வெலிக்கடை சிறைச்சாலை முன்றலில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் அரசியல் பிரமுகர்களும் கூடிநின்று அவரை வரவேற்றுள்ளனர்.
பட்டாசு வெடிகள் கொளுத்தப்பட்டு, அந்தப் பிரதேசமே பொன்சேகா ஆதரவாளர்களால் நிரம்பிவழிந்ததாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக, மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வெளியேறிய பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்துவரும் சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய தயார் என ஜனாதிபதி கடந்த வாரம் அறிவித்தார்.
இன்று திங்கட்கிழமை மதியம், சரத் பொன்சேகாவை வரவேற்பதற்காக மருத்துவமனை முன்றலில் கூடிநின்ற அவரது ஆதரவாளர்கள் தேசியக் கொடியை ஏந்தியபடி பெரும் ஆரவாரத்தில் ஈடுபட்டதை காணமுடிந்தது.
குறித்த பிரதேசம் முழுவும் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களாலும் ஊடகவியலாளர்களாலும் எதிரணி அரசியல் தலைவர்களாலும் நிரம்பியிருந்ததாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.
சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட முன்னதாக, சரத் பொன்சேகா நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதேவேளை, சரத் பொன்சேகா தனக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தீர்ப்புகளை எதிர்த்து தாக்கல் செய்திருந்த இரண்டு மேன்முறையீட்டு மனுக்களையும் நீதிமன்றத்திலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.
'வெள்ளைக் கொடி' வழக்கு விவகாரத்தில் அளிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறைத்தண்டனை தீர்ப்புக்கு எதிராகவும், முறையற்ற இராணுவ தளபாட கொள்வனவு குற்றச்சாட்டு தொடர்பாக இராணுவ நீதிமன்றம் அளித்திருந்த இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை தீர்ப்புக்கு எதிராகவும் தாக்கல் செய்திருந்த மேன்முறையீடுகளை சரத் பொன்சேகா தரப்பு வாபஸ் பெறுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான சட்ட ஆவணங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஏற்கனவே கையொப்பமிட்டிருப்பதாக கூறப்பட்டது.
நீதிமன்ற நடைமுறைகளை முடித்துக் கொள்வதற்காகவே அவரது விடுதலையில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக சரத் பொன்சேகா தரப்பு பிரதிநிதிகள் முன்னதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire