சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி அதிர வைத்த மாவோயிஸ்டுகள், அடுத்த அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர். மேலும் 15 பேரை படுகொலை செய்யப் போவதாக அறிவித்து பீதியை ஏற்படுத்தியுள்ளனர்.
சத்தீஸ்கரின் தர்பா பள்ளத்தாக்கு பகுதியில் அதிரடித் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 28 பேரை படுகொலை செய்தனர். இந்த நிலையில் தர்பா பிரதேச மாவோயிஸ்டு அமைப்பின் சார்பில் சத்தீஸ்கரின் சுக்மா மாவட்ட ஆட்சியருக்கு ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், “சல்வா ஜூதும் அமைப்பைச் சேர்ந்த 15 செயற்பாட்டாளர்கள் மற்றும் காவல்துறையினரை நாங்கள் தண்டிப்போம். உங்களது முழு பாதுகாப்புப் படையைக் கொண்டு அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தாலும் அவர்களை உங்களால் பாதுகாக்க முடியாது” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த 15 பேரின் பெயரையும் கூட மாவோயிஸ்டுகள் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே கடிதத்தில், பஸ்தார் பிரதேசத்தில் இருந்து சி.ஆர்.பி.எப். படை விலக்கிக் கொள்ள வேண்டும், அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை நிறுத்த வேண்டும், பசுமை வேட்டை எனும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்த வேண்டும், விகாஸ் யாத்திரை அல்லது பரிவர்த்தன் யாத்திரை என்ற பெயரில் பேரணிகளை நடத்தக் கூடாது, சிறையில் உள்ள மாவோயிஸ்டுகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் மாவோயிஸ்டுகள் முன்வைத்துள்ளனர்.
மாவோயிஸ்டுகளின் இந்த புதிய மிரட்டல் கடிதம் அங்கு பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire