mardi 30 avril 2013

தீவிரவாத குற்றச்சாட்டில் கைது;ரஷ்யாவில் பள்ளிவாசலில் இருந்த 140 முஸ்லிம்கள்


Rusia Armyரஷ்ய தலைநகர் மொஸ்கோவிலிருக்கும் தொழுகை அறை ஒன்றில் இருந்து 140 முஸ்லிம்களை அந்நாட்டு சட்ட செயலாக்கல் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தீவிரவாதிகளை தேடும் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அரச அதிகாரியை மேற்கோள் காட்டி ரஷ்ய செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.ரஷ்ய பெடரர் பாதுகாப்பு சபை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அடையாளம் காணப்படாத நாடுகளைச் சேர்ந்த 30 வெளிநாட்டினர்கள் கைதுசெய்யப்பட்டோருள் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டோர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அடையாளம் காணப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் தற்போது எங்கே உள்ளார்கள் என்பது குறித்து தகவல் இல்லை என ரஷ்ய தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்ய அரச தொலைக்காட்சியில் கைது செய்யப்பட்டவர்கள் வரிசையாக பொலிஸ் வாகனத்தில் ஏற்றப்படுவது காண்பிக்கப்பட்டது. அமெரிக்காவில் இடம்பெற்ற பொஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் இந்த கைது நடவடிக்கை தொடர்புபட்டதா என்பது குறித்து எந்த அறிகுறியும் இல்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.பொஸ்டன் குண்டு தாக்குதலுடன் தொடர்பு பட்டதாக அமெரிக்க உளவுப் பிரிவு அடையாளம் கண்டுள்ள சகோதரர்கள் ரஷ்யாவின் செச்னியாவை பூர்வீகமாக கொண்டவர்களாவர். பொஸ்டன் குண்டு வெடிப்பில் மூவர் கொல்லப்பட்டதோடு 264 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து ரஷ்யா இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
எனினும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த வியாழக்கிழமை தொலைக்காட்சி ஊடாக உரையாற்றும்போது வடக்கு கவ்கேசஸ் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தமது கடுமையான நடவடிக்கைகள் பொஸ்டன் குண்டு வெடிப்பின் மூலம் நியாயப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு எதிராக ரஷ்யா மற்றும் அமெரிக்கா இணைந்து செயற்பட வேண்டும் என்றார். இதில் மேற்படி மொஸ்கோ தொழுகை அறையில் வடக்கு கவ்கேசஸ் தீவிரவாத குழுவுடன் ஒருசிலர் கடந்த காலங்களில் இணைந்திருப்பதாக ரஷ்ய சட்ட செயலாக்கல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறாயின் இவ்வாறான சுற்றிவளைப்புகள் முன்னாள் சோவியட் நாடுகளில் இருந்து வரும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை இலக்குவைத்தே நடத்தப்படுவதாக ரஷ்ய அரசுக்கு எதிரான விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த பெப்ரவரியில் பீட்டர்ஸ் பேர்க்கில் இடம்பெற்ற இதேபோன்ற சுற்றிவளைப்பில் சுமார் 300 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire