ஊர்களின் தமிழ்ப் பெயர்கள் எல்லாம் சிங்களப் பெயர்களாக மாற்றப்படுகின்றன என்பது புலி ஆதரவாளர்கள் வைக்கும் பிரதான குற்றச்சாட்டுகளில் ஒன்று. இது குறித்து ஒரு பட்டியலையும் சிலர் வெளியிட்டுள்ளனர். இது பற்றி நாங்கள் அங்குள்ள சிலரிடம் விசாரித்தோம். “இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பல ஊர்களுக்கு சிங்களத்திலும் பெயர்கள் உண்டு. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, அந்த ஊர்ப் பலகைகள் எல்லாம் தமிழில் மட்டுமே இருந்தன. தற்போது அரசாங்கம் எல்லா ஊர்களின் பெயரையும் ஆங்கிலம், தமிழ், சிங்கள மொழிகளில் எழுதியுள்ளது.
“உதாரணமாக தமிழில் ‘ஆனையிரவு’ என்று சொல்லப்படும் ஊருக்கு ஆங்கிலத்தில் 'Elephant pass என்றும், சிங்களத்தில் ‘அலிமாண்டுகடுவா’ என்றும் பெயர் உண்டு. எல்லாவற்றிற்குமே ‘யானைகள் கடக்கும் இடம்’ என்றுதான் அர்த்தம். எனவே, மும்மொழிப் பெயர்களையும் பயன்படுத்தத் துவங்கியுள்ளார்களே தவிர, தமிழ்ப் பெயர்களை எல்லாம் அழித்து விட்டார்கள் என்பது கொஞ்சம் கூட உண்மையல்ல. ஒரு சில இடங்களில் மட்டும் புலிகள், தங்களது மாவீரர்கள் பெயரைச் சில நகர்களுக்கும், தெருக்களுக்கும் சூட்டியிருந்தனர். அந்தப் பெயர்கள் மட்டுமே முழுமையாக நீக்கப்பட்டுள்ளன” என்றார்கள் சிலர். நாங்கள் பார்த்த ஊர்களின் பெயர்ப் பலகைகள் எல்லாம் மூன்று மொழிகளிலும் காணப்பட்டன.
கட்டம் இடப்பட்ட செய்தி 2
.இலங்கையில் சீனர்கள் ஆதிக்கம்?
‘சீனர்கள் ஆதிக்கம் இலங்கையில் அதிகமாகி விட்டது?’ என்ற வதந்தி இந்தியாவில் நிலவுகிறது. இலங்கையில் ஆறு நாட்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு, வவுனியா, மட்டக்களப்பு, கண்டி என்று பல நகரங்களில் சுற்றினோம். மருந்துக்குக் கூட ஒரு சீனர் எங்கள் கண்ணில் படவில்லை. இது பற்றிக் கொழும்புவில் சிலரிடம் விசாரித்தோம். “மத்திய இலங்கையையும் வட இலங்கையையும் இணைக்கும் எக்ஸ்பிரஸ் ஹைவே வேலையைச் சீன அரசாங்கம் செய்து கொடுக்கிறது. அங்கு போனால் அந்த வேலையில் ஈடுபடும் சீனர்களைக் காணலாம்” என்றார்கள். ஆக, சீன அரசாங்கத்தின் மறைமுக ஆளுமை இலங்கையில் இருக்கக் கூடும். ஆனால், நேரடியாகச் சீனர்களின் பங்களிப்பு இந்த அளவுக்குத்தான் இருப்பதாகத் தெரிகிறது.
கட்டம் இடப்பட்ட செய்தி 3
இன அழிப்பு முயற்சியா?
இலங்கையில் தமிழின அழிப்பு முயற்சி நடந்ததாகத் தமிழகத்தில் பலமான குற்றச்சாட்டு ஒன்று வைக்கப்படுகிறது. அது பற்றி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிப் பிரமுகர் ஒருவர் கருத்துக் கூறினார். “இங்கு நடப்பது எதையும் அறியாத தமிழக அரசியல்வாதிகள், புலம்பெயர்ந்த தமிழர்கள் திட்டமிட்டுப் பரப்பும் வதந்திகளை எல்லாம் அப்படியே நம்புகிறார்கள். இன அழிப்பு என்றால் சரணடைந்த 12 ஆயிரம் புலிகளை ராணுவம் கொன்றிருக்கலாம். கிழக்கு மாகாணமும், யாழ்ப்பாணமும் எப்போதோ புலிகள் வசமிருந்து ராணுவத்தின் வசம் வந்துவிட்டன. அங்கெல்லாம் தமிழர்களை ராணுவம் கொன்று போட்டிருக்கலாம். ஆனால், அப்படியெல்லாம் நடக்கவில்லை. இறுதிக் கட்டப் போரின்போது சுமார் 3 லட்சம் தமிழர்கள் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அவர்களை எல்லாம் ராணுவம் கொன்று அழித்து விடவில்லை. புலிகளோடு நடந்த யுத்தத்தில், அவர்கள் அரணாக நிறுத்தி வைத்த பொதுமக்களில் பலர் இறந்ததைத் தவிர, ராணுவம் பிற பகுதி தமிழர்கள் யாரையும் வேண்டுமென்றே திட்டமிட்டு அழிக்கவில்லை. பிறகு எப்படி இது இன அழிப்பாகும்?” என்று கேள்வி எழுப்பினார் அவர்.
நமது நிருபர்கள் எஸ்.ஜே. இதயா மற்றும் ஏ.ஏ. சாமி ஆகியோர் வவுனியா மற்றும் புதுகுடியிருப்பு பகுதிகளில் அவர்கள் பார்த்தவற்றையும், பலரிடம் பேசியவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.... விடுதலைப் புலிகள் இயக்கத்தில் விரும்பி இருந்தவர்களும் சரி, வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டவர்களும் சரி, போரின் இறுதிக்கட்டத்தில் ராணுவத்தின் ரிஸீவிங் பாயின்ட்டுகளுக்கு சிவிலியன்களோடு சிவிலியன்களாக வந்து சரண்டர் ஆனார்கள். ஆனால், ராணுவத்தினர் அந்தப் புலிகளை அடையாளம் கண்டுபிடித்து பிரித்தெடுக்க உதவியது யார் தெரியுமா?
சரணடைந்த மக்கள் கூட்டத்தை நோக்கி, “ஒரு மணி நேரம் புலிகள் இயக்கத்தில் பணிபுரிந்திருந்தாலும் அவர்கள் தனியே வந்து விடுங்கள். விசாரணைக்குப் பிறகு விடுவித்து விடுவோம்” என்று ராணுவம் அறிவித்துள்ளது. பெரும்பாலும் கடைசி நேரத்தில் வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்ட இளைஞர், இளம்பெண்கள் எழுந்து உண்மையை ஒப்புக் கொண்டு சரண் அடைந்துள்ளனர்.
ஆனால், பல ஆண்டுகள் இயக்கத்தில் இருந்தவர்கள் ஒப்புக் கொள்ளாமல் அமைதியாக இருந்துள்ளனர். அந்த நிலையில் பொதுமக்களே எழுந்து, ‘இதோ இவன்தான் என் மகனை இயக்கத்துக்குத் தூக்கிக் கொண்டு போனவன். அதோ அவன்தான் என் மகளை இயக்கத்துக்கு இழுத்துக் கொண்டு போனவன்’ என்று சரமாரியாகக் காட்டிக் கொடுத்திருக்கிறார்கள். கடைசி நேரத்தில் அந்தத் தமிழ் மக்கள், புலிகள் மீது எவ்வளவு கோபத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இது மிகப் பெரிய சான்று. வலுக்கட்டாயமாக இயக்கத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டவர்களும், தங்கள் பங்குக்குச் சக புலிகளைக் கணிசமாகக் காட்டிக் கொடுத்துள்ளனர்.
சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலிகள் இவ்விதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 ஆயிரம் பேர், கடந்த மூன்று ஆண்டுகளில் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டு, தொழிற் பயிற்சி அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது வவுனியாவிலுள்ள முன்னாள் புலிகளின் மறுவாழ்வு மையத்தில் இருப்பது சுமார் 350 பேர் மட்டுமே. பெண்கள் மையத்தில் சுமார் 20 பேர் மட்டுமே இருக்கிறார்கள். இந்த மறுவாழ்வு மையத்தில் இவர்களுக்கு ஒரு வருடத்தில் ஆங்கிலம், சிங்களம், கம்ப்யூட்டர் மற்றும் விருப்பமான தொழில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அதன்பின் விடுவிக்கப்படுகிறார்கள்.
நாங்கள் ஏற்கெனவே அனுமதி பெற்றிருந்ததால், வவுனியாவில் உள்ள அந்தப் பெண்கள் மறுவாழ்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டோம். நுழைந்ததுமே நம்மை வரவேற்றது, சின்ன குடிசை சைஸிலிருந்த ஒரு பத்ரகாளியம்மன் கோவில். ஹிந்துக் கோவில்களை ராணுவம் இடிக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு நடுவே, ராணுவ முகாமிற்குள்ளேயே ஹிந்துக் கோவில் இருந்தது எங்களை வியப்படைய வைத்தது. (ராணுவம் இந்தக் கோவிலை அனுமதித்தது மட்டுமல்ல; அந்தக் கோவிலை அவர்களும் வணங்குவது உண்டு - என்று எங்களிடம் தெரிவித்தனர் அங்கிருந்த முன்னாள் பெண் புலிகள்.)
அந்த முகாமில் இருந்த முன்னாள் பெண் புலிகள், ஒரு வித சலிப்புடனே எங்கள் முன் வந்து அமர்ந்தனர். நாங்கள் தமிழகப் பத்திரிகையாளர்கள் என்று தெரிந்த பிறகு, முக மலர்ச்சியோடு பேச ஆரம்பித்தனர். “நான்கு வருடங்களாக விசாரிப்பு, விசாரிப்பு என்று, கேட்டதையே பலமுறை கேட்டு எங்களுக்குப் போரடித்து விட்டது. இங்கு மறுவாழ்வு மையம் வந்த பிறகுதான், தற்போது நிம்மதியாக இருக்கிறோம். இப்போது, மறுபடி யாரோ சந்திக்க வருகிறார்கள் என்றதும், விசாரணைக்குத்தான் வருகிறார்களோ என்று சலித்துப் போனோம். நல்லவேளை இது நீங்களாக இருக்கிறீர்கள்” என்று அவர்கள் பெருமூச்சு விட்டனர்.
இதனாலேயே அவர்களிடம் அதிகமாகக் கேள்விகள் கேட்காமல், அவர்கள் போக்கிலேயே பேச விட்டோம். “தமிழகத்தில் மாணவர்கள் போராடுவதைத் தொலைக்காட்சிகளில் பார்த்தோம். நாலைந்து வருடங்களுக்கு முன்னால் போராடியிருந்தால் ஏதாவது பலன் இருந்திருக்கும். இப்போது காலம் கடந்து, எல்லாம் முடிந்த பிறகு போராடி என்ன பயன்?” என்றார்கள் சலிப்போடு.
அந்தப் பெண்களில், ஐந்து வருடங்களுக்கு மேலாக இயக்கத்தில் இருந்த பெண்கள் நாலைந்து பேரை மட்டும் தேர்வு செய்து தனியே பேசினோம். “இயக்கத்தில் விரும்பித் தான் சேர்ந்தோம்” என்றார்கள்.
“தனி நாடு கிடைக்கும்; அங்கு நிம்மதியாக வாழலாம் என ஆசைப்பட்டு, புலிகளின் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டு இயக்கத்தில் இணைந்தோம். முழுப் பயிற்சி எடுத்து சயனைட் குப்பிகளும் மாட்டிக் கொண்டுதான் இயக்கத்தில் இருந்தோம். ஆனால், ஜெயிக்க முடியாது; தோற்று போவோம் என்பது தெரியத் தெரிய எங்களுக்கு ஆர்வம் குறைந்தது. அப்பாவி மக்களின் உயிரிழப்புகள் அதிகமானபோது, எங்கள் மனதில் மாற்றம் ஏற்படத் துவங்கியது. எங்களது படைகள் பின்வாங்கப் பின்வாங்க நாங்கள் உறவினர்களோடு நெருங்க ஆரம்பித்தோம். அவர்களும் ‘இனி வெல்ல முடியாது; எங்களோடு வெளியே வந்து விடு’ என்று சொல்ல ஆரம்பித்தார்கள். ‘புலிகளும் சரண் அடையலாம். கொல்ல மாட்டோம்’ என்று ராணுவம் அறிவித்ததை நம்பி சரணடைந்தோம். அதனால் இன்று உயிரோடு இருக்கிறோம்” என்றார்கள் அவர்கள்.
“தடுப்புக் காவல், சிறை என்று ஓரிரு வருடங்கள் துன்பம் அனுபவித்தாலும், இப்போது நிம்மதியாக இருக்கிறோம். இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியே சென்று விடுவோம். அதன் பின் சுதந்திரமாக வாழ்வோம்” என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்கள்.
“நாங்கள் சரணடையச் செல்லும் முன், ‘எங்களைக் கொன்று விடுவார்கள்; பாலியல் பலாத்காரம் செய்து விடுவார்கள்’ என்றெல்லாம் ஒருவித அச்சம் எங்கள் மனதில் இருந்தது. ஆனாலும், வேறு வழியில்லாமல் சரணடைந்தோம். ஆனால், அந்த மாதிரி எந்த கெட்ட சம்பவங்களும் எங்களுக்கு நடக்கவில்லை. இங்கே நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம். எங்கள் பிறந்த நாளை ராணுவத்தினரே கொண்டாடுகிறார்கள். தீபாவளி, கிறிஸ்துமஸ், தமிழ் வருடப் பிறப்பு போன்ற எல்லா பண்டிகைகளையும் கொண்டாட இங்கு ஏற்பாடு செய்து தருகிறார்கள். அன்றைய தினங்களில் எங்கள் உறவினர்களை இங்கு வரவழைத்து, அவர்களும் எங்களோடு உணவருந்தி மகிழ அனுமதிக்கிறார்கள். உண்மையில் நாங்கள் இங்கு நிம்மதியாக இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
அப்படி கூறிய அவர்கள், ஓடிப் போய், அது குறித்த ஃபோட்டோ ஆல்பத்தையும் எடுத்து வந்து எங்களிடம் காட்டினார்கள். ஒரு முன்னாள் பெண் புலிக்கு, ராணுவமே திருமணம் செய்து வைத்துள்ளது. அங்கிருந்த ஒரு பெண்ணின் சிறு வயது மகனும், அப்பெண்ணுடனே முகாமில் தங்கியுள்ளான். அவனை ராணுவமே படிக்க வைக்கிறது. அந்தக் குழந்தை, அங்குள்ள பெண் ராணுவ அதிகாரிகளுக்கெல்லாம் செல்லப் பிள்ளையாக திகழ்கிறான். அவனது பெயர் சூட்டு விழாவையும் ராணுவமே தமிழர் மற்றும் ஹிந்து முறைப்படி நடத்தி வைத்துள்ளது.
‘தமிழீழம் கிடைக்காமல் போனதில் வருத்தமா?’ என்ற கேள்வியையும் அந்த முன்னாள் புலிகளிடம் நாங்கள் வைத்தோம். “வருத்தம் இல்லாமல் எப்படி இருக்கும்? ஆனால், ஈழம் கிடைக்கவில்லை என்பதற்காக இங்குள்ள தமிழினமே அழிந்து போக வேண்டும் என்று நினைக்க முடியுமா? எத்தனையோ விஷயங்களுக்கு வாழ்க்கையில் ஆசைப்படுகிறோம். அவை கிடைக்கவில்லை என்பதற்காக உடனே உயிரையா விடுகிறோம்? ஏமாற்றத்தை ஏற்றுக் கொண்டு வாழ்வதில்லையா? அப்படித்தான் இதுவும். பலரின் வாழ்க்கையையும், உடல் அங்கங்களையும், மன நிம்மதியையும் இழக்கச் செய்தது போதும். திரும்ப தமிழீழம் என்று ஆரம்பித்துக் குழப்பங்களை உருவாக்கக் கூடாது. அது முடிந்து போன கதை. இனி சாத்தியமில்லாத விஷயம்” என்றார்கள் உறுதி கலந்த குரலில்.
சிறுவர், சிறுமியரை புலிகள் வலுக் கட்டாயமாக இழுத்துச் சென்று இயக்கத்தில் சேர்த்தது பற்றி அவர்களிடம் கேட்டோம். இயக்கத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருந்த பெண் (பெயர் நீக்கப்பட்டுள்ளது.) அது குறித்துப் பேசினார். “நான் சேர்ந்த காலத்தில் எல்லாம் இளைஞர்கள் இயக்கத்தில் விரும்பி வந்து சேர்ந்தனர். இயக்கத்தினர், ‘வீட்டுக்கு ஒரு பிள்ளையை இயக்கத்துக்குக் கொடுங்கள்’ என்று வேண்டுகோளாக பிரச்சாரம் செய்வார்கள். வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல மாட்டார்கள். அதன் பிறகு ஒரு கட்டத்தில் ‘வீட்டுக்கு ஒரு பிள்ளை’ என்பதைக் கட்டாயமாக்கினார்கள்.
“2004-க்குப் பிறகு, தோல்விகள் தொடரத் தொடர கண்ணில் பட்ட எல்லா சிறார்களையும் இயக்கத்துக்கு இழுத்துக் கொண்டு போகும் நிலை ஏற்பட்டது. தாய்மார்கள் அழுது கொண்டே பின்னால் ஓடி வருவார்கள். மனசுக்குக் கஷ்டமாக இருக்கும். ‘உன் பிள்ளையைப் போர் முனைக்கு அனுப்ப மாட்டோம். மற்ற வேலைக்குத்தான் வைத்துக் கொள்வோம் போ’ என்று அந்தத் தாய்மார்கள் துரத்தப்படுவார்கள். பாவமாக இருக்கும். சிலர் மண்ணை அள்ளித் தூற்றி விட்டுக் கூடப் போவார்கள்” என்று பேசிக் கொண்டே போனவர், திடீரென உடைந்து கண் கலங்கியபடி “மறக்க விரும்புகிறேன்... எல்லாவற்றையும் மறக்க விரும்புகிறேன். மன்னியுங்கள்” என்று தலையை கவிழ்த்துக் கொண்டார்.
அவரை ஆறுதல்படுத்தி புதிய வாழ்க்கைக்கு வாழ்த்துச் சொல்லி அவரை தைரியப்படுத்தினோம். அதன்பின் அவரிடம் நாங்கள் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ‘அரசியல் ரீதியான தீர்வுக்காகப் பல வாய்ப்புகள் வந்தபோதும், புலிகள் இயக்கம் அதை நழுவ விட்டதே... அப்போதெல்லாம் அது தவறு என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?’ என்று மற்றவர்களிடம் கேட்டோம். “இது சரி, இது தவறு என்று சொல்லும் அளவுக்கெல்லாம் எங்களுக்கும், தலைமைக்கும் தொடர்புகள் கிடையாது. எங்களுக்கு என்ன உத்தரவு வருகிறதோ, அதைச் செய்வோம். அவ்வளவுதான். இறுதிப் போர் நடந்த காலகட்டத்தில், எங்களுடன் இருந்த தமிழ் மக்களே எங்களை வெறுத்துத் தூற்ற ஆரம்பித்தபோதுதான், தலைமையின் உத்தரவுகளுக்கு முரண்பட ஆரம்பித்தோம். நாங்களே எங்களுக்குள் பேசி வைத்து ராணுவத்திடம் சரணடைந்து விட்டோம்” என்றார்கள் அவர்கள்.
இறுதிக் கட்டப் போரின்போது, புலிகளைப் பொதுமக்களே தூற்றினார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், புதுக்குடியிருப்பு நகரில் நாங்கள் சந்தித்த இளைஞர் ஒருவர் புலிகள் மீது அப்படி ஒரு கோபத்தோடு எங்களிடம் பேசினார். “என் வயதில் நீங்கள் ஒரு இளைஞனை இங்கு சந்தித்தால், அவன் போர் நேரத்தில் வெளிநாட்டுக்குத் தப்பிப் போனவனாகவோ, அல்லது வெளிமாகாணங்களுக்குத் தப்பிப் போனவனாகவோதான் இருப்பான். இங்கு இருந்திருந்தால் அவன் இயக்கத்திற்கு இழுக்கப்பட்டு போருக்குப் பலி கொடுக்கப்பட்டிருப்பான். நான் தப்பிப் பிழைத்தது பேரதிசயம். என்னை நான்கு முறை இயக்கத்துக்கு இழுத்துக் கொண்டு போய் விட்டார்கள். ஒவ்வொரு முறையும் தப்பி வந்தேன். தப்பி வந்தால் என் வீட்டுக்குப் போக முடியாது. எங்காவது ஒரு வீட்டில் பதுங்கி இருப்பேன். சாப்பிடக் கூடப் பணம் இருக்காது. இதனால் திருடனானேன். களவாடித்தான் பல நேரம் பசியாறினேன். திரும்ப வேறு ஊரில் என்னைப் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள்.
“இயக்கத்திலிருந்து தப்பி ஓடியவன் என்று அடையாளம் தெரிவதற்காக, எனக்கு மொட்டை போட்டு விட்டார்கள். அப்படியும் தப்பிப் போனேன். புலிகள் முகாமில் பல சிறார்கள் அழுதபடி கிடப்பார்கள். அவர்களிடம் எல்லாம் பேரம் பேசினேன். ‘உன்னை உன் வீட்டில் கொண்டு போய் விட்டால் எனக்குப் பணம் பெற்றுத் தர வேண்டும். உன் வீட்டில் எனக்கும் அடைக்கலம் தர வேண்டும்’ என்றெல்லாம் பேரம் பேசி அவர்களையும் என்னுடன் அழைத்துக் கொண்டு தப்பிப் போயிருக்கிறேன். அதேபோல், சில வீடுகளில் பணமும் பெற்றேன். சில வீடுகளில் அடைக்கலமும் அடைந்தேன். ‘எல்லோரையும் கொன்னுட்டுத் தனி நாடு வாங்கி யாரைக் குடியமர்த்தப் போகிறீர்கள்’ என்று கோபத்தில் புலிகளிடம் கேள்விகள் கேட்டு, அவர்களிடம் அடி கூட வாங்கியிருக்கிறேன்.
“சுதந்திராபுரத்தில் ரிஸீவிங் பாயின்ட் அமைக்கப்பட்டு ‘நோ ஃபயரிங் ஸோன்’ என்று ராணுவம் அறிவித்ததும், மக்கள் சந்தோஷத்தோடு புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து கூட்டமாக வெளியேறினார்கள். நானும் அவர்களோடு போனேன். வரிசையாக எல்லோரும் போய்க் கொண்டிருந்தபோது, எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த மக்களிடையே ஒரு பெண் புலி, மனித வெடிகுண்டாக வெடித்துச் சிதறினார். அந்த வெடியில் பொதுமக்கள் பலர் அங்கேயே விழுந்து மடிந்தனர். பலர் உடல் உறுப்புகளை இழந்து ரத்த வெள்ளத்தில் துடித்தனர். நல்லவேளையாக எனக்கு எதுவும் ஆகவில்லை. கீழே விழுந்ததோடு சரி, விழுந்த எல்லோரும் எழுந்து பின்புறமாக ஓடினோம். அப்போது எதிர்த்து வந்தது ஒரு மோட்டார் சைக்கிள். திடீரென அந்த மோட்டார் சைக்கிளும் அந்த ஆண்புலியோடு வெடித்து சிதறியது. மேலும் பலர் செத்தார்கள். மேலும் பலர் உடல் உறுப்புகளை இழந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார்கள். இதில்தான் எனக்கு முதுகுபுறத்தில் காயங்கள் ஏற்பட்டன. அந்த இரு மனித குண்டுகள் வெடித்ததும், ராணுவம் பின்வாங்கிப் போய் விட்டது. விடுதலைக்காக ஆசையுடன் சென்ற நாங்களும் பழையபடி புலிகளின் எல்லைக்குள்ளேயே திரும்பி வர வேண்டியதாயிற்று.
“அப்புறம் மற்றொரு கட்டத்தில்தான் நான் ரிஸீவிங் பாயின்டுக்கு தப்பி வந்தேன். நான் ஒரு தமிழன். நான் சொல்கிறேன்... இலங்கை ராணுவத்தை விடப் பல மடங்கு கொடியவர்கள் விடுதலைப் புலிகள். அவர்கள் தலைமையில் ஒரு நாடு அமைந்திருந்தால், அது சுடுகாடாகத்தான் தமிழர்களுக்கு இருந்திருக்கும். இரக்கமற்ற படுபாவிகள் அவர்கள்” என்று ஆவேசமாகப் பேசிய அந்த இளைஞரை, நாங்கள் சந்தித்தது தற்செயலாகத்தான். புதுக்குடியிருப்பு நகரத்தில் ஒரு சின்ன ஜவுளிக் கடையில் துணி வாங்கிக் கொண்டிருந்த இரு பெண்களிடம் பேச்சுக் கொடுக்கலாம் என்று நாங்கள் சென்றபோது, அதே கடை வாசலில் பைக்கில் வந்து இறங்கினார் அந்த இளைஞர். சுமார் 25 வயது இளைஞர் என்பதால், அவர் தமிழீழத்துக்கு ஆதரவாக பேசக்கூடும். அவரது கருத்தையும் கேட்கலாம் என்ற எண்ணத்தில்தான் அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். ஆனால், அந்த இளைஞரோ கொட்டித் தீர்த்து விட்டார்.
“நான் வெளிநாடு சென்று சம்பாதிக்கும் ஐடியாவில் இருக்கிறேன். ஆனால், புலிகள் மனித வெடி குண்டாக வெடித்தபோது, என் முதுகின் மேற்புறத்தில் ஏற்பட்ட காயத்தின் தழும்புகள் இன்னமும் இருக்கின்றன. வெளிநாடு செல்லும்போது, நான் இலங்கைத் தமிழர் என்று யாராவது சந்தேகப்பட்டு என்னைச் சோதனையிட்டால், இந்த வெடிக்காயங்களைப் பார்த்து, என்னை விடுதலைப் புலி என்று நினைக்கக் கூடும். எனவே, அந்தப் பகுதியில் பச்சை குத்தியிருக்கிறேன் பாருங்கள்” என்றபடி எங்கள் காருக்குள் வந்து சட்டையைக் கழட்டி முதுகை காட்டினார் அந்த இளைஞர். (அவரது எதிர்கால நலன் கருதி, நாங்களே அவரது பெயரையும் முகத்தையும் தவிர்த்துள்ளோம்.)
நாங்கள் கிளம்பும்போது, “நீங்கள் தமிழகத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள். நான் சொன்னதை நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, நான் சொன்னதை நீங்கள் எழுதுவீர்களோ இல்லையோ தெரியாது. ஆனாலும்... என்ற ஊரில் ஒரு அரசு ஆஸ்பத்திரி உள்ளது. அங்கு..... என்ற பெயரில் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் இருக்கிறார். அவரது குடும்பத்தை மட்டும் தவிர்க்காமல் சந்தித்து விட்டுப் போங்கள்” என்று கூறி வழியனுப்பி வைத்தார் அந்த இளைஞர்.
உடனே அந்தக் குடும்பத்திடம் அப்படி என்ன தகவல் இருக்கிறது என்பதை அறியும் ஆசை எங்களுக்குள் எழுந்தது. அந்த ஊரை நோக்கி காரைச் செலுத்தச் சொன்னோம்.
(தொடரும்)
Aucun commentaire:
Enregistrer un commentaire