lundi 13 mai 2013

இலங்கையில் ஹிந்துக் கோவில்கள் இடிக்கப்படுகின்றனவா? துக்ளக்’ - 5


Buddhaஹிந்துக் கோவில்களை அழித்து, புத்த ஆலயங்களைக் கட்டுவதாகத் தமிழகம் முழுக்கப் பிரசாரம் நடந்தது. நீங்கள் தமிழ்ப் பகுதி முழுக்க எங்கு வேண்டுமானாலும் விசாரணை நடத்திக் கொள்ளுங்கள். ஒரு கோவில் கூட இடிக்கப்பட்டிருக்காது” என்று சவால் விட்டார் ஒரு ராணுவ அதிகாரி. மேலும் அவர், “புத்த மதம், ஹிந்து மதத்தோடு பின்னிப் பிணைந்ததுதான். புத்தர் கோவில்களில், ஹிந்துக் கடவுள்களுக்குக்கூட இடம் உண்டு. புத்த மதத்தினர் ஹிந்து தெய்வங்களையும் வணங்கியே வருகிறார்கள். போருக்குப் பிறகு, ஹிந்துக் கோவில்கள் அரசு செலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழகத்தில் ஒரு முதலமைச்சர் ஸ்தானத்தில் இருந்தவரே, இலங்கையில் ஹிந்துக் கோவில்கள் இடிக்கப்படுவதாகப் புகார் தெரிவித்தார். தமிழகத்திற்குத் தவறான தகவல்களே போய்ச் சேருகின்றன என்பதற்கு, இதைவிட நல்ல உதாரணம் கிடையாது” என்றும் குறிப்பிட்டார்.
நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான சரவணபவனிடம் இதுபற்றிக் கேட்டபோது, “இங்கே புதிதாக புத்தர் கோவில்களைக் கட்டுகிறார்களே தவிர, ஹிந்துக் கோவில்கள் எதுவும் இதுவரை இடிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை” என்றார் அவர். யாழ்ப்பாணம் மேயரைச் சந்தித்தபோது, “ஹிந்துக் கோவில்கள் எதுவும் இடிக்கப்படவில்லை. இங்குள்ள ஒவ்வொரு ஹிந்துக் கோவிலும் பல லட்சம் ரூபாய் அரசு செலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றன” என்றார்.
கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முல்லைத் தீவு பகுதிகளில் புதிய புத்தர் கோவில்கள் எழுந்திருப்பதை நாங்களே நேரில் பார்த்தோம். அது பற்றி ராணுவ அதிகாரி ஒருவரிடம் விளக்கம் கேட்டோம். “தமிழ்ப் பகுதிகளில் புத்தர் கோவில்களை எழுப்ப வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இந்தக் கோவில்களை யாரும் எழுப்பவில்லை. முன்பு இந்தப் பகுதிகள் எல்லாம் முழுக்க முழுக்கப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால், தற்போது தேசியப் பாதுகாப்பு அடிப்படையில் இங்கெல்லாம் ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாம்களில் இருக்கும் புத்த மதத்தினர் வழிபடுவதற்காக இந்தக் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு புத்தக் கோவில் வந்து விட்டது என்பதற்காக, ஹிந்து மதம் அழிக்கப்படுகிறது என்று அர்த்தம் அல்ல. இங்கிருந்து புலம் பெயர்ந்து போன ஹிந்துக்கள், கனடா, பிரிட்டன், நார்வே, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் எத்தனை முருகன் கோவில்களை, விநாயகர் கோவில்களைக் கட்டியுள்ளார்கள் என்று பாருங்கள். இதனால் அவர்கள் அங்குள்ள கிறிஸ்தவ மதத்தை அழிக்க நினைக்கிறார்கள் என்றா, அங்குள்ள மக்கள் நினைத்தார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
கட்டம் இடப்பட்ட செய்தி 2
தமிழர்கள் தற்போதும் வெளிநாடுகளுக்கு ஓடுவது ஏன்?
