காங்கிரஸ் எம்பி உட்பட 612 இந்திய தொழில் அதிபர்கள் கோடிக்கணக்கில் வரிஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், குட்டி தீவுகள் உட்பட வரிச்சலுகை அளிக்கும் நாடுகளில் முதலீடு செய்துள்ள ஒரு லட்சத்து 20 ஆயிரம் நிறுவனங்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. 170 நாட்டினரின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 612 பேர் இடம் பெற்றுள்ளனர். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விவேகானந் கடம், மாநிலங்களவை உறுப்பினர் விஜய் மல்லையா மற்றும் ரவிகாந்த் ரூயா உள்ளிட்ட தொழில்அதிபர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ரிசர்வ் வங்கி மற்றும் வெளிநாட்டு முதலீட்டிற்கான விதிகளை மீறி உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் மிகப்பெரிய மோசடி அம்பலமாகி இருப்பதாக கூறியுள்ள பாஜக, கருப்பு பணம் பதுக்குபவர்களை மத்திய அரசு பாதுகாக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் பிரகாஷ் ஜவடேகர், கருப்பு பணம் தொடர்பாக பட்ஜெட்டில் குறிப்பிடக்கூட மத்திய அரசு தவறிவிட்டது. கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதற்காக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது வரி ஏற்ப்பு பற்றி புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி காங்கிரஸ் எம்பியின் நிறுவனத்திற்கும் கருப்பு பண பதுக்கலில் தொடர்பு உள்ளது. இந்த முக்கிய பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளோம். உரிய விசாரணை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire