mercredi 7 mars 2012
இலங்கையின் வடக்கே யுத்தத்தின் பின்னர் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துச் செல்வதாகவும், குறிப்பாக சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகள் மற்றும் கொலைச் சம்பவங்களும் கூடியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்
இந்த வருடத்தில் இதுநாள் வரையிலும் சிறுமிகள் மீதான 24 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக யாழ் போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சின்னையா சிவரூபன் தெரிவித்திருக்கின்றார்.
அதேவேளை பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பாக இந்தக் காலப்பகுதியில் 32 சம்பவங்கள் பற்றி முறையிடப்பட்டிருக்கின்றது.
கடந்த 2010 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 102 ஆக இருந்து, கடந்த வருடம் 182 ஆக அதிகரித்திருக்கின்றது.
பாலியல் வன்புணர்வின் பின்னர் சிறுமிகள் கொடூரமாகக் கொலை செய்யப்படும் சம்பவங்களும் இடம்பெற்று வருவதாக டாக்டர் சிவரூபன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
"இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ள பாலியல் வன்முறைச் சம்பவங்கள் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததுபோன்று கடந்த 3 ஆம் திகதி நெடுந்தீவில் 12 வயதுடைய பூப்பெய்தாத சிறுமி ஒருவர் மிக மோசமான முறையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு படு கொலை செய்யப்பட்டிருந்தார்".
இந்தச் சம்பவங்கள் சிறுமிகள் மீதான வன்முறைச் சம்பவங்களின் கொடூரத்தன்மை அதிகரித்துச் செல்வதைச் சுட்டிக்காடடுவதாக அமைந்திருக்கின்றன என்றும் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சிவரூபன் தெரிவித்திருக்கின்றார்.
இத்தகைய வன்முறைப் போக்கிற்கு மக்களிடையே அருகியுள்ள விழிப்புணர்வு, சிவில் நிர்வாகத்தில் காணப்படுகின்ற மென்மைப் போக்கு, ஆளணி மற்றும் வளப் பற்றாக்குறைகள் என்பன முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றது.
பல விதமான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வட இலங்கை மக்கள்
அத்துடன் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் குற்றவாளிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதும் ஒரு காரணமாகும் என டாக்டர் சிவரூபன் குறிப்பிடுகின்றார்.
"சிறுமிகள் மீது மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகள் தொடர்பாக பரபரப்பாகத் தகவல்கள் வெளியிடப்படுகின்ற அளவு வேகத்திற்கு குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை கிடைப்பதாகத் தெரியவில்லை".
இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதில் நீண்டகாலம் எடுப்பதுவும் இத்தகைய குற்றச் செயல்கள் அதிகரித்துச் செல்வதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகின்றது.
அத்துடன் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் பல குறைபாடுகள் நிறைந்திருப்பதாக டாக்டர் சிவரூபன் கருதுகின்றார்.
நீண்டகால யுத்தம் ஒன்றில் பாதிக்கப்படுகின்ற சமூகத்தில் யுத்தம் முடிவடைந்ததும் பல்வேறு பிரச்சினைகள் எழுவது இயல்பு. எனவே எதிர்கொள்வதற்கு அந்தச் சமூகம் ஒருங்கிணைந்த முறையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகின்றார்.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire