mercredi 28 mars 2012
மாண்புமிகு மகிந்த ராஜபக்ஷ அவர்களே! பிரச்சனையை மேலும் மோசமடைய விடாதீர்கள்
இலங்கை ஒரு மேசமான நிலையை எதிர்நோக்கி நிற்கும் இவ்வேளையில் எமது நாட்டையும் அதில் வாழும் மக்களையும் மிகவும் நேசிப்பவன் என்ற முறையில் நாட்டின் பெரும் நன்மையை கருதி எனது கருத்துக்களை வெளியிட விரும்புகின்றேன். இந்நாடு எதிர்நோக்கி வந்த எந்தப் பிரச்சனையையும் என்னால் அது நாட்டுப் பிரச்சினை என்றே கருதப்பட்டு வந்தது. தற்போதைய அவலநிலை நாம் பயப்படும் அளவிற்கு பெரிதாக விரிவடைந்துள்ளதென்றால் மிக முக்கியஸ்தர்கள் அழைக்கப்படாமல் அப்பிரச்சினைகளில் முன்சிந்தனையின்றி ஈடுபட்டு உங்களுக்கு எரிச்சலையும் சங்கடத்தையும் உண்டு பண்ணியுள்ளனர். இவர்கள் அப்பாவி மக்களை, மகிழ்ச்சி; தராத விடயங்களில் ஈடுபடுமாறு தூண்டி விட்டு பிரச்சினைகளை மிக மோசமடையச் செய்தனர்.
அனர்ததங்களை ஒரு நாடு எதிர்நோக்கும் வேளையில் சர்வதேச சமூகம் பாதிக்கப்பட்ட நாட்டுக்கு நிவாரணப் பொருட்களோடு விரைவது சகஜம். இயற்கை அனர்த்தமாகிய சுனாமி நமது நாட்டில் ஏற்பட்டவேளை இந்தியா எவ்வளவு விரைவாக செயற்பட்டது என்பதையும் ஏனைய நாடுகள் சிறிதோ, பெரிதோ இந்தியாவை பின்பற்றி செயற்பட்டதை நாம் அறிவோம். ஒரு நாட்டில் உள்ளுர் கிளர்ச்சி ஏற்படும்போது இதேபோன்றே பிற நாடுகள் செயற்பட்டன. ஒரு நாடு கஷ்டத்தில் இருக்கின்றபோது எனைய நாடுகள் கைகட்டி நின்று வேடிக்கை பார்க்க மாட்டா. தம்பி பிரபாகரனுக்கு இலங்கைக்கு உதவ வருகின்ற நாடுகள் அத்தனையுடனும் எதிர்த்துப் போராட வேண்டிவருமேயொழிய தனித்து இலங்கை இராணுவத்துடன் மாத்திரமல்ல என நினைவூட்டி, ஆயுதங்களை கைவிட்டு அரசுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லுமாறு பல தடவை கேட்டிருந்தேன். இறுதியில் நான் எச்சரித்தவாறே நடந்தேறியது. அதிக விளம்பரமில்லாமல் அநேக நாடுகள் இலங்கைக்கு உதவ வந்து இறுதியில் விடுதலைப் புலிகளை தோற்கடிக்கவும் உதவியன. அநேகமான ஐரோப்பிய நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு உதவின எனக் கூறுவது தவறானதாகும். அதற்கு மாறாக சில இலங்கையர் சில நாடுகளை மிக மோசமாக அவமதித்து இருந்தாலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த நாடும் விடுதலைப் புலிகளுக்கு உதவவில்லை. தனிப்பட்ட ஒருவர் ஒரு நாட்டில் இருந்து கொண்டு விடுதலைப் புலிகளை ஆதரி;த்திருந்தாலும் கூட அந்த நாட்டை குறைகூற முடியாது. அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகள் தத்தம் மண்ணில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு தடை விதித்திருந்தமையை நாம் மறக்க முடியாது. நவீன ஆயுதங்கள் கொடுத்து பல நாடுகள் இலங்கைக்கு உதவியளிக்காது விட்டிருந்தால் இலங்கை இராணுவத்தினரால் தனித்து இப்போரை வென்றிருக்க முடியாது. இந்தியாவிடமிருந்தும் இந்தியாவின் ஒரு மாநிலமாகிய தமிழ்நாடு பொலிசின் “கியூ” பிரிவினர் மிகத் திறமையாக செயற்பட்டு பல தடவைகள் இலங்கைக்கு அனுப்பி வைக்க இருந்த பல தொன் எடையுள்ள வெடி மருந்தை தேடி பிடித்து கைப்பற்றியமையை நீங்கள் சுலபமாக இந்த உதவிகளை மறந்திருக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன்.இந்திய கடற்படையின் கரையோர காவல் பிரிவினர் ஆற்றிய பெரும் தொண்டால் யுத்தம் வெல்லக் கூடியதாக இருந்தது. இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் எமக்கு முதுகை காட்டிக் கொண்டிருந்தால் இந்த நாடு சிதைந்திருக்கும், யுத்தத்திலும் தோற்றிருக்கும். இந்த விடயங்களை இலங்கை என்றும் மறக்கக் கூடாது.
எதற்காக அல்லது இன்று இக்கட்டான நிலையில் என்ன தேவை ஏற்பட்டமையால் இலங்கை அரசு சீன வெளியுறவுதுறை அமைச்சரை சந்தித்து அமெரிக்க தீர்மானத்தை, சீனா எதிர்ப்பதாக பல தடவைகள் உறுதியளித்திருந்தும் எதிர்க்க வேண்டுமென சீன அரசின் உதவியை நாடியது. 1956ம் ஆண்டு இலங்கையில் அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு நிலவிய வேளை சீன அரசு பெருந்தன்மையாக எமது இறப்பருக்கு பதிலாக அரிசியை கொடுத்து தனது பெருந்தன்மையயை வெளிக்காட்டியது. அன்று தொடக்கம் இன்றுவரை இவ்விரு நாடுகளுக்கிடையில் இருந்த உறவில் பங்கம் எற்படாது இருக்கும் போது இச்சந்தர்ப்பத்தில் நல்லெண்ணத்தை வளர்க்க வேண்டிய அவசியமில்லை. இந்த முயற்சியில் ஏதோவொரு நோக்கம் மறைந்திருக்கிறது. அநேகருக்கு இது இந்தியாவுக்கு எதிரான மறைமுக மிரட்டலா என தோன்றுகிறது. பல வகையாலும் இத் தீர்மானத்தை ஆதரிக்கும்படி இந்தியாவுக்கு அழுத்தம் வந்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இம் முயற்சி நல்ல ராஜதந்திரமாக தெரியவில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் ஆளும் கட்சியும் எதிhகட்சியும் ஏனைய அரசியல் கட்சிகளும் இத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென அழுத்தம் கொடுக்கின்றன. இலங்கை இந்தியாவை பல காரணங்களுக்காக ஆத்திரமூட்டக் கூடாது. முக்கிய காரணம் என்னவெனில் ஒரு சமயம் இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக பேச்சுவார்த்தைக்கு ஒரு வாய்ப்பு ஏற்படும் சந்தர்ப்பத்தில் இந்தியாவால் மட்டுமே முன்னின்று இலங்கை அரசுக்கும் சிறுபான்மை தமிழ் கட்சிகளுக்குமிடையில் மத்தியஸ்த்தம் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டு. இந்தியாவுடனும் சீனாவுடனும் நல்லுறவை பேணுவது சிறந்த முயற்சியாக இருந்தாலும் இரு நாடுகளில் ஒரு நாட்டு மக்களின் உணர்வை புண்படுத்தி அல்ல.
சீனா இலங்கை அரசுக்கு பல்வேறு இராணுவ முகாம்கள் அமைத்து அவற்றிற்கு வேண்டிய ஆயுத தளபாடங்களை தந்துதவுவதாக கூறி வருகிறது. இச் செய்தி வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் விரும்பாத, பெரும் கவலை தரும் செய்தியாகும். சீனாவின் அன்பளிப்பை மிக்க நன்றியுடன் நிராகரிப்பதாக சீன அரசுக்கு இலங்கை கூற வேண்டும். 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதியுடன் துப்பாக்கிச் சூட்டுச் சத்தமும், செல் வெடிப்பதும் நின்று மீண்டும் ஒரு போராட்டம் துவங்குவதற்கு சிறு வாய்ப்புக்கூட இல்லாத நிலையில் இலங்கைக்கு யுத்த தளபாடங்கள் தேவைப்பட மாட்டாது. ஏதாவது யுத்தத் தளபாடங்கள் வழங்கப்படுமாயின் 30 ஆண்டுகளுக்கு மேல் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து தற்போது ஒரு விளையாட்டுத் துப்பாக்கியைக்கூட காண விரும்பாத மக்களை அடிமைப்படுத்தவே இது உதவும். சீனப் பெருங்குடி மக்கள் ஒரு புரட்சியின் மூலம் தமது உரிமைகளை வென்றெடுத்தமையால் இலங்கை வாழ் தமிழ்மக்களும் இன்னொரு புரட்சி ஏற்படுவதை விரும்ப மாட்டார்கள். இலங்கை மக்களின் பரிதாப நிலையை உணர்ந்து நிலைமையை மீள பரிசீலித்து யுத்த தளபாடங்களுக்குப் பதிலாக தமிழ் மக்களுக்கு உதவக்கூடிய விவசாய உபகரணங்களால் அப்பகுதியை நிறைக்க வேண்டும். அப்பாவி தமிழ் மக்களை மேலும் ஒரு பயங்கர கனவு உலகத்துக்கு அனுப்பி வைக்காது பாதுகாக்க வேண்டும். ஏனெனில் கடந்தகால பயங்கர நினைவுகள் அவர்களை தொடர்ந்தும் அச்சுறுத்துகின்றன. தங்களுக்கு ஆலோசனை வழங்குகின்றவர்களை அவ்விடயத்தில் விசேட அக்கறை இல்லாதவர்களாக பார்த்து தெரிவு செய்யவும், நாட்டின் தலைவர் என்ற முறையில் அனைவரையும் சொந்த பிள்ளைகளாக கருதவும். வடக்கு கிழக்கு மக்கள் இராணுவ, கடற்படை, விமானப்படை ஆகிய முகாம்கள் இருக்கும் பகுதிகளில் பல கஷ்டங்களை எற்கனவே அனுபவித்துள்ளமையால் வட கிழக்கில் இந்த முகாம்களை விரும்பவில்லை.
ஜனாதிபதி அவர்களே! நாட்டின் பிரச்சினைக்கான தீர்வு தங்கள் கைகளிலேயே உண்டு. ஐக்கிய, அமைதி நிறைந்த இலங்கையை கட்டியெழுப்பக்கூடிய வாய்ப்புக்கள் பலவற்றை நீங்கள் தவற விட்டுவிட்டீர்கள். ஒரு நாட்டின் ஒருபகுதி மக்கள் மனத் திருப்தியோடு வாழாவிடின் ஐக்கிய அமைதியான நாட்டை கட்டியெழுப்ப முடியாது. நான் உங்களுக்கு பல தடவைகள் கூறியிருக்கின்றேன், இந்த நாட்டில் சிறுபான்மையினர் இல்லையென்று கூற வேண்டியவர்கள் நீங்கள் அல்ல, அவ்வாறு கூற வேண்டியது திருப்தியுடன் வாழும் மக்களே. எங்களைப் பொறுத்தவரையில் ஒரு நீதியான, நியாயமான ஆட்சியை வழங்கி சிறுபான்மை மக்களை அவ்வாறு கூற வைக்க வேண்டும் என்பதே. உங்கள் நிர்வாகத்தில் பாகுபாடு காட்டும் தன்மை இருப்பதை நீங்கள் அறிவீர்களோ நான் அறியேன். சில உதாரணங்களை கூறின் இலங்கை நிர்வாக சேவைக்கு இறுதியாக நடைபெற்ற இரு தேர்வுகளில் முதலாவதில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரும் தெரிவாகவில்லை. இரண்டாவது தேர்வில் ஏழு பேர் மாத்திரமே சிறுபான்மையினர். தமிழ் பிரதேசங்களில் சிங்கள அதிகாரிகளை நியமிப்பதற்கு பதிலாக தமிழரும், சிங்கள பிரதேசங்களில் சிங்கள அதிகாரிகளை நியமிப்பதற்கும் கிடைத்துள்ள நல்ல வாய்ப்பல்லவா? பல சபைகளும், கூட்டுத்தாபனங்களும் உங்கள் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன. பனை அபிவிருத்தி சபையைத் தவிர வேறு எவற்றிலும் சிறுபான்மையினர் எவரும் தலைமை பதவியையோ, அங்கத்தவர் பதவியையோ வகிக்கவில்லை. ராஜதந்திர சேவையில் ஒரோயொரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் மட்டும் தூதுவராக செயற்படுகின்றார். அவரின் எதிர்காலம்கூட அமெரிக்கத் தீர்மானத்தின் கதியில் தங்கியுள்ளது. சிற்றூழியர்களாக மட்டும் சிலர் தூதுவராலயங்களில் கடமையாற்றுகின்றனர். பல்வேறு அமைச்சுக்களில் நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்கள் 52 பேரில் ஒரேயொரு தமிழரும் ஒரு இஸ்லாமியரும் சிறுபான்மையினராக இருக்கின்றனர். இன்று நீங்கள் எதிர்நோக்கும் சங்கடங்கள் மத்தியிலும் கூட நீங்கள் நியமித்துள்ள 22 பிரதிபொலிஸ் மா அதிபர்களில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரேனும் நியமிக்கப்படவில்லை. இது போன்று பல சம்பவங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆனால் அவற்றில் அநேகமானவை தங்களின் கவனத்துக்கு கொண்டுவரப்படாமல் இருக்கலாம். தங்களை சுற்றியுள்ளவர்களே மகிந்த சிந்தனைக்கு அவமானம் தேடுகின்றனர். சிலர் தங்கள் அறிவுறுத்தல்களுக்கமைய நடப்பதாக கூறினாலும் பலர் தங்கள் சிந்தனைக்கு களங்கம் சேர்ப்பதாக உள்ளனர். சிறுபான்மை இன மக்களின் உள்ளத்தை புண்படுத்தும் பல நியமனங்களும், பதவி உயர்வுகளும் நடைபெறுகின்றன. விளையாட்டுத் துறைக்கு பெரும் ஊக்கமளிக்கும் உங்கள் அரசால் கிரிக்கெட் துறையில் முரளிக்கு பதிலாக ஒரு தமிழரை சேர்த்துக் கொள்ள முடியவில்லை.
ஜனாதிபதி அவர்களே! இவ்வாறு எழுதுவதற்கு நான் பெரிதும் கவலையடைகின்றேன். ஏனெனில் நான் எப்பிரச்சினையையும் வகுப்புவாத கோணத்திலிருந்து பார்ப்பவன் அல்ல. இந்தச் சந்தர்ப்பத்தில் நான் இவ்வாறு செய்வத தூரதிஸ்டமே. இது தங்களுக்கு மன வேதனையை கொடுத்தால் என்னை மன்னிக்கவும். இந்த விடயங்களை உங்களுக்கருகில் உள்ளவர்கள் உங்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்க வேண்டும். நான் மீண்டும் கூறுகின்றேன் இனப்பிரச்சினைக்கான தீர்வு தங்கள் கைகளிலேயே உள்ளது. இன்றைய பதட்ட நிலையை தணிக்க உங்களிடமுள்ள அதிகாரத்தையும் பிரச்சினை சம்பந்தமான தங்களுக்குள்ள அறிவையும் கொண்டு சிறுபான்மையினர் ஏற்கக்கூடிய ஒரு தீர்வை முன் வைத்து பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தவும். என்னால் முன்வைக்கப்பட்ட இந்திய முறையிலான ஒரு தீர்வை அரச சார்பிலும், எதிர்கட்சி சார்பிலும், புலம்பெயர் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு இருந்தது. மகாநாயக்கர்களுடைய ஆசீர்வாதமும் இருந்தது என நம்புகின்றேன். இதற்கு நீங்கள் எதிர்ப்பு இல்லை என்று என்னையும் நம்ப வைத்திருக்கிறீர்கள். ஒரு அரசியல் சாசனமும் உள்ளுரில் தயாரிக்கப்பட்டதென எவரும் தம்பட்டம் அடிக்க முடியாது. இந்திய அரசியல் சாசனமோ அன்றி தற்போதைய அரசியல் சாசனமோ பல விடயங்களில் பிரித்தானிய சாசனத்தை ஒத்தது என்பதை அறிந்திருப்பீர்கள். நீங்கள் இந்திய முறையிலான தீர்வை ஏற்கும் பட்சத்தில் அதற்கு எந்த எதிர்ப்பும் இருக்காது என நம்புகின்றேன். சமத்துவம், சமநீதியை கொண்டு உருவாகிய எந்தத் தீர்வுக்கும் நியாயப்படுத்தக்கூடிய எந்த எதிர்ப்பும் இருக்க முடியாது.
