யாழ்ப்பாண மக்களின் மனங்களில் இருந்து அழித்துவிட முடியாத யாழ். நூலக எரிப்புச் சம்பவத்திற்குத் துணைபோன ஐக்கிய தேசியக் கட்சியுடன் மேதினக் கூட்டம் என்ற போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொஞ்சிக் குலாவுவதை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? இவ்வாறு அமைச்சர் பசில் ராஜபக்ச கேள்வியெழுப்பினார்.
எதிர்க்கட்சிகள் யாழ்ப்பாணத்தில் நடத்திய பொது மே தினக் கூட்டத்தில் தமிழ்க் கூட்டமைப்பு கலந்து கொண்டது குறித்து கருத்து வெளியிட்டபோது அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் அரசியல் ரீதியான தீர்மானங்களை சரியாகவே எடுப்பதில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்த கூட்டமைப்புக்கு இறுதியில் என்ன ஆயிற்று? அவர்களின் தீர்மானம் சரியாக எடுக்கப்படவில்லையே?
இப்போது ஆட்சி மாற்றம் என்ற கனவில் மிதந்து கொண்டு ரணிலின் பின்னால் சுற்றித்திரிகிறது கூட்டமைப்பு.
ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தனது மே தினத்தைக்கூட ஒற்றுமையாக நடத்த முடியவில்லை. கட்சி இரண்டுபட்டுப் போயுள்ளது.
மே தினத்திற்காக கட்சியைக்கூட ஒன்றுபடுத்தி செயற்பட முடியாதவர்கள் எப்படி இந்த நாட்டைப் பொறுப்பேற்பது பற்றிச் சிந்திக்க முடியும்?
இந்த இலட்சணத்தில் இருக்கும் ஐ.தே.கவுடன் கூட்டமைப்பு ஒன்று சேர்ந்து நிற்பது அரசியல் இலாபத்திற்காகவா அல்லது மக்கள் நலன் கருதியா?
கறுப்பு ஜூலையை உருவாக்கி, ஆசியாவின் பொக்கிஷமாக இருந்த நூலகத்தை எரித்து கறைபடிந்த வரலாற்றை ஏற்படுத்திய ஐ.தே.கவுடன் யாழ்ப்பாண மண்ணில் தமிழ்க் கூட்டமைப்பு எந்த முகத்துடன் கைகோர்க்கிறது என்பதைக் கேட்க விரும்புகிறேன்.
தமிழ் மக்கள் ஏமாளிகள் அல்லர் என்பதைக் கூட்டமைப்பு வெகுவிரைவில் புரிந்துகொள்ளும்.
தமிழர்களைத் தொடர்ந்தும் கூட்டமைப்பினால் ஏமாற்ற முடியாது. இவ்வாறு குறிப்பிட்டார் அமைச்சர் பசில் ராஜபக்ச.
Aucun commentaire:
Enregistrer un commentaire