mardi 6 mars 2012
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை என்பது அமெரிக்காவும் இலங்கை அரசும் இணைந்து நடத்துகின்ற நாடகமாகும்
நாடு எதிர் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே அப்பட்டமான பொய்ப் பிரசாரத்தை அரசாங்கம் மேற் கொண்டு வருகின்றது என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க குற்றம் சாட்டினார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் அதன் பரிந்துரைகளும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டதாகும். இது தொடர்பான ஜெனீவா பிரேரணையானது நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் நாடு எதிர்பார்த்துள்ள தீர்வு நிச்சயமாக வரப்போவதில்லை. ஏனெனில் அதுவொரு வெறுமையான பிரேரணை என்றும் குறிப்பிட்டார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே தலைவர் சோமவன்ச அமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில் அரசாங்கத்தின் இரட்டை வேடம் தற்போது அம்பலத்திற்கு வந்திருப்பது யாவருக்கும் தெளிவாகும்.
பொருளாதார விடயத்திலும் அரசியல் நகர்விலும் தற்போதைய அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிந்து கிடக்கிறது என்பதே பொருத்தமாகும்.
யுத்தக் குற்றம் என்ற பெயரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப் போவதாகவே அரச தரப்பின் அண்மைக்கால பிரசாரங்கள் அமைந்திருந்தன.
அந்தப் பிரசாரங்கள் அனைத்தும் அப்பட்டமானவை. போலியானவை. அதேபோல் அரசாங்கத்தால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களும் போலியானவையாகும்.
ஜெனீவா பிரேரணை சர்வதேச நீதிமன்ற விசாரணை என்பதெல்லாம் வெறுமையானவையாகும். இந்த வெறுமையைப் பாவித்தே அரசாங்கம் மக்கள் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்தியிருக்கின்றது.
மண்ணெண்ணெயா அல்லது நாடா என்ற வகையில் அமைந்திருந்த அரசாங்கத்தின் பிரசாரம் நாட்டின் பொருளாதார சீர்கேட்டினையும் மக்கள் மீதான சுமைகளையும் நெருக்கடிகளையும் திசை திருப்புவதற்கான ஒரு வெளிப்பாடாகவே அமைந்திருந்தது.
ஜெனிவா பிரேரணையின் வலியுறுத்தலானது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதேயாகும்.
எனினும் இந்த நல்லிணக்க ஆணைக்குழுவும் அதன் பரிந்துரைகளும் அமெரிக்காவின் தூண்டுதல் மற்றும் ஆலோசனையின் பிரகாரமானதாகவே அமைந்துள்ளது.
அமெரிக்காவும் அரசாங்கமும் இணைந்துதான் ஜெனிவாவில் பிரேரணை கொண்டு வருவதற்கான திட்டத்தை வகுத்து அதனை தற்போது நிறைவேற்றியும் இருக்கின்றன. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனைப் பெற்றுக் கொள்வதற்காகவே அரசாங்கம் இந்த மக்கள் ஏமாற்றுத் திட்டத்தை செயற்படுத்தியிருக்கின்றது.
அமெரிக்கா அல்ல வேறு எந்தவொரு நாட்டினாலும் கூட எமது நாட்டில் உள்ள தேசிய பிரச்சினைக்கு தீர்வினைக் கண்டு விடமுடியாது.
அத்துடன் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளாலும்கூட இந்நாட்டுக்குத் தீர்வு எட்டிவிடப் போவதில்லை.
ஜெனிவாவில் பிரேரணை நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் கூட அதனால் இலங்கையில் நடந்துவிடப் போவது ஒன்றுமில்லை என்பதே உண்மையாகும்.
உள்நாட்டுப் பிரச்சினைக்கு உண்மையான தீர்வு எட்டப்பட வேண்டுமானால் அதேநேரம் எமது நாட்டின் இறைமை பாதுகாக்கப்பட வேண்டுமானால் உள்நாட்டுக்குள்ளேயே தீர்வுக்கு வழி வகுக்கப்பட வேண்டும்.
அதனை விடுத்து அமெரிக்காவுடன் இணைந்து கொண்டு நடத்தப்படுகின்ற நாடகத்தால் எதுவும் நடந்து விடாது. அரசாங்கமானது ஜெனிவா பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இங்கு மக்களைத் தூண்டிவிட்டு ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றது.
ஆனாலும் மறுபுறத்தில் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. இதுவே அரசாங்கத்தின் இரட்டை வேடமாகும். இதனை மக்கள் நன்கு உணர வேண்டியுள்ளது.
நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள அரசாங்கம் அதனை மறைப்பதற்காகப் போடுகின்ற நாடகங்கள் இன்று அம்பலமாகியுள்ளன. எனவே அமெரிக்காவுடன் இணைந்து நாடகமாடுகின்ற அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழவேண்டிய காலமே உருவாகியுள்ளது.
ஏனெனில் இன்றைய ஏமாற்று அரசாங்கத்திடமிருந்து நாட்டிற்கு ஜனநாயகத்தையோ தேசிய பிரச்சினைக்குத் தீர்வினையோ எதிர்பார்க்க முடியாது என்றார்.
இதேவேளை இங்கு எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த சோமவன்ச அமரசிங்க கூறுகையில் ஏதாவதொரு தீர்வு என்பது இங்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வே இங்கு அவசியமாகும் என்றார்.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire