அமைச்சுப் பதவியினை துறப்பேன் வடமாகாண சபை தேர்தல் இடம்பெற்றால்: விமல் வீரவன்ச
13 ஆவது திருத்தத்தை ஒழிக்காது வடமாகாண சபைத் தேர்தலை அரசு நடத்த முற்படுமானால் அமைச்சுப் பதவியினை துறக்க நான் ஒருபோதும் பின்னிற்க மாட்டேனென தேசிய விடுதலை முன்னணியின் தலைவரும் வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மாளிகாவத்தை பி.டி. சிறிசேன மைதானத்தில் இடம்பெற்ற தேசிய விடுதலை முன்னணியின் மேதினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் வீரசன்ச,
கடந்த நான்கு ஆண்டுகளாக ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் மே தினத்தை நடத்திய தேசிய விடுதலை முன்னணி இம்முறை தனியாக ஏன் மே தினத்தை அனுஷ்டிக்க வேண்டுமென எண்ணலாம். ஏனெனில் சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் கதைக்க முடியாத விடயங்களை விரிவாக விளக்கவே இம் முறை நாம் தனியாக எமது மேதின நடவடிக்கைகளை அமைத்துக்கொண்டோம்.
நாம் அரசில் அங்கம் வகிப்பதால் அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் அனுமதிப்போமென யாரும் எண்ணிவிடக்கூடாது. நாட்டை பாதுகாக்க எமது பதவிகள் உள்ளிட்ட எதையும் இழக்கத் தயாராகவுள்ளோம்.
யுத்தத்தின் பின்னர் பிரச்சினைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக நாம் நினைத்தோம். எனினும் ஆயுத ரீதியான போராட்டம் மட்டுமே முடிவிற்கு வந்துள்ளது. பிரிவினைவாதமும் பிரிவினைவாத நடவடிக்கைகளும் இன்னும் தொடரத்தான் செய்கின்றன. அதன் வெளிப்பாடே பிரிவினைவாதிகள் அன்று ஆயுதம் மூலம் பெற்றுக்கொள்ள முடியாதுபோன தனி ஈழத்தை உருவாக்கும் முயற்சியினை இன்று தேர்தல் ஒன்றின் மூலம் பெற முனைவதாகும்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வட மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக நாம் அறிகின்றோம். அவ்வாறு வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் காணி, பொலிஸ் அதிகாரம் கொண்ட முதலாவது மாகாணசபை என்ற பெயர் அதற்கு கிட்டும். குறித்த காணி, பொலிஸ் அதிகாரங்கள் பிரிவினைவாதிகளின் தனித் தமிழீழக் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்கும்.
எம்மை மீறி காணி, பொலிஸ் அதிகாரங்கள் உள்ளிட்ட 13ஆவது திருத்தத்துடன் வட மாகாண சபைத் தேர்தல் செப்டெம்பர் மாதம் நடைபெறுமானால் அரசிலிருந்து அமைச்சுப் பதவியை தூக்கியெறிந்து விட்டு வெளியேறுவோம். அத்துடன் வட மாகாண சபைத் தேர்தலை எதிர்த்து நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் நடத்தி அரசுக்கு அழுத்தம் கொடுப்போமென அவர் மேலும் தெரிவித்தார்.
(படம்: வீ.பிரியதர்சன்)
Aucun commentaire:
Enregistrer un commentaire