jeudi 22 mars 2012
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது என்ற முடிவினை ஈ.என்.டி.எல்.எப். வரவேற்கிறது.
அமெரிக்காவினால் முன்மொழியப்பட்ட பிரேரணையை வரவேற்பதில் இந்தியாவுக்கு தயக்கம் இருந்தது உண்மையே, கூடியவரையில் நடுநிலை வகிப்பது என்ற முடிவிலிருந்து விலகி அப்பிரேரணையை இந்தியா ஆதரிப்பது என்ற முடிவை ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) வரவேற்பதுடன் விடுதலைப் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட கசப்புணர்வை மறப்பதற்கான அறிகுறியைத் தெரியப்படுத்தியதற்காகவும் வாழ்த்து தெரிவிக்கிறது. யுத்தக்குற்றம் விசாரிக்கப்பட வேண்டும், குறைந்த பட்ச உரிமையான “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை அமெரிக்கா முன்வைத்திருந்தால் இந்தியா எப்போதோ தன் முடிவினை அறிவித்திருக்கும்.
ஈழத் தமிழரது இனப் பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிட்ட நாடு. தமிழர் சார்பாக சிறிலங்காவுடன் கையெழுத்திட்டு, சில குறிப்பிடத்தக்க உரிமைகளைப் பெற்றுக் கொடுத்த நாடு இந்தியா, அன்றைய காலகட்டத்தில் இந்தியாவினால் ஏற்படுத்தப்பட்ட தீர்வொன்றினை முறியடிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. காரணம், வங்காள தேசத்தைப் போன்று மேலும் ஓர் தனிநாட்டினை உருவாக்க இந்தியாவை அனுமதிக்கக் கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் அந்த ஒப்பந்தத்தினை முறியடிக்க முயற்சித்த நாடுகளில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது. பிரேமதாசாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஆயுதங்களை வழங்கி அந்த ஒப்பந்தத்தினை முறியடிக்க அமெரிக்கா முன்நின்றது.
மாநில அரசு அமைவதற்கும், வடக்குக்கிழக்கு மாநிலங்களை இணைப்பதற்கும், கல்வி, நிலம், பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படை என்ற அம்சங்களை இந்தியா ஒப்பந்தம் வழியாக அமுல்படுத்தியது. தமிழ் மக்கள் சார்பாக ஏற்படுத்தப்பட்ட சர்வதேச ஒப்பந்தம் இதுவாகும்.
2006ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் அன்பளிப்பு நாடுகள் (DONORS COUNTRIES) என்ற அமைப்பை ஏற்படுத்தி தமிழர்களை மொத்தமாக அழிக்க இலங்கை அரசுக்கு நிதியுதவிகளைத் தாராளமாய் வழங்கிய நாடுகளில் முதன்மையானது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.
2009ல் தமிழ் மக்களை இன அழிப்புச் செய்தபோது ஐ.நா.வின் மனித உரிமைக்குழுவையும், மருத்துவக் குழுவையும் வெளியேறும்படி உத்தரவிட்டது சிறிலங்கா அரசு. சாட்சியங்கள் எதுவும் இல்லாமல் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்ற சதிச் செயலுக்கு ஐ.நா. அன்று துணை போனது. மக்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போதே ஐ.நா.குழு வெளியேறியது. இதற்கு ஐ.நா.வின் நிர்வாகத் தலைமையே பொறுப்பேற்க வேண்டும். கொலைக் களத்துக்கு இடம் கொடுத்தது ஐக்கிய நாடுகள் சபையே!
யுத்த விதி மீறல், மனித உரிமை மீறல் மட்டும் அங்கு நடைபெறவில்லை, முழுக்க முழுக்க இன அழிப்பு நடவடிக்கைதான் அங்கு நடைபெற்றது. பௌத்தத்துக்கும் ஈழத் தமிழ் மக்களுக்குமான 2000 ஆண்டுகாலப் பகையை சந்தர்ப்பம் பார்த்து சிங்களப் பௌத்தத்தின் கொள்கையான தமிழின அழிப்பை நிறைவேற்றிக்கொண்டது சிங்கள அரசு.
தமிழ் மக்களின் அழிவுக்கு ஐ.நா.வும் அமெரிக்காவும் பின்னணியில் செயல்பட்டன என்பது மறுக்க முடியாத உண்மை. இப்போது சானல்-4 மூலம் ஒளிப்படங்கள் வெளிவந்த நிலையில், நல்லிணக்க ஆணைக் குழு (LLRC)வின் பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் என்ற பிரேரணையை முன்மொழிந்திருப்பது தமிழ் மக்களுக்கான தீர்வாகாது.
தமிழ் மக்கள் LLRC யின் பரிந்துரையையோ, அதன் விசாரணையையோ கோரிக்கையாக முன்வைக்கவில்லை. இலங்கை அரசின் ஏமாற்றுக் கொமிசன்களின் நடவடிக்கைகளில் ஒன்றுதான் LLRC. 1977 கலவரம், 1983 கலவரம், வெலிக்கடை படுகொலை விசாரணை என்று அனைத்தும் ஏமாற்றுத் தந்திரங்களே தவிர அவர்கள் எதனையும் நடைமுறைப் படுத்தியதாக வரலாறு கிடையாது.
இன அழிப்புக்கான படுகொலை விசாரிக்கபட வேண்டும் என்று அமெரிக்கா பிரேரணை கொண்டு வராதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் மக்கள் கோராத, விரும்பாத இந்த முன் மொழிவைக் கொண்டு வருவதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. இது இலங்கை அரசுக்குச் சாதகமான ஓர் நடவடிக்கையா? என்ற ஐயப்பாடும் உள்ளது.
அமெரிக்கா யுத்தக் குற்ற விசாரணையை முன்மொழிந்திருந்தால் அதற்கான ஏற்பாடு எப்படியிருந்திருக்க வேண்டும்?
விசாரணை என்பது ஒளிப்படங்களைப் பார்த்து நடத்தப்படுவதில்லை, பாதிக்கப்பட்ட மக்கள் முன்வந்து சாட்சியம் சொல்ல வேண்டும், இன்றைய சூழலில் தமிழ் மக்கள் முன்வந்து சாட்சியம் சொல்லிவிட்டு வீடு சென்று உயிர் வாழ முடியாது! ஏனெனில் அன்று கொலை செய்த அதே கொலைகாரர்களின் பாதுகாப்பில்தான் இன்றும் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். அப்படியும் விசாரணை நடைபெறும் என்றால் அது ராஜபக்ச ஏற்பாடு செய்த நபர்கள்தான் சாட்சிகளாக காட்சி தருவர்.
உண்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்றால் ஐ.நா. வின் படை இலங்கைக்குச் செல்ல வேண்டும். தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நிர்வாகத்தையும் பாதுகாப்பையும் ஐ.நா. மேற்கொள்ள வேண்டும்.
இப்படி ஓர் ஏற்பாடு நடைபெற அமெரிக்கா முன்மொழிந்தால் அதனைப் பாராட்டி ஆதரிக்கலாம். அப்படி எந்த முன்மொழிவும் இதுவரை இல்லை! இதனைச் செய்யாத அமெரிக்காவின் முயற்சியில் எந்தப் பயனும் தமிழர்களுக்கு இல்லை. பதிலாக தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
ஐ.நா. படையை அனுப்ப வேண்டும் என்றால் நிரந்தர பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இது சாத்திமில்லாத ஒன்று! சில சமயங்களில் இந்தியாவுக்கு இருக்கும் பிடிமானத்தைத் தளர்த்துவதற்கான முயற்சியாகவும் இந்த முயற்சி இருக்க வாய்ப்புள்ளது.
இலங்கை அரசினால் “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதில் உள்ள அம்சங்கள் பல தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பை வழங்குகிறது. ஒருவேளை அமெரிக்காவின் முன்மொழிவான LLRC யின் கோரிக்கையினை இந்தியா ஆதரித்தால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டதாகிவிடும். இதனைத்தான் இலங்கை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
பாடம் படித்துக்கொண்ட நல்லிணக்கக் குழுவின் எந்தப் பரிந்துரையையும் தமிழ் மக்கள் நாடி நிற்கவில்லை. தமிழ் மக்கள் பாதுகாப்புடன் வாழ வேண்டும் என்றால் சிங்களப் படைகள் வடக்குக் கிழக்கிலிருந்து முதலில் வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும். இதனை நிறைவேற்ற முதலில் ஆலோசிக்கவேண்டும், நிறைவேற்ற வழி கண்டுபிடிக்க வேண்டும்.
தமிழ் மக்களது நிலையைப் புரிந்து தெரிந்து கொண்ட நாடு இந்தியா, தமிழ் மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்பதை அறிந்த நாடு இந்தியா, இந்தியா ஏற்படுத்திய ஒப்பந்தத்தினை முழுமையாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்பது ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.)யின் கோரிக்கையாகும்.
LLRC பரிந்துரை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாகாது. பல தரப்பினரும் ஜெனிவாவின் தீர்மானத்தை எதிர்பார்த்திருக்கின்றனர். தீர்வு எதனையும் முன்வைக்காத அந்தத் தீர்மானம் தமிழர் மத்தியில் முக்கியத்துவம் பெற்றது ஆச்சரியமே! LLRC யின் பரிந்துரையை மட்டும் நிறைவேற்றும்படி கோருவதை ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) முற்றாக நிராகரிக்கிறது.
ஆயினும் ஏதோ ஓர் வழியில் சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கை வெளியுலகுக்குத் தெரியப்படுத்தப்பட்டதன் மூலம் உலகின் கவனத்தை ஈழத் தமிழர் பக்கம் திருப்பியதில் மட்டும் இது முக்கியம் பெறுகிறது. தமிழ் மக்கள் மீது மீண்டும் அனுதாபம் ஏற்பட்டுள்ளது. அதனால் மட்டுமே ஈ.ழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி(ஈ.என்.டி.எல்.எப்.) ஆதரிக்கிறது. நிலையை சரியாக அறிந்திராது விட்டாலும் புலம்பெயர்ந்த மக்களின் முயற்சி பாராட்டுக்குரியது.
ஜெனிவா நிகழ்வுகளின் மூலம் தமிழ் இன அழிப்பு வெளி உலகுக்கு எடுத்துச் சொல்லப்பட்டதை வரவேற்கும் அதேவேளை தமிழ் மக்களுக்கான சர்வதேச ஒப்பந்தமான “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை இந்தியா நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) மீண்டும் முன்வைக்கிறது.
இவ்வண்ணம்,
அரசியல் பிரிவு
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி
(ஈ.என்.டி.எல்.எப்.)
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire