மனிதர்கள் மட்டுமல்ல அவர்களின் மொழிகளும் குரங்கிலிருந்தே பரிணமித்தது என புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
எத்தியோப்பிய காடுகளில் வசிக்கும் பபூன் ரக குரங்கிற்கு நெருங்கிய பிரிவான கெலடா ரக குரங்கு இனத்திற்கு சொந்தமான, சிக்கலான குரல்கள் மனிதர்களின் ஆதிமொழியை ஒத்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
கெலடா குரங்குகள் எழுப்பும் ஒலிகள் வித்தியாசமானவை மட்டுமல்ல, சிக்கலானவையும் கூட. கிப்பன்ஸ், சிம்பன்சி உள்ளிட்ட பெரும்பான்மை குரங்குகள் வெறும் அடிப்படை ஒலிகளை மட்டுமே எழுப்பவல்லவை. இது பரிணாமவியல் அறிஞர்களுக்கு பல நாட்களாக புரியாத புதிராகவே இருந்தது.
அதாவது, பரிணாம வளர்ச்சியில் மனிதர்களுக்கு மிக நெருங்கிவரும் குரங்கினம், மனிதர்களின் வாய்மொழி ஒலிகளைப் பொறுத்தவரை மிகவும் விலகி இருப்பது ஏன் என்கிற கேள்விக்கு விஞ்ஞானிகளால் இதுவரை விடைகாண முடியவில்லை.
ஆனால் தற்போது தங்களின் இந்த நெடுநாள் கேள்விக்கு விடை காண்பதில் கெலடா குரங்குகளின் ஒலிகள் உதவக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
இந்த கெலடா குரங்குகளின் வித்தியாசமான ஒலிகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது, மனிதர்களின் வாய்மொழி ஒலிகளின் பொதுவான ஒலிவடிவங்களோடு, இந்த கெலடா குரங்குகளின் வாய்மொழி ஒலி அலைகள் மிகவும் ஒத்துப்போவதை இவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
மேலும் மனிதர்கள் பேசும்போது தாடையும், உதடும் நாக்கும் ஒரே நேரத்தில் சேர்ந்து இயங்குவதைப்போலவே, இந்த கெலடா குரங்குகள் ஒலியெழுப்பும்போது, அவற்றின் தாடைகளும், உதடுகளும், நாக்கும் ஒரே நேரத்தில் சேர்ந்து செயற்படுவதாகவும் இந்த விஞ்ஞானிகள் கவனித்திருக்கிறார்கள்.
தங்களின் ஆய்வின் அடுத்த கட்டமாக, கெலடா குரங்குகளின் ஒலிகளுக்கு குறிப்பாக அர்த்தம் ஏதும் இருக்கிறதா என்பதை ஆராயவிருக்கிறார்கள்.
மனிதர்கள் குழுக்களாக வாழும்போது ஒருவர் மற்றவருடன் நெருக்கமாவதற்கு தங்களின் பேச்சைப் பயன்படுத்துவதைப் போலவே, பெருங்கூட்டமாக வாழும் இந்த கெலடா வகை குரங்குகளும் தங்களுக்குள் ஒன்றோடொன்று நெருக்கமாவதற்கு தமது வாயொலிகளை பயன்படுத்துவதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்
Aucun commentaire:
Enregistrer un commentaire