samedi 11 mai 2013

வடமாகாண சபைத் தேர்தலுக்கு தயார் : பஷில்


வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பல்வேறு கட்சிகளுக்கும் வேறுபாடான நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆனால் தேர்தலை நடத்தவேணடும் என்று ஜனாதிபதி தீர்மானித்துள்ள நிலையில் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டியது பங்காளிக் கட்சிகளின் கடமையாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
காணி பொலிஸ் அதிகாரங்களை நீக்குவது தொடர்பில் பல்வேறு கட்சிகள் யோசனைகளை முன்வைத்துள்ளன. ஆனால் அவை தொடர்பில் ஆளும் கட்சி இதுவரை எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வடக்குத் தேர்தலுக்கு ஆளும் கட்சி முழுமையாக தயாராகியுள்ளது. வடக்கில் எமது சேவைகளை தொடர வடக்குத் தேர்தலின் வெற்றி மிகவும் முக்கியமாகும். எமக்கு வெற்றி கிடைக்குமானால் அது மக்களுக்கு கிடைக்கும் வெற்றியாகவே அமையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வடக்குத் தேர்தலுக்கான ஆளும் கட்சியின் தயார் நிலை மற்றும் தேர்தலை நோக்கியதான அரசியல் நகர்வுகள் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்
வடமாகாண சபைத் தேர்தலுக்கு ஆளும்கட்சி தயாராகிவிட்டது. இதற்கான வேலைத்திட்டங்களில் நாங்கள் ஈடுபட்டுவருகின்றோம். வடக்குத் தேர்தல் தொடர்பில் நாம் சில அரசியல் நகர்வுகளை முன்னெடுத்துள்ளோம். அவை ஒவ்வொரு தேர்தல்களிலும் முன்னெடுக்கப்படும் விடயங்களாகும்.
உதாரணமாக 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் பதவியேற்கும்போது 55 எம்.பி. க்களே ஆளும் கட்சியில் இருந்தனர். ஆனால் 2010 ஆம் ஆண்டுவரை அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து ஆட்சியில் இருந்தோம். அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியையும் பெற்றோம். அதுபோன்று எந்தவொரு தேர்தலோ அல்லது செயற்பாட்டிலோ அரசியல் ரீதியில் ஈடுபடுவது வழக்கமாகும்.
வடக்கில் புலிகளை தோற்கடித்து மக்களுக்கு சுதந்திரத்தை எமது அரசாங்கம் பெற்றுக்கொடுத்தது. மனிதாபிமான செயற்பாடுகள் முடிவடைந்ததும் வடக்கில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பித்தது. அவற்றில் சில குறைபாடுகள் இருக்கலாம். முடியுமானவரை வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
இந்நிலையில் வடக்கில் அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களை மேலும் பலப்படுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தலின் வெற்றி மிகவும் முக்கியமானதாகும். வடக்குத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெறும் வெற்றியானது வடக்கு மக்களுக்கு கிடைக்கும் வெற்றியாகும்.
வடக்குத் தேர்தலில் ஆளும் கட்சி கூட்டாகவே போட்டியிடும். வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான வேலைத்திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும்.
இதேவேளை சிலர் வடக்குத் தேர்தலை தற்போதே நடத்தவேண்டாம் என்று கோரிவருகின்றனர். அமைச்சர் விமல் வீரவங்ச வட மாகாண சபைத் தேர்தலை தற்போது நடத்தவேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கருஜயசூரியவும் ஆணைக்குழுக்களை நியமிக்காது தேர்தலை நடத்தக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரனும் தேர்தலுக்கு வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் வரவழைக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட முறையில் இப்போதே வட மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் பின்னர் நடத்தலாம் என்பது எனது நிலைப்பாடாகும்.
இவ்வாறு பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர். ஆனால் நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வட மாகாண சபைத் தேர்தலை இவ்வருடம் நடத்தவேண்டும் என்று தீர்மானித்துவிட்டார். அவ்வாறு தீர்மானித்துள்ள நிலையில் அதனை நடைமுறைப்படுத்தவேண்டியது எமது கடமையாகும். பங்காளிக் கட்சிகளினதும் கடமையாகும்.
இது இவ்வாறு இருக்க காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்குவது தொடர்பில் பல்வேறு கட்சிகள் யோசனைகளை முன்வைத்துள்ளன. ஆனால் அவை தொடர்பில் ஆளும் கட்சி இதுவரை எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை. பலரும் பல்வேறு வகையில் யோசனைகளை முன்வைத்துள்ளனர்.
எது எவ்வாறெனினும் வடக்குத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பானது முழுமையாக மக்கள் மீது நம்பிக்கை வைத்தே இறங்கியுள்ளது என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire