இலங்கையில் தமிழர் பகுதி மாகாண கவுன்சிங் அதிகாரங்களை பறிக்கக்கூடாது என்று, இந்திய வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித், இலங்கை மந்திரியிடம் வலியுறுத்தினார்.
இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் வடக்கு மாகாண கவுன்சிலுக்கு வருகிற செப்டம்பர் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. போருக்குப்பின்னர் தமிழர்களுடன் சமரச நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், தமிழர் பகுதியில் நடைபெற இருக்கும் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு ராஜபக்சே தலைமையிலான ஆளுங்கட்சிக்கு வேட்பாளர்கள் கிடைக்கவில்லை. இதனால் இலங்கையில் உள்ள தமிழ்ப் பத்திரிகைகளில் வேட்பாளர்கள் தேவை என்று விளம்பரம் கொடுக்கப்பட்டு இருந்தது.
மாகாண கவுன்சில் கலைப்பு?
இந்த நிலையில், இலங்கையில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சிகளில் ஒன்றான ஜே.எச்.யு. என்று அழைக்கப்படும் ஹெரிடேஜ் கட்சி, இந்த தேர்தலை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன் மாகாண கவுன்சில்களை கலைப்பதற்கு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளது. மேலும் இலங்கை அரசியல் சட்டத்தின் 13–வது சட்ட திருத்தத்தை ரத்து செய்யும்படி அடுத்த இரண்டு வாரத்திற்குள் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவோம் என்று, அந்த கட்சியின் துணைச் செயலாளரான உதய கம்மன்பிலா அறிவித்து இருக்கிறார்.
ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தின்போது இந்திய – இலங்கை இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இலங்கையில் மாகாண கவுன்சிங்கள் மற்றும் தமிழர் பகுதிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்காக 13–வது அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழர் பகுதியான வடக்கு மாகாணத்துக்கு வழங்கப்பட்டு உள்ள போலீஸ் அதிகாரத்தை பறிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மேலும் ராணுவ உயர் பாதுகாப்பு மண்டலம் என்ற பெயரில் முக்கிய இடங்களில் உள்ள தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா கண்டிப்பு
இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் இலங்கையின் வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெரீசுடன் நேற்று டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், இலங்கையில் தமிழர் பகுதி மாகாணத்தில் நிலம் பறிப்பு மற்றும் போலீஸ் அதிகாரம் நீக்கம் போன்ற நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்று கண்டிப்புடன் அறிவுரை வழங்கினார். இதுபோன்ற நடவடிக்கைகள் போருக்கு பிந்திய படிப்பினை தொடர்பான சிபாரிசுகளுக்கு எதிரானது என்றும், குர்ஷித் சுட்டிக்காட்டினார்.
தமிழக மீனவர்கள் 26 பேரை விடுதலை செய்ய வற்புறுத்தல்
வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித் இலங்கை மந்திரி பெரீசுடன் பேசியபோது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 26 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தினார். மேலும் 5 மீனவர்கள் கடந்த 2012–ம் ஆண்டில் இருந்தே இலங்கை சிறையில் வாடும் 5 மீனவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அவர்கள் மீதான வழக்கை மறு ஆய்வு செய்து அவர்களையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படியும் சல்மான் குர்ஷித் கேட்டுக்கொண்டார். இந்த பிரச்சினை குறித்து தமிழ்நாடு மற்றும் இலங்கை பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசி பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று இலங்கை மந்திரி பெரீஸ் தெரிவித்தார்.
|
samedi 18 mai 2013
தமிழர் பகுதி அதிகாரங்களை பறிக்கக் கூடாது இந்திய வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித்,
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire