dimanche 21 avril 2013

நோய்களை தடுக்கும் மருந்துகள் இலங்கையில் தயாரிப்பு.


Colombo National HospitraiColombo National Hospitrai. 1அடுத்துவரும் மூன்று, நான்கு வருடங்களில் தொற்றா நோய்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் இலங்கையிலேயே உற்பத்தி செய்யப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார்.அத்துடன் பல வருடங்களாக நடை முறைப்படுத்தப்படாதுள்ள சேனக பிபிலேயின் தேசிய மருந்துப் பொருள் கொள்கையை செயலுருப்படுத்துவதற்கும் தீர்மானித்திருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். கடந்த கால அரசாங்கங்கள் முடிவுகள் எடுப்பதற்கும் தயங்கிய விடயங்களில் கூட நாட்டு மக்களின் ஆரோக்கிய நலன்களைக் கருத்தில் கொண்டு நாம் தீர்மானங்கள் எடுத்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 660 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் பத்து மாடிகளைக் கொண்ட மூன்றாவது வார்ட்டுத் தொகுதியை வைபவ ரீதியாக நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில் உங்கள் அனைவருக்கும் நான் முதலில் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்தோடு உங்கள் அனைவரதும் நல்லாரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த 30 வருடங்களாக நாம் எந்த இடத்திலாவது மரணிப்போம் என்ற நிலையில் தான் வாழ்ந்தோம். அப்போது இந்நாட்டு மக்களின் ஆயுட் காலத்தினை சுகாதாரத்துறை தீர்மானிக்கவில்லை. மாறாக பயங்கரவாதிகளே மக்களின் ஆயுட்காலத்தைத் தீர்மானிப்பவர்களாக விளங்கினர்.வெளியில் சென்ற நாம் உயிருடன் திரும்ப முடியுமா என்ற அச்சம் நிலவியது அதற்கு நீங்களே நல்ல சாட்சியாளர்கள்.
அன்று எத்தனை ஆயிரம் பேர் துப்பாக்கிகளாலும், குண்டுகளாலும் காயப்படுத்தப்பட்டும், கொல்லப்பட்டும் இந்த ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வரப்பட்டார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்களில் படைவீரர்களை விடவும் அப்பாவியான மனிதர்களும், தாய்மாரும், குழந்தைகளும் தான் அதிகளவில் இருந்தனர்.அதேநேரம் கொழும்பு விபத்து சிகிச்சைப் பிரிவுக்குத்தான் நாட்டில் எங்காவது இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களாலும், துப்பாக்கி பிரயோகங்களாலும் காயமடைந்தவர்களினதும் உயிரிழந்தவர்களதும் உடல்கள் கொண்டுவரப்பட்டன. என்றாலும் இனிமேல் அப்படியான ஒரு நிலைமை இந்நாட்டில் மீண்டும் ஏற்படாது. அப்படியான நிலைமை ஏற்படவும் நாம் இடமளிக்கவும் மாட்டோம்.
இந்நாட்டின் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக நாம் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். எமக்குப் பாரிய பயங்கரவாத சவால் இருந்த போதிலும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு எவ்வளவுதான் நிதியொதுக்கிய போதிலும் இந்நாட்டின் அபிவிருத்திக்கும், சுகாதார சேவைக்கும் ஆற்ற வேண்டிய பொறுப்பை நாம் நிறைவேற்ற தவறவில்லை. இதுவரையும் எந்த அரசாங்கமும் முடிவு எடுப்பதற்குத் தயங்கிய விடயங்களில் கூட மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு நாம் தீர்மானங்களை எடுத்து இருக்கின்றோம். குறிப்பாக மதுபானம் மற்றும் புகைப்பிடித்தல் தொடர்பாக நாம் முடிவுகளை எடுத்து இருக்கின்றோம்.
அத்தோடு மருந்து பொருட்களின் வர்த்தக நிலை குறித்தும் நாட்டின் நலன்களைக் கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கவும் நாம் பின் நிற்கவில்லை. பல வருடங்களாக செயற்படுத்தப்படாதுள்ள சேனக பிபிலே மருந்துப் பொருள் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் தீர்மானித்து இருக்கின்றோம்.மேலும் அடுத்துவரும் 3, 4 வருடங்களில் தொற்றா நோய்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை இந்நாட்டிலேயே உற்பத்தி செய்யக் கூடிய வகையில் வேலைத்திட்டங்களை நாம் ஆரம்பித்து இருக்கின்றோம். இதன் நிமித்தம் நாம் அழைப்புக்களை விடுத்து இருக்கின்றோம். இதற்கென தனியான கைத்தொழில் பேட்டையொன்றைக் குருநாகலில் ஆரம்பித்து இருக்கின்றோம்.
நாம் வரலாறு நெடுகிலும் இலவச சுகாதார சேவையைப் பாதுகாத்து வந்துள்ளோம். சுகாதார சேவையின் வசதிகளை பெற்றுக்கொடுத்து அவற்றை மேம்படுத்தியுள்ளோம். நாம் இதனை நலன்புரி சேவையாக உயர் மட்டத்திற்கு மேம்படுத்த வேண்டும்.இந்நாட்டின் தாதியர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்யவென 15,000 பேரைத் தாதியர்களாகச் சேர்த்தோம். அதேநேரம் வருடத்திற்கு 1.200 மருத்துவர்கள் அரசாங்க மருத்துவ சேவைக்குச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றார்கள். இந்தக் காலப்பகுதியில் சுமார் 17 ஆயிரம் டொக்டர்கள் அரச சேவையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 2013 ஆம் ஆண்டுக்கென சுகாதாரத்துறைக்கு வரவு – செலவு திட்டத்தின் ஊடாக 125 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு ஆயிரம் ஆஸ்பத்திரிகளை நவீனப்படுத்தும் வேலைத்திட்டத்தையும் நாம் ஆரம்பித்துள்ளோம். அதேநேரம் ஆஸ்பத்திரிகளுக்குத் தேவையான வார்ட்டுகளையும் சத்திர சிகிச்சை கூடங்களையும் ஏற்படுத்தியுள்ளோம். எமக்கு இப்படியான பொது வைத்தியசாலைகளை மாத்திரமல்லாமல் கிராமிய ஆஸ்பத்திரிகளையும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்புள்ளது. அப்போது சிகிச்சைக்காக எல்லோரும் கொழும்புக்கு வரத் தேவைப்படாது.
இந்நாட்டு மக்களின் சுகாதார நிலைமையை மேம்படுத்த வேண்டும். அதனால் நாமெல்லோரும் ஒன்றுபட்டு அதற்குத் தேவையான வேலைத்திட்டங்களைத் தயாரிக்க வேண்டும். நாம் ஒவ்வொரு வருடமும் சுகாதாரத்துறைக்கான நிதியொதுக்கீட்டை அதிகரித்து வருகின்றோம். எம்மால் புதிய கட்டடங்களை அமைக்கலாம். உபகரணங்களைப் பெற்றுத்தரலாம். என்றாலும் அவற்றைச் சிறந்த முறையில் பராமரிப்பதற்கென வேலைத்திட்டம் மிக அவசியம்.
இவ்வைபவத்தில் சிரேஷ்ட அமைச்சர்கள் ஏ.எச்.எம். பெளஸி, பி. தயாரட்ன, அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire