vendredi 2 mars 2012
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் தடுமாறுகிறது? – அக்னீஸ்வரன்
அது 1976ஆம் ஆண்டின் கடைசி மாதங்களில் ஒரு நாள் இலங்கை நாடாளுமன்றத்தின் தேனீர் சாலையில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, தந்தை செல்வா, நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தனர்.அப்போது ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்கள் வழமையான தனது கிருஸ்ணபரமாத்மா புன்னகையுடன் ‘எதிர்வரும் தேர்தலில் தென்னிலங்கையில் உள்ள தமிழ் மக்கள் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தமது ஆதரவை வழங்கி அதை ஆட்சியமைக்க உதவினால் கொழும்பு உட்பட தென்னிலங்கையில் ஒரு தமிழன் கூட நடமாட முடியாத ஒரு நிலை ஏற்பட்டு விடும் என்பதையிட்டு நான் மிகவும் கவலையடைகிறேன்’ என்றார். தந்தை செல்வா எதையும் பேசவில்லை. அந்த மௌனம் தமிழழ் மக்கள் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவு
வழங்காவிட்டால் 1958ல் இடம்பெற்றது போன்று மீண்டும் ஒரு இன அழிப்பு வன்முறை மூலம் தமிழ் மக்களுக்கு பேரழிவு ஏற்படுத்தப்படும் என்ற ஜே.ஆரின் எச்சரிக்கை அது என்பதை தந்தை புரிந்து கொண்டதால் ஏற்பட்டிருக்கலாம்.
எனினும் 1977 தேர்தலில் ஐ.தே.கட்சி பெரும் வெற்றியை ஈட்டிய போதும் ஜே.ஆர் ‘போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்’ எனப் பிரகடனம் செய்து வைக்க ஒரு பெரும் இன அழிப்பு வன்முறை அரங்கேற்றப்பட்டு, தென்னிலங்கையில் தமிழ் மக்களின் இரத்தம் ஆறாக ஓடியமையை நாம் மறந்துவிட முடியாது.
அண்மையில் கூட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் திரு.சம்பந்தன் அவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச அவர்களால் இப்படியான ஜே.ஆர்.ஜெயவர்த்தன பாணியிலான ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு இரா.சம்பந்தன் அவர்கள் ஜனாதிபதியின் வாசஸ்தலத்துக்கு அவசர அவசரமாக அழைக்கப்பட்டிருந்தார். அங்கு இவருவருக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது,
இப்பேச்சுக்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த திரு.இரா.சம்பந்தன் அவர்கள் ஜனாதிபதி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாகவும், காரணங்களை விளக்கி அதற்கு தான் மறுப்புத் தெரிவித்து விட்டதாகவும் கூறியிருந்தார். அதைவிட அங்கு இடம்பெற்ற பேச்சுக்களின் போது வேறு எதாவது பேசப்பட்டதா என்பது தொடர்பாக எதுவுமே தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.
ஆனால் ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குகொள்ளமாட்டாது என்ற இரா.சம்பந்தனின் அதிரடி அறிவிப்பும் அதற்கு அவர் தெரிவித்த காரணங்களும், அவருக்கு ஜனாதிபதியினால் ஜே.ஆர்.பாணியிலான மிரட்டல் விடுக்கப்பட்டதா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் பங்குகொள்வதில்லை என்ற இந்த அறிவிப்பு தமிழ் மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியூட்டுவதாகவும், ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும் என்பதை எவரும் மறுத்துவிட முடியாது. மேலும் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் கூட கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இப்படியான ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத முடிவை எடுத்தமைக்கு முன் வைக்கப்பட்ட காரணங்களும் தமிழ் மக்களின் அபிலாசைகள் புறந்தள்ளப்படும் அபாயத்திற்கான முன்னறிப்போ என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
திரு.இரா.சம்பந்தன் அவர்கள் இப்படியான ஒரு முடிவை எடுத்தமைக்கான காரணங்களை விளக்குகையில் இனங்களுக்கு இடையேயான பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என்பதற்காகவும், இதனால் மீண்டும் வன்முறை எழக்கூடும் எனபவும் அதனால் பொது மக்கள் பாதிப்படைவர் எனவும், தற்போது அமைதி காப்பதும், பிரச்சினைகளைத் தவிர்ப்பதும் அவசியமானது எனவும் தெரிவித்துள்ளார்.
இக்காரணங்கள் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவையா?
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாகவும், மனித குல விரோத நடவடிக்கைகள் தொடர்பாகவும் கண்டனப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கு கொள்ளாததன் மூலம் இப்பிரேரணையை தமிழ் மக்கள் நிராகரிக்கிறார்கள் என்ற ஒரு பரப்புரையை அரசு மேற்கொள்ள ஒரு வாய்ப்பை அதற்கு வழங்கியுள்ளது என்பதில் எவ்வித மாற்றுக்ருத்துக்கும் இடமிருக்க முடியாது. ஆனால் தமிழ் மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களக்கு எதிராக நியாயங்களையும் கோரி நிற்பதில் என்றுமே பின்னிற்பதில்லை என்ற உண்மை மறைக்கப்படும் அபாயம் இதில் உள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
போரின் இறுதி நாட்களின் போது தமிழ் மக்கள் மீது இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் மனித குல நாகரிக வரையறைகளுக்கு அப்பாற்பட்டவை. பாதுகாப்புவலயம் என்ற பேரில் ஏறக்குறை நான்கு இலட்சம் மக்கள் அடைத்துவைக்கப்பட்டு தொடர் எறிகணை வீச்சுக்களால் கொன்ற குவிக்கப்பட்டனர். மருத்துவமனைகள் மீது குண்டுகள் பொழியப்பட்டன. உணவு, மருத்துவ வகை என்பன வழங்கப்படாமல் தடுக்கப்பட்டன. இதன் காரணமாக நாற்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரம் பேர் ஊனமுற்றனர். ஏராளமான பெண்கள் விதவைகளாகியுள்ளனர். இன்னும் பலர் காணாமல் போயுள்ளனர்.
இது இரண்டாம் உலக யுத்தத்தின் போது யூதர்கள் மேல் மேற்கொள்ளப்பட்டது போல், லுவண்டாவிலும் இடம்பெற்றது போல ஒரு மாபெரும் இன அழிப்புக் கொலைத் தாண்டவமாகும்.
தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொடூர இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக இன்று மனித உரிமை நிறுவனங்களும் சர்வதேச சமூகமும் ஐ.நா. மனிரத உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் குரல் கொடுக்கின்றன. அவர்களின் இந்த நியாயபூர்வமான நடவடிக்கைளுக்கு ஆதரவு கொடுதது, அந்த கூட்டத் தொடரில் பங்கு கொள்வது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவிர்க்கமுடியாத கடமை.
ஆனால் அதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளமை தமிழ் மக்களின் இழப்புக்களுக்காக தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு குரல்கொடுக்கத் தயாரில்லை என்று அர்த்தமாகிவிடாதா? எம் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்காகக் குரல் கொடுப்பது, இனங்களுக்கு இடையே பதற்றத்தை அதிகரிக்கும் என்றால், அது இன வன்முறைகளைத் தூண்டிவிடும் என்றால், எமக்காகக் குரலெழுப்பும் உரிமையைக் கூட இழந்தவர்களா? தமிழ் மக்கள், காலம் காலமாக சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் எம்மை மிரட்டியும், அடக்கியுமே எமது உரிமைகளைப் பறித்து வந்தனர். அப்படியான மிரட்டல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் அடிபணிய மறுத்ததால் தான் எமது போராட்டம் வெடித்தது.
தமிழீழ விடுதலைப்புலிகள் களத்தில் இல்லாமற் போனபின் தமிழ் மக்கள் தமது ஒரே தலைமையாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைத் தெரிவு செய்தனர். எனவே தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்க வேண்டியது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கட்டாய கடமை.
இப்படியான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய முடிவு தமிழ் மக்களின் நம்பிக்கையை முற்றாகவே சிதறடித்துள்ளது என்பதை எவருமே மறந்துவிட முடியாது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள இலங்கைக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை எதிர்த்து நாடுபூராவும் ஆர்ப்பட்டப் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. வடக்கு, கிழக்கில் கூட அரசும், அரசுடன் இணைந்துள்ள தமிழ் குழுக்களும் இணைந்து, படையினரின் உதவியுடன் மக்களை நிர்ப்பந்தித்து அழைத்து ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.
அக் கண்டனப்பிரேரணைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் அதேவேளையில் ஆதரவாக எந்தவொரு நடவடிக்கையும் இடம்பெறவில்லை. இலங்கையின் இராணுவக் கெடுபிடிகள் மத்தியில் அப்படியான ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான சாத்தியங்கள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அநீதி இழைக்கப்பட்ட தமிழ் மக்களின் தலைமை சக்தியான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆர்ப்பாட்டங்களை கண்டனப்பிரேரணைக்கு ஆதரவாக நடத்தாவிட்டாலும்கூட, கூட்டத் தொடரில் பங்கு பற்றாமல் விட்டமையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
மறுபுறத்தில் இலங்கையில் இக்கண்டனப் பிரேணையை சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் எதிர்க்கின்றனர் என்ற வாதத்தை இலங்கை அரசு சர்வதேசத்தின் முன் வைப்பதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஒரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது.
எமது மக்கள் கொட்டிய குருதிக்கும், சிந்திய கண்ணீருக்கும், முகம் கொடுத்த பேரழிவுகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுத்தவிலை இதுதானா? இது நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை அமைச்சர்களுடன் கிரிக்கட் விளையாடியதன் தொடர்ச்சியா என்றொரு கேள்வியும் எழுகிறது.
ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்கள் லண்டன் பி.பி.சிக்கு வழங்கிய பேட்டியில் இது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முடிவல்ல எனவும், ஓரிருவர் மட்டுமே எடுத்த முடிவு எனவும், பெரும்பாலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்திருந்தமை தமிழ் மக்களுக்கு சற்று ஆறுதலளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
எப்படியிருப்பினும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தொடர்ந்தும் தமிழ் மக்களின் தலைமை சக்தியாக நிலை நிற்பதா, இல்லையா? என்பதை அவ் அமைப்புத் தான் அதன் நடைமுறை மூலம் முடிவு செய்ய வேண்டும்.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்கள் திரு.இரா.சம்பந்தன் அவர்கள் வெளியிட்ட அண்மைய கருத்துக்கள் தொடர்பாகத் தான் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாகக் கூறியிருந்தார்.
இவ்வேளையில் தவிர்க்க முடியாமல் சீனத் தலைவர் மா ஓ சேதுங் அவர்களின் மேற்கோள் ஒன்றைக் குறிப்பிடவேண்டியுள்ளது.
‘எமது எதிரி நாம் சிறிது கூட நல்ல அம்சங்கள் இல்லாதவர்கள் எனவும், தீயவர்கள் எனவும் வர்ணிப்பானாகில் நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பது அர்த்தமாகும். எதிரி எம் மீது தொடுக்கும் கண்டனங்கள் சற்று தளர்வடையுமானால் நாம் ஏதோ தவறு செய்ய ஆரம்பித்து விட்டோம் என்று அர்த்தம். அதே வேளையில் எதிரி எம்மைப்பாராட்டினால் நாம் முற்றாகவே வழி பிசகி, எமது சொந்த இலட்சியங்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டோம் என்று அர்த்தம்’
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire