mercredi 1 mai 2013

பச்சைப் பொய் கூட்டமைப்புக்குள் பிளவு இல்லையென்ற சம்பந்தனின் கூற்று

அரவிந்தன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில், தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய 4 கட்சிகள் சேர்ந்து அரசியல் கட்சியாக அதைப் பதிவு செய்யப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தக் கட்சிகள் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, தருமலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட், வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி என்பனவாகும்.

   இந்தக் கட்சிகள் நான்கும் சேர்ந்து தம்மை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனப் பதிவு செய்யப் போவதான செய்தி, ரெலோ இயக்கத்தினரிடமிருந்து வந்துள்ள போதிலும், ஏனைய 4 கட்சிகளும் அதை மறுக்காததால், இதில் உண்மை இருப்பது ஊர்ஜிதமாகிறது.

   இரண்டு தினங்களுக்கு முன்னர்தான், தமிழரசுக் கட்சியினதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் தலைவர் ஆர்.சம்பந்தன், கூட்டமைப்புக்குள் எந்தவிதமான பிளவுகளும் இல்லை என ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ள கையோடு, இந்தச் செய்தி வந்திருப்பதானது, சம்பந்தன் போன்ற மூத்த அரசியல் தலைவர்கள் எவ்வளவு தூரம் நாக்கூசாமல் பொய் பேசுகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது. அதற்கு முதலும் சம்பந்தன் தரப்பிலிருந்து இந்த விவகாரம் சம்பந்தமான பொய் ஒன்று அவிழ்த்து விடப்பட்டிருந்தது.

   கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள முரண்பாடுகள் சம்பந்தமாக மன்னார் ஆயர் ராஜப்பு யோசேப் அவர்கள் சில சமரச முயற்சிகளை அண்மையில் மேற்கொண்டார். அது சம்பந்தமான ஆயருடனான பேச்சுவார்த்தையில் ஆர்.சம்பந்தனும், இன்னொரு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டனர். அப்பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முன்னாள் ஆயுதக் குழுக்கள் (அதாவது ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட்) அங்கம் வகிப்பதால், அதை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதில் சில சட்டச் சிக்கல்கள் இருப்பதாக அந்த இருவரும் மன்னார் ஆயரிடம் எடுத்துக் கூறியதாகச் செய்திகள் வெளியாகின.

   ஆனால் அவர்கள் முன்வைத்த இந்த நொண்டிச்சாட்டில் துளியும் உண்மை இல்லை. ஏனெனில் அவர்கள் குறிப்பிடும் அந்த மூன்று முன்னாள் ஆயுதக் குழுக்களும் ஏற்கெனவே தேர்தல் திணைக்களத்தில் தமது கட்சிகளை அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்து, சில சந்தர்ப்பங்களில் தமக்கு ஒதுக்கிய சின்னங்களில் தேர்தல்களில் போட்டியிட்டும் வந்துள்ளார்கள். அத்துடன் அந்த 4 கட்சிகளும் சேர்ந்து தமது கூட்டணியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் பதிவு செய்யப் போவதாகவும் தற்பொழுது அறிவித்துள்ளார்கள். சம்பந்தனால் சாத்தியமில்லாத பதிவு விடயம், இந்த 4 கட்சிகளால் மட்டும் எப்படி சாத்தியப்படப் போகிறது? அப்படியானால் சம்பந்தனும் சுமந்திரனும் மன்னார் ஆயருக்கு ‘கயிறு விட்டிருக்கிறார்கள்’ என்றுதானே அர்த்தம்?

   உண்மை என்னவென்றால், தமிழ் தேசியக் கூட்டமைப்பை தனி ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதில் எவ்விதமான சட்டப் பிரச்சினைகளும் இல்லை. பிரச்சினையெல்லாம், அதைப் பதிவு செய்வதில் தற்பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியினருக்கு விருப்பம் இல்லை என்பதே உண்மையாகும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire