இலங்கைத்தீவில் தனிநாடு அமைவதற்கு அனைத்துலக சமூகம் ஆதரவு அளிக்கப்போவதில்லை. தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடங்களான வடக்கு கிழக்குக்கு சுயாட்சித் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டு மென்பதில் அனைத்துலக மட்டத்தில் பெரும் ஆதரவு நிலவுகின்றது. அதே கருத்தினையே நானும் கொண்டிருக்கின்றேன் என நோர்வேயின் முன்னாள் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
போர் முடிவுற்ற மூன்று ஆண்டுகளின் பின்னரான இலங்கைத்தீவு எனும் தலைப்பில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கடந்த் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கருத்தரங்கிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நோர்வே தொழிற்கட்சியின் அனைத்துலக விவகாரங்களுக்கான மையம் மற்றும் நோர்வே தமிழர் கற்கை மையம் ஆகியவற்றின் கூட்டிணைந்த ஏற்பாட்டில் ஒழுங்குசெய்யப்பட்ட இந்தக் கருத்தரங்கு நோர்வே நாடாளுமன்றத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்ற இக்கருத்தரங்கினை தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற உதவி சபாநாயகர்களில் ஒருவருமான மரிட் நைபக் தலைமையேற்று நட்த்தியிருந்தார்.
நோர்வேயின் முன்னாள் அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாமாதானச் சிறப்புத்தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் மற்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் முக்கிய கருத்துரை ஆற்றினர்.
கருத்துரைகளைத் தொடர்ந்து பார்வையாளர்களின் கேள்விகளுக்குச் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் பதிலளித்தனர்.
இறுதிக்கட்டப் போரின் போது நடைபெற்ற போர்க்குற்றங்களுக்குரிய விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படுவதும், இலங்கைத்தீவின் தமிழர்களுக்குரிய அரசியல் உரிமைகள் வழங்கப்படுவதும் மிக அவசியமானது என தனதுரையில் மரிட் நைபக் வலியுறுத்தினார்.
சொல்ஹெய்ம் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கைத்தீவில் தனிநாடு அமைவதற்கு அனைத்துலக சமூகம் ஆதரவு அளிக்கப்போவதில்லை. தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடங்களான வடக்குக் கிழக்குக்கு சுயாட்சித் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதில் அனைத்துலக மட்டத்தில் பெரும் ஆதரவு நிலவுகின்றது. அதே கருத்தினையே நானும் கொண்டிருக்கின்றேன்.
இந்தியாவின் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுயாட்சி அதிகாரங்களை ஒத்ததான அரசியல்த் தீர்வுக்கு அனைத்துலக மட்டத்தில் பெருமளவு ஆதரவு நிலவுகின்றது. மீண்டுமொரு ஆயுதப் போர் தொடங்குமானால் அனைத்துலக ஆதரவு துளியளவுக்கும் அற்றுப் போய்விடும்.
தமிழ் மக்கள் பாரிய அழிவுக்கு முகம் கொடுத்துள்ளனர். அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் தற்போதைய ஆட்சியாளர்களே தமிழ் மக்களை நோக்கி நேசக்கரம் நீட்டவேண்டுமென்ற பரவலான கருத்து அனைத்துலக மட்டத்தில் நிலவுகின்றது.
போரின் இறுதிக்கட்ட அவலங்களுக்குரிய பொறுப்பு கொழும்பிடம் உள்ளது. பிரபாகரனும் அந்த அவலங்களைத் தவிர்ப்பதற்கு முனையவில்லை. 2000ஆம் ஆண்டில் ஆனையிறவு படைத்தள வெற்றியை அடுத்து, படைபலத்தில் விடுதலைப்புலிகள் உச்சநிலையில் இருந்த போது சமாதான முயற்சிகள் தொடங்கப்பட்டன. இப்புறநிலையில் சமாதானப் பேச்சுகளைச் சாதகமாகக் கையாண்டிருப்பின் கூட்டாட்சித் தீர்வினை எட்டியிருக்க முடியும்.
கூட்டாட்சித் தீர்வு பற்றி ஆராய்வதைத் தட்டிக்கழித்தமை, அனைத்துலக சமூகத்திடமிருந்து தம்மைத் தனிமைப்படுத்தியமை, இராணுவத்தீர்வில் நம்பிக்கை கொண்டிருந்தமை ஆகியன விடுதலைப் புலிகளின் தலைவர் இழைத்த தவறுகள்.
இலங்கைத்தீவின் தற்போதைய சூழ்நிலையில் மாற்றங்களைக் காண்பதற்கு காலம் எடுக்கும். அனைத்துலக சமூகம் அக்கறை செலுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் இடங்களில் இல்லை. உலகப் பொருளாதார நெருக்கடியும், ஆப்கானிஸ்தான், சிரியா, லிபியா, எகிப்து மற்றும் மத்தியகிழக்கு முரண்பாடுகளுமே அனைத்துலக சக்திகளின் அதீத கவனக்குவிப்பிற்குரிய பட்டியலில் முதலிடங்களில் உள்ளன.
தமிழர்களின் அரசியலுக்குரிய தலைமை இலங்கையைத் தளமாகக் கொண்டிருக்க வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் அதற்கு உறுதுணையாக இருக்க முடியுமே தவிர தலைமை தாங்க முடியாது. தற்போதைய சூ`ழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக விளங்குகின்றது என்றார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire