samedi 27 avril 2013

மேதின ஊர்வலம்;இடம் : Métro; Place des Fêtes.அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக ... ஒடுக்கப்படுவோரின் குரலாக ... மே - 01 - 2013 காலை 11 மணிக்கு மேதின ஊர்வலமும்- ஒன்றுகூடலும். தோழமையோடு அழைக்கின்றோம்! சர்வதேச சமூகப் பாதுகாப்பு அமைப்பு - பிரான்ஸ்

அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக ...     

ஒடுக்கப்படுவோரின்  குரலாக ... 
  
 உலக வரலாற்றில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நாம் மேதினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். வல்லரசுகளோ கண்டங்களைத் தாண்டி இயற்கை வளங்களையும் தொழிலாளர்களின் உழைப்பையும் சுரண்டியபடி இருக்கிறது. 
ஐரோப்பாவில் இளம் சந்ததியினர் படித்துவிட்டு தொழில் வாய்ப்பு ஏதுமின்றி சூன்யமான எதிர்காலத்தைச் சுமந்தபடி இருக்கின்றனர். வங்கிகள், பொருளாதார நிறுவனங்கள் வங்குரோத்து நிலையை சந்தித்த காலம் போய், இப்போது நாடுகள் வங்குரோத்து நிலையில் விளிப்பில் தளம்பிக்கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய கடனை பல நாடுகள் தவிர்க்க முடியா நிலையில் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த நாடுகள் மீள முடியாக் கடன் சுமையை வருங்கால சந்ததிக்கு வழங்கியுள்ளன.
உலகின் வல்லரசு, ஜனநாயக நாடு, அழிக்க முடியாத உலகப் பேரரசு என்றெல்லாம்  மார்தட்டிக்கொண்ட உலகின் பேட்டை சண்டியன் அமெரிக்காவின் உள் நாட்டிலேயே ஆயிரக்கணக்கான வீடற்றவர்கள் பெருந்தெருக்களின், பாலங்களின் கீழ் வசிக்கிறார்கள்.   ‘பொருளாதார நெருக்கடி’  என்று ஒற்றை வார்த்தையில் கூறப்படும்  பல்தேசிய நிறுவனங்களின் பகல் கொள்ளையால் பணமும், மூலதனமும் ஒரு சிலரிடம் குவிந்துள்ள நிலையில், மக்களின் வறுமையும், அழிவும் தவிர்க்கமுடியாத நியதியாகிவிட்டது.
வங்கிகளின் வங்குரோத்துக்களும்,  இளையோர் வேலையில்லாத் திண்டாட்டமும்  பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாத நடவடிக்கைகளுடன் போராடிக்கொண்டிருக்கின்றன. சுயநலம் மிக்க யுத்த நடவடிக்கைகள்  பயங்கரவாத ஒழிப்பு என்ற பேரில் மேற்கொள்ளப்பட்ட இராணுநடவடிக்கைகள் மூலம் அப்பாவி மக்கள் உயிர் வதைக்கும் சீர்குலைந்த சிவில் சமூக அமைப்புக்குள் அமிழ்ந்து போயுள்ளனர்.
ஆசிய பசுபிக் சமுத்திரத்தை ஆக்கிரமிக்கவும்,  அதன் மீது தத்தமது அதிகாரத்தை நிலை நாட்டவும் இந்தியா, சீனா,  அமெரிக்கா  என்பன போட்டி போட்ட படி இருக்கின்றன. இக்கெடுபிடிக்களுக்கு  மத்தியில் இந்து சமுத்திரத்தின் கண்ணீர் துளியாக நாம்  தவழ்ந்த நாடு.
பயங்கரவாத முறியடிப்பு என்ற பேரில்  இலங்கையின் தேசிய சிறுபான்மையினமான தமிழ்மக்களின் வாழ்வு தொடர்ந்தும் சீர்குலைக்கப்பட்டு வருகிறது. அரசியல் வாழ்வுரிமைகள் நசுக்கப்பட்டு - மேலும் மேலும் பறிப்பதிலும் தேசிய சிறுபான்மை இனங்களின் உரிமைகளை ஒடுக்குவதிலுமே கவனம் செலுத்துகின்றது. 
யுத்தம்முடிந்து நான்கு ஆண்டுகள் முடிவடைந்த விட்ட நிலையில் இன்னமும் யாழ் குடாநாட்டில் இராணுவம் நிலைகொண்டபடி இருக்கிறது. சுமூகமான நாளாந்த வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாத ஒரு சந்ததி இராணுவ ஆக்கிரமிப்புக்கு மத்தியில் பிறந்து வளர்கிறது.கடந்த மூன்று தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட யுத்த நடவடிக்கைகளினால் மக்கள் தமது பிள்ளைகளை,  சொந்தங்களை, உற்றாரை, உறவினரை இழந்த நிலையில்  சொல்லமுடியாத மனவேதனையுடன் நாட்களை கழித்த படி இருக்கின்றனர்.காணாமல் போனவர்களின் பட்டியல்  நீண்டபடி செல்கிறது. 
யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதாக வெற்றிவிழாக்களைக் கொண்டாடும்  அரசு  அந்நாட்டின் தேசிய சிறுபான்மையினங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு   நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மக்கள் இன்னமும் சொந்த நாட்டிலே குந்தியிருக்க குடில் இல்லாதவர்களாக, இரவல் நிலங்களில் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். காணிகள் சுவீகரிப்புகள் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. யாழ்ப்பாணம்,  முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் காணித்துண்டுகள் தொடர்பாக இன்னமும் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. வலிவடக்கில் ஆறுஆயிரத்து இருநூற்றிஇருபத்து நான்கு காணித்துண்டுகள் தொடர்பான பிரச்சனைகளும் நீடித்த வண்ணம் இருக்கின்றன. 
நடந்து முடிந்த திட்டமிட்ட இனஒழிப்பை விசாரிக்க நடுநிலையானகுழுவொன்றை நியமிக்க மறுத்த அரசு  கண்துடைப்பிற்காக கற்றுக்கொண்ட பாடம் மற்றும் நல்லிணக்கத்திற்கான குழுவொன்றை நியமித்தது. இந்தக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்போவதாக  வெளியுலகிற்கு தெரியப்படுத்துவதற்காக பெருந்தொகையான பணம்  ஆளணி மற்றும் வளங்களையும் பயன்படுத்தி ஆணைக்குழுவை அமைத்தது.  அக்குழுவின் பரிந்துரைகளின் படி பாதுகாப்புபடையினர் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இருந்து விலக வேண்டும்.   மக்களின் குடியிருப்புக்காணிகளில் பாதுகாப்பு படையினருக்கு தேவைக்கு அவசியம் எனக் கருதினால் மக்கள் குடியேறுவதற்கு அரச காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.  அவர்களது சொந்தகாணிகளுக்கான நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும். பலாலி  வலி வடக்கு, திருகோணமலை , சம்பூர் ஆகிய பிரதேசங்களில் உயர் பாதுகாப்பு வலயங்கள் குறைக்கப்பட்டு மக்கள் தம் சொந்த இடங்களில் குடியேற அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் இவைகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.
இலங்கையில் காலத்திற்கு காலம் அதிகாரத்தைக் கைபற்றிக் கொண்ட அரசுக்கள் தமது நாட்டு மக்கள் மீது வன்முறையையும், இன அழிப்பையும் மேற்கொண்டபடியே இருந்து வந்துள்ளன. 2009 மே18 இல் இராஜபக்ச அரசு தேசிய சிறுபான்மையின ஒழிப்பை திட்டமிட்டு நிகழ்த்தியதைப் போலவே பலதரப்பட தொழிலாளர்கள்,  விவசாயிகள்,  பல்கலைக்கழ மாணவர்கள் இணைந்து  நடத்திய எழுச்சிகளையும் அக்காலகட்டத்தில் அதிகாரத்தில் இருந்த அரசு அடக்கி ஒடுக்கியது. சலுகைகள் பதவிகள்  அரசியல் செல்வாக்கு எனும் அற்ப விடயங்களை வழங்கி அந்த அமைப்பின் முக்கிய நபர்களை விலைக்கு வாங்கியதன் மூலம் அவற்றைப் பிளவுபடுத்தியதுடன், அதன் இயக்கத்தையும் தடைசெய்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்திய மனித வேட்டையில் பலியாகிப் போன எலும்புக்கூடுகளை இன்னமும் அகழ்ந்தபடி நாம் இருக்கிறோம்.
இலங்கையை வல்லரசுகளுக்கு அடைவு வைத்தாகிவிட்டது. இலங்கையின் பிரச்சனை பல்லின சமூகமோ பயங்கரவாதமோ அல்ல. இனங்களுக்கிடையே முரண்பாடுகளை  இனரீதியான பராபட்சமான செயற்பாடுகளை திட்டமிட்டு உருவாக்கி மக்களிடையே பிணக்குகளை ஏற்படுத்துவதில் ஆளும் வர்க்கம் எப்போதுமே வெற்றிக் கண்டு வருகிறது. இதற்கு துணைபோகுவதில் சிங்கள. முஸ்லீம் மற்றும் தமிழ் இனத்துவ குழுக்களும் , அமைப்புக்களும் முக்கிய பங்கை வகிக்கின்றன.  
இலங்கையில் நிரந்தர சமாதானமும்  சமத்துவமும் நிலவ வேண்டுமானால்-  ஒடுக்கப்படும் சிறுபான்மை தேசிய இனங்களில் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு, அனைத்து தேசிய இனங்களின் சமத்துவம் பேணப்பட வேண்டும். அனைத்து தேசிய இனங்களும் சமநிலை அரசியல் சமத்துவம் கொண்ட அரசியல் தீர்வு காணப்படவேண்டும்.
 இலங்கைவாழ் மக்கள் பரஸ்பரம் அங்கு வசிக்கும் ஏனைய சமூகங்களின் உரிமைகளை மதிக்க பழக வேண்டும்.  சிங்களவர் , தமிழர், முஸ்லீம்கள் ,மலையமக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்களையும் உள்ளடக்கியதுதான் இலங்கை என்ற கருத்து மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த புதிய சமூக உருவாக்கத்தில் தெற்கில் உள்ள இடதுசாரிகளும்  பொதுமக்களும் பரந்த மனத்துடனும்  உளசுத்தியுடனும் செயற்பட வேண்டும்.

தொழிலாளர்களின் தினமான இன்று இலங்கையிலுள்ள அனைத்து மக்கள் சார்பிலும்  பின்வருவனவற்றைக் கோருவோம்.
ஒடுக்கப்படும் சிறுபான்மை தேசிய இனங்களில் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு அனைத்து தேசிய இனங்களின் சமத்துவம் பேணப்பட வேண்டும். 
அனைத்து தேசிய இனங்களும் சமநிலை அரசியல் சமத்துவம் கொண்ட அரசியல் தீர்வு காணப்படவேண்டும்.
இன அழிப்பு தொடர்பாய் சர்வதேச சுயாதீன நீதி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும்.  
இன அழிப்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இன மக்களுக்கும் நஷ்டஈடு  மற்றும் நிவாரணம் வழக்கப்படவேண்டும் 
பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் கொன்றொழிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்தவேண்டும். 
குடாநாட்டில் குடிகொண்டிருக்கும் இராணுவத்தை வெளியேற்றவேண்டும். 
அதி உயர் பாதுகாப்பு வளையங்களை உடனடியாக அகற்றவேண்டும். 
மக்களை அவர்தம் சொந்த இடங்களில் குடியேறுவதை அனுமதிக்கவேண்டும்.   

 சர்வதேச சமூகப் பாதுகாப்பு அமைப்பு - பிரான்ஸ்  E-mail : comite_cdsi@yahoo.fr

    மே -01-  2013.
                         Place des Fêtes (19e)
  இடம் :   Métro Place des Fêtes
 carte

Aucun commentaire:

Enregistrer un commentaire