கொழும்பு மாநகரில் சுமார் 6 இலட்சம் பேர் திரள்வர் என எதிர்பார்ப்பு, தனிப்பட்ட தேவைக்கு கொழும்பு வருவதை தவிர்க்க வேண்டுகோள், உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை மே தின ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை மக்கள் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி உட்பட முக்கிய கட்சிகள், தொழிற் சங்கங்களின் ஊர்வலம், கூட்டங்கள் கொழும்பிலும், ஐக்கிய தேசியக் கட்சி குருநாகலிலும், இ. தொ. கா. மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி நுவரெலியா, தலவாக்கலை மற்றும் லிந்துலவிலும் தமிழ்க் கட்சிகள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிலும் ஊர்வலம் மற்றும் கூட்டங்களை நடத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வழக்கம் போல் இம்முறையும் கொழும்பில் முக்கிய ஊர்வலங்கள், கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இதற்கமைய இம்முறை கொழும்பில் மாத்திரம் 13 ஊர்வலங்களும், 17 கூட்டங்களும் நடைபெறவுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.சகல ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களில் சுமார் ஆறு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொள்ளவுள்ளதாக எதிர்பார்ப்பதுடன் சுமார் 10 ஆயிரம் பஸ் வண்டிகளில் இவர்கள் அழைத்து வரப்படவுள்ளதால் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடு கடமைகளுக்கு சுமார் ஆறாயிரம் பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெறவுள்ள மே தின ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்க மளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை ஒல்கோட் மாவத்தையிலுள்ள கொழும்பு பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.நாடு முழுவதிற்குமான போக்கு வரத்து ஏற்பாடுகளுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன, கொழும்பு நகர் போக்கு வரத்துக்கான பொலிஸ் அத்தியட்சகர் சூலா டி சில்வா மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன ஆகியோர் கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளிக்கையில், எந்த கட்சியாக இருந்தாலும் பரவலாயில்லை. கொழும்பில் நடைபெறவுள்ள மேதின கொண்டாட்டத்தை சிறந்த முறையில் வழமைபோன்று எதுவித பிரச்சினைகளும் இன்றி நடத்தி முடிப்பதற்கானஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் இதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க பொலிஸ் திணைக்களம் தயாராக உள்ளது.
ஊர்வலங்களில் கலந்துகொள்ள வருகை தரும் மக்களின் பாதுகாப்பை கருதி பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோனின் ஆலோசனைகளுக்கமைய திட்டமிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.சுமார் 10 ஆயிரம் பஸ் வண்டிகளில் ஆறு இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொள்ள வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவித்த அனுர சேனநாயக்க, பாதுகாப்பு கடமையில் 3,000க்கும் அதிகமான பொலிஸாரும், போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு 2981 பொலிஸாரும் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் 172 ரோந்து மோட்டார் சைக்கிள்கள் விசேட ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது என்றார்.
அன்றைய தினம் ஊர்வலம் மற்றும் கூட்டங்களில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளதாக அத்தியாவசிய தேவைகளை தவிர கொழும்புக்குள் வெளி பிரதேசங்களில் இருந்து வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க கேட்டுக்கொண்டார்.இது தவிர அத்தியாவசிய சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் அம்பியுலன்ஸ்வண்டி, இலங்கை மின்சார சபை, நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை, ஊடக நிறுவன வாகனங்கள், டொக்டர்கள், நோயாளிகள் தங்கு தடையின்றி செல்வதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
எனவே ஊர்வலம் செல்லும் சில வீதிகள் முழுமையாகவும், சில வீதிகள் குறிப்பிட்ட நேரத்திற்கும் மூடப்பட்டிருக்கும் எனினும் பொதுமக்கள் தங்கு தடையின்றி வந்து செல்வதற்கு தேவையான மாற்று வழி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்..ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான மேதின கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஊர்வலம் நெலும்பொக் குன மஹிந்த ராஜபக்ஷ கலையரங்குக்கு அருகில் ஆரம்பித்து கெம்பல் பார்க் வந்தடையவுள்ளது. மக்கள் ஐக்கிய முன்னணி ஊர்வலம் ஆயுர்வேத சந்தியில் ஆரம்பித்து கெம்பல் பார்க்கையும், ஸ்ரீலங்கா மக்கள் கட்சி மருதானை ஆனந்த கல்லூரிக்கு அருகில் ஆரம்பித்து கெம்பல் பார்க்கையும் வந்தடையவுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் ஊர்வலம் எஸ்.டி.எஸ். ஜயசிங்க மைதானத்தில் ஆரம்பித்து ஹெவ்லொக் டவுன் பி.ஆர்.சி. மைதானத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது. முற்போக்கு சோசலிசக் கட்சி நவகம்புரவில் ஊர்வலத்தை ஆரம்பிது கொட்டாஞ்சேனை ரத்னம் மைதானத்தில் கூட்டத்தை நடத்தவுள்ளது.தேசிய சுதந்திர முன்னணி தெமட கொட புனித ஜோன் வித்தியால யத்திலிருந்து ஊர்வலத்தை ஆரம்பித்து பி. டி. சிறிசேன மைதானத்தில் கூட்டம் நடத்தவுள்ளது. தொழிற் சங்கங்களின் பொது சம் மேளனம் இலங்கை வங்கி ஊழியர் மாற்று சங்கம் கோட்டை புகையிரத முன்னால் ஊர்வலத்தை ஆரம்பித்து ஹய்ட்பார்க்கில் கூட்டத்தை நடத்தவுள்ளது. இலங்கை வங்கி சேவையாளர் சங்கம் ஜயந்த வீரசேகர வீதியில் ஊர்வலத்தை ஆரம்பித்து மாளிகாவத்தை பிரதீபா மண்டபத்தில் கூட்டத்தை நடத்தவுள்ளது.
பொது தொழிலாளர் சங்கம் கொள்ளுபிட்டியிலும், சுதந்திர வர்த்தக வலய பொது ஊழியர் சங்கம் வின்சன் பெரேரா மாவத்தையில் ஊர்வலத்தை ஆரம்பித்து பாயிஸ் மன்ஸில் நிலையத்தில் கூட்டத்தை நடத்தவுள்ளது. ஐக்கிய சோசலிச கட்சி ஊறுகொட வத்தையில் ஊர்வலத்தை ஆரம்பித்து கிரேன்ட் பாஸ் கொஸ்கொஸ் சந்தியில் கூட்டத்தை நடத்தவுள்ளது. நவசமசமாஜ கட்சி, சோசலிச கட்சி பிரைஸ் பார்க்கில் கூட்டத்தை நடத்தவுள்ளது.
கிரிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவ கொள்ளுப்பிட்டியிலும் லங்கா சமசமாஜ கட்சியும், சோசலிச மக்கள் முன்னணியும் சாலிகா மைதானத்திலிருந்து ஊர்வலத்தை ஆரம்பித்து கிருலப்பனை நகர மைதானத்தில் கூட்டத்தை நடத்தவுள்ளன. ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கொச்சிக்கடையில் ஊர்வலத்தை ஆரம்பித்து மட்டக்குளி விஸ்வைக் மைதானத்தில் கூட்டத்தை நடத்தவுள்ளது.சோசலிச சமத்துவக் கட்சி கொழும்பு நகர மண்டபத்திலும், ஜுலை வேலை நிறுத்த காரர்களின் கூட்டமைப்பு பொது நூலகத்திலும், அரச ஓய்வூதியகாரர்களின் கூட்டு தேசிய அமைப்பு பொது நூலகத்திலும் நடைபெறவுள்ளது.இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் நினைவுதின நிகழ்வு வாழைத்தோட்டத்திலுள்ள அவரது உருவச் சிலைக்கு அருகிலும் இடம்பெறவுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire