தலித்துகள் உள்பட உலகம் முழுவதும் 2.6 கோடி பேர் இன ரீதியிலான பாகுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் ஆய்வுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்காசியாவில் தான் இன ரீதியிலான பாகுபாடு அதிகம் காணப்படுகிறது. இதை களைய அப்பகுதியில் உள்ள நாடுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இன ரீதியிலான பாகுபாடு மிகவும் ஆழமான வேர்களை கொண்டதாக உள்ளது. இதனால் பாதிக்கப்படுவோர் சமூகத்தில் ஒதுக்கப்படுதல், பாரபட்சம் போன்றவற்றுக்கு ஆளாகின்றனர். அவர்கள் மீது கொடிய வன்முறை உள்பட பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடக்கின்றன. தெற்காசிய பகுதியில் தலித்துகள் தீண்டத்தகாதவர்களாக கருதப்படுகின்றனர். பொருளாதார, சமூக ரீதியில் அவர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குடிநீர், வீட்டுவசதி, வேலைவாயப்பு போன்ற அடிப்படை தேவைகள் அவர்களுக்கு முறையாக கிடைப்பதில்லை. தலித் இனத்தைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் பாலியில் ரீதியிலான வன்முறைக்கும் ஆளாகின்றனர். நேபாளத்தில் இன ரீதியிலான பாகுபாடு, தீண்டாமை ஒழிப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் ஏற்கெனவே சட்டம் அமலில் உள்ள நாடுகளில் அவை தீவிரமாக செயல்படுத்தப்படவில்லை. இதுதொடர்பாக சட்டங்களை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதுபோன்ற சட்டங்கள் இல்லாத நாடுகளில் அவை விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும். இதுதொடர்பான ஐ.நா. கொள்கைகள், வழிகாட்டுதல்களை முறையாக செயல்படுத்த வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire