் யாரோ ஒருவர் விளக்கம் சொன்னார். எமது மக்கள் அந்தக் கோவிலின் நிலையைக்கண்டு பெரிதம் கவலையுற்றனர். எம்மில் சிலருக்கு அந்தக் கோவிலின் அருகே சென்று பார்க்க வேண்டும் என ஆசையாக இருநந்தது. ஆனால் பயத்தால் அருகில் போகவில்லை.

இன்னொரு காட்சியாக நாம் தங்கியிருந்த விவேகானந்தா கல்லூரிக்கு அருகாமையில், சமாந்தரமாக ஒரு முஸ்லீம் பாடசாலை அமைந்திருப்பதைக் கண்டோம். அதன் பெயர் ‘அல்.அக்ஸா வித்தியாலயம்’ என ஞாபகம். அப்படியொரு பாடசாலை இருந்தது ஏதோ மனதுக்குச் சற்றுத் தெம்பாக இருந்தது.

இதற்கிடையில் நாமும், எம்முடன் துணைக்கு வந்த பொலிசாரும் புறப்படுவதற்குத் தயாராக இருந்த போதிலும், எமது பஸ்கள் வந்து சேர்வதாக இல்லை. அதேநேரத்தில்; எமது பாடசாலைக்கு முன்னால் கூடுவோரின் தொகை வரவர அதிகரித்துக் கொண்டிருந்தது. அத்துடன் பக்கத்திலிருந்த முஸ்லீம் பாடசாலையில் படிக்கும் பிள்ளைகளும் வரத் தொடங்கியிருந்தார்கள். அதன் காரணமாக எம்மில் பலருக்கு பதற்றம் ஏற்பட்டிருந்தது.

அங்கு வந்த சில முஸ்லீம் பிள்ளைகளும், சில முஸ்லீம் ஆசிரியர்களும் நாம் தங்கியிருந்த தமிழ்ப் பாடசாலைக்குள்ளும் வந்து புகுந்தனர். அவர்கள் எம்மை வேடிக்கை பார்ப்பதற்காகத்தான் வந்திருக்கிறார்கள் என நாம் கருதினோம். ஆனால் அவர்களேர் எம்மைப் பார்த்துவிட்டு ஆச்சரியப்பட்டனர். ஏனெனில் அவர்களுக்கு நாம் அன்றிரவு அங்கு தங்கியிருப்போம் என்பது தெரிந்திருக்கவில்லை. அவர்கள் எமது நிலையை அறிந்து மிகவும் கவலைப்பட்டனா. எம்முடன் அனுதாபமாகக் கதைத்துத் தெம்பூட்டினர்.

அந்த முஸ்லீம் ஆசிரியர்களுடன் கதைத்தபோது, அவர்கள் சொன்ன ஒரு விடயம் பெரும் ஆச்சரியத்தை அளித்தது. அதாவது நாட்டில் இனவாத யுத்தம் ஆரம்பமான பின்னர், அனுராதபுரத்தில் இருந்த பல தமிழ் குடும்பங்கள் பாதுகாப்புத்தேடி நாட்டின் வேறு பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். அதனால் அங்கு இயங்கிக் கொண்டிருந்த விவேகானந்தா தமிழ் வித்தியாலயம் மூடப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையை விரும்பாத அங்குள்ள சில முஸ்லீம் கல்விமான்கள் (அவர்களில் ஒருவரான எனது நண்பரும், முற்போக்கு எழுத்தாளருமான ‘அன்பு ஜவகர்ஸா’ அனுராதபுரத்தில் உள்ள ஒரு பாடசாலையில் அதிபராகவும், பின்னர் கல்வி அதிகாரியாகவும் இருந்ததாகக் கேள்விப்பட்டிருந்தேன்) தமிழ் வித்தியாலயம் மூடப்படுவதைத் தடுக்க ஒரு தந்திரத்தைக் கைக்கொண்டனர்.

அதாவது, தமது முஸ்லீம் பாடசாலையில் கல்விகற்ற மாணவர்களில் ஒரு பகுதியினரை அங்கிருந்து விலக்கி, அருகில் இருந்த தமிழ் வித்தியாலயத்தில் சேர்த்து படிக்க வைத்தனர். அதன் மூலம் விவேகானந்தா தமிழ் வித்தியாலயம் மூடப்படுவதை அந்த முஸ்லீம் கல்விமான்கள் தடுத்து நிறுத்தினர். ஒரு குறிப்பிட்ட பிள்ளைகள் கல்வி கற்றால் அப்பாடசாலையை அரசாங்கம் மூட முடியாது என்பது விதியாகும்.

முஸ்லீம் மக்கள் தமிழ் மக்கள் மீதும், தமிழ் மொழியின் மீதும் கொண்டிருந்த அபிமானம்; எனது இந்தப் பயணத்தின் போது, எனக்கு ஏற்பட்ட இரண்டாவது அனுபவமாக இருந்தது. ஏற்கெனவே எமது இரண்டாவது பயணத்தின் போது புத்தளத்தில் இருந்த ஒரு முஸ்லீம் வர்த்தகர் செய்த தன்னலமற்ற உதவி பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். இவ்வாறான உதவிகளைத் தமிழ் மக்களுக்காகச் செய்த அந்த சமூக மக்களைத்தான், புலிகள் சிறிது காலத்திற்குள்ளாக வடக்கிலிருந்து உடுத்த துணியுடன், இரண்டு மணித்தியால அவகாசத்தில் விரட்யடித்த பெரும் அநியாயத்தைச் செய்தனர்.

இந்த இடத்தில் நான் இங்கு ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன். நான் இலங்கையின் வட பகுதியில் பிறந்தவன். அங்குதான் எனது வாழ்க்கையின் பெரும்பகுதி கழிந்தது. பின்னர் புலிகள் என்னைக் கைதுசெய்து விடுதலை செய்த பின்னர், சில ஆண்டுகள் கொழும்பில் - கிரிலப்பனவில் ஒரு சிங்களவர் வீட்டில் எனது குடும்பத்துடன் வாடகைக்கு இருந்தேன். இதுதவிர தென்னிலங்கையின் பல சிங்களக் கிராமங்களுக்கும், கிழக்கில் பல முஸ்லீம் கிராமங்களுக்கும், மலையகத் தோட்டக் குடியிருப்புகளுக்கும் அடிக்கடி சென்று தங்கியும் வந்திருக்கிறேன்.

பின்னர் நான் வெளிநட்டிற்கு வந்து, இப்பொழுது வாழ்ந்துகொண்டு இருக்கும் புலம்பெயர் நாட்டில் 200இற்கும் அதிகமான உலக நாடுகளின் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுடன் தவிர்க்க முடியாமால் நாம் பழகுகின்றோம். நான் வேலை செய்யும் நிறுவனத்தில் வெள்ளையர்கள், எத்தியோப்பியர்கள், எரித்திரியர்கள், பிலிப்பினோக்கள், சீனர்கள், ஈரானியர்கள், இலங்கையாகள் எனப் பலருடன் நான் வேலை செய்கின்றேன்.

இவ்வளவு கால எனது வாழ்க்கை அனுபவத்தில் நான் இலங்கையில் பழகிய தமிழர் அல்லாத இனங்களும், இப்பொழுது பழகும் பல்வேறு நாட்டு மக்களும் என்னுடன் பழகிய அளவுக்கு எமது தமிழினம் நட்புறவுடன் பழகவில்லை என்றுதான் கூறுவேன். இது அவர்களின் மாறா இயல்பு நிலை அல்ல. இந்த நிலை தமிழர்கள் மத்தியில் முன்பு இருக்கவில்லை. எப்பொழுது நமது தமிழ் இளைஞர்கள் அர்த்தமற்ற ஒரு நோக்கத்துக்காக ஆயுதம் தூக்கினார்களோ, அப்பொழுதுதான் இந்த நிலை ஆரம்பமானது. அதிலும் இந்த ஆயுதப்போராட்ட இயக்கங்கள் மத்தியில் இருந்த கொஞ்ச நஞ்ச மனித நேயம் மிக்கவர்களையும் புலிகள் அழித்தொழித்த பின்னர், தமிழ் சமூகம் தனது பெறுமதி மிக்க விழுமியங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டு, வெறுமனே விடுதலைக் கோசம் எழுப்பும் மலட்டுச் சமூகமாக இன்று உருமாறி நிற்கிறது.

இதற்கு இன்னொர் உதாரணம் இன்று தமிழக அரசியல்வாதிகள் நடாத்தும் அராஜக அரசியல் வெறியாட்டம். அவர்கள் இலங்கை அரசாங்கம் இழைத்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து உரத்துப் பேசிக்கொண்டு, போர்க்காலத்தில்கூட தவிர்க்கும்படி கூறப்பட்டுள்ள அதே விடயங்களை அங்கே அரங்கேற்றுகிறார்கள். அங்கு செல்லும் மத குருக்களையும், யாத்திரீகர்களையும்கூடத் தாக்குகிறார்கள், விளையாட்டில்கூட அரசியலைக் கலக்கிறார்கள். மனிதாபிமானத்தையும், சர்வதேச நெறிமுறைகளையும் மீறி இவை அங்கே அரங்கேற்றப்படுகின்றன.

இவற்றை நான் இங்கு வெளிப்படையாகக் கூறுவதால், விமர்சனத்தைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமில்லாத சில தமிழ் ‘ஆஸ்தான’ விமர்சகர்கள் தமது வாள்களைத் தீட்டுவார்கள் என்பதும், எனக்கெதிராக நீட்டுவார்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் யாராவது ஒருவர் முன்னுக்கு வந்து ‘பூனைக்கு மணி கட்டுவது’ அவசியம் என்பதால்தான் நான் இதை இங்கு எழுதவேண்டி வந்தது.

இது ஒருபுறமிருக்க, நாம் பல மணி நேரம் காத்திருந்த பின்னர், காலை 9 மணியளவில் எமது பஸ்கள் வந்து சேர்ந்தன. அதேநேரத்தில் நாம் தங்கியிருந்த பாடசாலைக்கு முன்னாள் உள்ள வீதியிலும் சுற்றிவரவும் பெருமளவிலான சிங்கள மக்கள் திரளத் தொடங்கிவிட்டனர். அவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட தொகை ஆட்கள் மண்வெட்டிகள், அலவாங்குகள், கடப்பாறைகள், மரக் கொட்டன்கள் சகிதம் எமது முன்வீதியால் வந்து கொண்டிருந்தனர். முதலில் நாம் அவர்கள் ஏதோ நீர்ப்பாசனத் திணைக்களத்தில் வேலை செய்வதற்குச் செல்லும் ஆட்கள் என்றுதான் கருதினோம்.

ஆனால் அவர்கள் கோசங்கள் போட்டவாறு எம்மை நோக்கி வந்தபோதுதான், நிலைமையின் விபரீதம் புரிந்தது. நாம் பயத்தால் விறைத்து நின்றோம். விரைந்து சென்று எமது பஸ்களில் ஏற முயன்றோம். ஆனால் அந்த நேரம் பார்த்து பஸ் சாரதிகளில் ஒருவர் தனது பஸ் சில்லு ஒன்றுக்குக் காற்றுப் போதாது என்றும், எனவே தான் திரும்பவும் பஸ் டிப்போவுக்குச் சென்று காற்றுப் பிடித்து வருவதாகவும் கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்! (அவர் அன்றிரவை அந்த பஸ் டிப்போவில் கழித்துவிட்டுத்தான் காலையில் வந்திருந்தார்!!)

நாம் செய்வதறியாது திகைத்து நிற்க, எமக்குப் பாதுகாப்புக்காக வந்த பொலிசாரும் ஒருவர் பின் ஒருவராக அருகே இருந்த தேநீர்;கடைக்குள் சென்றுவிட்டார்கள். இப்பொழுது நாம் எமனின் கையில் அகப்பட்டவர்களாகத் தனித்து விடப்பட்டோம். எம்மைச் சுற்றிவளைத்து நிற்பவர்களில் சில காடையர்கள் இருந்தாலும், பலர் சிங்கள – தமிழ் இனவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த நாசகார யுத்தத்தின் கொதி நிலையால் உந்தப்பட்டவர்கள் என்பது புரிந்தது. ஆனால் எம்மை அழைத்து வந்த பஸ் சாரதிகளினதும், எமது பாதுகாப்புக்காக வந்த பொலிசாரினதும் நடத்தைகள் திட்டமிட்ட நாடகத்தின் ஒர் அங்கம் எனப்புரிய ஆரம்பித்தது.

lundi 1 avril 2013

வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்களுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இரட்டை குடியுரிமையை பெற்றுக்கொள்ள முடியும்

வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்களுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இரட்டை குடியுரிமையை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.  இரட்டை குடியுரிமை வழங்கப்படும் போது, செயற்படுத்தப்பட வேண்டிய புதிய சட்டத்திருத்தங்களை உருவாக்கப்பட்டுள்ளன என திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார். இரட்டை குடியுரிமை வழங்கப்படும் போது, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இரட்டை குடியுரிமை என்ற போர்வையில் வடக்கில் காணி உரிமைகளை பெற்றுக்கொள்ள வர முயற்சிக்கும் வடபகுதிகளை சேர்ந்த இலங்கையர்களும் இருப்பதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. மேற்குலக நாடகளில் வாழும் பெரும் எண்ணிக்கையிலான இலங்கையில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக இரட்டை குடியுரிமையை பெறுவதற்காக காத்திருப்பதாக தெரியவருகிறது.

தலிபான்களுக்கு பணம் வழங்கிய துருக்கி பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை! ருத்திரகுமாரனுக்கு என்ன தண்டனை?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஓய்டுன் ஐஸே மிகளிக் வாழ்ந்து வந்தார். துருக்கி நாட்டைச் சேர்ந்த இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் ஆவார். இவர் 2010-ம் வருட இறுதியிலும், 2011-ம் ஆண்டு தொடக்கத்திலும் 3 முறை பாகிஸ்தானுக்கு இணையம் மூலம் 2050 அமெரிக்க டாலர்கள் அனுப்பியது தெரிய வந்தது.

இதனால் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புக்கு பணம் வழங்கியதாக குற்றம் சாட்டி கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ அதிகாரிகளையும் பிற அமெரிக்கர்களையும் தாக்க பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கதுடன் இவர் பாகிஸ்தானில் இருக்கும் ஒருவருக்கு பணம் அனுப்பினார் என்ற அமெரிக்க புலனாய்வுப் பிரிவினரின் குற்றச்சாட்டு ஒப்புவிக்கப்பட்டது.

வழக்கினை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவிலிருந்துகொண்டு பாக்கிஸ்தானிலுள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு துருக்கி பெண் பணம் வழங்கினார் என்றபோது 5 வருட தண்டனை வழங்கிய அமெரிக்கா, அமெரிக்காவிலிருந்துகொண்டு புலிகளுக்கு அலோசகராக இருந்தவரும் தற்போது இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றவருமான ருத்திரகுமாரனுக்கு இவ்வாறான தண்டனையை வழங்குமா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.

அத்துடன் அமெரிக்காவிலிருந்து கொண்டு அந்நாட்டில் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டிருக்கின்ற புலிகளுக்கு நிதி உதவி வழங்கியோருக்கு என்ன தண்டனை வழங்கப்போன்றது.

நாடுகடத்தல் போலியான கடவுச்சீட்டுடன் இலங்கையர்

போலியான இந்திய கடவுச்சீட்டுடன் பிரான்சில் தங்கி இருந்த இலங்கையர் ஒருவர் நாடுகடத்தப்பட்டுள்ளார். நந்தகுமார் ராஜரட்ணம் என்ற 24 வயதுடைய அவர், கடந்த 28ஆம் திகதி சுற்றுலா வீசாவுடன் இந்தியா சென்று, அங்கிருந்து டுபாய் ஊடாக பிரான்ஸ் சென்றுள்ளார். எனினும் அவரது கடவுச் சீட்டு போலியானது என்பதை அறிந்த பிரான்ஸ் அதிகாரிகள் அவரை நேற்று நாடுகடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் இந்திய குடிவரவுத்துறை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கொழும்பை சேர்ந்த ஒருவரே தமக்கு இந்த கடவுச் சீட்டை பெற்றுக் கொடுத்திருப்பதாக அவர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

7.7 கோடி ரூபா செலவில் புனரமைப்புப் பணிகள் .10 இலட்சம் வீடமைப்புத் திட்டத்தின் கீழ். விமல் யாழிற்கு நாளை விஜயம்

யாழ்ப்பாணம் குருநகரில் அமைந்துள்ள மாடிவீட்டுத் திட்டத்தை புனரமைக்கும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. வீடமைப்புத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் இந்தப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்படும். 7.7 கோடி ரூபா செலவில் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 10 இலட்சம் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் குருநகர் மாடி வீடுகளையும் புனரமைப்பதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ஐந்து மாடிகளைக் கொண்ட இந்த மாடிவீட்டுத் திட்டத்தில் 150 வீடுகள் உள்ளன. ஒரு வீடு 435 சதுர அடி பரப்பளவைக் கொண்டது. 1986ஆம் ஆண்டு இந்த வீட்டுத் திட்டம் அமைக்கப்பட்டிருந்தது. எனினும், யுத்தம் காரணமாக இவ்வீடுகள் பாதிப்படைந்தன. இந்த நிலையில் இன்று ஆரம்பித்து வைக்கப்படும் புனரமைப்புப் பணிகள் 9 மாதங்களில் பூர்த்தியடையுமென அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய அரசியல் களத்தில்;அரசுக்கு எதிராக பெண்கள் கூட்டு

news
 தேசிய அரசியல் களத்தில் முக்கிய மூன்று பெண் பிரபலங்களை இறக்குவதற்கான பேச்சுகள் திரைமறைவில் இடம்பெற்று வருவதாக அறியமுடிகின்றது.
 
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா ஆகிய மூவரையுமே கூட்டாகக் களமிறக்குவதற்கான ஆரம்ப கட்டப் பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன.
 
இனிவரும் காலப்பகுதியில் நடைபெறவுள்ள தேர்தல்களைக் கருத்திற்கொண்டே எதிர்க்கட்சிகளின் முக்கிய புள்ளிகள் சிலர் இவர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர் எனவும் தெரியவருகின்றது.
 
எது எப்படியிருந்தபோதிலும், அரசின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள அந்த மூவரும் அரசியல் களத்தில் நிச்சயம் குதிப்பர் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தாலும், இது குறித்து உத்தியோகபூர்வமாக இன்னும் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
 
இந்த திரிசூலப் பெண்கள் குழு அரசியலில் ஈடுபடும் பட்சத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு கடும் அரசியல் நெருக்கடிகள் ஏற்படும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
 
அரசியலுக்கு வரும் முன்னோடியாகவே முன் னாள் ஜனாதிபதி சந்திரிகாவும், முன்னாள் பிரதம நீதியர சர் ஷிராணியும் சட்டத்தரணிகள் சங்கக் கூட்டத் துக்கு இணைந்து வந்தனர் என்றும் அரசியல் களத்தில் பேசப்படுகின்றது.
 
சந்திரிகா அம்மை யாருக்கு அரசியல் களத்தில் முழு அனுபவம் இருந்தாலும், ஷிராணிக்கும் அனோமா பொன் சேகாவுக்கும் அரசியல் களம் புதிது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியத் தலைவர் அமரர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 115 ஆவது பிறந்ததின விழா இன்று


TC0405PSSJV.JPG

ஈழத்து காந்தி என்று அழைக்கப்படும் தமிழ் தேசியத் தலைவர் அமரர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 115 ஆவது பிறந்ததின விழா இன்று காலை தந்தை செல்வா அறம் காவலர் அமைப்பின் தலைவர் பேதுரு அந்தோனி மார்க் தலைமையில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைந்திருக்கும் தந்தை செல்வா திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணுவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் நிகழ்வுகள் இடம் பெற்றன. இதன் போது சிறப்புரைகளும், சமயத் தலைவர்களின் ஆசியுரைகளும் இடம்பெற்றன.

குறித்த நிகழ்விற்கு மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ், மன்னார் பிரதேச சபையின் மலைவர் மார்ட்டின் டயேஸ், உப தலைவர் அந்தோனி சகாயம், நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை அடிகளார், தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ மாவட்ட பொறுப்பாளர் இராசேந்திரம் பற்றிக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.