பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறவுள்ள மே தின ஊர்வலத்தில் இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம் பிரான்ஸ் வாழ் புலம்பெயர் தமிழர்களை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது. மே மாதம் முதலாம் திகதி புதன்கிழமை மாலை 2 மணியளவில் பிளேஸ் டு லா பஸ்ற்றில் என்ற முகவரியில் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மே தின ஊர்வலத்தில் சர்வதேச தொழிலாளர்களுடன் ஒன்றிணைந்து மறுக்கப்படும் எம் தேச மக்களின் உரிமைகளை உரக்கச் சொல்வோம் என்ற சுலோகத்துடன் ஆரம்பித்துள்ள துண்டுப்பிரசுரத்தில் இலங்கையில் தீர்வு-- இனங்களுக்கு சமஉரிமை , அமைதி வேண்டி- அராஜகம் ஒழிப்போம், வேற்றுமை கடந்து ஐக்கியப்படுவோம், ஒன்றுபட்டு உரிமைகளை வெல்வோம், சுற்றுச்சூழல் மாசுபடுத்தோம் - பூமிக்கு ஆயுள் கொடுப்போம், உலக முற்போக்காளர்களுடன் கைகோர்ப்போம்- உரிமைகளுக்காய் குரல் கொடுப்போம் என்றவாறான கோசங்கள் ஒலிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் எம் தேச மக்களின் வாழ்வில் ஓர் மாற்றம் வேண்டி, உங்கள் கரம்பிடித்து, எம் மக்கள் துயர் போக்க உதயமாகியுள்ள இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம் வரலாற்று சிறப்புமிக்க மே தினத்தில் தனது முதலாவது செயற்திட்டமாக இந்த மே தின பேரணியை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக விடுதலைப் புலிகள் அமைப்பினை பிரநிதித்துவப்படுத்தும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பில் புலம்பெயர் தமிழர்கள் இந்த சர்வதேச தொழிலாளர்கள் தின பேரணியில் கலந்து கொள்வார்கள். ஆனால் இம்முறை இலங்கையர் ஒருமைப்பாட்டு மையமும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக மே தின ஊர்வலத்தில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire