dimanche 14 avril 2013

உலக ஆயுத வர்த்தகம் மரக்கறி வியாபாரம் போல யாரும் விற்கலாம் வாங்கலாம் என்ற சூழல்


DollerWopen
உலகில் குண்டூசி விற்கக்கூட சட்ட ஒழுங்கொன்று இருக்கும். ஆனால் உயிரையே கொல்லக்கூடிய ஆயுதம் விற்பதற்கு எந்த ஒழுங்கும் இல்லை. அவரவர்களுக்கு தேவையானபடி, தேவையானவர்களுக்கு ஆயுதங்களை விற்கிறார்கள்; வாங்குகிறார்கள். கேட்கயாரும் இல்லை. எந்த சட்டமும் இல்லை.சுருக்கமாக சொல்வதென்றால் உலக ஆயுத வர்த்தகம் மரக்கறி வியாபாரம் போல யாரும் விற்கலாம் வாங்கலாம் என்ற சூழல் இருந்து வருகிறது. ஆனால் உலக வர்த்தகத்தில் அதிக பணப் புழக்கம் கொண்ட வர்த்தகமாக ஆயுதவிற்பனை இருந்து வருகிறது. உலக ஆயுத வர்த்தகத்தின் பெறுமதி 70 பில்லியன் டொலர் என கணிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் தொடரும் சிவில் யுத்தம் தொடக்கம் மெக்சிகோவின் போதைக் கடத்தல்வரை ஆயுதம் தேவைப்படுகிறது.
இந்த ஆயுதங்கள் எங்கிருந்து வருகின்றன. எல்லாம் மனித உரிமை, சமாதானம் பேசும் நாடுகள்தான் ஆயுத விற்பனையில் முன்னணியில் இருப்பதுதான் சுவாரஸ்யமான உண்மை. உலக ஆயுதவர்த்தகத்தில் பாதிக்கும் அதிகமான பங்கை வகிப்பது அமெரிக்காதான். அமெரிக்காவின் பொருளாதாரமே இந்த ஆயுத வர்த்தகத்தில்தான் தங்கியிருக்கிறது. அடுத்தது ரஷ்யா, ஜேர்மனி, பிரான்ஸ், சீனா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இறங்குவரிசையில் இருக்கின்றன.
இந்த ஆறு நாடுகளின் நடவடிக்கையை பார்த்தாலே உலகின் செயற்பாடுகளை வரையறுத்து விடலாம். இதிலே இருக்கும் ஜேர்மனைத் தவிர்ந்த அடுத்த 5 நாடுகளும் ஐ.நாவின் பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகள் என்பதை எந்த வகையில் தொடர்புபடுத்துவது என்று புரியவில்லை.ஒன்றும் தேவையில்லை. சின்னப்பிள்ளைக்கும் தெரிந்த பொருளாதார தத்துவத்தை சொன்னாலே இந்த முரண்பட்ட கதாபாத்திரங்களின் சாயங்களை வெளுத்துவிடலாம். அதாவது ஒரு உற்பத்தியை மேற்கொள்வததென்றால் அதற்கான சந்தை தேவை அல்லது சந்தயை உருவாக்க வேண்டும். இது ஆயுத உற்பத்திக்கும் பொருந்தும்.
இப்போது ஐ.நாவில் புதிய நாடகம் ஒன்று அரங்கேறி இருக்கிறது. அதாவது உலக ஆயுதவர்த்தகத்தை ஒழுங்கு படுத்துவதற்கு சர்வதேச ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த ஐ.நா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி ஐ.நா பொதுச் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட இந்த தீர்மானத்திற்கு 154 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இதிலே அமெரிக்காவும் அடங்குகிறது. எதிராக வாக்களித்த நாடுகள் வட கொரியா, ஈரான் மற்றும் சிரியா ஆகிய மூன்றும் மாத்திரம் தான். சீனா, ரஷ்யா, இந்தியா உட் பட 23 நாடுகள் ஆளைவிட்டால் போதும் என வாக்கெடுப்பிலே பங்கேற்கவில்லை.
பக்கம் பக்கமாக எழுதப்பட்ட இந்த உடன்படிக்கையை சுருக்கமாக சொல்வதென்றால் ஆயுதப் பரிமாற்றங்கள் மூலம் ஆயுதங்கள் மனித உரிமை மீறல்கள், தீவிரவாதம், நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் அல்லது மனிதாபிமான சட்டங்களை மீறும் செயல்களுக்கு பயன்படுத்துவது தடுக்கப்படுகிறது என்பதை அனைத்து அரசுகளும் உறுதிசெய்யும் கடப்பாட்டை பெற்றிருக்கும். அதேபோன்று மனித உரிமையை மீறும் அல்லது போர் குற்றங்களில் ஈடுபடும் நாடுகளுக்கு ஆயுதங்கள் விற்பதையும் அரசுகள் நிறுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேம்போக்காக பார்த்தாலே இது உப்பு சப்பில்லாத ஓர் உடன்படிக்கை என புரிகிறது. இந்த உடன்படிக்கையையே அமெரிக்கா போன்ற நாடுகள் பெரிய இழுத்தடிப்புக்கு பின்னர்தான் ஏற்றிருக்கிறது. சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் அதைக் கூட ஏற்கவில்லை.கடந்த பல ஆண்டுகளாக மனித உரிமை அமைப்புகள் இந்த உடன்படிக்கையை கொண்டுவர போராடி இருந்தது வேறு கதை. சரி, ஈரான், வடகொரியா, சிரியா ஏன் இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. ஈரான் சொன்னது இந்த ஒப்பந்தம் குறைபாடுகள் மற்றும் ஓட்டைகளை கொண்டது என்று. அதேபோன்று வடகொரியா இது ஒரு சமநிலை அற்ற ஒப்பந்தம் என்று நிராகரித்தது.
சிரியாவும் தன்பக்க நியாயத்தை சொன்னது. அதாவது தீவிரவாத ஆயுதக் குழுக்கள் மற்றும் அரசு என்ற நிறுவனம் இல்லாத குழுக்களுக்கு ஆயுதம் செல்வதை இந்த ஒப்பந்தம் தடுக்க வில்லை என்றது. எல்லாம் தனது உள்நாட்டு யுத்தத்தை வைத்து சிரியா சொன்ன காரணம் தான் இது. ஆனால் சுவாரஸ்யம் என்னவென்றால் அமெரிக்கா இந்த ஆயுத வர்த்தக உடன்படிக்கையை வரவேற்று அகராதியை புரட்டி சொற்களை சேர்த்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. அமெரிக்க அரசியல் சட்டத்தில் ஆயுதம் வைத்திருப்பதற்கு ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமை இருக்கிறது. அதேபோன்று அமெரிக்காவின் ஆயுத விற்பனை நிறுவனங்களின் அமைப்பான தேசிய ரைபிள் சம்மேளனம் உடன்படிக்கையை நிராகரித்துவிட்டது.
இந்த உடன்படிக்கையின் கீழ் போர் டாங்கிகள், கவச போர் வாகனங்கள், பீரங்கி அமைப்புகள், போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகொப்டர்கள், ஏவுகணைகள், சிறிய ரக ஆயுதங்கள் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.சரி ஒன்றும் இல்லாத இடத்தில் ஏதாவது இருப்பதே லாபம் என்ற கருத்துடன் ஐ.நா சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த ஆயுத உடன்படிக்கை உண்மையிலேயே அமுலுக்கு வருமா அல்லது அமுல் படுத்துவதற்கு ஒவ்வொரு நாட்டையும் கட்டுப்படுத்த முடியுமா என்று கேட்பவர்களுக்கு உலக அரசியல் இன்னும் புரிய வில்லை என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட முடியும்.
அதாவது ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்படும் எந்த விடயத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் எந்த நாட்டுக்கும் இல்லை. இப்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தமும் இந்த ரகத்தைச் சேர்ந்ததுதான். ஐ.நாவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் ஒப்பந்தம் உலக நாடுகளின் கையொப்பத்திற்கு விடப்படவிருக்கிறது. எதிர்வரும் ஜுன் 03ஆம் திகதி விரும்பிய நாடுகள் கையொப்பம் இடலாம் என ஐ.நா அறிவிக்கும். எவருக்கும் கழுத்தை பிடித்து கையொப்பம் இடச்செய்ய முடியாது. இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட ஒரு சில நாடுகள் உள்நாட்டிலும் அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்யவேண்டி ஏற்படலாம்.
எனினும் உலக நாடுகளின் கைச்சாத்திற்காக ஐ.நா ஜூன் 3ஆம் திகதி தொடக்கம் 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். இந்த காலத்திற்குள் 50 நாடுகள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டாலே அது அமுலுக்கு வரும்.
குறைந்தது 50 நாடுகள் கைச்சாத்திடாத பட்சத்தில் இந்த ஒப்பந்தம் ஆரம்பத்திலேயே அம்போவாகிவிடும்.ஒப்பந்தம் அழுலுக்கு வந்தாலும் அதில் கைச்சாத்திட்டவர்கள் மாத்திரம்தான் ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை கடைப்பிடிக்க கடப்பாடு பெற்றிருக்கும். ஏனைய நாடுகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இவ்வாறான ஒப்பந்தம் இருந்தால் என்ன இல்லாவிட்டால்தான் என்ன என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
இவ்வாறுதான் 1999ஆம் ஆண்டு கண்ணிவெடியை தடைசெய்யும் ஒப்பந்தமும் ஐ.நா. வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இந்த வாக்கெடுப்பு அதிக நாடுகளின் வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. ஒப்பந்தத்திற்கும் விடப்பட்டது. ஒப்பந்தத்தில் குறைந்தது 160 நாடுகள் கைச்சாத்திட்டன. ஆனால் ஆட்டிப்படைக்கும் நாடுகளான அமெரிக்க, ரஷ்யா, சீனாவுடன் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை. இன்றுவரை இந்த ஒப்பந்தம் செல்லக்காசாகத்தான் இருக்கின்றது. உலகில் கண்ணிவெடியில் அன்றாடம் பலரும் சிக்கி பலிகாயாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் 12 பில்லியன் துப்பாக்கி ரவைகள் உற்பத்தியாகின்றன. இவைபூமியிலுள்ள ஒவ்வொரு மனிதனையும் இரண்டு தடவை கொலை செய்வதற்கு போதுமானது. ஒவ்வொரு நிமிடத்திலும் உலகில் ஆயுத வன்முறையால் சராசரியாக ஒருவர் கொல்லப்படுகிறார். அதேபோன்று உலகில் சுமார் ஒரு பில்லியன் துப்பாக்கிகள் பயன்பாட்டில் உள்ளன. இதிலே கால்பங்கு அமெரிக்காவில் உள்ளன.
உலகின் 60 வீதமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வன்முறைகளுக்கு துப்பாக்கிகள் அல்லது ஏனைய இலகு ரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதிலே முக்கால் பங்கு ஆயுதங்களை உலகுக்கு விநியோகிப்பது ஐ.நா பாதுகாப்பு சபையில் இருக்கும் நிரந்தர அங்கத்துவ நாடுகளாகும். அதிலும் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவிலிருந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக சுமார் 100 நாடுகளின் 1000க்கும் அதிகமான நிறுவனங்கள் சிறியரக ஆயுதங்களை உற்பத்திசெய்து வருகின்றன. ஆனால் முன்னணியில் இருக்கும் 10 ஆயுத உற்பத்தி நிறுவனங்களிலும் 7 நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே இருக்கின்றன.
அதேபோன்று அதிக ஆயுதசொந்தக்காரர்களை கொண்ட நாடும் அமெரிக்காதான். அங்கு சராசரியாக 100 பேருக்கு 88 பேரிடம் ஆயுதம் இருக்கும். என்றாலும் ஆயுத வன்முறையால் அதிகம் பேர் கொல்லப்படுவது அமெரிக்காவிலல்ல. ஹொன்டுராஸ், எல் சல்வடோர் மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளில்தான் இந்த துப்பாக்கிக் கலாசாரத்தால் அதிக உயிர்கள் பலியாக்கப்படுகின்றன.
ஒட்டுமொத்தமாகச் சொல்வதென்றால் இந்த ஆயுதக் கலாசாரம் முழு உலகத்தையுமே அபாயகரமாக மாற்றி இருக்கின்றது. தொடர்ந்தும் மாற்றி வருகின்றது. இந்த சூழலில் நுளம்பு கடித்ததைப் போல்தான். ஐ.நாவின் ஒப்பந்தங்களும் அதன் உடன்படிக்கைகளும் இருக்கின்றன.

Aucun commentaire:

Enregistrer un commentaire