இலங்கையில் இறுதிப் போர் முடிவடைந்து மூன்று வருடங்களாகின்ற போதிலும், போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் இன்னும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். வாழ்வாதாரம், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்களில் அவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என்று பெண்கள் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.
''யுத்தத்தில் கணவனை இழந்தும், கணவன்மார் தடுப்பில் இருப்பதனாலும், பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டியவர்களாகவும், குடும்பச் சுமையைத் தாங்க வேண்டியவர்களாகவும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் இருக்கின்றார்கள். இவர்களின் வாழ்வாதாரத்திற்கு நிறுவனங்கள் பல்வேறு உதவிகளைச் செய்துள்ள போதிலும் இந்த உதவிகள் ஒரே மாதிரியானதாகவும், சமூக சூழலுக்குப் பொருத்தமற்றதாகவும் இருக்கின்றன. இதனால் இந்த உதவிகள் உரிய பயனை அளிக்கவில்லை'' என மன்னார் பெண்கள் அபிவிருத்தி நிலையம், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான பெண்கள் அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த ஷெரின் ஷரூர் கூறுகின்றார்.
தோல்வியடைந்த வாழ்வாதாரத் திட்டங்களினால் கடனாளிகளாகியுள்ள பெண்கள் அதிலிருந்து மீள்வதற்கு வேறு பல்வேறு தொழில்களைச் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள் என்றும் இதனால் அவர்களில் சிலர், பாலியல் தொழிலுக்குள் வலிந்து தள்ளப்படுகின்ற அளவிற்கு மோசமான நிலைமைக்கு ஆளாக நேரிட்டுள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
இதற்கு சமூக அமைப்பு, பெண்கள் தொடர்பான சமூகத்தின் சிந்தனை, அதன் போக்கு, அணுகுமுறை என்பனவும் காரணமாக இருக்கின்றன என்று ஷெரின் சரூர் குறிப்பிடுகின்றார்.
இத்தகைய பெண்களுக்குப் புனர்வாழ்வளித்து நல்வழிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பெண்கள் அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றன.
Aucun commentaire:
Enregistrer un commentaire