கிளிநொச்சி, முல்லைத் தீவு பகுதியில் தற்போது வசிக்கும் தமிழர்களுக்கு, புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் அவ்வப்போது அல்லது மாதாமாதம் பணம் அனுப்பி உதவி வருகிறார்கள். ‘தனி ஈழமா? அப்பா... சாமி... பட்டதெல்லாம் போதுமடா’ என்று எங்களிடம் கூறிய தமிழ்க் குடும்பத்தினர் பலர், தங்களின் படம், பெயர் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். காரணம் கேட்டபோது, “புலம் பெயர்ந்த தமிழர்கள் தனி ஈழத்துக்கு ஆதரவானவர்கள். ‘தனி ஈழம் எல்லாம் வேண்டாம்’ என்று சொன்னால், அவர்கள் கோபப்பட்டு பணம் அனுப்புவதை நிறுத்திக் கொள்வார்கள்” என்று தெரிவித்தனர்.
புலம் பெயர்ந்த தமிழர்கள் மீது உள்ளூர் தமிழர்களுக்குப் பொறாமையும், கொஞ்சம் கோபமும் இருப்பதை அவர்களது பேச்சில் உணர முடிந்தது. “அவர்கள் உயிரிழப்பு, அங்க இழப்பு, குடும்ப உறுப்பினர் இழப்பு என்று பெரிய சேதாரங்கள் வருவதற்கு முன், வெளிநாடுகளில் குடியேறி வாழ்க்கையை அமைத்துக் கொண்டு விட்டனர். இனி இங்கு ஈழம் அமைந்தால்கூட, அவர்களும், அவர்களது வாரிசுகளும் வந்து குடியேறுவார்களா என்பது கூட நிச்சயமில்லை. ஆனால், வெளியிலிருந்து ‘தனி நாடு, பொது வாக்கெடுப்பு’ என்று மேலும் மேலும் கிளறி விட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.
“ஏனென்றால், இங்கு பிரச்னை இருந்து கொண்டே இருந்தால்தான், அவர்கள் அந்தந்த நாடுகளில் குடியிருந்தபடியே காலம் தள்ள முடியும். மேலும், இங்கிருக்கும் மற்ற நெருங்கிய உறவினர்களை, ‘அகதிகள்’ என்ற பெயரில் அங்கு அழைத்துக் கொள்ளவும் முடியும். எனவே, தனி ஈழம் குறித்துப் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்துவதில் அர்த்தமில்லை” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
அதே நேரம் வன்னிப் பகுதி தமிழர்கள் பலருக்கு கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குப் புலம் பெயரும் ஆசை இன்னமும் இருக்கிறது. “இந்த மண்ணில் அனுபவித்த கொடூரங்களை மறக்க நினைக்கிறோம். மேலும், இங்குள்ள ராணுவ நடமாட்டம் இன்னும் ஒரு இறுக்கத்தையே எங்கள் வாழ்க்கையில் கொடுத்துக் கொண்டிருக்கிறது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பயம் உள்ளுக்குள் இன்னமும் இருப்பதை மறுக்க முடியாது. எனவே, அமைதியான ஒரு வெளிநாட்டில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் நல்லது என்ற மனோபாவம், எங்களில் பலருக்கு இன்னமும் இருக்கிறது. அதனால்தான் கள்ளத் தோணிகளில் வெளிநாடுகளுக்குத் தப்பிப் போகும் சம்பவங்கள் தொடர்கின்றன” என்றனர் ஒரு தமிழ்க் குடும்பத்தினர்.
நமது நிருபர்கள் எஸ்.ஜே. இதயாவும் ஏ.ஏ. சாமியும் கிளிநொச்சி பகுதியில் அவர்கள் பார்த்தவற்றையும், பலரிடம் பேசியவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள்....
கிளிநொச்சியில் உள்ள பெண்கள் ராணுவ முகாமிற்குச் சென்று, அங்கு புதிதாக இணைந்துள்ள தமிழ்ப் பெண்களைச் சந்திக்க முயற்சி செய்தபோது, கிளிநொச்சி ராணுவ முகாம்களுக்குப் பொறுப்பான மேஜர் பந்துல என்பவரைச் சந்தித்து அனுமதி பெற்றோம். கிளிநொச்சியில் ராணுவம் செய்து வரும் செயல்பாடுகள் குறித்து விவரித்தார்.former ltte-1
“நாங்கள் கிளிநொச்சியைக் கைப்பற்றிபோது, இங்கு பறவைகள் தவிர வேறு உயிரினங்கள் கிடையாது. வெறிச்சோடிக் கிடந்தது. புலிகள், இப்பகுதி மக்களை, தங்களுக்கு அரணாகத் தங்களுடனே அழைத்துச் சென்று விட்டனர். ஆனாலும், இங்கிருக்கும் வீடுகளையோ, ஹிந்துக் கோவில்களையோ ராணுவம் துளியளவும் சேதப்படுத்தவில்லை. இறுதிப் போர் முடிந்த இந்த நான்கு வருடங்களில், 42 ஆயிரத்து 580 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 35 ஆயிரத்து 605 தமிழர்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
“தமிழகத்தில் பிரசாரம் நடப்பதுபோல், இங்கு எந்த அவலநிலையும் இல்லை. கிளிநொச்சி முள்வேலி முகாமில் ஒரு குடும்பம் கூடக் கிடையாது. ராணுவத்தினரைத் தவிர, ஒரு சிங்களக் குடும்பம் கூட இங்கு குடியேற்றப்படவில்லை. எல்லாம் வதந்திகள்தான். இதுபோன்ற குற்றச்சாட்டைக் கிளப்புபவர்கள், ‘இந்த இடத்தில் முள்வேலி முகாம் உள்ளது. அதில் இன்னும் இத்தனை பேர் தங்கி இருக்கிறார்கள். இந்த இடத்தில் இத்தனை சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன’ - என்று ஆதாரத்தோடு சொல்ல வேண்டும். சும்மா வாய்க்கு வந்தபடி சொல்லக் கூடாது.
“உண்மையில் இலங்கை ராணுவம் இங்குள்ள தமிழர்களுக்கு உறுதுணையாகவே உள்ளது. அரசாங்கம் 1.75 மில்லியன் பணத்தை கிளிநொச்சி மறுவாழ்வுக்கென ஒதுக்கிச் செலவு செய்து வருகிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. நாங்கள் ராணுவத்தின் செலவில் 3 ஆயிரம் தமிழ் மாணவர்களைப் படிக்க வைக்கிறோம். இதுபோக, ஒவ்வொரு ராணுவ வீரரும், குறைந்தது மாதம் 100 ரூபாய், தமிழ் மாணவர்களின் கல்விக்காக நன்கொடையாகத் தருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் 400 தமிழ் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. ராணுவத்தின் செலவில் அவர்களுக்கு இலவச ஷுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு ராணுவமே இலவச சைக்கிள்களை வழங்கியுள்ளது.
“மேலும் இப்பகுதியிலுள்ள தமிழ் இளைஞர்கள், இளம் பெண்களுக்கு ராணுவத்தின் சார்பில் இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. எலெக்ட்ரிஷியன் வேலை, கொத்தனார் வேலை, தச்சு வேலை, டெய்லரிங் வேலை, சமையல் வேலை, பேக்கரி வேலை, செல்ஃபோன் ரிப்பேர், கம்ப்யூட்டர், அழகுக்கலை உள்ளிட்ட பல துறைகளில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை சுமார் 14 ஆயிரம் பேர் இந்தப் பயிற்சிகளைப் பெற்றுள்ளார்கள். இதில் முன்னாள் விடுதலைப் புலிகள் மட்டுமே 10 ஆயிரத்து 683 பேர்” என்று விளக்கினார் அவர்.
கடைசியாக அவர் ஒன்று சொன்னார். “ராணுவத்தின் வேலை பயங்கர வாதத்தை அழிப்பது மட்டும்தானே தவிர, தமிழர்களை அழிப்பது இல்லை. போர் எப்போதோ முடிந்து விட்டது. இப்போது ராணுவத்தின் லட்சியம், இங்கு ஐந்து கீகளை ஏற்படுத்துவதுதான். Rehabilitation, Reintegration, Reconstruction, Resettlement, Reconciliation (மறுவாழ்வு, மறு இணைப்பு, மறு நிர்மாணம், மறுகுடியேற்றம், மறு சமாதானம்) ஆகிய ஐந்தும்தான் இப்போதைய எங்கள் லட்சியம். அதை நிறைவேற்றுவோம்” என்றார்.
இதையடுத்து, இலங்கை ராணுவத்தில் இணைந்துள்ள 102 தமிழ்ப் பெண்களில், சுமார் 40 பெண்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு ஏற்படுத்தித் தரப்பட்டது. ராணுவ அதிகாரிகள் யாரும் அருகில் இல்லாமல் அந்த தமிழ்ப் பெண்களுடன் சுதந்திரமாக நாங்கள் உரையாடினோம். எல்லோரும் சுமார் 21 முதல் 25 வயது வரையிலான இளம்பெண்கள். 35 ஆயிரம் இலங்கை ரூபாய் சம்பளம். பிடித்தம் 5 ஆயிரம் ரூபாய் போக, 30 ஆயிரம் கையில் வழங்கப்படுவதாகத் தெரிவித்தனர். இது பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் தங்கள் குடும்பத்தினருக்குப் பேருதவியாக இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
அதில் ஒரு பெண், “ஏண்டா இந்த வேலையில் சேர்ந்தோம் என்று இருக்கிறது. வெளிநாட்டில் உள்ள உறவினர்கள் எல்லாம் எங்கள் குடும்பத்தைக் கேவலமாகப் பேசுகிறார்கள். ‘துரோகிகள்’ என்பது போல் பார்க்கிறார்கள். முன்பு எங்களுக்குச் செய்து வந்த உதவிகளை இதனால் நிறுத்திக் கொண்டTamilarmy womwnு விட்டார்கள்” என்றார் சோகமாக.
இன்னொரு பெண், “என் வீட்டிலும் நான் ராணுவத்தில் சேருவதற்குப் பலத்த எதிர்ப்பு. உறவினர்கள் தவறாகப் பேசுவார்கள் என்ற பயம் என் அம்மாவுக்கு இருக்கிறது. நான்தான் என் அம்மாவிடம், ‘நம் பொருளாதாரத்தை நாம்தான் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வெளிநாட்டில் சொகுசாக இருக்கும் உறவினர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, நாம் பட்டினி கிடந்து சாக முடியாது’ என்று தீர்மானமாகப் பேசி, அவரைச் சமாதானம் செய்து இப்பணியில் சேர்ந்தேன்” என்றார்.
எங்களிடமே சில பெண்கள், “நீங்கள் இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் அண்ணா? எங்களைத் தவறாக நினைக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அந்தளவுக்குக் குற்றவுணர்ச்சியை அவர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளார்கள், நமது தமிழ் உணர்வாளர்கள். (‘இது உங்கள் வாழ்க்கை. உங்களுக்கு எது சரி என்று தெரிகிறதோ, அதைச் செய்வதில் தவறில்லை. வெளிநாடுகளில் உள்ளவர்கள் வெறும் வார்த்தைகளை மட்டும்தான் உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்; வாழ்க்கையை அல்ல’ - என்பது அவர்களுக்கு நாங்கள் தந்த பதில்.)
போருக்குப் பிறகு அமைதியாகவும், நிம்மதியாகவும் தாங்கள் வாழ்வதாக அவர்கள் குறிப்பிட்டனர். ராணுவத்தினர், தங்களை மிகுந்த மரியாதையாகவும், கனிவாகவும் நடத்துவதாக அவர்கள் குறிப்பிட்டனர். நாங்கள் அவர்களைச் சந்தித்த அறையில், கேமெரா எதுவும் உள்ளதா, ஏற்கெனவே ராணுவத்தினர் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து ‘இப்படித்தான் பேச வேண்டும்’ என்று எச்சரித்துள்ளார்களா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்தது. இதையடுத்து சில பெண்களை அறைக்கு வெளியே அழைத்துச் சென்று, மரத்தடியில் நிறுத்தி தனியே பேசினோம். ராணுவ அதிகாரிகள் அதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. அங்கும் அந்தப் பெண்கள், அதே ரீதியிலேயே ராணுவத்தைப் புகழ்ந்தனர். ‘இப்படித்தான் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று எந்த நிபந்தனையும் எங்களுக்கு விதிக்கவில்லை’ என்று அடித்துச் சொன்னார்கள். ‘உண்மையிலேயே மிகுந்த பாசத்தோடு நடத்துகிறார்கள். வேலைக்குச் சேர்ந்த ஓரிரு மாதங்களிலேயே டூ வீலர் வாங்க லோன் கொடுத்துள்ளார்கள். நாங்கள் பெரும்பாலோர் தற்போது டூ வீலர் வைத்திருக்கிறோம்’ என்றார்கள் சந்தோஷம் பொங்க.
‘புலிகள் இயக்கத்தில் இருந்த பெண்கள் யார், யார்’ என்று அவர்களிடம் நாங்கள் கேட்டபோது, முதலில் சொல்லத் தயங்கினார்கள். பின்னர் அவர்கள் எங்களிடம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லி, கொஞ்சம் சகஜநிலைக்குத் திரும்பியதும், இருவர் கை தூக்கினார்கள். (சென்னை வந்தால் ரஜினியைப் பார்க்க முடியுமா? ஷாலினி, ஜோதிகா எல்லாம் இனி நடிக்கவே மாட்டார்களா? சிம்பு - தனுஷ் சண்டை உண்மையா - இப்படியெல்லாம் அமைந்தன அவர்களது கேள்விகள்.)
அந்த இருவரையும் நாங்கள் தனித்தனியே சந்தித்துப் பேசினோம். அவர்கள் சில மாதங்கள் மட்டுமே இயக்கத்தில் இருந்தவர்கள். (விடுதலைப் புலிகள் இயக்கத்தை அங்குள்ள தமிழர்கள் சுருக்கமாக ‘இயக்கம்’ என்று மட்டுமே குறிப்பிடுகிறார்கள்.)
அவர்கள் இருவருமே விரும்பி இயக்கத்தில் இணைந்தவர்கள் இல்லை. புலிகளால் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டவர்கள். ஆரம்பத்தில் வீட்டுக்கொரு பிள்ளையை இயக்கத்துக்குத் தர வேண்டும் என்று நிபந்தனை விதித்த புலிகள், இறுதிக் கட்டங்களில் இளைஞர், இளம் பெண்கள் யாராயிருந்தாலும் இயக்கத்திற்கு இழுத்துச் சென்று விடுவார்களாம். 14 வயது, 15 வயது சிறார்களையும் அவர்கள் விடவில்லையாம்.
முதல் பெண் (பெயர் நீக்கப்பட்டுள்ளது) இயக்கத்தில் இருந்தது சில மாதங்கள்தான். “முதலில் என்னையும், பிறகு என் தங்கையையும் இயக்கத்தில் பிடித்துச் சென்று விட்டார்கள். கடைசிக் கட்டப் போர் நடந்த நேரம் என்பதால், என்னைப் பயிற்சியில் எல்லாம் ஈடுபடுத்தவில்லை. பிற்பாடு நாங்கள் ராணுவத்தில் சரணடைந்த போது, நான் இயக்கத்தில் இருந்தவள் என்பதால், என்னை 9 மாதம் தடுப்பு முகாமில் ராணுவத்தினர் வைத்திருந்தனர். பின்னர் சிறு வயது என்பதால், கட்டாயத்தின் பேரில்தான் நான் இயக்கத்தில் இருந்தேன் என்பதை உணர்ந்து, என்னை விடுவித்து விட்டார்கள். அந்தத் தடுப்பு முகாமில் எந்தச் சித்திரவதைக்கும் நான் ஆளாகவில்லை. உணவு, உடை வழங்கியதோடு கல்வியைத் தொடரவும் உதவியது ராணுவம். என் தங்கைதான் என்ன ஆனாள் என்று இன்றுவரை தெரியவில்லை. புலிகள் பிடித்துக் கொண்டு போனதோடு சரி. அதன் பிறகு இறந்தாளா, இருக்கிறாளா என்பது கூடத் தெரியவில்லை” என்று கண் கலங்கினTamil girls armyார் அந்தப் பெண்.
இரண்டாவது பெண் (பெயர் நீக்கப்பட்டுள்ளது) 2008-ஆம் ஆண்டு இறுதியில் இயக்கத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டார். “என்னையும் என் அண்ணனையும் இயக்கத்தினர் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள். இருவரில் ஒருவரையாவது திரும்பப் பெற்று விட வேண்டும் என்று அம்மா அலையாத இடமில்லை. ஒவ்வொரு முகாமுக்கும் சென்று கெஞ்சி அழுதிருக்கிறார். பிறகு என் தங்கையையும் பிடித்துக் கொண்டு போனார்கள். ஆனால், என் தங்கை கொஞ்சம் தைரியமானவள். இயக்கத்தினர் பிடித்துக் கொண்டு போனாலும், ஓரிரு நாட்களிலேயே தப்பி வந்து வீட்டு வாசலில் நிற்பாள். எனக்கு வழியும் தெரியாது, தைரியமும் கிடையாது. அப்படி ஒரு முறை தப்ப முயன்று பிடிபட்டும் இருக்கிறேன். தப்பி ஓடுபவர்களை இயக்கத்தினர் மீண்டும் பிடித்தால், பையன்களுக்கு மொட்டை அடித்து விடுவார்கள். பெண்களுக்கு கிராப் வெட்டி விடுவார்கள். அப்போதுதான் மீண்டும் அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் பிடிக்க முடியும் என்பது அவர்களது யுக்தி. எத்தனையோ பெண் பிள்ளைகள் கூந்தலை இழக்க நேர்ந்ததற்காக அழுது கூப்பாடு போட்டிருக்கிறார்கள்.
“ஒன்றரை மாதங்கள் பயிற்சியில் இருந்தேன். துப்பாக்கி தூக்கும் அளவிற்கு எனக்கு வலு இல்லை. இரவில் பயத்தில் தூக்கமில்லாமல் விழித்திருப்பேன். தப்பி ஓடக் காத்திருக்கிறேன் என்று எண்ணி, ‘தப்பித்தால் சுட்டு விடுவோம்’ என்று மிரட்டுவார்கள். போரின் கடைசி நேரத்தில் ஆளில்லாமல், சின்னச் சின்னப் பிள்ளைகளையெல்லாம் இயக்கத்திற்குப் பிடித்துக் கொண்டு போனார்கள். தாய்மார்கள் எவ்வளவு அழுதிருக்கிறார்கள் தெரியுமா? ரைஃபிளைப் பிடிக்கக் கூட முடியாத சிறுவர்கள் எல்லாம் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனால்தான் புலிகள் என்றாலே எல்லோருக்கும் வெறுத்துப் போச்சு.
“2009 பிப்ரவரி மாதம் சுதந்திரா புரத்தில் வேறு சிலரோடு நானும் ரிஸீவிங் பாயின்ட்டுக்குச் சென்றேன். என் குடும்பத்தில் யார் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியாத நிலை. முகாமில் அம்மாவைப் பார்த்து விடலாம் என்று ஆசைப்பட்டேன். அது முதலில் நடக்கவில்லை. என் சின்னத்தம்பி என்றால் எனக்கு உயிர். அவனையும் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில், சாப்பிடாமலே பல நாள் முகாமுக்குள் சுற்றிச் சுற்றித் திரிந்தேன். ராணுவத்திடம் இன்னின்னாரைக் காணவில்லை என்று கடிதம் கொடுத்து வைத்திருந்தேன். பிற்பாடுதான், பக்கத்து வீட்டு அக்கா மூலமாக என் அம்மாவும் ரிஸீவிங் பாயின்ட்டுக்கு வந்துள்ளது தெரிந்து அவர்களைச் சந்தித்தேன்” என்றார்.
இந்தப் பெண், இயக்கத்தில் இருந்தது என்னவோ ஒரு சில மாதங்கள்தான். ஆனால், இவர் இயக்கத்தில் இருந்த பெண் என்பது ராணுவத்திற்குத் தெரிய வந்ததும், தடுப்புக் காவலில் இரண்டே முக்கால் வருடமும், சிறையில் நான்கு மாதங்களும் அடைக்கப்பட்டுள்ளார். அதற்குக் காரணம், இயக்கத்தில் இவருக்குச் சூட்டப்பட்ட பெயர்தான். இயக்கத்தில் இணைந்ததும் புலிகள், அவர்களுக்குப் புதிய தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவார்களாம். அதன்படி, இந்தப் பெண்ணிற்கு இறந்து போன ஒரு பெண் புலியின் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். அந்தப் பெயர் ராணுவத்தினருக்குத் தெரிந்த, பிரபலமான பெயர் என்பதால், இந்தப் பெண்தான் அவரோ என்ற ஐயத்தில், நீண்ட நாள் விசாரணைக்கு ஆளாகியிருக்கிறார்.
தன் இளமைப் பருவம் அநியாயமாகத் தொலைந்து போனதற்குப் புலிகள் இயக்கத்தையே குற்றம் சொல்லும் அந்தப் பெண், “நாங்கள் புலிகள் என்று தெரிந்த பிறகும் ராணுவத்தினர் கடுமையாக நடத்தவில்லை. நான் முகாமில் இருந்தவரை உணவு, உடை மட்டுமில்லாமல் கல்வியும் கொடுத்தார்கள். நான் பள்ளி இறுதித் தேர்வு எழுதியது ராணுவ முகாமில்தான். பாலியல் தொந்தரவு எதையும் நான் அனுபவிக்கவில்லை; பார்க்கவில்லை. என் கூட்டாளிகள் மத்தியில் கேள்விப்பட்டதும் இல்லை. ஆனால், வெளியில் அப்படி ஒரு பேச்சு உள்ளது. ஆனால், என்னளவில் அப்படி எதையும் நான் பார்க்கவில்லை’‘ என்றும் குறிப்பிட்டார்.
மேலும் “என் சித்தி குடும்பத்தினர் 2006-ல் பொங்கல் கொண்டாட யாழ்ப்பாணத்திலிருந்து எங்கள் ஊருக்கு (ஊரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது) வந்தனர். ஆனால், அவர்கள் வந்த நேரத்தில் இயக்கத்தினர் ‘பாதை குத்தி விட்டதால்’ (கண்ணி வெடி மூலம் பாதையை மறித்து விட்டதால்), அவர்கள் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிப் போக முடியாமல் நரக வேதனையை அனுபவித்தார்கள். மிகுந்த வசதி படைத்தவர்கள், இயக்கத்திற்குப் பணம் செலுத்தி விடுதலையாகிப் போன சம்பவங்கள் உண்டு. எல்லோருக்கும் அந்த வசதியில்லையே?” என்றும் அவர் குறிப்பிட்டார்.
புலிகள் இயக்கத்தில் விரும்பி இருந்தவர்களும் சரி, வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டவர்களும் சரி, போரின் இறுதிக்கட்டத்தில், ராணுவத்தின் ரிஸீவிங் பாயின்ட்களுக்கு சிவிலியன்களோடு சிவிலியன்களாக வந்து சரண்டர் ஆனார்கள். ஆனால், ராணுவத்தினர் அந்தப் புலிகளை எப்படி அடையாளம் கண்டுபிடித்துப் பிரித்தெடுத்தனர்? இங்குள்ள புலி ஆதரவாளர்களால் கொஞ்சமும் ஜீரணிக்க முடியாத அந்த உண்மைகள் அடுத்த வாரம்.
(குறிப்பு: பேட்டிகள் எல்லாம் பெரும்பாலும் ஆடியோ மற்றும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருப்பதால், அவற்றை மீண்டும் கேட்டு இலங்கைத் தமிழர்களின் வட்டார மொழியிலேயே கட்டுரையை வெளியிடும் வாய்ப்பு இருந்தது. எனினும், வாசகர்கள் புரிந்து கொள்வதற்குக் கடுமையாக இருக்கும் என்பதாலும், அடிக்கடி அடைப்புக்குள் விளக்கம் தர வேண்டியிருக்கும் என்பதாலும், பத்திரிகைத் தமிழிலேயே கட்டுரை வெளியாகிறது.)
(தொடரும்)

Aucun commentaire:

Enregistrer un commentaire