நான் வட பகுதி முழுவதையும் கிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதியையும் சுற்றி வந்துள்ளேன். எனது கணிப்பின்படி அநேக மக்கள,; பெருமளவில் வன்னி மாவட்ட மக்கள் அரை பட்டினியில் வாழ்கின்றனர். மக்களுக்கு எதுவித அபிவிருத்தியிலும் நாட்டமில்லை. இன்னும் அநேக மக்கள் கூரையில்லாத வீடுகளிலும் பல அடிப்படை வசதிகளின்றியும் வாழ்கின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் கூட கிடைக்கவில்லை. வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுடன் வாழும் விதவைகளும், அநாதைகளும் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் அத்தனை உடைமைகளையும் இழந்தே மீளக்குடியேறி வாழ்கின்றனர் என்பதை அநேகா அறியமாட்டார்கள். தயவு செய்து நிலைமை சீரடையும் வரை மிக நொந்து போயுள்ள மக்கள் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் முன்பு இருந்தது போல் கூப்பன் புத்தகத்தை அறிமுகப்படுத்தவும். இம் முறையானது மிக நொந்துபோயுள்ள மக்கள் மத்தியில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள வறுமையை ஓரளவுக்கு குறைக்கும் என கருதுகிறேன். அனைவரும் தத்தம் உரிமைகளை ஏனையவர்களுடன் சமமாக அனுபவித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் போல் ஒரு நியாயமான சமூகத்தில் வாழ வேண்டும். சரித்திர ரீதியாக சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒரே கொடியில்; உருவானவர்களே.
எமது வீட்டை ஒழுங்காக வைத்திருக்காமல் 47 நாட்டுப் பிரதிநிதிகளிடம் சென்று அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்க்கும்படி கேட்பதில் அர்த்தமில்லை. அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்து நாடளாவிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துக் கொண்டிக்கும் போது இலங்கை கடற்படையினர் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பூநகரி பிரிவிற்குள் உள்ள நாச்சிக்குடா கிராமத்தில் கடற்படை தளம் அமைப்பது கடற்படையினரின் புத்தியற்ற செயல் அல்லவா? நாச்சிக்குடாவில் தளம் அமைப்பதற்குரிய காரணம் வினோதமான கற்பனையாகும். 1970ம் ஆண்டு தொடக்கம் 1983ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்யும்வரை கிளிநொச்சி தொகுதியை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தேன். இக் கிராமத்தில் இந்துக்கள், முஸ்லீம்கள், கத்தோலிக்கர்கள்; எவ்வித பிரச்சினையுமி;ன்றி பல ஆண்டுகள் வாழ்ந்தனர். யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் இக் கிராமத்துக்கு அண்மையில் ஒரு பொலிஸ் நிலையம் திறக்கப்படும் வரை அங்கு பொலிஸ் சேவை இருக்கவில்லை. அரை பட்டினியுடன் வாழும் அக் கிராம மக்களுக்கு நாச்சிக்குடாவில் தளம் அமைப்பதற்காக செலவிடப்படும் பணம் நியாயப்படுத்த முடியாத வீண் செலவாகும். கடற்படையினா கூறுவது போல் அங்குள்ள பொது மக்களுக்கு எதுவித பாதுகாப்பும் தேவையில்லை. அவர்கள் அதை கேட்கவும் இல்லை. அவர்கள் அதை பெரும் இடைஞ்சலாகவே கருதுகிறார்கள். போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்த எனக் கூறும் காரணமும் அர்த்தமற்றதாகும். முப்படைகள் முகாம்களையும் மூட வேண்டுமென்று மக்கள் கிளர்ச்சி செய்யும் போது புதிய முகாம்கள் அமைப்பது நாட்டுக்கும், மக்களுக்கும் இருண்ட எதிhகாலத்தையே சுட்டிகாட்டுக்கிறது. ஆகவே தயவு செய்து புதிய முகாம்கள் திறப்பதை நிறுத்தி இராணுவ பிரசன்னத்தை இல்லாமல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு 30 ஆண்டுகள் பயத்துடனும், பீதியுடனும் வாழ்ந்த மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க வழி வகுக்க வேண்டும்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
வீ. ஆனந்தசங்கரி
செயலாளர் நாயகம்- த.வி.கூ
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire